Mcகல்வி: STEM/STEAM கல்வியில் காணப்படும் சிக்கல்களும் சவால்களும்

சுதேஷ் மந்திலக்க


கல்வியமைச்சு (MoE), தேசிய விஞ்ஞான அமைப்பு (NSF), தேசிய கல்வி
நிறுவகம் (NIE) ஆகியன மார்ச் 31ஆம் திகதி கொழும்பிலுள்ள ரோயல்
கல்லூரியில் ஒரு நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தன. நிகழ்வில்
கலந்துகொண்ட கல்வியமைச்சர் சுசில் பிரேமஜெயந்த அவர்கள்
2024இலிருந்து STEAM கல்வியை (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல்,
கலை, கணிதம்) அறிமுகப்படுத்துவதன் மூலம் அரசாங்கமானது
இலங்கையின் கல்வி அமைப்பை மாற்றியமைக்கப்போவதாகக் கூறினார்.
STEAMஆனது இதற்கு முன்னர் தேசிய விஞ்ஞான அமைப்பை (NSF)
மையப்புள்ளியாக நியமித்து அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட STEMஐ
(விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) விட
வித்தியாசாமானது. கல்வித்துறையில் அறிமுகப்படுத்தப்படும் இத்திடீர்
மாற்றங்கள் இலங்கையில் கல்வியின் எதிர்காலம் குறித்த கேள்விகளை
எழுப்பியுள்ளன. இவை முறையான கலந்துரையாடல் மற்றும்
பரிசீலனைகளுக்குப் பின்னரா அறிமுகப்படுத்தப்பட்டன? STEAMஆனது
STEMஇன் நலப்பயன்சார் சட்டகத்தை உள்வாங்கியிருக்கின்றதா? STEAM/STEM
ஆகியவை பெருநிறுவனங்களின் நன்மைகளை அதிகரிக்கும் நோக்கில் வணிக
மாதிரிகளை அடிப்படையாகக் கொண்ட Mcகல்வியை அடிப்படையாகக்
கொண்டு உருவாக்கப்பட்டதா? மிக முக்கியமாக, கல்வி தற்காலத்தில் எமது
கல்வி அமைப்பில் காணப்படும் சிக்கல்களுக்கான தீர்வுகளை தருமா?
STEAM மற்றும் STEM
STEMஆனது 2000களில் அமெரிக்காவில் அமெரிக்காவின் இயலுமையை
பதிவுசெய்தல் (TAP) கூட்டணியின் வட்டமேசை மாநாட்டில்
அறிமுகப்படுத்தப்பட்டதாகும். TAP கூட்டணியானது 21ஆம் நூற்றாண்டின்
வணிகப்போட்டியை அமெரிக்கா வெல்லும் வகையில் புதிய
கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள விஞ்ஞானிகளையும்
பொறியியலாளர்களையும் உருவாக்குவதற்காக கூட்டணியாக இணைந்துள்ள

பெருமுதலாளிகளின் அமைப்பாகும். 2007க்குப் பின்னர் அமெரிக்காவின்
தேசிய ஆய்வு மையமானது தனது ஆய்வு நிகழ்ச்சிநிரலில் விஞ்ஞான
மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை வரவேற்று ஊக்கமளித்தது.
அரசாங்கமும் பெருநிறுவனங்களும் கல்வியை நோக்கி கவனத்தை
குவித்ததால் அதற்கான நிதியுதவிகள் குவிந்த அதேவேளை கலை மற்றும்
அது சார்ந்த கல்வியானது சிக்கல்களை முகங்கொடுக்க நேர்ந்ததோடு
சமநிலையற்ற நிலை உருவாகியது.

