பெண்கள் மற்றும் ஆண்களுக்கான அதிகாரம் மற்றும் சுதந்திரம் வழங்கும் ஒரு நடைமுறையாகக் கல்வி

அருணி சமரக்கோன்

“வுல்ஸ்டன்கிராப்டின் A Vindication of the Rights of Woman (1972) ஆனது, கல்வியின் மூலம் பெண்களின் அதிகாரமூட்டலை ஆதரிக்கின்றது. இது பெண்கள் மீது திணிக்கப்பட்டுள்ள பாங்கான பிம்பங்களுக்கு எதிரான அவரது போராட்டத்தை பிரதிபலிக்கின்றது”

நிக்கோலா பெரேராவின் “பல்கலைக்கழகங்களில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையைக் (SGBV) கையாள்தல்” (18/02/2025) என்ற அண்மைய குப்பி கட்டுரையில், இலங்கையின் உயர்கல்வித்துறையில் பெண்கள் மற்றும் LGBTQ+ சமூகம் உட்பட ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்கான நிறுவனக் கட்டமைப்புக்களுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளியைப் பற்றி ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார்.

அந்த விவாதத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தக் கட்டுரை இலங்கையின் உயர்கல்வியில் பெண்ணியக் கல்வியியலின் உள்ளடக்கம் இல்லாமையை எடுத்துக்காட்டுவதில் கவனம் செலுத்துகின்றது. இது பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளின் (SGBV) தன்மையை இனங்கண்டு அவற்றை தடுப்பதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள காணப்படுகின்ற நிறுவன மற்றும் கட்டமைப்பு ரீதியான தோல்விகளின் விளைவாக இருக்கலாம்.

இந்தக் கட்டுரை பெண்ணியக் கல்வியியலை வரையறுத்து, அதன் முக்கியத்துவத்தை ஆய்வு செய்து, கல்வியில் அதன் உள்ளடக்கத்தை ஆராய்வதுடன், அது தொடர்பான முக்கியமான கருதுகோள்களுடன் நிறைவடைகிறது.

பெண்ணியக் கல்வியியல் என்றால் என்ன?

இந்தக் கேள்விக்கான எளிய பதில் என்னவென்றால், பெண்ணியக் கல்வியியல் என்பது உலகின் யதார்த்தத்தைக் கற்கின்ற ஒரு முறையாகும். இது யதார்த்தத்தை விளக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்ற அதிகார இயக்கங்கள் பற்றிய புரிதலால் வளர்க்கப்படுகிறது. இந்த அதிகார இயக்கங்களே யதார்த்தத்தை யார் வரையறுக்கிறார்கள், எது அறிவாகக் கருதப்படுகின்றது, அந்த அறிவு எவ்வாறு கற்கப்படுகின்றது மற்றும் புரிந்து கொள்ளப்படுகின்றது என்பதைத் தீர்மானிக்கின்றன. 

இந்த அடிப்படைப் புரிதலை பெல் கூக்ஸ் (bell hooks) போன்ற அறிஞர்கள் மேலும் வலுப்படுத்துகின்றனர். Teaching to transgress (1994) என்ற நூலில், அறிவு வெறுமனே தகவலாகக் குறைக்கப்பட்டு, அன்றாடப் பிரச்சினைகளுடன் இணைக்கப்படாவிட்டால், அது தனது மாற்றும் திறனை இழக்கின்றது என்று வாதிடுகின்றார். ஆனால் பெண்ணியக் கல்வியியல், அறிவைச் செயல்பாட்டுவாதத்துடனும், அதிகாரமற்றவர்களின் போராட்டங்களுடனும் இணைத்து அதனை நிஜ உலகத்திற்கு வெளிப்படுத்துகின்றது. அறிவுக்கும் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் இடையிலான இந்த இணைப்பே, பெண்ணியக் கல்வியியல் உலகின் யதார்த்தத்தை எவ்வாறு புரிந்து கொண்டு விளங்குகிறது என்பதற்கான அடித்தளத்தை உருவாக்குகின்றது.

