எரந்திகா த சில்வா
இலங்கையின் பின்காலனித்துவ வரலாற்றின் திருப்புமுனையான நிகழ்வாக
அமைந்த காரணத்தால் நான் #GoHomeGota எனும் சிட்டையை பாவிக்கின்றேன்.
இலங்கையை ஒரு சீரழிந்த பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய அராஜக,
குறுகிய அரசாங்கமொன்றின் பஸ்டீல் சிறையை நொருக்குவதற்காக
வீதிகளில் திரண்ட மக்கள் மீதான அதீத மரியாதையின் நிமத்தம் நான்
இச்சிட்டையை பயன்படுத்துகின்றேன். அனைத்து சமூகப் படித்தரங்களையும்
சேர்ந்த மக்கள் “பொது எதிரியான” ராஜபக்ஷக்களுக்கு எதிராக
ஒன்றுதிரண்டனர். போராட்டத்துக்கான நியாயங்களாக பல முழக்கங்கள்
வெளிப்பட்டன. அனைவரையும் உள்ளீர்க்கக்கூடிய, பன்மைத்தன்மையுள்ள,
சமத்துவநோக்குள்ள ஒரு போராட்டம் வேண்டுமென்றால் அம்முழக்கங்கள்
கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டும். #GoHomeGota போராட்டமென இதனை
நான் அடையாளாப்படுத்தினாலும் போராட்டத்தின் வடிவங்கள் அந்த ஒரு
சிட்டையின் கீழ் கோர்க்கப்பட முடியாதென்பதும் சமூகத்தின் பல்வேறு
மட்டங்களில் இருந்தும் வந்தவர்கள் அப்போராட்டத்தில் வித்தியாசமான
வடிவங்களில் இணைந்தார்கள் என்பதுமே நிதர்சனம்.
GoHomeGota, போராட்டமா இல்லையா?
இலங்கையில் ஏற்பட்ட போராட்ட அலைகள் குறித்து அதிகமாக எழுப்பப்பட்ட
கேள்விகள் அவை உண்மையில் எதிர்ப்பை தெரிவிப்பனவாக இருந்ததா
என்பதாகும். #GoHomeGota போராட்டத்தில் இணைந்த இளைஞர்கள் தமது
எதிர்ப்பை வெளிக்காட்ட பல்வேறு வழிகளை பயன்படுத்தினாலும் அவை
போராட்ட இயக்கத்தின் சீரியதன்மையையும் ஆழத்தையும் புரியாமல்
மேற்கொள்ளப்படுவன போன்ற விமர்சனங்கள் சமூக ஊடகங்களில்
எழுதப்பட்டுக்கொண்டிருந்தன. இது எதிர்ப்பாளர்களுக்கு மத்தியில்
பிரிவினையை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்ட
“சீரியதன்மையற்ற” ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டத்துக்கான ஒத்துழைப்பு
வலிதற்றதாக மாற்றப்பட்டது. இவ்வாறான விமர்சனங்கள் மக்கள் தங்கள்
எதிர்ப்புகளை வெளிக்காட்டும் பன்மைத்தன்மையை சுருக்கும் செயற்பாடாகும்.
“போராட்டத்தை கேலிக்கூத்தாக்க வேண்டாம்” என்ற தோரணையில் ஒரு
சமூக வலைத்தள பதிவு வலம்வந்தது (அப்பதிவில் கேலிக்கூத்துக்கு
பாவிக்கப்பட்டிருந்த சிங்கள சொல்லான ‘ஆத்தல்’ உண்மையில் கேலிக்கூத்து
என்ற சொல்லின் நுனுக்கமான அர்த்தப்பொதிவை கொண்டதுமல்ல). சிக்கல்
என்னவென்றால் போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் எதிர்பார்ப்புகள்,
தேவைகள், அடைவுகள், உணர்வுகள், திண்டாட்டங்கள் மற்றும் காரணங்கள்
பல்வகைப்பட்டதால் ஒரே மாதிரியான பதில்களையோ துலங்கல்களையோ
எம்மால் எதிர்பார்க்க முடியாது. இந்தப்போராட்டம் அனைத்து
சமூகப்படித்தரங்களிலுள்ள மக்களையும் ஒன்றிணைத்தாலும் போராட்டத்துக்கு
வித்திட்ட பொருளாதார நெருக்கடி அனைவரையும் ஒரே அளவில்
பாதிக்கவில்லை; ஒவ்வொருவரின் பாதிப்பும் அவர்கள் சார்ந்திருக்கும் சாதி,
வகுப்பு, மதம், பால்மை மற்றும் இனத்தை அடிப்படையாகக் கொண்டு
வேறுபட்டனவாகவே இருந்தன. மிரிஹான மற்றும் தங்காலையில்
(இப்பிரதேசங்களில் மட்டுமென வரையறுத்துவிட முடியாது) நடைபெற்ற
ஆர்ப்பாடங்கள் சமூகப்படித்தரங்களில் மிக அடிமட்டத்திலிருந்த,
மிகக்குறைவான வாய்ப்புகளை அனுபவித்த விளிம்புநிலை மக்களால்
மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் எழுச்சியால் புத்துணர்ச்சியடைந்த ஏனைய
சமூகப்படித்தரங்களிலும் இருந்து இணைந்த மக்கள் தமது ஆதரவை பல
பிரதேசங்களிலிருந்தும் வழங்கினர். இவ்வாறான எளிய, ஒற்றைப்படையான
தோற்றமொன்றை இப்போராட்டத்துக்கு வழங்கலாம், ஆனால் அது கூடாது.