இச்சூழ்நிலையில், அமெரிக்க கலை மற்றும் விஞ்ஞான கழகமானது,
சமூகக்கல்வி மற்றும் மானிடவியல் கல்வியில் காணப்பட்டும் ஈடுபாட்டை
அடிப்படையாகக் கொண்டு 2013ஆம் ஆண்டு “விடயத்தின் மையப்புள்ளி” என்ற
தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை நான்
முன்னைய குப்பி ஆக்கத்தில் (தி ஐலன்ட், 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்
15ம் திகதி வெளியிடப்பட்டது) குறிப்பிட்டது போன்று சமூகரீதியான
நன்மைகள் தனிப்பட விஞ்ஞானக் கல்வியால் மட்டுமே அடைய
முடியாததாகுமென நிறுவியது. அதன் பின்னர், 2013ஆம் ஆண்டிலிருந்து
தொடங்கி விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் உட்பட ஆய்வுக்குழுக்களும்
கல்வியியலாளர்களும் STEM கல்வியில் “கலை” இணைக்கப்பட வேண்டும்
என்பதை வற்புறுத்திக்கூறினர். இதன் விளைவாக STEAM கல்வி STEMஐ
இடமாற்றியது. இருந்தும் இம்மாற்றம் இலங்கையில் மிக அண்மையிலேயே
கொண்டுவரப்பட்டுள்ளது.
Mc கல்வி
கல்வியமைச்சர் எமது நாட்டின் கல்வி அமைப்பை மாற்றுவதற்காக உடனடி
பொதியொன்றை அறிமுகப்படுத்தியிருக்கின்றார். பெருநிறுவனங்கள்
வளர்ச்சியை கருத்திற்கொண்டு மேற்கொள்ளும் உடனடி அணுகுமுறைகளைப்
போல, Mcடோனால்ட்ஸ் துரித உணவுகளை ஒப்ப புதிய STEAM முயற்சியும்
உடனடியான, உற்பத்திகளை (மாணவர்களை) Mcகல்வி மூலம் கொண்டுவர
எத்தனிக்கின்றது. அரசாங்கமானது STEAM கல்வி STEMஐ விட எவ்வளவு தூரம்
பயன்மிக்கது அல்லது STEM கல்வி எதிர்பார்த்த விளைவுகளை அளித்து

விட்டதா போன்ற எவ்வித கலந்துரையாடல்களுமின்றி வெறுமனே ஒரு
எழுத்தை மாத்திரம் “A” இணைத்து விட்டு இத்தட்டத்தை
அறிமுகப்படுத்தியுள்ளது. இது, சீஸ் இன்றி பர்கரை தயாரித்துவிட்டு பின்னர்
ஒரு சீஸ் துண்டை வைத்துவிட்டு சீஸ் பர்கர் என்பதற்கு ஒப்பான
செயலாகும்.
STEMஆக அல்லது STEAMஆக இருக்கட்டும், இவ்விரண்டு கல்வி முறைகளுமே
வெறுமனே பெருநிறுவனங்களின் நோக்கங்களை நிறைவேற்றும் கருவிகளாக
கல்வியை பயன்படுத்தக்கூடிய வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.
மார்ச் 31ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவித்த
கல்வியமைச்சர், “STEM கல்வி மூலம் நாம் உருவாக்க எத்தனிக்கும்
தொழில்கள் அடுத்த 10- 15 வருடங்களில் தொழில்சந்தைகளில் காணாமலாகி
விடும். வரவிருக்கும் இம்மாற்றங்களை மனதிற்கொண்டே நாம் செயற்பட
வேண்டியுள்ளது” என்றார். அதாவது, STEAM கல்வியானது இம்மாற்றத்தையும்
எதிர்கால தொழில்சந்தையையும் மனதிலிருத்தியே
உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த சந்தை சார் தத்துவத்தை அடிப்படையாக
வைத்துதான் கலைத்துறைகள் “தொழில் உலகத்துக்கு” தேவையான மென்
திறன்களை வளர்க்கவில்லை என விமர்சிக்கப்படுகின்றன.
உலகளவில் STEAM கல்விக்கு மாற்றமடைந்த நாடுகள் இருவகையான
காரணங்களை முன்வைக்கின்றன: 1. புத்தாக்கத்துக்கு கலையும்
ஆக்கத்திறனும் அத்தியாவசியமானவை, 2. விமர்சன சிந்தையுள்ள,
புத்தாக்கத்திறனுள்ள, உணர்வெழுச்சியுள்ள பிரஜைகளை உருவாக்குதல். சில
நாடுகள் (உதாரணமாக சீனா) STEAM கல்வியை முதலாவது காரணத்துக்காக
அறிமுகப்படுத்தியுள்ளதோடு சில ஐரோப்பிய நாடுகள் இரண்டாவது
காரணத்தை அடிப்படையாக வைத்து STEAM கல்வியை
அறிமுகப்படுத்தியுள்ளன. கல்வியமைச்சரின் கருத்துப்படி பார்க்கும் போது
STEAM கல்வியானது இலங்கையில் முதலாவது காரணத்துக்காக
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
STEM/ STEAM கல்வி எமது நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான தீர்வல்ல

