மகேந்திரன் திருவரங்கன்
வகுப்பறையானது புலமைத்துவம், பன்மைத்துவம், படைப்பாற்றல் மற்றும்
விமர்சனநோக்கை வளப்படுத்தும் தளமாக இருக்கவேண்டும். இத்தளமானது
பன்மைத்துவமான பாலினங்களை கொண்ட ஆசிரியர்கள் மற்றும்
மாணவர்களையும் அவர்களின் பாலியல் தேர்வுகளையும் எவ்வித
ஒழிவுமறைவுமின்றி சுதந்திரமான வெளிப்படுத்த வாய்ப்பான தளமாக இருக்க
வேண்டும். இருப்பினும் இலங்கையில் காணப்படும் வகுப்பறைகள் பால்மை
மற்றும் பாலுணர்வு சார் படித்தரங்களை மீளுருவாக்கும் சமூக அமைப்பை
போன்ற நுண் உலகமாகவே காணப்படுகின்றது. இவ்வகுப்பறைகள் பால்மை
மற்றும் பாலுணர்வு சார் சமூகநெறிகளை அடிப்படையாகக் கொண்ட
எழுதப்படாத விதிகள் வழி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்,
உடல்மொழி மற்றும் விருப்புவெறுப்புகளை கட்டுப்படுத்துவனவாகவே
காணப்படுகின்றன. இலங்கையில் காணப்படும் வகுப்பறைகள்
பால்புதுமையினர் மற்றும் பெண்களை எவ்வாறு ஒடுக்குகின்றன என்பதையும்
அவற்றை எவ்வாறு அனைவரையும் உள்ளடக்ககூடிய தளங்களாக
மாற்றலாம் என்பதையும் இன்றைய குப்பி அமர்வில் கலந்துரையாடலாம்.
போலி நடிநிலைத்தன்மை
நடுத்தரவர்க்க மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இவ்வகுப்பறைகளை
நடிநிலைத்தன்மை கொண்ட இடங்களாக பார்க்கின்றார்கள். வகுப்பறைகளில்
காணப்படும் இடையீடுகள் பால்மை அடிப்படையிலான படித்தரங்களால்
பாதிக்கப்படுவதில்லை என்பது நம்மில் அநேகரின் கருத்தாகும். கல்விசார்
அமைப்புகளில் உருவாகும் மாற்றுப்பால்நாட்டம் இயல்புபடுத்தப்படுவதை
போல இவ்வெல்லைக்கு அப்பால் உருவாகும் விருப்புகளும் உறவுகளும்
களங்கப்படுத்தப்படுவதோடு அவை இயல்பு கடந்த, துஷ்பிரயோகப்படுத்தும்,
மேற்கத்திய, சமுதாயத்துக்கு எதிரான செயல்களாகவே கொள்ளப்படுகின்றன.
வகுப்பறைகளில் நிகழும் இடையீடுகள், எதிர்பார்ப்புகள், ஆடை, தோற்றம்
மற்றும் நடத்தை குறித்த புரிதல்கள் ஆண்-பெண் என்ற இருமை
சார்ந்ததாகவே இருப்பதாக நம்மில் பலர் நம்பிக்கொண்டிருக்கின்றோம்.
இவ்வெதிர்பார்ப்புகள் குறிப்பது யாதெனில் ஆண், பெண் என பிரிக்கப்படும்
எல்லைகள் மற்றும் பெண்மை ஆண்மை போன்ற வெளிப்பாடுகள் என்பன
தனிமனித விருப்பு வெறுப்புகள், கலாசாரம், இனம், மதம் மற்றும் இனக்குழு
ஆகியவற்றின் எவ்வித செல்வாக்குமின்றி ஒருபடித்தான வகையில்
கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதாகும்.
பால்மை சார்ந்த ஓய்வறைகள் மற்றும் கழிப்பறைகள் போன்ற பௌதீக
உட்கட்டமைப்புகள் சிலவேளைகளில் பெண்களுக்கு வசதியையும்
பாதுகாப்பையும் கொடுத்தாலும் இவை பால்மை சார் இருமைத்தன்மையை
அடிப்படையாகக் கொண்டதும் அவற்றை இயல்புபடுத்திய விளைவுமாக
இருப்பதால் இவை திருநர்களை விலக்கும் நிலை காணப்படுகின்றன.
