பொருளாதார நெருக்கடியில் கல்வி

மஹேந்திரன் திருவரங்கன்

தற்போதைய பொருளாதார நெருக்கடி நாட்டின் கல்வித்துறையை
பாரியளவில் பாதித்துள்ளது. முன்கல்வி மாணவர்கள் தொடக்கம்
பல்கலைக்கழக இளங்கலை மாணவர்கள் வரை மாணவர்கள், ஆசிரியர்கள்
மற்றும் கல்விசாரா ஊழியர்களென அனைவரும் எதிர்பாராத பல சிக்கல்களை
எதிர்கொண்டிருக்கின்றார்கள். எமது கல்விநிலையங்களும் அடிக்கடி ஏற்படும்
மின்வெட்டு, காகிதாதிகள் மற்றும் இரசாயனங்கள் போன்ற கற்றலுக்கு
தேவையான பொருட்களின் தட்டுப்பாடு போன்றவற்றால் கல்வி
நடவடிக்கைளை தொடர்ந்தும் நடத்த முடியாமல் திண்டாடுகின்றன.
விடுதிகளில் தங்கும் மாணவர்கள், வீடுகளில் தங்கிப்படிக்கும் மாணவர்கள்
ஆகியோர் உணவு, போக்குவரத்து உட்பட அன்றாட தேவைகளை
நிறைவேற்ற அரும்பாடுபடுகின்றனர். பொருளாதார நெருக்கடி காரணமாக
இவ்வருடம் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பில் நான்காம் வருட
விஷேட கற்கைநெறியை தொடரும் மாணவர்களின் எண்ணிக்கை
குறைந்துள்ளது.


குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள்,
ஒடுக்கப்பட்ட சாதிகளில் இருந்து வந்த மாணவர்கள், வறுமையால்
பாதிக்கப்பட்ட நகர்ப்புற மாணவர்கள், மீன்பிடி சமூகங்களிலிருந்து வந்தோர்,
கிராமிய மற்றும் பெருந்தோட்டங்களில் வாழும் மாணவர்கள், போரால்
பாதிக்கப்பட்ட வடக்கு‍-கிழக்கை சேர்ந்த மாணவர்கள் ஆகியோர்
இந்நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள்.
கல்வியானது தொடர்ச்சியாக விலைமிகுந்ததாக மாறிவருவதனால்
இலவசக்கல்வியானது சமூக நகர்வு மற்றும் சமூகநீதிக்கான கருவியாக
இருக்கும் இயலுமை குறைந்துகொண்டே வருகின்றது. இதற்கான தீர்வுகளை
நோக்கிச் செல்லவேண்டிய நிலையில், எமது இலவசக்கல்வியானது
இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டமைக்கும், மாணவர்கள் கல்வித்துறையை விட்டும் தூரமாகுவதற்கெதிரான நடவடிக்கைகளை எடுக்க
முடியாமைக்குமான காரணங்களை குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.


நெருக்கடியை புரிந்துகொள்ளுதல்


தற்போதைய பொருளாதார நெருக்கடியும் அது கல்வித்துறையில் ஏற்படுத்தும்
பாதிப்பும், 1977களில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த
பொருளாதார கொள்கைகளிலிருந்தும் அன்றிலிருந்து கல்வித்துறை
திட்டமிடல்கள் உருவாக்கப்படும் நவதாராளவாத சிந்தனாமுறையிலிருந்தும்
சிந்திக்கப்பட வேண்டிய விடயங்களாகும். தற்போதைய நெருக்கடியானது
ஏற்கனவே முற்றுகையிடப்பட்டுள்ள ஒரு அமைப்பின் வெளிப்படையான
விளைவே. இலங்கையில் ஏற்பட்ட கோவிட் பெருந்தொற்றானது
இந்நெருக்கடியை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியதோடு சவால்மிகுந்ததாகவும்
மாற்றியுள்ளது.


