நவதாராளவாதக் காலத்தில் ஜனநாயகபூர்வ பாடத்திட்டத்துக்கான‌ போராட்டம்

மகேந்திரன் திருவரங்கன்

பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டமானது மாணவர்கள் தமது கல்வி, அதன் வகிபங்கு, நோக்கங்கள், தாம் பயிலுகின்ற‌ துறை பற்றி விளங்கிக்கொள்ளுவதிலே தாக்கம் செலுத்துகிறது. பாடத்திட்டத்தின் மூலமாக (ஆதிக்கமான) கருத்தியலின் இயல்பாக்கமும், சமூகமயமாக்கமும் நிகழும் அதேவேளை, பாடத்திட்டமானது அதிகாரங்களுக்கு எதிரான செயன்முறைகளை வடிவமைப்பதற்கான ஒரு களமாகவும் உள்ளது. இதனால் பாடத்திட்டத்தை வடிவமைக்கும் பணி இலவசக் கல்வியினை ஜனநாயகமயமாக்கலின் மையமாக அமைகின்றது.

நவதாராளவாதமும், பல்கலைக்கழகங்களில் இருக்கும் அதிகாரக் கட்டமைப்புக்களும்  பாடத்திட்டத்தினை வடிவமைத்தலினை தொழில்நுட்ப ரீதியான ஒரு செயன்முறையாக மாற்றி வருகின்றன‌. மாணவர்களினதும், ஆசிரியர்களினதும், கற்பிக்கப்படும் கல்விச் சாலைகளினதும் சமூக உலகங்களுக்கு கலைத்திட்டம்  எவ்வாறு அர்த்தமுள்ளதாக இருக்கின்றது என்பது பற்றிப் பல்கலைக்கழகங்களினுள்ளே உரையாடல்கள் குறைந்து செல்லுவதனாலும், மாணவர்களின் புலமையினை நாம் குறைத்து மதிப்பிடுவதனாலும், கலைத்திட்டத்தினை வடிவமைத்தலில் ஜனநாயகத் தன்மை குறைகின்றது.

மாணவனும் கலைத்திட்டமும்

கல்வித் தளங்களிலும், பரந்த சமூகத்தினுள்ளும் மாணவர்கள், ஆசிரியர்கள் வகிக்கும் இடம், அங்கு நிலவும் சமூக உறவுகள், நாம் உருவாக்க‌ விரும்பும் சமூகம் பற்றிய எமது பார்வை போன்றன பாடத்திட்டத்திட்டம் தொடர்பான எமது உரையாடல்களை வடிவமைக்க வேண்டும். சிலவேளைகளில் மிகவும் நவநாகரிகத்தன்மை மிக்கதாக‌க் கருதப்படும் விடயங்களுக்கு அவசரமாக நாம் முன்னுரிமை வழங்குகின்றோம். மறுபுறத்தில், பாரம்பரியத்தைப் பேணுதல் என்ற கோசத்துடன், பொருத்தமற்றதாகிவிட்ட விடயங்களை அகற்றுவதற்குத் தயங்குகிறோம். அறிவுசார் ஆர்வம், படைப்பாற்றல், விமர்சன செயற்பாட்டியல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படாமையினால், கலைத்திட்ட உருவாக்கத்தில் சமூகநீதியும், ஜனநாயகமயமாக்கலும் புறக்கணிக்கப்படுகின்றன.

சமத்துவம், சமூகநீதி, சகவாழ்வு போன்ற இலக்குகளின் அடிப்படையிலே மாற்றங்களுக்கு வித்திடும் வகையிலான‌ கலைத்திட்டம் ஒன்றின் உள்ளடக்கத்தில் மாத்திரமல்லாது, அதன் அணுகுமுறையிலும் கூட‌, மாணவர்கள் தமது குரல்களையும், சமூக இருப்பிடத்தையும் கண்டுகொள்ளுவர். கல்விச் சூழலின் அசமத்துவங்கள் குறித்து விழிப்பான‌ பாடத்திட்டமானது, கல்வியின் அர்த்தங்களையும், செயற்பாட்டியலினையும், மாணவர்கள் ஜனநாயகத்திற்காக நகர்த்திச் செல்லுவதற்கு அவர்களுக்கு வழிகாட்டுகிறது.

