மகேந்திரன் திருவரங்கன்
இன்றைய குப்பிக் கட்டுரை சாதிய ஏற்றத்தாழ்வுகள் வடக்கில் இலவசக் கல்வியை எவ்வாறு சமத்துவமற்றதாக்குகின்றன என்பது பற்றியது.
அண்மையில் வட்டுக்கோட்டையில் ஒரு பஞ்சமர் சமூகத்தினர் (பஞ்சமர் என்பது வரலாற்று ரீதியாக ஒடுக்குமுறைக்கு உள்ளான ஐந்து சாதிகளின் தொகுப்பாகும்.) சாதிய வன்முறையை எதிர்கொண்டனர். பாதிக்கப்பட்டோருடனான உரையாடல்கள், இவ்வன்முறை கல்வி உட்பட பல துறைகளில் நீடித்த, திட்டமிட்ட சாதிய ஒடுக்குமுறையின் பின்னணியில் வெளிப்பட்ட ஒன்று என்பதனைச் சுட்டிக்காட்டுகின்றன. கிராமத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சை, விளையாட்டு, மற்றும் போட்டிகளில் தம் பிள்ளைகள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் குறித்தும் அவர்கள் பேசினர். ஆதிக்க வெள்ளாளர் சாதி ஆசிரியர்களும் நிர்வாகிகளும் தம் பிள்ளைகளின் கல்வித் தேவைகளைப் புறக்கணிக்கின்றமை, பொருளாதார நெருக்கடிகளின் மத்தியிலே இம்மாணவர்கள் கல்வி பயிலுகின்றமை, பாடசாலைக்குள்ளும், சமூகத்திலும், இப்பிள்ளைகள் போதைப்பொருள் வியாபாரிகள், மதுவுக்கு அடிமையானவர்கள், பாலியல் வக்கிரக்காரர்கள் என சித்திரிக்கப்படுகின்றமை போன்ற விடயங்களை அவர்கள் சுட்டிக்காட்டினர். கல்வியில் சாதியம் என்பது பல பஞ்சமர் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிர்வாகிகள் தினசரி வடக்கிலே எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாக உள்ளது.
சாதிய ரீதியிலான கடந்தகாலம்
வரலாற்று ரீதியாக, வெள்ளாளர் வடக்கில் கல்வியின் மீது குறிப்பிடத்தக்க கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர். பதினேழு, பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில், திண்ணைப் பள்ளிக்கூடங்களிலே பயில பஞ்சமர் சமூகப் பிள்ளைகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில், அமெரிக்கன் சிலோன் மிசன் கூட “தனது தேவாலயங்கள் மற்றும் பள்ளிகளில், வெள்ளாளரினால் கோரப்பட்ட சாதி சலுகைகளுக்கு இடம் கொடுத்தது” என மார்க் பம்ஃபோர்த்தின் ஆய்வு குறிப்பிடுகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிறுவப்பட்ட பல சைவ-தமிழ்ப் பள்ளிகள் பஞ்சமருக்குக் கல்வி வழங்க மறுத்தமை வெகுஜனன் – இராவணா ஆகியோரின் நூலிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டில், சைவ மறுமலர்ச்சி இயக்கங்களில் சில தம் பாடசாலைகளிலே பஞ்சமர்களுக்குக் கற்பிப்பது அவசியம் என்று உணர்ந்தனர்; ஆனால் அது மிஷனரிப் பாடசாலைகளை எதிர்ப்பதற்கான ஒரு உத்தியாக மட்டுமே இருந்தது. ஒரு சில மேற்தட்டு வெள்ளாளர், பஞ்சமர் குழந்தைகளைத் தமது குழந்தைகளிடமிருந்து பிரிக்கும் நோக்குடன் பஞ்சமருக்கான சைவப் பாடசாலைகளை நிறுவுவதற்கும் ஆதரவளித்தனர்.
யாழ்ப்பாணத்தில் காலனியக் கல்வியால் பயனடைந்தவர்களிலே விகிதாசாரத்தில் அதிகமானோர் வெள்ளாளர்களே. இவர்களும், இவர்களது வழித்தோன்றல்களும் காலனித்துவ அரசில் நிர்வாகப் பதவிகளை வகித்த (ஆங்கிலம்) படித்த ஒரு நடுத்தர வர்க்கத்தை உருவாக்கினர். காலனிய யாழ்ப்பாணத்திலே ஏற்பட்ட கல்வி வளர்ச்சியானது பெரும்பாலான பஞ்சமர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை.
