நெருக்கடி காலங்களில் பொதுமக்களை பொதுவிடயங்களில் ஈடுபடவைப்பது கல்வியியலாளார்களுக்கு தவிர்க்கமுடியாதது

அருணி சமரகோன்

இரு வாரங்களுக்கு முன்னர், ஐக்கிய ராச்சியத்திலுள்ள ஹல்
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஐ.நா பேண்தகு வளார்ச்சி இலக்குகள்
தொடர்பான மாநாடொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
மாநாட்டின் தலைப்பு “பேண்தகு வளார்ச்சியின் சமநீதியான நிலைமாற்றம்”
என்பதாகும். புதுப்பிக்கத்தக்க சக்திக்கான புத்தாக்க தொழில்நிட்பம் பற்றி
இயற்கை விஞ்ஞானிகள் பலர் தனியார் நிறுவனக்களால் நிதியுதவி
அளிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை பெறுமையாக
அரங்கேறி பேசிக்கொண்டிருந்தார்கள்.


கலந்துரையாடல்களின் போது சமூக விஞ்ஞானிகள் சிலர் கேள்வியொன்றை
முன்வைத்தார்கள்: எப்போதுமே இலாபத்தை நோக்காகக் கொண்டு இயங்கும்
தனியார் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் ஆய்வு முடிவுகள் தொடர்பான
அறிவு மக்களுக்கிடையில் எவ்வாறு சமத்துவமாக பகிரப்படப்போகின்றது?
பெரும்பாலான இயற்கை விஞ்ஞானிகள் தொழிநுட்பத்தீர்வுகள்
அனைவருக்கும் சமமாக பயனளிக்கும் வகையில் பகிரப்படுவதானது
கொள்கைவகுப்பாளர்களால் உறுதிசெய்யப்பட வேண்டுமென்ற கருத்தை
கொண்டிருந்தார்கள். இந்நிலை ஜனநாயக சூழலொன்றிலேயே
சாத்தியமாகுமென அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். இதன் தொடர்ச்சியாக
நான் ஒரு கேள்வியை பார்வையாளர்களுக்கு முன்வைத்தேன்: “ஜனநாயகம்
காணப்படும் சூழலில் சமபகிர்வு சாத்தியப்படுமாயின் ஜனநாயகம்
மங்கிப்போகும் சூழலில் என்னவாகும்?”. இக்கேள்விக்கு ஐக்கிய
அமெரிக்காவில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியை ஜூலியன்
அகியமேன் அழகான பதிலொன்றை அளித்தார், “ஜனநாயகத்தை மீள
நிலைநிறுத்துவதற்கு கூட்டுமுயற்சி அவசியமாவதோடு அது சமூகநீதிக்காக
பயன்படுத்தப்பட வேண்டும்”. இப்பதில் என்னை ஜனநாயக
மீளெழுச்சியினூடான சமூகநீதிச்செயற்பாட்டுக்கு பொதுமக்கள் பங்களிப்பை உறுதிசெய்ய கல்வியியலாளர்கள் என்ன செய்யலாம் என்ற சிந்தனைக்குள்
ஆழ்த்தியது. இந்த ஆக்கம் இதுதொடர்பாக இலங்கையின் உயர்கல்வியில்
காணப்படும் இடைவெளியையும் தற்போதைய நெருக்கடியில் சமூகநீதியை
நிலைநிறுத்த கூட்டுமுயற்சியை எவ்வாறு ஒழுங்கமைக்கலாம் என்பதையும்
குறித்து ஆராய்கின்றது.


பல்கலைக்கழகங்களும் பொதுமக்கள் ஈடுபாடும்

தற்காலத்தைய பல்கலைக்கழகங்கள் திறந்தவெளி அறிவுசார் சூழலிலிருந்து
வர்த்தக‍மைய மாதிரியொன்றை நோக்கி நகர்வதோடு இதன் காரணத்தால்
உலகளாவிய அறிவுப்பரப்பல் செயற்பாட்டிலிருந்து அவை விலகிவருகின்றன.
பொருளாதார நெருக்கடிகளின் போது பல்கலைக்கழகங்கள் பொதுமக்களை
ஈடுபடச்செய்ய வேண்டிய முக்கியத்துவத்தைப்பற்றி ரொனால்டோ மன்க்,
ஹெலன் மெக்கிலன் மற்றும் ஜொவானா ஒசாரோஸ்கா போன்ற அறிஞர்கள்
உணர்த்திவருகின்றனர். ஆயினும், முதலாளித்துவ அமைப்பொன்றில்
பல்கலைக்கழகங்கள் இப்பங்கை ஆற்றத்தவறுவதை “உயர்கல்வி மற்றும்
பொதுமக்கள் ஈடுபாடு: ஒப்பீட்டுபார்வை” (2012) என்ற ஆய்வு
குறித்துக்காட்டுகின்றது.


