தனியார் மருத்துவக் கல்லூரிகள்: இலவசக்கல்வி மீதான அடுத்த தாக்குதலா

ரம்யா குமார்

தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு தொடரப்போகும்
மாணவர்களுக்கு 1.1 மில்லியன் ரூபா பெறுமதியான வட்டியற்ற கடக்ன்
கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அரச மற்றும் அரச சார்பற்ற கல்வி
நிறுவனங்களில் வழங்கப்படும் பாடநெறிகளின் தரத்தை பேனும் நோக்கில்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் (UGC) தர உறுதிப்பாட்டு
மன்றமொன்றை நிறுவும் சீர்திருத்தமொன்று பல்கலைக்கழகங்கள்
சட்டமூலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


அரசாங்கத்தின் கருத்துப்படி இவ்வாறான கொள்கை மாற்றங்கள்
உயர்கல்வியை இலகுவாக பெறுவதற்கும் அதன் தரத்தை பேணுவதற்குமான
முயற்சிகளாகும். இருப்பினும், மாணவ அமைப்புகள் மீது நடத்தப்படும்
வன்முறைகள், அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர்கள் மீது
நடத்தப்பட்டும் திடீர் கைதுகள் மற்றும் இலவசக்கல்விக்கு எதிராக
ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் வேறு நிலையை
பிரதிபலிக்கின்றன: அதுவே தனியார்மயமாக்கமாகும். அரசாங்கம்
மேற்கொள்ளும் இவ்வாயத்தங்கள் மருத்துவ கல்வியின் மீது எவ்வாறான
தாக்கங்களை செலுத்தக்கூடும் என பார்க்கலாம்.


குறைந்தபட்ச‌ தரமதிப்பீடுகள்


அரசாங்கம் அதன் திட்டங்கள் குறித்து மௌனம் சாதிக்குமளவு இலங்கையில்
தனியார் மருத்துவ கல்வி என்பது மிகவும் உணர்வுபூர்வமான விடயமாகும்.
இலங்கை மருத்துவ சங்கத்தின் (SLMA) கீழ் அமைக்கப்பட்டுள்ள தரமதிப்பீட்டு
அலகின் ஆரம்பத்தோடு தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கான அடிக்கல்
நாட்டப்பட்டு விட்டது. இலங்கையில் உள்ள மருத்துவ சமூகம் தரம்
பேணப்படாத தனியார் மருத்துவ கல்லூரிகளையே எதிர்ப்பதோடு தனியார்
மருத்துவ கல்வியை அல்ல. 2018ல் SAITMன் படுவீழ்ச்சியின் பின்னர்

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட மருத்துவ கல்வியின் குறைந்தபட்ச
தரமதிப்பீடுகள் பற்றிய அரச வெளியீட்டின் பின்னர் மருத்துவ சமூகத்தில்
தனியார் கல்வி குறித்த மெத்தனப்போக்கு காணப்படுகின்றது. ஆரம்பத்தில்
SAITMஇனை “தரமின்மை” என்ற காரணத்தால் எதிர்த்த அரசாங்க மருத்துவ
அதிகாரிகள் அமைப்பு, தற்போது தனியார் மருத்துவ கல்லூரிகள் தம்
ஆலோசனையின் பேரில் இயங்கலாம் என்ற கோரிக்கையை
முன்வைத்துள்ளது.


MBBS பாடநெறிகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள குறைந்தபட்ச
தரமதிப்பீடுகளை பூர்த்திசெய்யும் பட்சத்தில் இயங்கலாம் என
நம்பப்படுகின்றது. அவ்வாறான தரமதிப்பீடுகள் குறைந்தபட்ச
கல்வித்தகுதியைக் கொண்ட மாணவர் அனுமதி, ஊழியர் தேவைப்பாடுகள்,
வைத்தியசாலைகளில் காணப்படும் படுக்கைகளின் எண்ணிக்கை மற்றும்
படுக்கைகள் பூர்த்தியாகும் வீதம் போன்ற விடயங்களை உள்ளடக்கியுள்ளன.
உண்மையில் தனியார் மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பில்
குறைந்தபட்ச தரமதிப்பீடுகளே அதிக தாக்கத்தை செலுத்துகின்றன.
அரச மற்றும் அரச சார்பற்ற மருத்துவ கல்லூரிகளை ஒரே தட்டில் வைத்து
அளவிடும் போது குறைந்தபட்ச தரமதிப்பீடுகளோ தர உறுதிப்பாட்டு
அளவீடுகளோ அரச மருத்துவ கல்வியின் மீது தனியார் கல்வி
ஏற்படுத்தப்போகும் விளைவுகளை இம்மியளவேனும்
கவனத்திலெடுக்கவில்லை. குறிப்பாக, இவை மருத்துவ கல்விக்கான
சமவாய்ப்பு மற்றும் சமூகநீதியை வழங்குவதை கவனத்திலேயே
எடுக்கவில்லை.