இலங்கையின் கல்வியமைப்பில் புரையோடிப்போயுள்ள சிக்கல்களுக்கு
அனைத்து சிக்கல்களுக்கும் ஒரே தீர்வாக முன்வைக்கப்படும் STEAM/STEM
கல்வி முறைகளால் எவ்வித மாற்றங்களும் நேரப்போவதில்லை.
கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் மிகக்குறைந்த நிதியொதுக்கீடுகளாலும்
அதனால் பாடசாலை ஆசிரியர்கள், பல்கலை ஆசிரியர்கள் மற்றும் பல்கலை
மாணவர்களால் மேற்கொள்ளப்படும் வேலைநிறுத்தங்களாலுமே
இலங்கையின் கல்வித்துறை சிக்கலுக்குள்ளாகி இருக்கின்றது. மாணவர்களின்
வேலைநிறுத்தங்களை சாடிய கல்வியமைச்சரின் கருத்துப்படி,
கல்விமுறையானது மாணவர்களை ஒழுக்காற்றுரீதியில்
முறைவழிப்படுத்துவதாக காணப்படும் என தெரிவித்தார். “சர்வதேச
நியமங்களுக்கேற்ப கல்வியை மேற்கொள்ள வேண்டிய எமது மாணவர்கள்
வீதிகளில் ஆர்ப்பட்டங்களில் ஈடுபட்டு கண்ணீர்ப்புகைக்கு பலியாகின்றார்கள்.
எமது கல்வி இவ்வாறான தரங்களுக்கு கீழிறங்கியுள்ளது.” மாணவர்
ஆர்ப்பட்டங்களை பிரச்சினைக்குரிய விடயமாக நோக்கும் கல்வியமைச்சர்,
அதற்கான காரணங்களை கண்டுகொள்ளவில்லை. அவர்களின்
கோரிக்கைகளில் ஒன்று, உறுதியான எதிர்காலத்தை அவர்களுக்கு
வழங்குவதாகும். மேலும் இம்மாணவர்கள் நடைமுறையிலிருக்கும்
கல்வியமைப்பை விமர்சிக்கிறார்கள். எனவே STEM/STEAM கல்வி முறைகள்
மாணவர் போராட்டங்களை குறைக்கும் என்பது பகல்கனவாகும்.
எந்தவொரு கொள்கைகளும் முன்மொழிவுகளும் இலங்கையில் காணப்படும்
சமூக-பொருளாதார- கலாசார வித்தியாசங்களை கவனத்திலெடுக்காமல்
உருவாக்கப்படவே முடியாது. கல்விக்கொள்கைகளைப் பொருத்தவரையில்,
சமூக- பொருளாதார- கலாசார வித்தியாசங்கள் பின்வரும் காரணிகளை
அடிப்படையாகக் கொண்டவையாகும்: கிராமப்புற மற்றும் நகர்ப்புற
வித்தியாசங்கள்; நகர்ப்புறத்தில் காணப்படும் தகுதியுடைய ஆசிரியர்களின்
எண்ணிக்கை, மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோரால் வழங்கப்படும்
ஒத்தாசைகள், ஊட்டச்சத்துக்குறைபாடு போன்ற சமூக பிரச்சினைகளால்
பாதிக்கப்படும் மாணவர்களின் உடல், உள நலவாழ்க்கையில் ஏற்படும்
சிக்கல்கள் போன்றன. கொழும்பில் காணப்படும் நகர்ப்புற பாடசலைகளை
நியமங்களாகக் கொள்ள முடியாது. அணுகுமுறையானது அனைத்து