ஒவ்வொரு எதிர்ப்பாளரும் இப்போராட்டத்துக்கான மூலதனங்களே.
போராட்டங்களுக்கென்று வரையறுக்கப்பட்ட சட்டகங்கள் இல்லை.
போராட்டங்களும் புரட்சிகளும் பன்மைத்தன்மையாக இருப்பதோடு
அப்பன்மைத்துவம் போற்றப்பட வேண்டிய விடயமாகும்.
GoHomeGota போராட்ட இயக்கத்தை ஓரியல்புபடுத்துவதிலுள்ள சிக்கல்கள்
எமது எதிர்ப்புகளை வெளிப்படுத்துவதிலுள்ள பன்மைத்துவம் நாம்
இருந்துவரும் சூழ்நிலை, எமக்கான வாய்ப்புகள் மற்றும் எதிர்ப்புகளை
வெளிப்படுத்துவதில் எமக்குள்ள ஆக்கத்திறன் என்பவற்றில் தங்கியுள்ளது.
எனவே இப்போராட்ட இயக்கத்தை ஓரியல்புபடுத்துவது அதன் பலம் மற்றும்
அதனால் விளையும் நலன்களை மங்கச்செய்யும். ஓரியல்புபடுத்துவதனால்
ஏற்படும் இன்னொரு சிக்கல் யாதெனில் அரசாங்கம் போராட்ட இயக்கத்தின்
மீது ஏற்படுத்தும் தாக்குதல், ஒடுக்குமுறை மற்றும் எதிர்த்தாக்குதல்களால்
துரிதமாக இல்லாமலாகும் நிலை உருவாகலாம். பன்மைத்துவமும்
உள்ளீர்த்தலும் போராட்ட இயக்கத்தின் பலத்தை அதிகரிக்கும். எதற்காக
போராட்ட இயக்கங்களை ஓரியல்புபடுத்த வேண்டும்?
ஓரியல்புபடுத்துவதனால் உருவாக்கப்படும் போராட்ட மாதிரிகள்
அடக்குமுறைக்கு வித்திடும் சமூக படித்தரங்கள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை
தகர்க்க உதவுமா?
GoHomeGotaவும் சமத்துவம் என்ற கேள்வியும்: தன்பால்மேண்மையியமும்
சாதியமும்
GoHomeGota போராட்ட இயக்கத்தின் ஊடாக நாங்கள் அரசாங்கத்தின் மீது
பாரிய அழுத்தமொன்றை ஏற்படுத்தியுள்ளோம். இருப்பினும் இது தொடர்பான
அகநோக்குப்பார்வை மற்றும் பிரதிபலிப்புகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது.
போராட்டங்களில் பாவிக்கப்பட்ட சில பதாகைகள் தன்பால்மேண்மையை
காட்டுவனவாக இருந்தன. உதாரணமாக, ‘கோட்டாவின் தாயை வரச்சொல்’,
‘கோட்டாவின் … ஞானக்காவின் வாயில்’ போன்றன. கோட்டாவின் தாயின்
மீதான அழைப்பு அவர்களின் மீதான உடல் மற்றும் பாலியல் தாக்குதலை
குறிக்கின்றது. இரண்டாவது உதாரணம், கோட்டா அவரின் சோதிடர்
ஞானக்காவின் பிடியில் இருப்பதைக்கூரும் வர்ணனையாகும்.