ஆரோக்கியமற்ற இணைவாழ்வு


உதாரணமாக, குறைந்தபட்ச தரமதிப்பீடுகளில் உள்ள ஊழியர்
தேவைப்பாடுகளை எடுத்துக்கொள்ளலாம். கல்விசார் ஊழியர்களை
பொருத்தவரையில், பாடநெறிகளை வழங்கும் நிறுவனங்கள் “ஒன்றுக்கு
பதினான்கு என்ற ஆசிரிய மாணவர் விகிதம் பேணப்பட வேண்டுமெனவும்,
கல்விசார் ஊழியர்களுக்குள் நிரந்தர ஊழியர்கள் மற்றும் தேர்ந்த போதனா

வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய மருத்துவ அமைப்புகளிலிருந்து வரும்
வெளிவாரியான கல்விசார் ஊழியர்களையும் மருத்துவ விற்பன்னர்களையும்
உள்ளடக்கியதாக இருக்க முடியுமெனவும்” குறைந்தபட்ச தரமதிப்பீடுகள்
கூறுகின்றன. மேலும் இதில் முழுநேர மற்றும் பகுதிநேர கல்விசார்
ஊழியர்களுக்கு அவர்களின் வேலைநேரத்துற்கேற்ற கொடுப்பனவுகள்
காணப்படுவதோடு “நோயாளர்களை குணப்படுத்துவதில் ஈடுபடும் அனைத்து
மருத்துவ ஊழியர்களும் அந்தந்த நாடுகளில் உள்ள மருத்துவர் பதிவு
வாரியங்களில் பதியப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்” எனவும்
வரையறுக்கப்பட்டுள்ளது. (குறிப்பு: இலங்கையில் தொழில் புரியும்
நோக்கமுள்ள வெளிநாட்டில் MBBS கற்கைநெறிகளை பூர்த்திசெய்யும்
பட்டதாரிகளுக்கும் குறைந்தபட்ச தரமதிப்பீடுகள் செயல்படுத்தப்படும்).


நாட்டில் இருக்கும் நெருக்கடியை கருத்திற்கொண்டு பார்க்கையில் தனியார்
மருத்துவ கல்லூரிகள் இலங்கையில் காலடியெடுத்து வைக்கும் நிலையில்,
அவற்றால் பதிவை புதுப்பிக்கக்கூடிய புலம்பெயர்ந்த மருத்துவ ஊழியர்களை
உள்ளீர்ப்பது கடினமான செயலாகும். இதனால் அவர்கள் ஓய்வுபெற்ற
மருத்துவ விற்பன்னர்களையும் அரச பல்கலைக்கழக மருத்துவ பீடங்களில்
இருப்பவர்களையும் இலக்குவைக்கும் சூழ்நிலை உருவாகலாம்.
வரையறுக்கப்பட்ட கற்பித்தல் நேரம் காணப்படாமையால் பல்கலைக்கழக
ஆசிரியர்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நேரமொதுக்கும் நிலையும்
(சிகிச்சை மருத்துவர்களின் இரட்டை மருத்துவ சேவை போல), தனியார்
மருத்துவ கல்லூரிகளில் அதிக சலுகைகள் காணப்படுமிடத்து அரச
பல்கலைக்கழகங்களில் இருந்து தனியார் பல்கலைக்கழகங்களுக்கு
பெருவாரியான ஆசிரியர்கள் மாற்றலாகி செல்லும் சூழலும் கூட
உருவாகலாம்.


