2022: ஜனநாயகத்தை நோக்கியதோர் திருப்புமுனை

சிவமோகன் சுமதி


“எமது வெறும் கைகளால் நாம் எமது சமூகத்தை வடிவமைக்கின்றோம்”
-சுமதியின் “தி டயலெக்டிக்” (The Dialectic)
கடந்த தசாப்தத்தில் மிகவும் கடினமானதும், அதேசமயம் பெருமை வாய்ந்ததுமான 2022 ஆம்
ஆண்டு அதன் நிறைவை எட்டுகின்றது. வீடுகளில் எரிவாயு சிலின்டர்கள் வெடிப்பதும், இரசாயன
உரத்திற்கெதிரான தடைவிதிப்பும், நுண் நிதித்திட்டத்துக்கெதிராகப் பெண்கள் போராடுவதுமென
சம்பவங்கள் ஏராளம். 2022 இன் முடிவில்லா வரிசைகள் குறிப்பிடத்தக்கவை. மில்லியன்
கணக்காண மக்கட்தொகையினர் கொழும்பின் வீதிகளில் இறங்கியதும், ஜனாதிபதி நாட்டை
விட்டு ஓடியதுமான அரகலய-போராட்டத்தின் வருடமும் இதுவே. மொத்தத்தில் சிறியதும்
பெரியதுமான வெற்றிகளின் வருடம் என இதனை வர்ணிப்பது மிகையாகாது.
ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது அதிகரிக்கும் அதிருப்தி, அதன் பரவலான தேசியவாதம் மற்றும்
தாராளவாதப் போக்கு ஆகியன, ஒரு முக்கிய தருணத்தில் இலங்கை மக்களை ஒன்று திரண்டெழச்
செய்தன. குடியேற்றவாதத்திற்குப் பின்னரான இலங்கை வரலாற்றின் மிகவும் மோசமான
பொருளாதார நெருக்கடியானது அம் முக்கிய தருணமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வந்த போராட்டங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகின. அத்தோடு ஒரு குறுகிய
நேரத்திற்கெனினும் எமது சமூகத்தின் வேறுபாடுகளை இவை கடந்தன எனலாம்.
இப்போராட்டங்கள் கொழும்பு நகரையும் சிங்கள மக்களையும் பெரும்பாலும் மையமாகக்
கொண்டிருந்த போதும் உண்மையில் இவை அனைத்து மக்களையும் அணிதிரட்டும்
உந்துசக்தியாகவே காணப்பட்டன. இது கிராம்சி (Gramsci) விவரிப்பதைப் போல்
புரட்சிகரமானதோர் ஜனநாயகத் தருணத்தை உண்டாக்கிய தேசிய மக்கட் பேரணி இயக்கமாகும்.
இப் புரட்சிகரமான போராட்டங்கள் “அரகலய” எனப் பெயரிடப்பட்டன. எம்மவர்களை ஒன்று
சேர்த்த இம்மக்கட் சக்தியான போராட்டங்களை நான் “அரகலய-போராட்டம்-ஸ்ட்ரகில்” என
இங்கு மீள் பெயரிடுகின்றேன்.
எதிர்மறையாக ஆரம்பிக்கும் புதிய வருடம்
அரகலயவின் எதிரொலிகள் தணிகையில் இவ்வருட நிறைவின் முடிவில் மக்கள் இரண்டு
பெருஞ்சுமைகளை எதிர்கொள்கின்றனர். அவை பொருளாதாரச் சிக்கல்களும், போராட்டத்தின்
பின் அதிகரித்துள்ள அடக்குமுறையுமாகும். இவை போராட்டத்தின் நிலையற்ற குறுகியகால
விளைவுகளையும், எமது பல தோல்விகளையும் சுட்டுகின்றன. குப்பி கட்டுரைகளில் பலரும் பல
முறை எமது பொருளாதாரப் பின்னடைவு பற்றியும், அருகிவரும் சமூக நலன்புரித் திட்டங்கள்
பற்றியும் எழுதியுள்ளனர். ரணில் விக்ரமசிங்கவிண் 2023 வரவுசெலவுத் திட்டமானது, சர்வதேச
நாணய நிதியத்தைத் திருப்திப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, நடைமுறைச் சாத்தியமற்ற ஒரு
திட்டமாகவே பார்வையிடப்படுகின்றது. இத் திட்டமானது, கல்வி, சுகாதாரம்
போன்றவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகளைக் குறைப்பதுடன், நிதி நெருக்கடிகளால் அல்லலுறும்
மக்களுக்குக் குறைந்த்தபட்ச ஆதரவையே வழங்க விளைகின்றது. டெலிகொம் மற்றும் மின்சார
சபையைத் தனியார்மயப்படுத்துவதற்கான பரிந்துரை, ஒரு பாதகமான எதிர்காலத்துக்கு

அறிகுறியாக அமைகின்றது. பொது மக்களின் நலனைப் பேணும் கடமையிலிருந்து அரசு
பின்வாங்குவதை அதன் பொருளாதாரக் கொள்கை பிரதிபலிக்கின்றது.