தற்போது மாணவர்கள் எதிர்நோக்கும் நெருக்கடியானது, தொடர்ந்துவந்த
அரசாங்கங்கள் கல்வித்துறையில் காட்டிய அதீத அசமந்தப்போக்கின்
விளைவேயாகும். பெருந்தொகையான பணம் ஹம்பாந்தோட்டை துறைமுகம்,
மத்தளை விமானநிலையம், தாமரை கோபுரம், கொழும்பை அழகுபடுத்தும்
செயற்றிட்டங்களிலும் இராணுவ துணைப்பொருட்களை விரிவாக்கும்
செயற்பாடுகளில் செலவளிக்கப்பட்ட நிலையில் 2012ஆம் ஆண்டிலிருந்து
முன்வைக்கும் யில் 6%மான பகுதியை கல்விக்கு ஒதுக்கும் கோரிக்கை
நிராகரிக்கப்பட்டே வந்துள்ளது. 1980களில் இருந்தே அரசாங்கங்கள்
இளங்கலை மாணவர்களுக்கான விடுதி வசதிகளை ஏற்படுத்தல், கிராமப்புற
பாடசாலைகளில் விஞ்ஞானத்துறை உட்பட உயர்தர வகுப்புகளில்
பரந்தளாவிலான தேர்வுகளை ஏற்படுத்தும்படியான வளங்களை கொண்டு
விருத்திசெய்தல் போன்ற‌ கல்வித்துறைக்கு ஆதரவளிக்கும்
நடவடிக்கைகளை புறமொதுக்கியே வந்துள்ளன. இவ்வாறான
வாய்ப்புவசதிகளை ஏற்படுத்தியிருந்தால் தற்போது மாண‌வர்கள்
எதிர்கொள்ளும் போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளுக்கான
செலவுகளை நெருக்கடிச்சூழலில் கட்டுப்படுத்தியிருக்கலாம். ஏனெனில் குறைந்த வருமானம் பெறும், தொழிலாளர் வர்க்க குடும்பங்களே
அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை மையப்படுத்திய
மீள்விநியோகமே நெருக்கடிக்கான‌ பொருத்தமான தீர்வாயிருக்கும். இந்த
அடிப்படையில் இம்மக்களுக்கு எவ்வகையில் உதவியாக இருக்கும்
என்பதோடு சமத்துவமான சமூகமொன்றை உருவாக்கும் நடவடிக்கைக்கு
துணைபுரியுமா என்பதை வைத்துத்தான் அரசாங்கம் தற்போது
மேற்கொள்ளும் ஒதுக்கீடுகள் நியாயப்படுத்தப்படலாம். இந்த நியாயப்படுத்தல்
அபிவிருத்தி சார் நடவடிக்கைகளில் உலகளாவிய இலவசக்கல்வி மற்றும்
இலவச மருத்துவத்தை மையப்படுத்தியதாக இருக்கவேண்டும். வருமான வரி
மற்றும் சொத்துவரிகளை நடைமுறைப்படுத்துவதற்கான எமது அழைப்பு,
இதனால் அறவிடப்படும் வருமானமானது இலவசக்கல்வி அமைப்பில்
ஏற்றத்தாழ்வுகளை களைய பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தை
அடிப்படையாகக் கொண்டதாகும்.


நெருக்கடிக் காலத்தில் கல்வியை மீள்கற்பனை செய்தல்


நவதாராளவாதமானது எம்மை, கல்வியை ஒரு நேரங்குறிக்கப்படாத, வரலாறு
இல்லாத, சமூகங்கள் எதிர்கொள்ளும் சமூக‍- பொருளாதார
சூழமைவிலிருந்தும் விடுபட்ட விடயமாகப் புரிந்துகொள்ள வைத்துள்ளது.
எமது கல்வித்திட்டங்களும் தேர்வு முறைகளும் கல்லில் செதுக்கப்பட்டவை
போல வெறுமனே படிம அச்சுகளாக மாற்றப்பட்டுள்ளன.
நவதாராளவாதமானது ஆசிரியர்களை வெறுமனே கற்றல் இயந்திரங்களாக
மாற்றியிருப்பதோடு அவர்கள் கால சூழலுக்கேற்பவும் குறிப்பிட்ட வரலாற்று
சூழலுக்கேற்பவும் கல்வித்திட்டங்களை புதிய கருத்தாக்கங்களோடும்
கர்பனைகளோடும் கற்பிக்கின்றவர்களாக வார்க்கவில்லை.