பெண்ணியக் கல்வியியலின் வரலாற்றைப் பார்க்கும் போது, மேரி வுல்ஸ்டன்கிராப் இலிருந்து ஷீலா ரோபோதம் மற்றும் அன்ஜலா டேவிஸ் போன்ற நவீன அறிஞர்கள் வரை, ஒரு பொதுவான கருத்து எழுகின்றது. அதாவது, பெண்கள் எவ்வாறு பாங்கான விம்பங்களுக்குள் அடைக்கப்படுகின்றார்கள் என்ற உண்மையை அடையாளம் காணுதல் ஆகும். அவர்களின் கற்பனை, திறன்கள், திறமைகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன மற்றும் கலாசாரத்தால் விதிக்கப்பட்ட பாத்திரங்களுக்குள் எவ்வாறு சுருக்கப்படுகின்றனர் என்பதை உணர்ந்து கொள்வது அவசியமாகும். இந்த வரையறைகளை ஒரு விமர்சனக் கண்ணோட்டத்துடன் புரிந்து கொள்ளுதல் அறிவையும், மனித சிந்தனையையும் மேம்படுத்துவதுடன், திணிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு அப்பால் தங்கள் சொந்த அடையாளங்களை வரையறுப்பதன் மூலம் பெண்கள் சுய உணர்தலை அடைய அனுமதிக்கின்றது. இந்த செயல்முறை இறுதியில் விடுதலையையும், அவர்களின் குரல்கள் கேட்கப்படுகின்ற இடத்தையும் உருவாக்கி அதிகாரமூட்டலையும் வளர்க்கிறது. இந்த யதார்த்தங்களை வடிவமைப்பதில் உள்வாங்கப்பட்டுள்ள அதிகார இயக்கங்களைப் புரிந்து கொள்வதன் மூலம் அதிகாரமூட்டல் இடம்பெறுகிறது. இந்த அதிகாரமூட்டலே, தனிநபர்களை விழிப்புணர்வுடன் தேர்வு செய்யவும், நடவடிக்கை எடுக்கவும் உதவுகின்றது. 

மேரி வுல்ஸ்டன்கிராப், பெல் கூக்ஸ், ஷீலா ரோபோதம், குமாரி ஜெயவர்த்தன ஆகிய அறிஞர்கள், பெண்களின் சமத்துவமின்மை, ஒதுக்கப்பட்ட கல்வி, புரட்சிகரமான விழிப்புணர்வு, வரையறுக்கப்பட்ட சமூக நலன், வர்க்க மற்றும் இன அடிப்படையிலான பாகுபாடு போன்ற சமூக உண்மைகளை, பெரும்பாலும் தங்களுடைய மற்றும் பிறரின் பிரச்சினைகளுடன் இணைத்து ஆராய்கின்றனர்.

வுல்ஸ்டன்கிராப்டின் A Vindication of the Rights of Woman (1792) கல்வியின் மூலம் பெண்களுக்கு அதிகாரமூட்டலை ஆதரிப்பதுடன், பெண்களுக்கு திணிக்கப்பட்ட பாங்கான பிம்பங்களுக்கு எதிரான அவரது போராட்டத்தைப் பிரதிபலிக்கின்றது. பெல் கூக்ஸ் இன் ஆய்வுகள், ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த தொழிலாளர் வர்க்கப் பெண்ணாக தனது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, மனித சிந்தனையை உருவாக்கும் அதிகார இயக்கங்களை ஆராய்கின்றன. ஷீலா ரோபோதம், தனது Reasons to Rebel (2024) என்ற நூலில், இங்கிலாந்தில் பெண்களின் புரட்சிகரமான விழிப்புணர்வை வெளிப்படுத்தி, சமூக நலனுக்கான அரசின் பொறுப்பை வலியுறுத்துகிறார். குமாரி ஜெயவர்த்தனவின் ஆய்வுகள், குறிப்பாக தோட்டத் தொழில் துறைகளில், தொழிலாளர் வர்க்கத்தின் தொடர்ச்சியான போராட்டங்களை முன்வைக்கின்றன. 

மேலே குறிப்பிட்ட ஆய்வுகள், பெண்ணியக் கல்வியியல் என்பது யதார்த்தத்தை, எவ்வாறு, ஏன், யார் மூலம் உருவாக்கப்பட்டது என்பதை ஆராய்ந்து, அதனை விமர்சன ரீதியாகப் பரிசோதிப்பதாகும் என்பதைக் குறிப்பிடுகின்றன. 

ஏன் பெண்ணியக் கல்வியியல்?