இலங்கையின் பல பாடசாலைகள் இன்னமும் பாலியல் மற்றும் பால்மை
பன்மைத்துவங்களை பற்றிய உரையாடலகளை நிகழ்த்தாமலேயே
இருக்கின்றன. இதன் விளைவாக, இருபால் விழுமியங்களுக்குள் தம்மை
அடையாளப்படுத்தாத இளைஞர்கள் பாரிய சிக்கல்களுக்கு
முகங்கொடுப்பதோடு கொள்கை உருவாக்கத்தில்
கண்டுகொள்ளப்படுவதுமில்லை.
கட்புலனாகாமை
வகுப்பறைகளில் நிலவும் ஆதிக்க பாலீர்ப்பு வழமைகள் காரணமாக
பால்புதுமையினர் தமது அடையாளங்களை வெளிப்படுத்துவது
கேள்விக்குறியாக மாறுகின்றது. அவர்கள் தமது அடியாளங்களை,
ஆசைகளை, தேர்வுகளை வெளிப்படையாக சொல்லும்போது சமூகத்திலிருந்து
தனிமைப்படுத்தப்படுவதோடு இகழப்படும் நிலைக்கும் ஆளாகின்றனர்.
தற்காலத்தில் ஒருபாலீர்ப்பு வெறுப்பு மற்றும் திருநர் வெறுப்பு
போன்றவற்றுக்கு எதிராக பொதுமக்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப்படும்
விழிப்புணர்வு முயற்சிகளின் விளைவாக பால்புதுமையினராக இருக்கும்
மாணவர்களும் ஆசிரியர்களும் தமது அடையாளங்களை வெளிப்படையாக
முன்வைக்கின்றனர். இந்நிலை வரவேற்கப்பட வேண்டிய விடயமாக
இருந்தாலும் இதன் இன்னொரு பக்கமாக, வகுப்பறைகளில்
பால்புதுமையினரை தவிர்த்த ஏனையோர் ஆதிக்க பாலீர்ப்புடையோராகக்
கொள்ளப்படுகின்றனர். அனைவரும் உள்ளடக்கப்பட வேண்டும் என
போராடும் நாங்கள் அனைத்து பால்மை/ பாலீர்ப்புகளும் கட்புலனாக
இருப்பதில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆசிரியர்களும்
மாணவர்களும் நினைப்பது போல வகுப்பறைகளில் சில மாணவர்களே
பால்புதுமையினராக இருக்கின்றனர் என்ற ஊகம் பிழையானது.
பால்புதுமையினர் இருப்பதற்கான வெளிப்படையான அடையாளங்கள்
இல்லாவிடினும் ஒரு வகுப்பறையை அவர்களும் உள்ளடங்கக்கூடிய
வகையில் கட்டமைப்பது முக்கியமானதாகும். எப்போதுமே ஒருவர் (அவர்
தனது பால்மை மற்றும் அது குறித்த தேர்வினை வெளிப்படுத்த
விரும்பாவிடினும்) பாதுகாப்புக்காக, ஒத்துழைப்புக்காக, அரவணைப்பு மற்றும்
ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றார் எனும் ஊகத்தோடு
செயற்படும் தேவை காணப்படுகின்றது.
பாடத்திட்டம்
பாலீர்ப்பு வழமைகள் கேள்விக்குட்படுத்தப்படக்கூடிய முக்கிய களமாக
பாடத்திட்டம் விளங்குகின்றது. பால்புதுமை-நேய பாடத்திட்டமானது
பால்புதுமையினரை சமூகங்கள் ஏற்றுக்கொள்ள வழிவகுப்பதோடு அவர்கள்
தமது அடையாளங்கள், வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் எதிர்நோக்கும்
சிக்கல்களை குறித்த கல்விசார் கலந்துரையாடல்களில் பயமின்றி ஈடுபடவும்
வழிவகுக்கின்றது. இவ்வாறான உள்ளீர்க்கும் பாடத்திட்டத்தின் மூலம்
அம்மாணவர்கள் பாடத்திட்டத்துக்கு வெளியே நிகழும் பாலீர்ப்பு வழமைகள்
மற்றும் அமைப்புகளை விளங்கிக்கொள்ளவும் அவற்றுக்கெதிராக
குரல்கொடுக்கவுமான பலத்தை பெறுகின்றனர்.