“பொது மக்கள்” ஈடுபாடு என்பதற்கான அறிவார்ந்த விளக்கம் விரிந்த
சமூகத்துடனான பல்கலைக்கழகங்களின் உயிர்ப்பான இடையீடுகள்
என்பதாகும். இது சமூக யதார்த்தங்கள் குறித்த சமூக மற்றும் வெளிசார்ந்த
விளக்கங்களுக்கு அப்பால் செல்லக்கூடிய பன்முகத்தன்மைகொண்ட
இடையீடாகும். மேலும், இவ்விடையீடு மக்களுக்கிடையில் அரசியல்
உணர்வுநிலையை ஏற்படுத்தவும் அதிகரிக்கவும் உதவுவதோடு சமூக,
பொருளாதார மற்றும் அரசியல் சூழல்களை சரியாக பகுப்பாய்வு செய்யவும்
ஏதுவாக்கி வைக்கின்றது.


ஜனநாயகத்தை மேலோங்கச்செய்வதற்காக கூட்டு ஒருமைப்பாட்டை
ஏற்படுத்தல் தொடர்பாக குறிப்பாக நாட்டின் ஜனநாயக சூழலை அச்சுறுத்தும்
பொருளாதார் நெருக்கடியோடு இணைத்து குப்பி ஆக்கங்கள்
பேசியிருக்கின்றன. உதாரணமாக, (08/11/2022) அன்று எழுதப்பட்ட குப்பி ஆக்கத்தில் ஷாமலா குமார், கல்வியியலாளர்கள் உட்பட பொதுமக்களான
நாங்கள் ஜனநாயகத்துக்கு வேட்டுவைக்கும் தற்போதைய பொருளாதார
நெருக்கடி குறித்து அவதானமாக இருக்கவேண்டும் என்கின்றார். இதர்கான
சிறந்த வழி, ஆக்கத்தின் ஆரம்பத்தில் பேரா. ஜுலியன் அகியமேன்
குறிப்பிட்டதைப்போன்று ஜனநாயகத்தை மீளநிறுத்த கூட்டுமுயற்சியை
மேற்கொள்ளவேண்டும் என்பதாகும். இக்கருத்தை கூறும்போது அவர் தன்
வாழ்வில் ஒவ்வொரு நாளும் பல்கலைக்கழகத்துக்கு செல்லும்வழியில்
சந்திக்கும் அனுபவம் ஒன்றை உதாரணமாக கூறினார்: “நான்
பல்கலைக்கழகத்துக்கு எனது வாகனத்தில் வரும்போது தலையில்
விறகுகளையும் தோளில் குடும்பசுமையையும் தூக்கிக்கொண்டு பெண்கள்
நடந்துசெல்வதைக் காண்பேன்” என்றார். அண்மையில் குப்பி குழுமத்தில்
“மக்கள் பல்கலைக்கழகமும் ஒரு தேசிய நெருக்கடியும்” என்ற தலைப்பில்
எழுதப்பட்ட ஆக்கத்திலும் (04/07/2023) ஷாமலா குமார் அவர்கள் மேற்கொண்ட
சுயவிமர்சனத்தில் தற்போது காணப்படும் நெருக்கடியான சூழலில்
மேற்கொள்ளப்பட்டும் தொழிலாளர் சட்டசீர்திருத்தத்தில்
கல்வியியலாளார்களின் பங்கு குறித்து ஆராய்கின்றார்.