இவ்வாரு பல்கலைக்கழக ஆசிரியர்கள் தனியார் மற்றும் அரச
கல்லூரிகளுக்கு இரட்டை மருத்துவ சேவை புரிவார்களாயின் அவர்களது
ஈடுபாடு மற்றும் முன்னுரிமை அரச பல்கலைக்கழகங்களின் மருத்துவ
பீடங்களுக்கே காணபப்டுமென்பதற்கான எவ்வித உறுதிப்பாடும் இல்லை.

குறைந்தபட்ச தரமதிப்பீடுகளில் காணப்படும் படுக்கைகளின் எண்ணிக்கை
மற்றும் படுக்கைகள் பூர்த்தியாகும் வீதம் ஆகிய தேவைப்பாடுகளை பார்க்கும்
போது பெருமளவிலான தனியார் மருத்துவ கல்லூரிகள் அரச
வைத்தியசாலைகளிலேயே தமது சிகிச்சை பயிற்சிகளுக்காக தங்கியிருக்க
வேண்டிய சூழல் உருவாகும். இதனால் இவ்வாறான தனியார் மருத்துவ
கல்லூரிகள் அரச பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் சிகிச்சை
பயிற்சிகள் எடுக்காத விளிம்புநிலை மாவட்டங்களிலுள்ள மூன்றாம் தர
வைத்தியசாலைகளை அண்டி கல்லூரிகளை நடத்தும் வாய்ப்புகள்
அதிகமாகும்.


வெற்றியாளர்களும் தோல்வியடைந்தவர்களும்


மருத்துவ பீடங்கள் உட்பட அரச பல்கலைக்கழகங்களில் மாணவர் அனுமதி
தொடர்ந்து அதிகரித்து வருகின்றது ( அட்டவணையை பார்க்க). அவ்வாறான
சூழ்நிலையிலும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடம் நிரந்தர கல்விசார்
ஊழியர், மாணவர் விகிதம் 7:1 என பேணி வருகின்றது. கொழும்பு மருத்துவ
பீடம் இருக்கும் அமைவிடம் காரணமாக சுகாதார அமைச்சு வழங்கும் அதிக
கொடுப்பனவை மீறி பீடத்தை நோக்கி வரும் மருத்துவ விற்பன்னர்களின்
எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது.


இருப்பினும், யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிரந்தர
கல்விசார் ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் விகிதம் தொடர்ச்சியாக
அதிகரித்தவண்ணமே உள்ளது. இது 2021ல் 19:1 ஆக இருந்தது.
யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சின் நிறுவனங்களில் இருக்கும் பணிநிலை
பதவிகளும் மருத்துவ பீடங்களை விட அவற்றுக்கு வழங்கப்படும்
அதிகப்படியான கொடுப்பனவுகளும் மருத்துவ பீடத்தை நோக்கி அவர்கள்
செல்வதை தடுக்கின்றது. (அட்டவணையை பார்க்க)

விளிம்புநிலை மாவட்டங்களிலுள்ள மருத்துவ பீடங்களில் நிரந்தர கல்விசார்
ஊழியர்களோடு சேர்த்து தற்காலிக ஊழியர்கள் மற்றும் போதனா
வைத்தியசாலைகளில் உள்ள வெளிவாரியான பீடத்தை உள்ளடக்கி ஆசிரிய

மாணவ விகிதம் 14:1 என பேணப்பட்டு வருகின்றது. இருப்பினும்,
பாடநெறியை விருத்தி செய்தல், “தர உறுதிப்பாடு”, மாணவர் நலன் மற்றும்
ஏனைய நேரஞ்செலவாகும் விடயங்கள் நிரந்தர ஊழியர்களாலேயே
நடத்தப்படுகின்றது. இவ்வாறான விளிம்புநிலை மாவட்டங்களில் தனியார்
கல்லூரிகள் ஆரம்பிக்கப்படுமாயின் தனியார் மருத்துவ கல்லூரிகள் பெரும்
தொகையொன்றை ஆசிரியர் கொடுப்பனவாக கொடுப்பதற்கான இயலுமையை
கொண்டிருப்பதால் சுகாதார அமைச்சோடு மட்டுமல்லாது அம்மாவட்டங்களில்
காணப்படும் மருத்துவ பீடங்களுக்கும் இவை பெரும் சவாலாக மாறுவதோடு
அரச பல்கலைக்கழக மருத்துவ பீட ஆசிரியர்களுக்கான பஞ்சநிலை
உருவாகும் வாய்ப்புகளும் அதிகமாகும்.