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க, உயர்கல்வித்துறையில் SGBV பற்றிய நிக்கோலாவின் கருத்துக்களைப் பயன்படுத்த நான் சுதந்திரம் எடுத்துக் கொள்கின்றேன். நிக்கோலா ஒரு முக்கியமான பிரச்சினையை எழுப்பினார். பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் (SGBV) தடுப்பதற்காக சட்ட மற்றும் நிறுவன ரீதியான அமைப்புகள், அதாவது, உள்ளூர் மட்டத்தில் இருந்து சர்வதேச மட்டம் வரை உலகளாவிய சாசனங்கள் மூலம் நீட்டிக்கப்படும், கட்டமைப்புகள் ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் (SGBV) தொடர்ந்தும் உயர்கல்வி நிறுவனங்களுக்குள் தொடர்கிறது. இந்த வன்முறையானது முதன்மையாக பெண்கள் மற்றும் LGBTQ+ சமூகங்களைச் சார்ந்தவர்களைப் பாதிக்கின்றது. 

இந்தப் பிரச்சினை, சமூக உண்மைகளை அறிவியல் ரீதியாக ஆராயவும், அவற்றிற்கு அடிப்படையாக உள்ள அதிகார இயக்கங்களை விமர்சன ரீதியாகப் பகுப்பாய்வு செய்யவும் வழிகோலுவதால், பெண்ணியக் கல்வியியலுடன் நெருங்கிய தொடர்புடையது. நிக்கோலா குறிப்பிடுவது போல, பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) விசாரிக்கும் இறுதியான அதிகாரம் யாரிடம் உள்ளது, அதனை சவாலுக்குட்படுத்துகின்ற அதிகாரம் யாருக்குக் கிடைக்கின்றது போன்ற கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள்விகள் நடைமுறையிலுள்ள அதிகார அமைப்புக்களை வெளிப்படுத்துகின்றன. பல்கலைக்கழகங்களில் பெண்கள் பாலியல் மற்றும் உடலியல் ரீதியான வன்முறைக்கு உள்ளாகின்றனர் என்பது பரவலாக அறியப்பட்டிருந்தாலும், மிகச் சில வழக்குகளே முறைப்பாடு செய்யப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்துகின்ற திறன், அவர்களைச் சூழ்ந்துள்ள அதிகார அமைப்புக்களாலோ அல்லது பலம் வாய்ந்த நிறுவன நபர்களுடனான நேரடி அல்லது மறைமுக உறவுகளைக் கொண்ட குற்றவாளிகளின் செல்வாக்கினாலோ கட்டுப்படுத்தப்படுவதால், பல சம்பவங்கள் வெளிப்படாமல் போகின்றன. 

இந்தச் சூழலில் காணப்படுகின்ற அரசியல் பரிகாசம் என்னவென்றால், ஒதுக்கப்பட்ட இந்த நபர்களுக்கு அதிகாரமூட்டலை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களின் குறுகிய செயற்பாட்டு திறன் சில கல்வியாளர்களால் மிகைப்படுத்தப்பட்டு காட்டப்படுகின்றதுடன் இது சில சமயங்களில் பாடல்கள் இயற்றுதல் போன்ற குறியீட்டு செயல்களின் மூலமும் வெளிப்படுகிறது. இன்றைய நிலையில், பல்கலைக்கழகங்களில் நிகழும் வன்முறை பெண்களுக்குள் மட்டுப்படுத்தப்படாமல், LGBTQ+ சமூகத்தையும் பாதிக்கின்றது. இலங்கையின் LGBTQ+ அடையாளங்கள் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்படாத போதிலும், நவீன அரசியல் உரையாடல்கள் அவர்களின் அடையாள அங்கீகாரத்தையும், அவர்களின் குரலைப் பாதுகாப்பதையும் ஆதரித்துள்ளன. இருந்தபோதிலும், இலங்கை உயர்கல்வித்துறை, அவர்களுக்கு எதிரான வன்முறைகளைச் சரியாக இனங்கண்டு தடுப்பதில் இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றது. 