எமது பல்கலைக்கழகங்களில் இன்று கற்பிக்கப்படும் பாடத்திட்டங்களில்
ஒன்றிரண்டு பகுதிகள் பால்மை மற்றும் பாலியல்பு போன்ற
விடயப்பரப்புகளை உள்வாங்கியுள்ளன. சில வேளைகளில்
இப்பாடத்திட்டங்கள் பால்மை குறித்த ஒற்றைப்படையான கருத்தோட்டத்தை
கொண்டிருப்பதோடு ஆதிக்கபாலின பெண்களையே கல்வித்துறை
கவனத்திற்கொள்ள வேண்டுமென்ற தோரணையில் இருக்கின்றன. இவை
பாலியல்பபு மற்றும் பால்மை என்பன எவ்வாறு பின்னிப்பிணைந்துள்ளன
என்பதை கவனத்திற்கொள்வதில்லை. இப்பாடத்திட்டங்கள் தேர்வு
அடிப்படையில் வழங்கப்படுவதால் பால்மை (மற்றும் பாலியல்பு) குறித்த
ஆர்வமுள்ள மாணவர்கள் மட்டுமே இதை படிக்கிறார்கள். இதன் விளைவாக
பெரும்பாலான மாணவர்கள் பல்கலைக்கழங்களில் இவ்வாறான தலைப்புகள்
குறித்த எந்த பிரக்ஞையுமின்றியே பட்டம்பெற்று வெளியேறுகின்றார்கள்.
இத்தேர்வு பாடத்திட்டங்களும் கூட வெறுமனே கொள்கை சட்டகங்களின்
பன்மைத்துவ தேவையை பூர்த்தி செய்யவே மேலோட்டமாகவும்
அரைகுறையாகவுமே கொண்டுசெல்லப்படுகின்றன.
நவதாராளமயப்படுத்தப்பட்ட நவீன கல்வி அமைப்பில் பால்மை உள்ளீர்ப்பு
என்பது வித்தியாசமான பால்மை அனுபவங்களை பிரதிநிதித்துவப்படுத்தும்
செயற்பாடாக சுருக்கப்பட்டிருக்கின்றது. பிரதிநிதித்துவப்படுத்துவது
முக்கியமானதாக இருந்தாலும் அது பால்மைப்படுத்தப்பட்ட மாணவனின்
சூழமைவு, அம்மாணவன் வாழும் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பு
மற்றும் பால்மைப்படுத்தும் அதிகார அமைப்புகளின் செயற்பாடு போன்ற
விடயங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வெறும் பிரதிநிதித்துவமாக
மற்றும் முன்வைக்கப்படக்கூடாது. நவதாராளவாதம் பால்மை
பன்மைத்துவத்தை தனந்து நலனுக்காக உடன்சேர்த்துக்கொண்டுள்ளது. இது
தற்போது சந்தைப்படுத்தப்படக்கூடிய பெண் மற்றும் பால்புதுமை
பட்டதாரிகளை உற்பத்திசெய்வதில் ஈடுபட்டுள்ளது. இதனாலேயே அரசியல்
பொருளாதாரம், வகுப்பு பாகுபாடுகள் மற்றும் அவற்றுக்கிடையிலான
தொடர்புகள் மற்றும் பொருளாதார் ஏற்றத்தாழ்வுகள் என்பன
கேள்விக்குட்படுத்தப்படும் போது பால்மை மற்றும் கலாசார பன்மைத்துவம்
போன்ற விடயங்களும் பாடத்திட்டங்களில் இணைக்கப்பட வேண்டியுள்ளது.
தொழில்வாய்ப்புகள் பெறக்கூடிய பெண்பட்டதாரிகள் என்ற படித்தரத்தை
கடந்து பெண் தொழில்வல்லுனர்கள், பாடத்திட்டம் வழங்கக்கூடிய பரந்த
சமூக நோக்குடன் செயற்படவேண்டிய கடப்பாடு இருக்கின்றது.