நாம் பாரிய மாற்றத்தை எதிர்கொண்டுள்ள அதே சமயம் அம் மாற்றத்தினை வடிவமைப்பதும்
எமது கைகளில் தான் தங்கியுள்ளது. ஸ்டுவர்ட் ஹால் (Stuart Hall) குறிப்பிட்டதைப் போன்று
சரித்திரம் படைக்கும் நிகழ்வுகள் ஒன்று சேரும் இத் தருணத்தைச் சாதகமாகப்
பயன்படுத்திக்கொள்ளவது இன்றியமையாதது. அரசியல் மற்றும் கருத்தியல் பகுப்பாய்வோடு
ஜனநாயகத்துக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதே வேளை, அரசு-சமூகம்,
அரசு-தனிநபர், அரசு-பொருளாதாரம் மற்றும் பொருளாதாரம்-மக்கள் சார்
இடைத்தொடர்புகளையும் சிந்தித்தாராய்ந்து மாற்றியமைத்தல் அவசியம்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனமும் அரகலய போராட்டமும்
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 6% இற்காகவும், அரச கல்வியைப் பாதுகாக்கவும் கோரி
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனமானது 100-நாள் தொழிற்சங்கப்
போராட்டத்தினை முன்னெடுத்து இற்றைக்கு 10 வருடங்களாகின்றன. வீழ்ச்சி கண்டுவரும்
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வியால் பாதிப்படைந்த மக்களை இப் போராட்டக்
கோஷங்கள் கவர்ந்தன. “எமது பல்கலைக் கழகங்கள் தாக்கப்படுகின்றன,” என்ற தொனியில்
மக்கள் ஆதரவை நாடியது இச் சம்மேளனம். போர் முடிவடைந்த பின்னரான ஆரம்ப நாட்களில்
சம்மேளனத்தின் நடவடிக்கைகள் ஜனநாயகத்தைச் சார்ந்திருந்தன. இவையே பல வருடங்களின்
பின்னர் ராஜபக்ஷ அரசாங்கத்தை வெளியேற்றுவதற்கான ஊக்கியாகக் காணப்பட்டன எனலாம்.
நல்லாட்சி அரசாங்கமானது எவ்வளவு தூரம் ஜனநாயகத்துடன் செயற்பட்டது? சம்மேளனத்தின்
போராட்டங்கள் உண்மையில் பலனளித்தனவா? போன்றவை தொடர்பாக ஒருவர் வாதிக்கலாம்.
பல்லாண்டு காலமாக மாற்றத்திற்காகவும் நல்ல ஆட்சிக்காகவுமான இப் போராட்டங்கள்
ஜனநாயகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியதோடு, ஜனநாயகத்துக்கான எதிர்கால
செயற்பாடுகளுக்குக் களமமைத்ததன என நான் கருதுகின்றேன்.
2022 ஏப்ரல் மாதத்தின் தொடர் போராட்டங்களைப் பலர் எதிர்பார்க்கவில்லை. பல்கலைக்கழகச்
சமூகமும் சற்றுத் தாமதித்த போதும் இத் தருணத்தைக் கைப்பற்றி எதிர்கொள்ளத் தவறவில்லை.