பெண்ணியக் கல்வியியலின் மூலம், பெண்கள், ஆண்கள், மற்றும் LGBTQ+ சமூகத்தினரின் பிரச்சினைகள், கற்றல் மற்றும் கற்பித்தல் சூழலில் அத்தியாவசிய அங்கங்களாக அங்கீகரிக்கப்படுகின்றன. அதாவது, இதன் மூலம் அறிவு வகுப்பறையைத் தாண்டி நிஜ உலகுடன் இணைக்கப்படுகின்றது. இதனை ஓர் எடுத்துக்காட்டின் மூலம் மேலும் விளக்கலாம். அதாவது, நாம் கல்வித்துறையில் உள்ள பெண்களை எவ்வாறு புரிந்து கொண்டு அங்கீகரிக்கின்றோம்? அவர்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்பான முன்னேற்றத்தின் செயற்பாட்டாளர்களாகக் கருதப்படுகின்றார்களா? அல்லது கல்வித் துறையில் உள்ள ஆண்களின் இன்பத்திற்காக அழகான சேலைகளும், சிவப்பு நிற உதட்டுச் சாயங்களும் அணியும் ஒரு பாலியல் பொருளாக மட்டுப்படுத்தப்படுகிறார்களா? ( பெண்கள் தாங்கள் விரும்பிய ஆடைகளை அணியவும், விரும்பியபடி தம்மை அலங்கரித்துக் கொள்ளவும், சுதந்திரமாக அனுமதிக்கப்பட வேண்டும் என்பது எனது உறுதியான நம்பிக்கை) கற்பிணிப் பெண்கள் அல்லது சிறு குழந்தைகளுள்ள கல்வித்துறையினர், மருத்துவ நிலைமைகள் இருந்தாலும் அவரிகளின் திறன்களும் திறமைகளும் குறைத்து மதிப்பிடப்படக்கூடாது அல்லது அவர்களைப் பலவீனமானவர்கள் மற்றும் வழிகாட்டல் தேவைப்படும் நபர்கள் என்றும் நோக்கப்படக்கூடாது. இது அவர்களின் மீது திணிக்கப்பட்டுள்ள பாலின பாங்கான பிம்பங்களை மேலும் வலுப்படுத்துகின்றது. மேலும், கல்வி நிறுவனங்கள் பெண்களை எவ்வாறு நோக்குகின்றன? அவர்கள் உயர்ந்த இலட்சியங்கள் கொண்ட, தொழில் நோக்குடன் செயற்படும், சுய உணர்தலை அடைவதில் கவனம் செலுத்துகின்ற மற்றும் தங்கள் கல்விசார் கருத்துக்களை வெளிப்பாட்டு சுதந்திரத்தின் ஒரு வடிவமாகக் கொண்டவர்களாகக் கருதப்படுகின்றார்களா? இலங்கைப் பல்கலைக்கழகங்கள், என்டோமட்ரியோசிஸ் அல்லது மாதவிடாய் நிறைவு போன்ற நிலைகள் பெண்களின் கல்விசார் செயல்திறனில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதை உணர்ந்துள்ளனவா? 

இவ்வாறான விமர்சன ரீதியான வாசிப்புகளும் புரிதல்களும் பெண்ணியக் கல்வியியலின் மூலம் வளர்க்கப்படுகின்றன. 

எவ்வாறு பெண்ணியக் கல்வியியலை ஒருங்கிணைப்பது?

பெண்ணியக் கல்வியியலின் ஒருங்கிணைப்பு மற்றும் உள்ளீர்ப்பு ஆகிய இரண்டு நிலைகளும் வேறுபட்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போதைய நிலையில், இலங்கையின் கல்வியியல் பெண்ணியக் கல்வியியலின் உள்ளீர்ப்பு முறையையே பின்பற்றுகிறது. இந்த உள்ளீர்ப்பு, பாடத்திட்டத்தை பாலினம் தொடர்பான கற்றல் என்ற பிரிவாகப் பிரித்து தனிமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனது வாதம் என்னவென்றால், பாலினம் தொடர்பான கற்றல் மற்றும் பெண்ணியக் கல்வியியல் ஆகிய இரண்டும் வேறு பாடத்திட்டப் பகுதிகள் ஆகும். இலங்கைப் பல்கலைக்கழகங்களின் மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடங்களில் பெரும்பாலானவை ஏற்கனவே பாலினக் கற்றல் தொடர்பான பாடங்களை வழங்கி வருகின்றன. இது பாலின வரையறைகள், சமத்துவமின்மை, அநீதி மற்றும் பாலின விவகாரங்கள் தொடர்பான ஆய்வுகள் போன்றவற்றைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் குறிப்பிடத்தக்கதும், பாராட்டத்தக்கதுமான ஒன்றாகும். 