பால்மை குறித்த விடயப்பரப்புகள் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்படுவது
அதனை பன்மைப்படுத்துவதாக இருந்தாலும் சில வேளைகளில்
அவ்விடயப்பரப்புகள் பால்மையானது சமூகத்திலும் வேறுபட்ட
கல்வித்திட்டங்களிலும் இயங்கும் பாங்கை குறித்த அறிதலை சுருக்குவதாக
அமைகின்றன. இவ்விடயப்பரப்புகள் அல்லது பாடப்பிரிவுகள் பால்மை குறித்த
விமர்சனப்பார்வையை முன்வைத்தாலும் ஏனைய பாடப்பிரிவுகளும் பால்மை
குறித்த நடுநிலையான மற்றும் உள்ளீர்க்கும் பார்வையோடுமே
வரையப்பட்டுள்ள போலி விம்பத்தை கொடுக்கின்றன. எனவே பால்மை
சாராத பாடப்பிரிவுகள் எந்தளவு தூரம் பெண்கள் மற்றும் பால்புதுமையினர்
குறித்த அழுத்தமான பார்வையை முன்வைக்கின்றன என்ற விடயத்தில் நாம்
கவனமாக இருக்க வேண்டும். நாம் கற்பிக்கும் அனைத்து விடயங்களிலும்
இழையோடும் விடயங்களாக பால்மை மற்றும் பாலியல்பு மாறியுள்ளன
என்பதை நாம் விளங்க வேண்டும். உதாரணமாக, வகுப்புசார் இடையீடுகள்
எந்தளவு பால்மைப்படுத்தப்பட்டுள்ளன மற்றும் பால்மை, பாலியல்பு என்பன
அரசியல் பொருளாதாரம் மற்றும் பொருள்சார் சமூக உறவுகளில் எப்படி
பிரதிபலிக்கின்றன ஆகியவற்றை முன்னிறுத்தும் பாடப்பிரிவுகள் வரையப்பட
வேண்டும். பாடத்திட்டங்கள் அனைத்தும் பெண்கள் மற்றும் பால்புதுமையினர்
வரலாற்றுரீதியாக அனுபவித்த ஒடுக்குமுறைகளுக்கு எதிரான
நீதிப்போராட்டத்தின் கருவியாக மாற வேண்டும். வரலாற்றுரீதியாக
கல்விப்புலங்களில் பேணப்பட்டுவரும் ஆதிக்கபாலீர்ப்பு வழமைகளை
கலைந்து எமது பாடத்திட்டங்கள் பெண்கள் மற்றும் பால்புதுமையினரின்
முகட்டுப்புள்ளியிலிருந்து மீள்வரையப்பட வேண்டும்.
கற்பித்தல் கலை
ஆதிக்க பாலின வழமைகளுக்கு எதிராக கற்பித்தலென்பது அமைப்புகள்
சார்ந்த கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்வது மட்டுமன்றி
மாணவர்களிடமிருந்து எழும் எதிர்ப்புகளையும் எதிர்கொள்ளும் செயலாகும்.
நான் இஸ்மத் சுக்தாயின் “லிஹாப்” என்ற படைப்பு எவ்வாறு சமூக-
பொருளாதார படித்தரங்களூடு உறவுகளில் அதிகாரம் செயற்படுகின்றது
என்பதையும் பெண்களின் உள்ளார்ந்த உறவுகள் எவ்வாறு ஆதிக்கம்,
கவிழ்ப்புகள், எதிர்ப்புகள் மற்றும் சூழ்ச்சித்திறத்துடன் நம்பவைக்கும்
பண்புகளைக்கொண்ட சிக்கலான அமைப்பாக இருக்கின்றது என்பதையும்
விளக்கப்படுத்திய போது சில மாணவர்கள், இந்தப்படைப்பு “பெண்களில்
ஒருபாலீர்ப்புடைய தன்மையை” தூக்கிப்பிடிப்பதாகக் கூறி விலகல்
தெரிவித்தனர். இவ்வாறான நேரங்களில் ஒரு ஆசிரியரின் கடமையாக
இருப்பது ஆதிக்க பாலின மாணவரொருவர் எவ்வாறு ஆதிக்க பாலின
வழமைகளால் சிறப்புரிமை உடையவராக இருக்கின்றார் என சுயபரிசீலனை
செய்யத்தூண்டுவதாகும்.