மக்களுடன் மக்களாக வீதிகளில் இறங்கிய பல்கலைக்கழகச் சமூகமானது
அப்போராட்டங்களுக்கு வலுவூட்டியது. 2022, ஜூன் மாதம் 12 ஆம் திகதி பொருளாதாரம் மற்றும்
அரசியலை மீட்டெடுப்பதற்கான பரிந்துரைகளையும் அது முன்வைத்தது. இருப்பினும் இம்முறை
அரகலய-போராட்டங்களிற்கு 2012 ஐப் போன்று வலுவான ஒரு தலைமைத்துவத்தை ஆசிரியர்
சம்மேளனத்தால் வழங்க முடியவில்லை. அதற்கான காரணம் ஆசிரியர் சம்மேளனமோ, அதன்
நடுத்தரவர்க்க ஆசிரியர்களோ சற்றும் எதிர்பாராத பிரமாணத்தை இப் போராட்டங்கள்
கொண்டிருந்ததோடு, பொது மக்களின் பிரச்சினைகளையும் அவை உள்வாங்கியிருந்தமையாகும்.
அரசாங்கம் புதிதாக அறிமுகப்படுத்திய வரிவிதிப்புத் திட்டத்தின் கீழ் அதிகரித்த வருமான வரியை
எதிர்த்து அண்மையில் ஆசிரியர் சம்மேளனமும் அதன் சகோதர ஒன்றியங்களும் ஒரு நாள் வேலை
நிறுத்தத்தை முன்னெடுத்திருந்தன. இதே சமயம் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்
சங்கமும் அதன் அங்கத்தவரொருவர் மற்றும் அவர் குடும்பத்தின் மீது மாணவர்களால்
மேற்கொள்ளப்பட்ட வன்முறையைக் கண்டித்து மூன்று- நாள் வேலை நிறுத்தத்தில்
ஈடுபட்டிருந்தது. வன்முறையற்ற பல்கலைக்கழகச் சூழலை உருவாக்கச் சகல தரப்பினரினதும்

ஆதரவை எமது சங்கம் கோரி நின்றது. ஆகவே இங்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின்
சம்மேளனமும், பல்கலைக்கழக ஆசிரியர் சமூகமும் வேறுபட்ட பாதைகளை நாடுவது
புலப்படுகின்றது. சம்மேளனத்தின் வரி விதிப்புக்கெதிரான போராட்டம் சுய சலுகைகளைப்
பாதுகாக்கும், பொது மக்கள் துயரத்தைப் புறக்கணிக்கும் ஓர் நடவடிக்கையாகத் தென்படக்கூடும்.
இது 2012 இல் உள்நாட்டு உற்பத்தியின் 6% இற்காக ஒரு மில்லியன் கையொப்பங்களைக்
கோரிய அதன் முயற்சியிலிருந்து வெகுதூரத்தில் காணப்பட்டது என்றும் குறிப்பிடலாம்.
அரசாங்கத்தின் வரிவிதிப்புத் திட்டமானது வழுவானதே. இத் திட்டத்தின் கீழ் பாரிய
செல்வந்தர்கள் நழுவிவிடுகின்றனர். ஏனெனில் படிமுறையான இவ்வரி விதிப்பு 36% இல்
நிறுத்தப்படுவதோடு, மக்களின் முதன்மை வருமானம் இங்கு அடிப்படையாகக்
கொள்ளப்படுகின்றது. அரசின் வரிகளில் பெரும்பான்மையானது முறைசாரா வரிகளில்
தங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக ஆசிரியர் சமூகங்கள் அவர்கள்பால் விமர்சனங்களைத் திருப்புவது அரிது. இங்கு
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கமானது மேற்குறிப்பிட்டவாறு வன்முறையைக்
கண்டித்தமை அவ்வாறானதோர் அரிய செயற்பாடாகும். மாணவர்கள் மத்தியிலான வன்முறை,
பரந்துபட்ட பல்கலைக்கழகச் சமூகத்தின் ஜனநாயகமற்ற நடவடிக்கைகளைப் பிரதிபலிக்கின்றது.
அந்த வகையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் துணிவான
அந்நடவடிக்கை பாராட்டத்தக்கது. இன்னொரு புறம் அரசாங்கமானது தீவிரமான
அடக்குமுறைகளைப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது கையாளுகின்றது. இங்கு அரசு மீதான
அதிருப்தியை அடக்க போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களும், ஈடுபடாதோரும் பாகுபாடின்றிக்
கைதுசெய்யப்படுகின்றனர். பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது தொடர்ந்தும் இலங்கையின்
சிறுபான்மையைக் குறிவைத்து வருகின்றது. ஆகவே ஜனநாயகத்துக்கான போராட்டமானது
பல்வேறு வடிவங்களிலும், வேறுபட்ட வழிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதைப்
புரிந்துகொள்ள முடிகிறது.