இந்த நிலையில், குறுகிய காலத்திலான, அறிவார்ந்தரீதியில் அர்த்தமுடைய,
குறைந்த செலவுடன் கூடிய‌ கல்வித்திட்டமொன்றையும் தேர்வு
முறைகளையும் மேம்படுத்தவேண்டிய தேவை உருவாகியுள்ளது. இவ்வாறான
முறைமைக்கு ஆசிரியர்கள் தயாராக இருந்தாலும், கல்வி நிர்வாகங்கள்
அவற்றை கலந்துரையாடக்கூட தயாராக இருக்கவில்லை, இந்நிலையில் அவற்றை செயற்படுத்துவது எட்டாக்கனியே. பல்கலைக்கழகங்கள்,
பாடசாலைகள் ஆகியன ஒரு பொதுவான கல்வித்திட்டத்தின் கீழ்
காணப்படாவிடினும் அனைத்து பல்கலைக்கழகங்களும் வழக்கொழிந்து போன
சட்டதிட்டங்களை கொண்ட மையப்படுத்தப்பட்ட அமைப்புகளால்
இயக்கப்படுவதோடு இவற்றில் எதிர்பாராத சமூக பொருளாதார
சூழ்நிலைகளுக்கேற்ப தம்மை தகவமைக்கும் நிலை அரிதாகவே
காணப்படுகின்றது.


நெருக்கடிக் காலத்தில் கல்வியானது நெருக்கடியை மையப்படுத்தி காணப்பட
வேண்டும். பல்கலைக்கழக பாடத்திட்டங்களும் தற்காலத்தைய அரசியல்-
பொருளாதார சூழமைவுகளையும் அதனால் சமூகங்களுக்கு ஏற்படும்
பாதிப்புகளையும் உள்ளடக்கக்கூடியவையாக தகவமைக்கப்பட வேண்டும்.
மாணவர்களும் ஆசிரியர்களும் தமது கல்வி நடவடிக்கைகளை
நெருக்கடியையும் நெருக்கடியை உண்டுபண்ணும் கொள்கைகளையும்
கருத்தியல்களையும் விளங்கிக்கொள்ளும் வகையில் அமைத்துக்கொள்ள
வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் மாணவர்களையும்
ஆசிரியர்களையும் நெருக்கடிக்கான தீர்வுகளை காணும் வகையில்
சமூகங்கள், தொழிற்சங்கங்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும்
கொள்கைவகுப்பாளர்களோடு சேர்ந்து இயங்கத் தூண்ட வேண்டும்.
கல்வியானது மாணவர்களின் அன்றாட வாழ்க்கையோடும் அவர்களின் சமூக
அனுபவங்களோடும் இயைந்து கொண்டுபோகப்பட்டால் மாணவர்களுக்கு அது
உற்சாகமான, விடுதலையுடன் கூடிய அனுபவமாக இருக்கும்.


பாடசாலை மற்றும் மூன்றாம் நிலைக்கல்வி மட்டங்களில் பரீட்சைகள்
மற்றும் தேர்வு முறைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். நெருக்கடி
சூழ்நிலைகள் வறுமைக்குட்பட்டோருக்கு மேலும் சிக்கலானதாக மாறும்
நிலையில் கல்விக்கான நியமங்கள் விரிவுபடுத்தப்பட்டு
உள்ளீர்க்கப்படக்கூடியதாக வடிவமைக்கப்பட வேண்டும். குறைந்தது,
பாடசாலை மட்டங்களிலாவது மாணவர்கள் அடுத்த படித்தரத்துக்கு
உயரக்கூடிய வழிவகைகளை செய்ய வேண்டும். உதாரணமாக, பரீட்சைகளில்
வழங்கப்படும் தேர்வு வினாக்களின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டு மாணவர்களுக்கான தேர்வுகள் விரிவாக்கப்பட வேண்டும். அண்மையில்
நடத்தப்பட்ட சாதாரண தரப்பரீட்சையில் தோற்றிய மாணவர்கள்
அனைவரையும் தேர்ச்சியடைய வைக்க வேண்டுமென்ற ருவந்தி டீ சிகேரா
அவர்களின் அழைப்பு கவனத்திலெடுக்கப்பட வேண்டிய அழைப்பாகும்.