அரச‌ பல்கலைக்கழகங்களுக்கு நுழையும் மாணவர்கள் பல்வேறு சமூகப் பொருளாதாரப் பின்னணிகளினைச் சேர்ந்தவர்கள். மாவட்டக் கோட்டா முறையானது பல்கலைக்கழகக் கல்வியின் ஜனநாயகமயமாக்கலுக்குப் பங்களித்திருப்பினும், ஒரு மாவட்டத்தினுள் இருக்கும் நகர்ப்புற – கிராமப்புற பாடசாலைகளுக்கு இடையிலான அசமத்துவங்களினாலும், தேசிய – மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான அசமத்துவங்களினாலும், மாவட்டத்திற்குள் இருக்கும் வர்க்க, சாதிய ஏற்றத்தாழ்வுகளினாலும் கல்வித் துறையிலே இடம்பெறும் புறக்கணிப்புக்களை அது வெளிக்காட்டுவதில்லை. வசதிகள் போதுமாக‌ இல்லாத பாடசாலைகளிலே கற்றவர்கள், வசதிகள் நிறைந்த‌ பாடசாலைகளிலே கற்ற‌ தங்கள் சகாக்களுக்கு ஈடாகத் தமது பல்கலைக்கழகக் கல்வியினைத் (குறிப்பாக முதலாவது வருடத்திலே) தொடருவதிலே சவால்களை எதிர்கொள்ளுகின்றனர். முதலாம் வருடப் பாடத்திட்டம், பெரும்பாலான சந்தரப்பங்களிலே வளங்கள் குறைவான பாடசாலைகளிலே பயின்றோருக்குப் ஆதரவானதாக இல்லை. இலவசக் கல்வி, மாவட்டக் கோட்டா முறை என்பவற்றின் மூலமான‌ வாய்ப்புகளினை மட்டுமல்லாமல், அவற்றிற்கு இருக்கக் கூடிய வரம்புகளையும் கருத்திற் கொண்டே கலைத்திட்டம் திருத்தப்பட‌ வேண்டும்.

கலைத்திட்டத்தினைத் துண்டாடுதல்

இன்றைய நவதாராளவாதச் சூழலிலே பாடத்திட்டம் கோட்பாடுகளை விட செயற்பாட்டுத் திறன்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது. கோட்பாட்டினையும், செயற்பாட்டினையும் இருமையாகவும், ஒன்றிலிருந்து மற்றையதைப் பிரிக்கக் கூடியதுமாக‌ நோக்கும் பார்வை வலுப்பெற்று வருகின்றது.

கோட்பாடுகளும் செயற்பாடுகளும் ஒன்றுக்கொன்று உயிரூட்டுவதனையும், எழுத்து, வாசிப்பு, விளக்கக்காட்சிகள் என்பன‌ வெறும் செயன்முறைகள் அல்ல – அவற்றினை நாம் ஆராய்ச்சிக்குட்படுத்துகின்ற‌ கருத்துகள், யோசனைகள் மற்றும் நாளாந்த நிலைமைகளில் இருந்து தனிமைப்படுத்திக் கற்க‌ முடியாது என்பதனையும் பாடத்திட்டம் வெளிப்படுத்த வேண்டும்.

செயற்பாட்டுத் திறன்களை, விமர்சன செயற்பாட்டியலில் இருந்து பிரிப்பதன் மூலம் எமது மாணவர்களைக் கேள்விகளை எழுப்பாத, தமது சமூகக் கூட்டுக்களில் இருந்து அந்நியப்படுத்தப்பட்ட‌, குறிப்பிட்ட சில‌ திறன்களைத் தொழிற் சந்தையிலே விநியோகிப்பவர்களாக‌ மாற்ற நவதாராளவாதம் முற்படுகின்றது. கல்வியின் உதவியுடன் சமத்துவத்தினைத் தேடுவதுடனும், சமூகங்களினது கௌரவமான‌ சகவாழ்வை உறுதி செய்யக்கூடிய வெளிகளை உருவாக்குவதுடனும், விமர்சன செயற்பாட்டியல் தொடர்புபட்டது. கல்விசார் சாதனைகளை தனிநபரின் முன்னேற்றமாகக் குறுக்கும் நவதாராளவாதப் பார்வைகளினை விலத்தி, விமர்சன செயற்பாட்டியலினையும், ஒத்துழைப்புக்களையும் ஊக்குவிக்கும் ஒரு சக்தியாகக் கலைத்திட்டம் அமைய வேண்டும்.