மிஷனரிகளால் நிறுவப்பட்ட சில பாடசாலைகளிலே, சுதந்திரத்திற்குப் பின், கிறிஸ்தவப் பஞ்சமர் இலவசமாகக் கற்க முடிந்தது. இருப்பினும், இந்துப் பஞ்சமர்களால் இப்பாடசாலைகளுக்குப் பணம் கொடுக்க முடியவில்லை. கிறிஸ்தவப் பாடசாலைகளிலும், பஞ்சமர் சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் ஆசிரியர்களும் ஓரங்கட்டப்பட்டனர்; வெள்ளாளரே இங்கும் பொதுவாக நிருவாகிகளாக இருந்தனர்.
இந்தக் கடந்த காலம் பற்றிய விமர்சன விசாரணைகள் முக்கியமானவை. நீண்ட சாதிவேறுபாட்டின் வரலாறு பஞ்சமர்களில் பல தலைமுறையினரின் முன்னேற்றத்தை தாமதப்படுத்துவதற்கும், முடக்குவதற்கும் பங்களித்திருக்கிறது. கல்வியின் மூலம் வெள்ளாளர் பெற்ற அதிகாரம் இன்றும் பிறர் மீது ஆதிக்கத்தை நிலைநிறுத்த அவர்களுக்கு உதவுகிறது. இன்று பஞ்சமர்கள் மத்தியில் நிலவும் வறுமைக்குக் கல்வியில் அவர்கள் எதிர்கொண்ட புறமொதுக்கலும் காரணமாக அமைகின்றது.
இலவசக் கல்வியும் அதன் எல்லைகளும்
1940 – 1960களில் இலவசக் கல்வியும், பாடசாலைகளின் தேசியமயமாக்கலும் பஞ்சமர்களுக்கான கல்வி வாய்ப்புகளை அதிகரித்தன. இருப்பினும், புத்தூரில் ஒரு பாடசாலை தேசியமயமாக்கலுக்குப் பிறகு பஞ்சமருக்காகத் திறக்கப்படுவதற்குக் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் பிடித்தது. இருக்கையில் சமத்துவத்தை உறுதிப்படுத்த முயன்ற பாடசாலைகள் சாதிவாதிகளினால் தாக்கப்பட்டன. இன்றும், சில அரச பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களில் வெள்ளாள ஆதிக்கம் அவதானிக்கப்படுகிறது.
கல்வித் துறையில் நியமனங்கள், இடமாற்றங்கள், பதவி உயர்வுகளில் சாதி வேற்றுமை காட்டும் போக்குகள் தொடர்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன், தரம் I அதிபர் பதவிக்கான தேவைகளை பூர்த்தி செய்த ஒரு வேட்பாளர், பஞ்சமர் என்பதால், நேர்காணலுக்குக் கூட அழைக்கப்படவில்லை. ஆதிக்க சாதியினர், அரசின் பெரும்பான்மைவாதத்தினை எதிர்க்கும் அதேவேளை, கல்வித் துறையில் பஞ்சமர்களின் முன்னேற்றத்தினைத் தடுக்க அதே அரசினைப் பயன்படுத்துகின்றனர்.
இலவசக் கல்வி, சாதிய எதிர்ப்புப் போராட்டங்களினால் பெறப்பட்ட வெற்றிகளின் காரணமாகப் பஞ்சமர் சமூகங்களுக்குள் ஒரு சிறிய நடுத்தர வர்க்கம் உருவாகியுள்ளது. இருப்பினும், பல பஞ்சமர்கள் இன்றும் நிலமின்மை, வீட்டுவசதி இல்லாமை, வேலையின்மை, வறுமையினை எதிர்கொள்கின்றனர். பலர் கட்டுமானத் தொழிலிலோ, விவசாயக் கூலிகளாகவோ, வீட்டு வேலையாட்களாகவோ வேலை செய்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு உதவும் வகையில் கல்வியினை இடைநிறுத்தும் போக்குகள் அவதானிக்கப்படுகின்றன. கொரொனாவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியும் இப்பிள்ளைகளின் கல்வியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இணையக் கல்வி பஞ்சமரின் பொருளாதாரச் சுமையினை அதிகரித்துள்ளது. இவ்வாறான போக்குகள் நமது இலவசக் கல்வி முறை, பஞ்சமர், பிற ஒதுக்கப்பட்ட குழுக்களின் பிரத்தியேகமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான அமைப்புக்களைக் கொண்டிருக்காமையின் விளைவுகளாகும். அனைவரினையும் ஒரே மாதிரியாக நோக்கும் சேவை என்பதற்கு அப்பால் சென்று, பஞ்சமர் போன்ற ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தமது சவால்களை எதிர்கொள்வதற்கான கூடுதல் வழிமுறைகளை உள்ளடக்கியதாக இலவசக் கல்வி மாற்றியமைக்கப்பட வேண்டும்.