வாய்ப்பு வழங்கப்படுவதிலுள்ள சமத்துவம்


தனியார் கல்லூரிகளில் கற்போருக்கு கடன் கொடுப்பனவுகள், முன்பணச்சீட்டு
மற்றும் ஏனைய சலுகைகளை வழங்குவதாக வாக்குறுதியளிப்பதனூடாக
அரசாங்கம் சமத்துவம் குறித்த விமர்சனங்களை மறைக்கப்பார்க்கின்றது. அரச
பல்கலைக்கழகங்கள் ஒரு அமைப்பு என்ற வகையில் அரச மூலதனத்தின்
வீழ்ச்சியாக கருதப்படும் சூழலில் (அட்டவணையை பார்க்க) பொருளாதார
நெருக்கடியின் பிற்பாடு இக்கடன்கள் எவ்வாறு அடைக்கப்படப்போகின்றன
என்ற சந்தேகம் வலுத்துள்ளது. அதிகரிக்கும் கடன்பளு மருத்துவ
மாணவர்களின் தொழில்துறை குறித்த தேர்வுகளில் செல்வாக்கு
செலுத்தக்கூடியது.


ஏற்கனவே மருத்துவ தொழிலாளர்களை நாட்டினில் தக்கவைக்க சிரமப்படும்
சூழலில் கடன்பளுவால் பாதிக்கப்படும் மருத்துவ பட்டதாரிகள்
ஒப்பீட்டளவில் குறைந்தளவு ஊதியம் வழங்கப்படும் அரசதுறைசார்
நிறுவனங்களில் தொழில்செய்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. அதைவிட
அசாத்தியமான நிலை என்னவெனில், அரசாங்கம் அந்நிய செலாவணியை
பெறும் அலகுகளாகப் பார்க்கும் வெளிநாட்டு மாணவர்கள் இலங்கையில்
மருத்துவ சேவையில் ஈடுபடுவார்கள் என்பதாகும். அதாவது, தனியார்

மருத்துவ கல்லூரிகள் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய மருத்துவ
பட்டதாரிகளை உருவாக்குவார்களா என்பது கேள்விக்குறியாகும்.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் கற்கும் மாணவர்களின் வருகை
இலங்கையில் உள்ள மருத்துவ மாணவர்களின் மக்கள் தொகையியலில்
மாற்றங்களை ஏற்படுத்துவதோடு மருத்துவ கல்வியில் இருபடித்தான
அமைப்பொன்றை தோற்றுவிக்கக்கூடும். மாணவர்களின் “நுண்திறன்கள்”
மற்றும் தன்விவரம் போன்ற விடயங்களில் கொடுக்கப்படும் அழுத்தத்தை
பார்க்கும் போதும் விதிக்கப்படப்போகும் அதிகப்படியான கட்டணத்தையும்
பார்க்கும் போதும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்குள் நுழையப்போகும்
மாணவர்கள் பெரும்பாலும் நடுத்தர/ உயர்0நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த
மாணவர்களாகவே காணப்படுவர். UGC கணக்கெடுப்பின்படி, 2021ஆம் ஆண்டில்
63%மான பல்கலைக்கழக நுழைவு மாவட்ட ஒதுக்கீட்டின் மூலம் தெரிவாகிய
மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு உயர்குடி மக்களால்
இது தலைகீழான பாகுபாடாகக் பார்க்க‌ப்பட்டாலும் கிராமிய
மாவட்டங்களிலிருந்து வரும் மாணவர்கள் முகங்கொடுக்கும் சிக்கல்களை
இப்பார்வை காணத்தவறுகின்றது.