பாடசாலைகளும் விஞ்ஞானக் கல்வியை கற்பிக்கக்கூடிய வளங்களோடு
இருக்குமென்ற கருதுகோளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும்.
இலங்கையில் காணப்படும் கிராமப்புற பாடசாலைகளில் எத்தனை
விஞ்ஞானக்கல்வியை கற்பிக்கக்கூடிய இயலுமையில் இருக்கின்றன?
உயர்தரத்தில் விஞ்ஞானக்கல்வியை தொடரக்கூடிய வளங்களை
பாடசாலைகள் வழங்க இயலாமல் இருப்பதனால் எத்தனை மலையக
மாணவர்கள் கலைத்துறையை தெரிவு செய்கின்றார்கள்? இதற்கான தீர்வாக
கல்விக்கான நிதியொதுக்கீட்டை அதிகரிப்பதோடு சமூகரீதியில் நீதமான
அடிப்படையில் அவ்வள ஒதுக்கீட்டை பகிர அரசாங்கம் முன்வருமா?
விஞ்ஞானத்துறை மற்றும் கலைத்துறையை ஒருங்கிணைத்து
வழங்கப்படக்கூடிய புதிய பாடங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்த
தயாராகுமா? பல்கலைக்கழகங்களில் இவ்வாறான ஒருங்கிணைப்புகளை
விடுங்கள்: ஒப்பீட்டு இலக்கிய நயத்தில் கலாநிதிப்பட்டப்படிப்பை
மேற்கொள்ளும் ஒரு மாணவர் கூட உயரதிகாரிகள் ஒப்பீட்டு கலை இலக்கிய
நயம் நுண்கலைகளில் உள்ளடங்காது என்ற தீர்மானத்தினால்
நுண்கலைத்துறையில் இணைத்துக்கொள்ளப்பட முடியாத சூழ்நிலையே
இங்கு காணப்படுகின்றது.
அப்படியே நாம் கல்விமுறையில் வெற்றிகண்டாலும் புத்தாக்கங்களை
வரவேற்கும் தொழிலகங்கள் இங்கு காணப்படுகின்றனவா? கடந்த
காலங்களில் எமது மாணவர்கள் ஏற்கனவே புத்தாக்கங்களை உருவாக்கிக்
காட்டினாலும் அவற்றுக்கான ஆதரவு அரசிடமிருந்து வழங்கப்படவில்லை.
இந்நிலை இன்னும் சில வருடங்களுக்குள் மாற்றமடைய முடியுமா? STEAM
கல்விமுறையில் மாணவர்களுக்கிடையில் உருவாகவிருக்கும்
தொழில்ரீதியான போட்டிநிலை கலையப்பட வேண்டுமென எமது
கல்வியமைச்சரால் குறித்துக் காட்டப்பட்டாலும் அதனை தடுப்பதற்கான
முன்மொழிவுகள் ஏதும் தெளிவாக வழங்கப்படவில்லை.
சந்தைகளில் காணப்படும் குறைவான வாய்ப்புகளே போட்டியை
உருவாக்கிவிடும். எனவே எமது இளன்ந்தலைமுறையினருக்கு நாம் எப்படி