அறிமுகப்படுத்தப்படவுள்ள தொழிலாளார்சட்ட சீர்திருத்தங்கள் தற்போதைய 8
மணித்தியால வேலைநேரத்தை ஒரு மணித்தியால விடுப்புடன் 16
மணித்தியாலங்களாக மாற்ற முயல்வதோடு குறைந்தபட்ச நியமமற்ற
சம்பளத்தையும் வழங்க அனுமதித்துள்ளது. குறைந்தபட்ச நியயமற்ற
சம்பளத்தோடு 16 மணித்தியாலங்கள் வேலைசெய்ய வேண்டிய நிலை
தொழிலாளர்களின் உரிமைகளின் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
பென்கள் அதிகமாக வேலைசெய்யும் ஆடைதொழிற்சாலைகளை
நினைத்துப்பாருங்கள்: தாங்கமுடியாமல் தாங்கிக்கொண்டிருக்கும்
சிக்கல்களுக்கு மத்தியில் 16 மணித்தியாலங்களாக சிறிய கதிரையொன்றில்
அமர்ந்து முதுகை வளைத்து தையல் இயந்திரத்தை அழுத்திக்கொண்டிருக்க
வேண்டும். மாதவிடாய் வலியிலுள்ள பெண்களுக்கு விடுப்பு எடுக்க
முடியுமான நிலை ஸ்பெயின் நாட்டில் காணபப்டுவதை
நினைத்துப்பார்க்கின்றேன். அவ்வாறான வசதி இலங்கையில் தொழில்புரியும் பெண்க‌ளுக்கு ஏற்படுத்தப்படுமா? இல்லாவிடில் 16 மணித்தியாலங்கள்
வேலை செய்ய உந்தப்படுவார்களா?


இச்சீர்திருத்தங்களின் ஆபத்தை நன்குணர்ந்த கல்வியியலாளர்கள்
அதுகுறித்தான விமர்சனப்பார்வையுடன் கூடிய அறிக்கையொன்றை
வரைந்துள்ளதோடு அதில் 116 கல்வியியலாளார்கள்
கையொப்பமிட்டிருக்கின்றார்கள். இவ்வறிக்கை பொதுவெளியொன்றில்
வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. (https://island.lk/labour-reforms-in-time-of-great-
crisis/).

கல்வி நடவடிக்கைகளில் தவறவிடப்பட்டவை


வளப்பகிர்வில் காணப்படும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வினை
இலவசக்கல்வி என்ற விடயத்தை அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு
விளங்கிவைத்திருக்கின்றோம்? இலவசக்கல்வி அனைவருக்கும் கிடைக்க
வேண்டிய வாய்ப்பென்பதையும் ஏற்கனவே காணப்படும் ஏற்றத்தாழ்வையும்
பல்கலைக்கழக தர நிர்ணய திட்டங்கள் எவ்வளவு தூரம் கவனத்தில்
எடுக்கின்றன? எத்தனை தூரம் பல்கலைக்கழக கல்வித்திட்டங்கள்
இவ்வேற்றத்தாழ்வுகளை தமது பாடத்திட்டங்களில் இணைத்துள்ளன?
கல்வியியலாளர்களாக இருக்கும் நாங்கள் பல்கலைக்கழக பாடத்திட்டங்களில்
உழைப்புச்சுரண்டல்களைப் பற்றி பேசப்படுகின்றனவா என்ற விடயத்தில்
கரிசனையாக இருக்க வேண்டும்.