UGCயின் மாணவர் அனுமதியை இன்னும் கூர்மையாக அவதானித்தால்
மாவட்ட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவபீடங்களுக்கு நுழைந்த மாணவர்கள்
பெரும்பாலும் வன்னி, பொலன்னறுவை, அநுராதபுரம், மொனராகலை மற்றும்
நுவரெலியா ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.
தனியார் மருத்துவ கல்லூரிகளின் வருகை மற்றும் அரச
பல்கலைக்கழகங்களிலுள்ள மருத்துவ பீடங்களை பலமிழக்கச் செய்வதால்
கிராமிய மற்றும் பெருந்தோட்ட பிரதேசங்களிலிருந்து வரும்
மாணவர்களுக்கான வாய்ப்புகள் குறையும் வாய்ப்புகள் அதிகமாகும்.
இவ்வாறான மாணவர்களே விளிம்புசார் பிரதேசங்களிலுள்ள
மருத்துவபீடங்களுக்கு அதிகம் செல்கின்றார்கள் என்பதும் கவனிக்கப்பட
வேண்டிய விடயமாகும்.


உருவாகிக்கொண்டிருக்கும் சித்தாந்தம்

சுகாதார ஊழியர்கள் பெருவாரியாக நாட்டை விட்டு வெளியேறும்
பிரச்சினைக்கு தீர்வாக தனியார் மருத்துவ கல்லூரிகள் அமையக்கூடுமென
விவாதிக்கப்படுகின்றது. தனியார் மருத்துவ கல்லூரிகளின் வருகையானது
இருபடித்தான அமைப்பொன்றை கண்டிப்பாக உருவாக்குவதோடு மருத்துவ
கல்வியையும் சுகாதார சேவையையும் அணுகக்கூடியவர்களின் மீது
நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும். இன்றுவரை அரச
பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்கள் பொது சுகாதார சேவைக்குத்
தேவையான ஊழியர்படையை வழங்கியது. இதனில் விருத்தியேற்பட
வேண்டுமாயினும், இப்போதைய தேவை பொது சுகாதார சேவையை
பாதுகாக்கும் வகையில் அரச மருத்துவ பீடங்களை பலப்படுத்துவதாகும்.


பொருளாதார நெருக்கடி என்ற பெயரில் நலன்புரி சேவைகள்
விடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், உயர்குடி மக்களால்
சூழப்பட்டுள்ள அரசாங்கத்தினால் நாட்டின் நெருக்கடிக்கான காரணம்
மக்களின் “நலன்புரிகளை நோக்கிச் செல்லும் மனநிலை” என்பதாக
கூறப்படுகின்றது. அரசாங்கத்தின் இலவசக்கல்வியை ஒழித்தல் போன்ற
குறுகிய பார்வை கொண்ட கொள்கைகளுக்கு ஊடகங்கள்
கைதட்டிக்கொண்டிருக்கின்றன. மாணவர்களால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள்
அரச பல்கலைக்கழகங்களை நெறியிழந்துபோனவையாகப் பாவித்து
காட்டப்படுவதோடு அவை நடத்தப்பட தூண்டும் நாட்டை கூறுபோடும்
விடயங்களை, அதாவது, “உள்நாட்டு கடன் உகப்பாக்கம்”, தொழிலாளர் சட்ட
சீர்திருத்தங்கள் அல்லது உயர்கல்வி மற்றும் பொது சுகாதார சேவைகளை
மாற்றியமைக்கும் வகையிலான முன்மொழிவுகள் மீதான மக்கள் கவனத்தை
திசைதிருப்பும் வகையில் அமைந்துள்ளன. இவ்வாறான சூழ்நிலையில்
தனியார் மருத்துவ கல்லூரிகளை எதிர்க்கும் செயற்பாடு வெறுமனே ஒரு
“சித்தாந்தமாகவும்” பயனற்றதாகவும் காட்டப்படும் தோரணையில் கட்டணம்
அறவிடப்பட்டு கல்வி வழங்கப்படும் தனியார் கல்லூரிகளே
எதிர்காலத்துக்கான தெரிவாக நம்பவைக்க மேற்கொள்ளப்பட்ட சித்தாந்த
முயற்சிகள் மறைக்கப்பட்டிருக்கின்றன.