இன்னொரு வகையில் பார்க்கும்போது சுக்தாயின் இப்படைப்பில் உள்ளது
போல ஒருபாலீர்ப்பு அல்லது எதிர்பாலீர்ப்பு என்பதை விடுத்து பாலியல்
உறவுகளானது, வகுப்பு, இனம் மற்றும் சாதி போன்ற கட்டமைப்புகளின்
கற்பிதங்களுக்கூடாக விளங்கிக்கொள்ளப்படுவதோடு ஆதிக்க பாலீர்ப்பு
உறவுகளும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை மாணவர்களுக்கு
விளங்கப்படுத்த வேண்டும். இதன் காரணமாகத்தான் கழிவிரக்கம் மற்றும்
கூட்டொருமைப்பாடு கடந்த அதிகாரம் குறித்த விமர்சன பார்வையும்
விடுதலையுணர்வுமுள்ள கற்பித்தல் கலை அவசியமாகின்றது.
பால்மை மற்றும் பாலியல் பன்மைத்துவத்தை ஆதரிக்கும் வகுப்பறைகளை
இலங்கையில் அமைப்பதற்கான பாதை தூரமாக இருந்தாலும் சில
விடயங்கள் நம்பிக்கையளிப்பதாக இருக்கின்றது. பல்வேறு துறைகளிலும்
பால்புதுமையினரைப் பற்றிய ஆய்வுகளில் ஈடுபடும் இளமானி
மாணவர்களுக்கு பேராசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றனர். எமது சில
பல்கலைக்கழகங்கள் பால்புதுமையினர் குறித்த விழிப்புணர்வு மற்றும் கலை
கலாசார நிகழ்வுகளுக்கு இடங்கள் ஒதுக்கிக்கொடுக்கின்றன. ஒடுக்கப்பட்ட
பால்மையையும் பாலீர்ப்பையும் கொண்ட மாணவர்கள் வகுப்பறைகளிலும்
தங்குமிடங்களிலும் முகங்கொடுக்கும் தடங்கல்களின் போது ஏனைய
மாணவர்கள் ஒன்றிணைந்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய
சம்பவங்களும் நடந்திருக்கின்றன. இவ்வாறான மாற்றங்களை வளர்க்கவும்
பாதுகாக்கவும் வேண்டியது கட்டாயமாகும்.
பால்மை மற்றும் பால்புதுமையினர் குரித்த முயற்சிகளிலிருந்து
வகுப்பறைகள் ஒதுங்கியிருக்கக்கூடாது. உச்ச நீதிமன்றத்தில்
அரசியல்யாப்பின் 365ஆம் சரத்தை ரத்து செய்யும் உத்தரவு வழங்கப்பட்டமை,
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற
சுயமரியாதை பேரணிகள் மற்றும் பால்புதுமையினர் சமத்துவத்தின் பால்
மேற்கொண்ட அறப்போராட்டங்களால் வென்றெடுத்த இன்னோரன்ன
வெற்றிகள் எமது இலவசக்கல்வியை மேலும் உள்ளீர்க்கக்கூடியதாகவும்
ஜனநாயகரீதியானதாகவும் மாற்ற எமது கல்வியியலாளர்களுக்கு உந்துகை
தரவேண்டும். இம்முயற்சியின் மூலம் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட,
சிறுபான்மையினரான, தாழ்த்தப்பட்ட சாதிகளிலிருந்து வந்த உழைக்கும்
பெண்கள் மற்றும் பால்புதுமையினர் முதலாளித்ஹ்டுவ சுரண்டல்,
இனரீதியான போராட்டங்கள் மற்றும் சாதிரீதியான ஒடுக்குதல்களிலிருந்து
தமது அன்றாட வாழ்க்கையில் முகங்கொடுக்கும் சிக்கல்களோடு
ஆணாதிக்கம் மற்றும் ஆதிக்க பாலீர்ப்பு வழமைகளை எதிர்க்கின்றார்கள்
என்பதிலிருந்து கற்றுக்கொள்ளவும் வழிவகை செய்ய வேண்டும்.