பரந்துபட்ட இக்கோரிக்கைகளுக்கும் நாட்டங்களுக்கும் மத்தியில் இலவசக் கல்விக்கான, அரச
கல்வியைப் பாதுகாப்பதற்கான நோக்கங்கள் மறக்கப்பட்டுள்ளன. எமது நாட்டின் முக்கியமான
இக் காலப்பகுதியில் மாற்றத்தை ஏற்படுத்த ஆசிரியர் சம்மேளனத்தால் பாரிய பங்களிப்பினை
வழங்க முடியும். எனினும் முதலாவதாக மேற்கண்ட விடயங்களின் சிக்கலான தன்மையைப்
புரிந்து, ஜனநாயகத்துக்கான ஒரு செயற்றிட்டத்தை அது வடிவமைப்பது அவசியம்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் சார் சமூகமானது ஒப்பீட்டளவான அரசியல்
தனியுரிமையையும், பெருநிறுவனக் கட்டமைப்புகளின் செல்வாக்கிலிருந்து ஒப்பீட்டளவான
சுதந்திரத்தையும் கொண்டுள்ளது. ஆகவே ஜனநாயகத்துக்கான இவ்வியக்கத்தில் இச் சமூகத்தால்
கணிசமான பங்களிப்பை வழங்க முடியும். அவ்வாறு செய்வது மக்கள் பிரச்சினைகளுக்கு
மட்டுமல்லாது இச் சங்கங்களின் நோக்கங்களுக்கும் பொருந்துவதாக அமையும்.
ஜனநாயகமான எதிர்காலத்தை நோக்கி
மறைமுகமான தனியார்மயமாக்கல் முயற்சிகளால் மீண்டும் எமது பல்கலைக்கழகங்கள்
தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. 2023 இல் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு
உற்பத்தியின் வெறும் 1% ஆகும். கடந்து சென்ற அரசாங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட பொதுக்
கல்வியின் நவதாராளவாதமயமாக்கலைத் தற்போதைய அரசாங்கம் மேலும் அதிகரித்துள்ளது.

தனியார்மயமாக்கல் முயற்சிகள் பல்கலைக்கழகத்துக்கு வெளியிலிருந்து மட்டுமல்லாது
உள்ளிருந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. பல்கலைக்கழகங்களை நடாத்துவதற்குப் போதிய நிதி
ஒதுக்கீடின்மையால், அவை வேறு வழிகளில் தேவையான நிதியைத் திரட்ட விளைகின்றன.
கட்டணம் அறவிடும் கற்கை நெறிகள் மற்றும் தர உறுதிப்படுத்தல் கட்டமைப்புகளூடாக
இயல்பாகவே ஆசிரியர் சமூகமும் இத் தனியார்மயமாக்கல் முயற்சியில்
ஒன்றிணைந்துவிடுகின்றது. பொது மக்களுக்கான கட்டமைப்புகளைத் தாக்கும் சக்திகள் மத்தியில்
எமது அடையாளங்களையும் பங்களிப்பினையும் ஒரு கணம் இங்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சிந்தனைக்கும் செயலுக்குமுரிய இத்தருணத்தில் ஆசிரியர் சமூகமானது, ஜனநாயகத்துக்காகப்
போராடும் ஏனைய பரந்த குழுக்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் மாற்றத்துக்கான
தேசிய மக்கள் பேரணியை உருவாக்க முடியும். அதனூடாக ஒரு புறம் அரசு- சமூகம்-
பிரஜைகளுக்கான இடைத்தொடர்பையும், மறுபுறம் பொருளாதாரம்- மக்கள்- அரசு
ஆகியவற்றுக்கான இடைத்தொடர்பையும் மீளமைக்க முடியும். அதற்காய் எம்மால் மீண்டும் ஒரு
அரகலய-போராட்டத்தை முன்னெடுக்க முடியுமா?