விசேடத்துவமும் துறை-இடை அறிவூடாட்டமும்

அறிவு, வேலை, உழைப்பு,  சமூக உறவுகள் தொடர்பில்  மாறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்ட இரண்டு வகையான‌ தொழிலாளர்களினை உருவாக்கும் நோக்குடன்,  துறைசார் விசேடத்துவம் (specialization), துறை-இடை அறிவூடாட்டம் (inter-disciplinarity) என்ற இரண்டு அணுகுமுறைகளினையும் ஒரே நேரத்தில், தனக்கேற்ற வகையில் கலைத்திட்டத்திலே பயன்படுத்த நவதாரளவாதம் முனைகின்றது. ஒருபுறத்தில், கல்வியினையும், தொழிலினையும் குறுகிய, சிறப்புத் துண்டுகளாக்கிப் பார்க்கப் பழக்கப்பட்ட‌ மாணவர்களின் மூலமாக, இலாப நோக்கில், சிறப்புத் தன்மை மிக்க செயன்முறைகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்குத் தேவையான‌, குறிப்பிட்ட சில‌ திறன்களில் மாத்திரம் பயிற்சி பெற்ற தொழிற்படையினை உருவாக்க அது முயற்சிக்கிறது. இவர்கள் தமது கல்வியினைப் பரந்த சமூக-பொருளாதார கட்டமைப்புக்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்க முடியாதோராய் உள்ளனர். கல்வியிலும், தொழிலும், சமூகத்திலும் நவதாராளவாதச் சுரண்டல்களுக்கு எதிரான‌ கூட்டுறவுகளினை இவர்களினால் ஏற்படுத்த முடியாதுள்ளது. மறுபுறத்தில், துறை-இடை அறிவூடாட்டத்தின் ஊடாக‌ மாணவர்களின் ஒரு பிரிவினரைக் கூடுதல் நெகிழ்ச்சியும், பல்திறமையும், பல் பணிகள் ஆற்றக்கூடியோராகவும், தனியார் துறையினரால் இலகுவில் சுரண்டப்படக் கூடியோராகவும் உருவாக்குவதற்கு நவதாராளவாதம் முற்படுகின்றது.

இதற்கான‌ எதிர்வினை, குறுகிய சிந்தனை மிக்க கல்வியாளர்களினால், துறைகளுக்கு இடையிலான‌ எல்லைகளைக் காவல் செய்யும் நோக்கிலும், அவற்றுக்கு இடையில் உறவுகள் வளர்வதனைத் தடுக்கும் நோக்கிலும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் இருந்து வரப்போவதில்லை. ஜனநாயகபூர்வக் கலைத்திட்டமானது துறைகளுக்கு இடையிலான கற்பித்தற் செயன்முறைகளுக்கும், துறைகளைக் ஊடறுத்துப் பட்டியலிடப்பட்ட பாட அலகுகளுக்கும், துறைகளுக்கு இடையிலான சமூகநீதியின் அடிப்படையிலான‌ கூட்டுச் செயற்பாடுகளுக்கும் சந்தர்ப்பமளிக்க வேண்டும். அதேநேரத்தில், கட்டமைப்புசார் சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கும், அவற்றினை இல்லாதொழிப்பதற்குமான‌ ஆழமான விசாரணைகளுக்கும் அது இடமளிக்க வேண்டும். துறை-இடை ஊடாட்டம், விசேடத்துவம் போன்றவற்றினை நவதாராளவாதத்திட‌ம் இருந்து விடுவித்து, ஜனநாயக பூர்வமான‌ கல்வி மற்றும் சமூகச் செயன்முறைகளுக்குப் பங்களிக்கக் கூடிய, அறிவுசார் கூட்டுறவுச் செயன்முறைகளாகவும், அறிவுசார் ஆழத்தினை உருவாக்கும் விமர்சனச் செயற்பாடுகளாகவும் கலைத்திட்டம் முன்னிறுத்த வேண்டும்.