எமது இளங்கலை மாணவர்களும் ஏற்கனவே கோவிட் பெருந்தொற்று
காரணமாக பல்கலைக்கழகங்களில் கழிக்க வேண்டிய கால அளவை விட
அதிகமாக கழிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது. இந்நிலையில்
அவர்களது கல்விக்காக குடும்பங்கள் செலவளிக்கும் இயலுமையும்
குறைந்துள்ளது. சிலர் தமது குடும்பங்களை பராமரிப்பதற்காக உடனடியாக
தொழில்களை தேட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையை
தவிர்த்து மாணவர்கள் சரியான கால எல்லைக்குள் பட்டப்படிப்பை முடிக்கும்
வகையில் தற்காலிகமாக மீள்வரையப்பட்ட பாடத்திட்டங்களை
அறிமுகப்படுத்த வேண்டி இருக்கின்றது. கற்றல் மணித்தியாலங்களை
குறைப்பது தொடர்பில் பல்கலைக்கழக பீடங்களில் சரியான
கலந்துரையாடல்களின்றி முன்வைக்கப்படும் சீரற்ற முன்மொழிவுகள் குறித்து
அவதானமாக இருக்க வேண்டியிருப்பதோடு, இந்நெகிழ்வுத்தன்மையை
பரீட்சைகளில் செலவளிக்கப்படும் நேரங்களில் ஏற்படுத்தலாம். உதாரணமாக,
சில பல்கலைக்கழகங்களில் ஒரு மாதத்துக்கும் மேலதிகமான காலத்தில்
நடைபெறும் அரையாண்டு இறுதிப்பரீட்சைகளை வீட்டில் செய்யும் பரீட்சை
முறை அல்லது இரண்டு முறைகளையும் இணைத்தவாரான வகையில்
பரீட்சைகளை நடாத்துவதை குறித்து ஆலோசிக்கலாம். இதனால்
மாணவர்கள் போக்குவரத்துக்காக செலவிடும் பணமும் குறைக்கப்படலாம்.


பொருளாதார சூழ்நிலையில் மாற்றம் ஏற்படும் வரையாவது மாணவர்களும்
ஆசிரியர்களும் அருகிலுள்ள பாடசாலைகளுக்கு செல்லும் அமைப்பை கல்வி
அமைச்சு ஏற்படுத்தலாம். இவ்வாறான சூழ்நிலைகளில் மாணவர்களை
மரபார்ந்த பாடத்திட்டங்களில் கவனத்தை குவிக்கவைப்பதை விட அதனை
மகிழ்ச்சிகரமான, தளர்வான கற்றலாக மாற்றலாம். பாடசாலைகளானது
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து நெகிழ்திறத்தோடு
வாழ உதவும், அதற்கான இயங்கமைவுகளை வகுக்கும் சமூக சூழலாக மாற்றலாம். மாணவர்கள் பாடசாலை வெளிகளை தோட்டம் மற்றும்
காய்கறிகளை நடும் செயற்பாட்டுக்கு உட்படுத்தலாம். சமூக ஈடுபாட்டோடு
உருவாக்கப்படும் பாடசாலை சமையலறைகளின் மூலம் தேவையான
ஊட்டச்சத்துகள் உட்கொள்ளும் மாணவ சமூகத்தை உருவாக்கலாம்.