இலங்கை அண்மையில் தேயிலை உற்பத்தியில் 200 ஆண்டுகளை
கொண்டாடியது. கடந்த இரு தசாப்தங்களில் தேயிலை
பெருந்தோட்டத்துறையில் இருந்து எத்தனை பட்டதாரிகள் வெளியாகி
இருக்கின்றார்கள்? 2022ல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அரசியல்
விஞ்ஞானத்தில் பட்டம்பெற்ற நாராயன் புன்னியசெல்வன் என்ற பட்டதாரியே
நானு ஓயாவில் க்லாஸ்ஸோ தோட்டத்திலிருந்து வந்த முதல்
பல்கலைக்கழக பட்டதாரி ஆவார். நாட்டின் உபரி உழைப்பில் பாரிய
பங்கினை வகிக்கும் பெருந்தோட்டத்துறை நாட்டின் அரசாங்க வருமானத்துக்கும் பொருளாதார உற்பத்திக்கும் அடிப்படையான வருமான
அலகாக காணப்படுவதோடு மட்டுமல்லாமல் இதன் விளைவாக நாட்டின்
இலவசக்கல்வியின் தொடர்ச்சியான இருப்புக்கும் தேவையான அடித்தளமாக
இருக்கின்றது. பெருந்தோட்டத்துறையில் இருக்கும் மக்களது பொருளாதார
உள்ளீடு மற்றும் மறைமுக வரிகளூடான இந்த அளப்பரிய பங்களிப்பை
விடுத்து நாட்டிலுள்ள இலவசக்கல்வியிலிருந்து அவர்கள் பெறும் நன்மைகள்
மிகக்குறைவாவும் என்பது எத்துணை கவலைக்குரியது.
கல்வியியலாளர்களான நாங்கள் இவ்வாறான ஏற்றத்தாழ்வுகளை எப்படி
அணுகுகின்றோம்?
சமூக விஞ்ஞான துறைகளில் இருக்கும் கல்வியியலாளார்கள் ஊழிய
சந்தைக்கு பொருத்தமான “திறனுள்ள தொழிலாளர்களை”
உருவாக்குவதற்கான அறிவுறுத்தல்களை பல்கலைக்கழக மானியங்கள்
ஆணைக்குழுவால் தொடர்ந்தும் பெற்றுவருகின்றனர். சமூக
விஞ்ஞானத்துறைகளில் காணப்படும் வேலையில்லாப்பிரச்சினை
ஊடகங்களிலும் கொள்கைவகுப்பாளர்களுக்கு மத்தியிலும் பரவலான
பேசுபொருளாக மாறியுள்ளது. வேலையில்லாப்பிரச்சினைக்குள் சிக்கும் சமூக
விஞ்ஞான பட்டதாரிகளே வினைத்திறன் குன்றிய அரச துறையில்
இணைவதாக கூறப்படுகின்றது. இதனால் பல நிதித்திட்டங்களிலினூடாகவும்
பட்டதாரிகளின் கணனி அறிவையும் ஆங்கிலப்புலமையும் அதிகரிக்கும்
வகையில் நிகழ்ச்சித்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


சமூக விஞ்ஞான பட்டதாரிகள் சந்தைக்கு தேவையான மேற்கண்ட
திறன்களில் குன்றியவர்களாக இருப்பதை நான் மறுக்கவில்லை, ஆனால்
மேற்கண்ட நிகழ்ச்சித்திட்டங்களால் சிக்கல்கள் இல்லாமல் போயினவா?
இத்திறன்களைக் கொண்டு பட்டதாரிகள் எங்கே செல்வார்கள்? இலங்கையில்
ஊழிய சந்தையில் அளவீடு என்ன? புள்ளிவிபரங்கள் திணைக்களத்தின் 2022
கணக்கீட்டின் படி, 2022ன் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த
தொழிலாளர்களான 8.4 மில்லியன் மக்களில் 47.1%மானோர்
சேவைத்துறையிலும், 27.9%மானோர் கைத்தொழில் துறையிலும், 25%மானோர்
விவசாயத்துறையிலும் இருக்கின்றனர். ஊழிய சந்தைக்கு தேவையான
திறன்களை வளார்க்கும் முயற்சிகளுக்கு மாறாக ஊழிய சந்தையில் காணப்படும் வரையறுக்கப்பட்ட வாய்ப்புகள் சவாலுக்குரியதாக இருக்கின்றன.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் திறனுள்ள பட்டதாரிகளை
உருவாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள‌ சமூக விஞ்ஞானத்துறைகளில்
இருக்கும் கல்வியியலாளர்கள் இவ்வாறான சமூக எதார்த்தங்களை எவ்வாறு
அணுகி தமது கல்விநடவடிக்கைகளில் ஒன்றிக்கின்றார்கள் என்பது குறித்த
விமர்சனப்பார்வை அவசியமானதாகின்றது.


எனது நோக்கம் இலங்கையின் உயர்கல்வி அமைப்பானது முழுமையாக
சமூக எதார்த்தங்களில் இருந்து விலகி இருக்கின்றதாக எடுத்துரைப்பதல்ல.
எனது நோக்கம் இவ்வாறான சமூக சிக்கல்களை எதிர்கொள்ள அவர்கள்
மேற்கொள்ளும் முயற்சிகள் மற்றும் பங்களிப்புகள் போதுமானதா என்பதை
கண்டறிவதாகும். முக்கியமாக, அவர்களின் இம்முயற்சிகள் மற்றும்
முன்முனைவுகள் மேற்கண்ட சமூக சிக்கலளை எதிர்கொள்ளப்போதுமான
வினைத்திறனுடன் காணப்படுகின்றதா என்பதை கண்டறிவதாகும்.


எமது செல்வழி என்ன?