மதிப்பீட்டினை படிமமயப்படுத்தல்

மாணவர்களை மதிப்பீடு செய்யும் முறைகள் கலைத்திட்டத்திலே படிம மயமாக்கலுக்கும், தீவிரமான‌ காவலுக்கும் உட்படுத்தப்படுகின்றன‌. மதிப்பீட்டு செயன்முறையின் கிட்டத்தட்ட ஒவ்வொரு அம்சத்தின் வரைபடமும் பாடத்திட்டத்திலே உள்ளடக்கப்பட‌ வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது. இந்தப் போக்கு மதிப்பீட்டு முறைகளின் செயற்றிறன் குறைகையில், புதிய மதிப்பீட்டு முறைகளை ஆசிரியர்கள் முன்னெடுப்பதிலே தடைகள் ஏற்படுகின்றது.

வெவ்வேறு தொகுதிகளைச் (batch) சேர்ந்த மாணவர்கள் ஒரு பொதுத் தொழிற் சந்தையில் இருக்கும் பதவிகளுக்காக‌ போட்டியிடுகிறார்கள் என்பதுவும், அவர்களிலே யார் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதனைச் சந்தைக்குக் குறித்துக் கொடுக்க வேண்டிய பணி பல்கலைக்கழகத்துக்கு உரியது என்பதுவும் மதிப்பீட்டுச் செயன்முறைகளிலே படிமமயமாக்கலுக்கான அடிப்படைத் தர்க்கமாக அமைகின்றது. இங்கு சந்தையே தீர்மானிக்கும் சக்தியாக அமைவதுடன், இந்த அணுகுமுறை மாணவர் மத்தியில் போட்டியினையும், தனிநபர்வாதத்தினையும் ஊக்குவிக்கிறது.

கொரொணா போன்ற நெருக்கடியான‌ ஒரு காலப்பகுதியிலே கற்பித்தல், கற்றல் இடம்பெறும் சூழலானது மாணவர்களின் புலமை வெளிப்பாட்டில் எவ்வாறு தாக்கத்தினை ஏற்படுத்துகிறது என்பதனைப் பொதுமைப்படுத்தப்பட்ட‌ படிமமயமாக்கப்பட்ட‌ மதிப்பீட்டு முறைகள்  கருத்தில் எடுப்பதில்லை. அவை மதிப்பீடு தொடர்பாக‌ ஆசிரியரின் புத்தாக்கப் பரிசோதனையினைக் கட்டுப்படுத்துகின்றன. மதிப்பீட்டில் நியாயத் தன்மையினை உறுதிப்படுத்த சில பரந்த, பொதுவான‌ வழிகாட்டுதல்கள் அவசியமாக இருந்தாலும், அவை கற்றற் சூழலினைக் கவனத்திலே எடுப்பனவாகவும் இருக்க‌ வேண்டும்.

கலைத்திட்டத்தினை அணுகும் முறையிலே முன்னேறுவதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். கலைத்திட்டத்தினை நாம் எவ்வாறு சிந்திக்கிறோம்; அதன் உள்ளடக்கம், அது முன்வைக்கும் முறைமைகளுக்கான‌ தத்துவார்த்த அடிப்படைகள் எவை என்பது பற்றிய‌ விரிவான உரையாடல்கள் அவசியம். மேலும் சமூகநீதிக்கும், ஜனநாயகமயமாக்கலுக்குமான‌ எமது பரந்த வேட்கையின் ஒரு பகுதியாக ஜனநாயகபூர்வப் பாடத்திட்டத்திற்கான எமது போராட்டத்தை நாம் முன்னிறுத்த‌ வேண்டும்.