சிங்கள மொழியில் (அடோ நாட்டமி அடு குலே உபன்) இருந்த இன்னொரு
பதாகை தன்பால்மேண்மையியம், சாதியம், வகுப்புவாதம் மற்றும்
போலிப்பகட்டையும் காட்டுகின்றது. மிகச்சரியான மொழிபெயர்ப்பு
இல்லாவிடினும் இப்பதாகை கூறுவது ‘மூட்டை தூக்கியே! நீ ஒரு கீழ்சாதி
பிறப்பாவாய்’ என்பதாகும். மிரிஹானையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்
போது பிடிக்கப்பட்டிருந்த இப்பதாகை சமூக ஊடகங்களில் அதிகம்
பகிரப்பட்டுருந்தது. நம்மை நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தும் சமூக
அமைப்புகளால் உருவாக்கப்பட்ட இவ்விழிநிலையை வைத்து ஒருவரை
வைதுவிடுவதால் புரட்சி ஏற்படுமா? சாதியத்துக்கு எதிராக போராட்டம்
செய்யும் நாங்கள் அதே சாதியத்தை பயன்படுத்தி ஒருவரை கேலிசெய்வதன்
மூலம் மீண்டுமொரு அடக்குமுறைக்கு வித்திடுகின்றோமா? எமது இந்த
நடத்தை சமூக விளிம்புகளில் இருந்து வரும் ஒடுக்கப்பட்டோரை
போராட்டத்திலிருந்து மேலும் விலக்கி வைக்கின்ரது. இவ்வாறான
சூழ்நிலையில் ஊழலற்ற சமத்துவ சமூகமொன்று சாத்தியப்படுமா?
சமத்துவத்தை பற்றி பேசுகையில் இப்போராட்டம் யாருக்கானது, யாரெல்லம்
இதன் பங்காளர்களாக இருக்கின்றார்கள் என்ற கேள்வியையும்
கேட்கவேண்டியுள்ளது. “போராட்டம்” என நகர்ப்புரங்களிலும்
நகரமையங்களிலும் கொண்டுசெல்லப்படும் இவ்வியக்கத்தில் பிந்தங்கிய
பிரதேசங்களில் வாழும் விளிம்புநிலை மக்கள் தம்மை
இணைத்துக்கொள்வார்களா? சிங்களம் பேசாத சிருபான்மையினர் தங்களை
இணைத்துக்கொள்வார்களா? எண்ணிம இடைவெளியால் பிந்தள்ளப்பட்ட
மக்கள் என்ன ஆவார்கள்? மேலும் இப்போராட்டத்தில் அதிகமாக இயங்கும்
கருத்தியல்ஆளும் சிங்கள பௌத்த மக்களினதாக இருப்பதோடு சிறுபான்மை
தமிழரின் அங்கலாய்ப்புகள் என்னவாகின்றன? யாழ்ப்பாணத்தில் கடந்த இரு
வருடங்களாக இருக்கும் எனக்கு இங்குள்ள மக்கள் இவ்வார்ப்பாட்ட
இயக்கத்தை என்னவாக பார்க்கின்றார்கள் என்பது புரிகின்றது.
காலங்காலமாகும் போராடும் சிறுபான்மை தமிழர்களின் அங்கலாய்ப்புகள்
GoHomeGota போராட்ட இயக்கத்தின் பெருங்குரலாக மாறுமா?
மன்னர்கள் மற்றும் எதேச்சதிகாரிகளின் மீதும் காட்டப்படும் அதீத பற்று
போராட்ட இயக்கமானது எதேச்சதிகாரம், குடும்ப ஆட்சி, சர்வாதிகாரம்
மற்றும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டாலும்
அதில் பாவிக்கப்படும் சில கருத்துகள் மற்றும் காலங்காலமாக இருந்துவரும்
மன்னர்கள் மீதான அதீத பற்று போராட்ட இயக்கத்தின் ஆன்மாவை
காயப்படுத்துவதாக இருக்கின்றது. உதாரணமாக ஒரு சுலோகம் ‘வாயால்
புடின், செய்கையால் டின் டின்’ என்கிறது. அதாவது, கோட்டா புட்டினை
போல பேசுவதாகவும் ஆனால் டின் டின்னை போல நடப்பதாகவும்
சொல்கின்றது. இது பல அடுக்குகளிலும் தவறான சுலோகமாகும்.