தொலைநோக்கொன்றை வடிவமைத்தல்


இலவசக்கல்வி அமைப்பும் இலவச மருத்துவமும் இலங்கை சமூகத்தை
உடல், உள, அறிவார்ந்தரீதியில் ஆரோக்கியமாகவும் துடிப்பாகவும்
வைத்திருந்தன. குறைபாடுகள் காணப்பட்டாலும் இலவசக்கல்வியானது
சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் செயன்முறைக்கு முக்கிய பங்களிக்கின்றது.
ஆதிக்க வர்க்கத்தின் தோற்றுப்போன பொருளாதார கொள்கைகளுக்கெதிரான
எமது ஒன்றிணைந்த எதிர்ப்பானது, இலவசக்கல்வி மூலமான
ஜனநாயகப்படுத்தலின் விளைவாகும். அரச பல்கலைக்கழகங்களில் கற்கும்
மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் இணைந்து அமைப்பு மாற்றத்தை கோரி
நிற்கின்றார்கள். இவ்வாறான சூழ்நிலைகளில் தான் இலவசக்கல்வியை
உயிர்ப்புடனும் இயங்குதன்மையுடனும் வைத்திருக்கும் தேவை
முன்னையதை விட அதிகமாக இருக்கின்றது.


எமது கல்வி அமைப்பை அன்றாட போராட்டங்களுக்கேற்ற வகையில்
எவ்வாறு எதிர்த்தகைமையுடையதாக மாற்றலாம்? உயர்‍ வளங்களை
கொண்டுள்ள பாடசாலைகள் எவ்வாறு குறை வளங்களை உடைய
பாடசாலைகளுக்கு உதவலாம்? எவ்வாறு வெளிநாடுகளில் வாழும்
பொருளாதார ரீதியில் நிலையான தரத்தில் உள்ள பழைய மாணவர்கள் தமது
பாடசாலைகளை சேர்ந்த வறுமைக்குட்பட்ட மாணவர்களை மாத்திரமன்றி
ஏனைய மாணவர்களுக்கும் உதவலாம்? இந்நெருக்கடியை எதிர்கொள்ள
எவ்வாறு பல்கலைக்கழகங்களும் பாடசாலைகளும் ஒன்றாக செயற்படலாம்?
பாடசாலைகள் தாம் எதிர்கொள்ளும் சவால்களை முகங்கொடுக்கும்
செயற்பாடுகளில் அந்தந்த சமூகங்கள் எவ்வாறு உதவலாம்? இக்கேள்விகள்
உடனடியான தீர்வுகளை வேண்டி நிற்பவையாகும்.

நவதாராளவாமானது எம்மை கல்வியை சமூக நல்வாழ்க்கையின் விலையில்
உருவாகும் தனிநபர் வெற்றிக்கு இட்டுச்செல்லும் வழியாகவே
பார்க்கவைக்கின்றது. இது மீள்விநியோகத்தினூடாக சவால்மிகுந்த
கட்டங்களை கடந்து வருவதற்கான கூட்டணிகளையும் தோழமைகளையும்
அடையும் வழிகளை உற்சாகப்படுத்துவதில்லை. நாம் தற்போது
கல்விப்புலத்திலும் அதற்கு வெளியிலும் எதிர்கொள்ளும் நெருக்கடி, எமது
சமூக பொருளாதார வாழ்க்கை ஒன்றோடொன்று தொடர்புடையதாக
இருப்பதோடு நாம் அனைவரும் நிலவுகைக்காக ஒருவரில் ஒருவர்
தங்கியிருக்கின்றோம் என்பதை எமக்கு உணர்த்த வேண்டும். எமது
பொருளாதார மற்றும் கல்விசார் தூரநோக்குக்காக நாம் இன்று உருவாக்கும்
ஆதரவு முறைகளும் மீள்விநியோக இயங்கமைவுகளும் தற்போது
உருவாகியிருக்கும் நெருக்கடியை தாண்டியும் நீண்ட காலத்தில் எமக்கு
உதவலாம். இந்நெருக்கடியை ஒரு வாய்ப்பாக பாவித்து நவதாராளவாதம்
உருவாக்கியிருக்கும் பொருளாதார, சமூக மற்றும் உள கட்டுப்பாடுகளை
தகர்த்து ஒரு சமத்துவ சமுதாயத்தை கற்பனை செய்வோமாக.