பல்கலைக்கழகமும் சாதியும்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், ஒரு சில சந்தர்ப்பங்களைத் தவிர, சாதி பற்றிய வெளிப்படையான விவாதங்கள் பொதுவாக ஊக்குவிக்கப்படுவதில்லை. சாதியைப் பற்றி விவாதிப்பது தமிழர்களிடையே ஒற்றுமையைக் குலைக்கும் என்று கல்வித்துறையில் ஒரு பிரிவினர் திரித்துக் கொண்டிருக்கிறார்கள். பல்கலாச்சாரம் என்ற கட்டமைப்பிற்குள், பிழையான முறையிலே, சாதியை ஒரு சமூகவியல் யதார்த்தமாக குறுக்குகின்ற முயற்சிகளையும், வகுப்பறைக்கு உள்ளேயும் வெளியேயும் அதிகாரம் செயல்படும் வழிகளில் ஒன்றாக சாதி இருக்கின்றது என்ற யதார்த்தத்தினை ஏற்றுக்கொள்ள மறுக்கும் போக்கினையும் நாம் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும். வடக்கில் இருக்கும் ஓர் உயர் கல்வி மையம் என்ற வகையில், பல்கலைக்கழகம், அதன் சமூகம் பற்றிய ஈடுபாடுகளிலும், ஆராய்ச்சி கலாச்சாரத்திலும், சாதி மற்றும் அதன் செயல்பாடுகள், சமூக நீதி போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
நீதிக்கான போராட்டம்
கல்வி உள்ளிட்ட பல துறைகளில் நீண்டகாலமாகப் பாகுபாடு காட்டப்பட்ட போதிலும், பஞ்சமர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என்பதிலே உறுதி பூண்டுள்ளனர். இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாமில் வசிக்கும் காணியற்ற பஞ்சமர் தமது பிள்ளைகள் நல்ல பாடசாலைகளில் கற்கும் வகையில் தற்போது தாம் வாழும் பிரதேசங்களிலே தமக்கு வாழ்விடங்களை வழங்குமாறு அரசைக் கோருகின்றனர். வட்டுக்கோட்டை சாதிய வன்முறையிலே பாதிக்கப்பட்டோர், பாடசாலைகளில் தமது பிள்ளைகள் பாதிக்கப்படுவது தொடர்பில் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர். தொழிற்றுறையிலே பாகுபாடுகளை எதிர்கொண்ட பஞ்சமர் சமூகத்தினர் பெற்ற நீதித்துறை வெற்றிகள், நீதிக்கான போராட்டங்களை முன்னெடுப்பதற்கான நம்பிக்கையை பஞ்சமர்களுக்கு அளிக்கின்றன. அவர்களின் இன்றைய போராட்டங்கள் கடந்த கால சாதி எதிர்ப்பு போராட்டங்களிலிருந்தும் தமக்கான உத்வேகத்தையும் வழிகாட்டுதலையும் பெறுகின்றன.
ஆதிக்க சாதி சமூகங்கள் தாமும் தமது மூதாதையினரும், கல்வியின் அசமத்துவங்களின் ஊடாகத் தங்களின் சலுகைகளைப் பாதுகாத்தமை, பெருக்கியமை குறித்து சுயவிமர்சனத்தினை முன்னெடுப்பது அவசியம்; பஞ்சமர் மற்றும் பிற சமூகங்களுடன் இணைந்து நீதிக்கான வேட்கையில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். தமிழர்களிடையே உள்ள சாதிய பிளவுகளைத் தனது இனவாத முன்னெடுப்புக்களுக்குப் பயன்படுத்தாது, சாதியை தமிழர்களின் உள்வீட்டுப் பிரச்சனையாகக் கட்டமைக்காமல், கல்வியில் சாதிவெறியை ஒழிப்பதில் அரசு தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, பஞ்சமர் மற்றும் வரலாற்று ரீதியாகப் பின்தங்கிய சமூகங்களுக்கு நன்மை பயக்கும் வழிகளில் இலவச கல்வியினை ஜனநாயகப்படுத்தும் முயற்சிகளினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.