தற்புகழ்ச்சியில் திழைத்துள்ள, ரஷ்யாவை உக்ரைனின் மீது குண்டு மழை
பொழியச்செய்த புட்டினும் நேர்மையான, சட்டத்துக்கு கட்டுப்பட்ட டின்
டின்னும் ஒன்றாகுவார்களா? சுலோகத்தின் படி மக்கள் வேண்டுவது ஒரு
தற்புகழ்ச்சிக்காரனையே அன்றி நேர்மையுள்ள டின் டின்னை அல்ல. நாம்
நாடுவதை புட்டினை போன்றவரையா? இவ்வாறான சுலோகங்களில்
காணப்படும் சிக்கல்களை குறித்து நாம் கட்டாயம் ஆராய வேண்டும்.
இன்னொரு உதாரணம், “புனிதமான தந்தயானை இறக்கும் போது அரசனுக்கு
அபசகுனம் விளையுமென்று வீணுக்கா சொன்னார்கள் நந்தசேன?’. இது
நெடுகமுவே ராஜா தந்த யானையின் இறப்பை குறிப்பதோடு கோட்டாவின்
வீழ்ச்சிக்கான காரணமாக காட்டப்பட்டுள்ளது. இந்த சுலோகம் கோட்டாவை
ஒரு அரசனாக கருதுவதோடு, சிங்கள பௌத்த மக்களுக்கு முக்கியத்துவம்
வாய்ந்த ஒரு விடயத்தை உத்தேசிப்பதன் மூலம் சிங்கள பௌத்த கருத்தியல்
மேலோங்குவதோடு சிங்கள பௌத்தரல்லாத ஏனைய மக்கள் இயல்பாகவே
இச்சட்டகத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.
போராட்ட இயக்கத்தில் பாவிக்கப்பட்ட சுலோகங்களும் பதாகைகளும்
அப்போராட்டத்தை இன்னொரு நிலைக்கு முன்னேற்றியதென்பது மறுக்கப்பட
முடியாததாகும். #GoHomeGota மீதான அவற்றின் தாக்கம் குறைத்து மதிப்பிட
முடியாததாகும். இருப்பினும் சில சுலோகங்களில் காணப்படும் சிக்கல்களை
நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு சமூக வலைத்தளங்களில்
பிரசித்தமாகும் சில சுலோகங்களில் உள்ள சிக்கலகளை அனைவராலும்
விளங்கவோ கணிக்கவோ முடியாது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள
வேண்டும். இது மக்களின் நீண்ட நாளைய கோபத்தினதும் ஏமாற்றித்தினதும்
வெளிப்பாடாகும் (அல்லது இவை ஏதும் நன்மை பயக்கக்கூடியனவா?).
இப்போராட்டத்தின் பகுதியாகவும் இருந்து இதனை விமர்சிக்கக்கூடிய
தூரத்திலும் இருக்கும் வாய்ப்பு அனைவர்க்கும் வாய்த்திடாது. இது
கல்வியால் உருவாக்கி தரப்பட்ட வாய்ப்பாகும். பெறப்பட்ட கல்வியை
வைத்துக்கொண்டு சில முரண்பாடுகளையும் சிக்கல்களையும்
அவதானிக்காமலிருக்க எங்களால் முடியாது. குப்பி ஆக்கமொன்றில் என் சக
தோழியான அனுஷ்கா கஹன்டகம கூறுவது போல ‘நான் நேரமெடுத்து
சிந்தித்து விமர்சிக்க வாய்ப்பளித்த மக்களின் வரியால் நிதியளிக்கப்படும்
இலவசக்கல்விக்கு என் நன்றிகள்’. இவர் கூறுவதைப்போல இப்போராட்ட
இயக்கத்தில் இழையோடும் பல்வேறு கருத்தியல்களை நின்று நிதானித்து
சிந்திக்க வேண்டியிருக்கின்றது. இக்கருத்தியல்கள் சமூகத்திலும்
முற்போக்கான போராட்ட இயக்கங்களில் கூட இழையோடுவதையும் நாம்
விளங்கிக்கொள்ள வேண்டும். இவற்றில் காணப்படும்
தன்பால்மேண்மையியம், வகுப்புவாதம், சாதியம், இனவாதம் மற்றும் ஏனைய
தோல்விகளை அடையாளம் காண முடியுமானால் பன்மைத்துவமும்
சமத்துவமும் நீதிக்குமான போராட்டமொன்றை சாத்தியப்படுத்த எம்மால்
முடியும்.