இருந்தபோதிலும், பெண்ணியக் கல்வியியல் இன்னும் இலங்கைக்கு புதியதாகவே உள்ளதுடன் இதுவரை பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்படவில்லை. இதனை மேலும் விளக்குவதற்கு அரசியல் அறிவியல் கற்கைகளிலுள்ள சர்வதேச உறவுகள் பாடப்பிரிவை எடுத்துக் கொள்ளலாம். சர்வதேச உறவுகள் குறித்த விவாதங்களில் பெண்ணிய ரீதியான கண்ணோட்டமே உள்ளடக்கப்படவில்லை. பெண்ணியக் கல்வியியல் அணுகுமுறைகள் இன்னும் அரசியல் அறிவியல் துறையின் சர்வதேச உறவுகள் பாடப்பிரிவில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. மோதல் மற்றும் அமைதி ஆய்வுகளில், பெண்களின் பங்களிப்பை உள்ளடக்கிய மோதல் வரலாற்றைப் புரிந்து கொள்வது அவசியமானதாகும். எடுத்துக்காட்டாக, ஏன் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த தமிழ் பெண்கள், ஒரு கட்டத்தில் தங்கள் வீடுகளை விட்டு விட்டு ஆயுதப் புரட்சி இயக்கத்தில் இணைவதைத் தீர்மானித்தனர்? பெண்களுக்கு அமைதி என்றால் என்ன பொருள்? பெண்ணிய விழிப்புணர்வின் வழியாக அமைதியை எவ்வாறு கண்டுபிடிக்கலாம்? இவை மோதல் மற்றும் அமைதி கற்றலில், வெறுமனே ஜோன் கால்டுங்கின் மோதல் முக்கோணத்தை மட்டுமே கற்பிப்பதற்குப் பதிலாக, பெண்ணியக் கல்வியியல் ஒருங்கிணைக்கப்பட்ட வேண்டும் என்ற எனது வாதத்தை வலுப்படுத்துகின்ற சில கேள்விகள் ஆகும். கால்டுங்கின் அமைப்பின்படி மோதல் மற்றும் அமைதியினை விவரிப்பதற்கு, விமர்சன ரீதியான பெண்ணியக் கோணத்தில் ஆய்வு செய்தல் இடம்பெறாமை, இந்தத் துறையில் பெண்ணியக் கல்வியியலின் தேவையை மேலும் வலியுறுத்துகின்றது. 

STEM துறையில், கண்டுபிடிப்புகளுக்கு பெண்களின் பங்களிப்பு, அவர்கள் பொருட்களுடன் தொடர்பு கொள்ளும் முறையைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் ஆராய்ச்சி முடிவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்ற பெண்களின் அனுபவக் கதைகளின் அடிப்படையில் உருவான பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துவதன் மூலம் பெண்ணியக் கல்வியியலை ஒருங்கிணைக்கலாம். 

முடிவுரை

இந்தக் கட்டுரையின் மூலம் வலியுறுத்தப்படுகின்ற முக்கியமான கருத்து என்னவெனில், பெண்ணியக் கல்வியியலானது தனித்துப் பிரிக்கப்பட்டு பாலின கற்றல் போன்ற குறிப்பிட்ட பாடத்திட்டங்களுக்குள் மட்டுப்படுத்தப்படாமல், அது கல்வி அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். இந்த ஒருங்கிணைப்பின் மூலம், பெண்ணியக் கல்வியியல் சமூக நிஜங்களை ஆழமாகப் புரிந்து கொள்ளவும் பகுப்பாய்வு செய்யவும் புதிய கோணங்களை வழங்குகின்ற சுயாதீனமான ஆய்வு முறையாக அங்கீகரிக்கப்படுகின்றது. மேலும், வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்க, அனைவருக்கும் பாதுகாப்பான உயர் கல்விச் சூழலை உருவாக்க, தங்களுடைய அடையாளங்களை நிலைநிறுத்தி அவர்கள் விரும்பும் மனிதர்களாக வளர, மற்றும் நீதி, சமத்துவம், பன்முக பிரதிநிதித்துவத்திற்கான கூட்டுப் போராட்டத்தில் பங்கேற்க வழிவகுக்கின்றது.

நான் பெண்ணியக் கல்வியியலை மிகைப்படுத்திக் கூறவில்லை. மாறாக, அது மனிதர்களின் விமர்சன சிந்தனையை வளர்த்தெடுக்கவும், தனிநபர்களுக்கு அதிகாரமூட்டலையும் வழங்குகின்றது என நம்புகின்றேன். இந்த அதிகாரமூட்டல் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பொருந்துகின்றது. ஏனெனில், கல்வி, அதிகாரமூட்டல் மற்றும் கல்வியியலில் நீதி ஆகியவை அனைவருக்கும் நன்மை பயக்கும் செயற்பாடுகளாகும். இதற்கிடையில், போராடி, பாடுபட்டு, வெற்றிகளைப் பெற்ற ஒவ்வொரு பெண்ணிற்கும், மேலும் இந்தப் பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்குமான உரிமைகளுக்காக முன்நின்று உழைத்த, உழைக்கின்ற ஒவ்வொரு பெண்களுக்கும் நான் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அனைவருக்கும் அர்த்தமுள்ள 2025 ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்!