பொதுமக்களின் உணர்வுநிலையை ஏற்படுத்துவதென்பது அரசியல்
உட்கிடைகள் காணப்படும் விடயமாகும். இதன் முக்கிய வகிபாகம்
கல்வியியலாளர்களை சார்ந்ததாகும். இலங்கையில் கல்வியியலாளர்கள்
மற்றும் பொதுமக்களின் ஒன்றிய முயற்சிக்கான வரலாற்று உதாரணம் 2012ல்
கல்வி உரிமையை பாதுகாப்பதற்காக காலியிலிருந்து கொழும்பு வரை
மேற்கொள்ளப்பட்ட பேரணியாகும். இவ்வாறான ஒன்றிய முயற்சிகளுக்கான
பொறுப்பு கல்வியியலாளர்களை சார்ந்ததாகும், அவர்களே பொதுமக்களுக்கும்
குறிப்பாக தொழிலாளர்களுக்கும் அவர்களின் உரிமைகள் தொடர்பில்
அறிவூட்டக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். இதன் ஒரு பகுதியே
தொழிலாளர் உரிமைகள் மீது கற்கள் வீசப்படும் போது அது தொடர்பாக
அறிக்கைகள் வெளியிடுவதும் பொதுமக்களின் உணர்வுநிலையை
தூண்டவல்ல முயற்சிகளில் ஈடுபடுவதுமாகும். எனது அறிவுக்குட்பட்ட
வகையில் கல்வியியலாளர்கள் அவர்களின் தொழில்சுமை,
நேரப்பற்றாக்குறை, தொழில்தர்மம் மற்றும் வகுப்புவாரியான உணர்வுநிலை போன்ற காரணங்களால் பொதுமக்களோடு இயங்கும் இயலுமையில்
சிக்கல்கள் காணப்ப‌டுவதாக எண்ணுகின்றேன். தற்போது காணப்படும்
நெருக்கடிக்கு மத்தியில் கல்வியியலாளர்கள் பொதுமக்களோடு ஈடுபாடு
காட்டாவிடின் அவர்களது நிலவுகையும் கேள்விக்குள்ளாகும் என்பது
தவிர்க்கப்பட முடியாதது.


கல்வியியாலாளர்கள் உட்பட பொதுமக்களான நாங்கள் தற்போது
உருவாகியிருக்கும் ஜனநாயகத்துக்கு வேட்டு வைக்கும் நெருக்கடி குறித்து
அவதானமாக இருக்க வேண்டும். இந்த ஆக்கத்தில் ஏற்கனவே குறிப்பிட்டது
போல, இதற்கான வினைத்திறனான தீர்வு, பேரா. ஜூலியன் அகியமன்
குறிப்பிட்டதுபோல கூட்டு முயற்சியினூடாக ஜனநாயகத்தை
மீளக்கட்டியெழுப்புவதாகும். இக்கட்டியெழுப்பும் பணிக்கு அடிப்படையான
விடயம் பல்கலைக்கழகங்களின் பொதுமக்களின் மீதான ஈடுபாட்டை
புத்துயிர்ப்பதாகும். இதற்கான நடவடிக்கைகளாக சமூக எதார்த்தங்களையும்
சிக்கல்களையும் பிரதிபலிக்கும் கல்வித்திட்டங்களை உருவாக்குதல்,
பொதுமக்கள் கலந்துரையாடல்களுக்கான திறந்தவெளிகளை உருவாக்கி
வளர்த்தல், வரலாற்று நிகழ்வுகளை புதிய நுண்ணோக்குகளை உருவாக்கும்
நிமித்தம் மீள ஆராய்தல், மற்றும் தொழிலாளர் சுரண்டல் உள்ளிட்ட ஏனைய
சிக்கல்களை உருவாக்கும் அரசாங்க கொள்கைகளை மற்றும் அவை
உருவாக்கப்படும் ஏகாதிபத்திய உட்பொதிப்புகளை விமர்சித்தல்
போன்றவற்றை கொள்ளலாம். இவ்வாறான பங்களிப்புகளின் மூலம்
இலங்கையின் ஜனநாயக மீளெழுச்சிக்கும் கல்வியியலாளார்கள் முக்கிய
பங்கை வகிக்கக்கூடியதாக இருப்பதோடு நாடு எதிர்நோக்கியுள்ள சிக்கல்களை
கூட்டுமுயற்சியினூடாக எதிர்கொள்ள முடியுமான அர்த்தமிகு
பிரஜைகளையும் உருவாக்கலாம்.