வாய்ப்புகளை அதிகரிக்கப் போகின்றோம்? இந்தக் கேள்விகள் இன்னுமே
விடையளிக்கப்படாமலேயே தேங்கி நிற்கின்றன.
சிறந்த பல்துறைசார் அணுகுமுறை
கலைத்துறை மற்றும் விஞ்ஞானத்துறையை ஒருங்கிணைத்த வகையில்
வடிவமைக்கப்பட்ட பல்துறைசார் அணுகுமுறை காலத்தின் தேவையாகும்.
சில கல்வியியலார்கள் கூறுவதைப்போல கலைத்துறை வெறுமனே
விஞ்ஞானம், பொறியியல்துறை, தொழில்நுட்பம், அல்லது கணிதத்தை
கற்பிக்க உதவும் கருவியாக மட்டும் பாவிக்கப்படக்கூடாது. உதாரணமாக,
STEAM கல்வி முறையில் இசையானது விஞ்ஞானத்தில் விடயப்பரப்பை
மனப்பாடம் செய்யும் கருவியாக பாவிக்கப்படுகின்றது. இதே அணுகுமுறை
தொடர்ந்தும் பாவிக்கப்பட்டால் இசையானது கணித சூத்திரங்களை கற்பிக்க
உதவும் கருவியாக மாற்றப்படும். இவ்வணுகுமுறை குழந்தைகளுக்கு
வித்தியாசமான முறையில் விஞ்ஞானத்தை கற்பிக்க உதவினாலும்
காலப்போக்கில் கலைத்துறை அதன் தரத்தை இழக்கக்கூடிய சூழ்நிலை
ஏற்படலாம். STEM கல்வி முறைக்கு உதவியாக மட்டுமே கலைத்துறையை
வரையறுத்துவிடக்கூடாது. மாணவர்கள் ஆடற்கலையை தமது உடல்களின்
பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்ளல், உணர்வுகளை
புரிந்துகொள்ளல் மற்றும் அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்த
கற்றுக்கொள்ளல் போன்ற காரணங்களுக்காகவே கற்க வேண்டும். எனவே,
STEAM கல்வி முறைக்கு வெறுமனே ஒரு கருவியாக கலைத்துறையை
பாவிக்கப்படுவதை விடுத்து விஞ்ஞானம் கலைத்துறையிலும் கலைத்துறை
விஞ்ஞானத்திலும் ஒன்றுக்கொன்று இணைந்து கற்பிக்கப்படத்தக்க
வகையிலான பல்துறை அணுகுமுறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
STEM கல்வி முறையில் உள்ள தவறான புரிதல் விஞ்ஞானம் உண்மைக்குப்
புறம்பானதை கூறுவதில்லை என்பதொடு அது எவ்விடத்துக்கும் பொருந்தும்
உண்மை என்பதாகும். கல்வித்துறையில் நாங்கள் அணுகுகப்போவது
வித்தியாசமான மனவோட்டங்களைக் கொண்ட தனித்துவமான
பிள்ளைகளையாகும். மெக்கில் பல்கலைக்கழகத்தின் உளநோயியல்

துறையில் சமூக மற்றும் பல்கலாசார பிரிவால் மேற்கொள்ளப்பட்ட
நரம்பியல் துறையில் ஈடுபடுத்தப்பட்ட விமர்சன அணுகுமுறையைக்
கொண்ட ஆய்வொன்றில் விஞ்ஞானம் குறித்த இவ்வாறான பிழையான
கருத்தோட்டங்கள் கேள்விக்குட்படுத்தப்பட்டன. இப்பிரிவின் இயக்குனர்
பேராசிரியர் லோரன்ஸ் ஜே. கேர்மேயர் அவர்கள், விஞ்ஞானமும் அறிவும்
எவ்வாறு சூழ்நிலைக்குட்பட்டதாகவும் சமூக- கலாசாரக் காரணிகளின்
செல்வாக்குக்கு உட்பட்டதாகவும் காணப்படுவதாக் கூறுகின்றார்.
இவ்விமர்சனரீதியான ஆய்வின்படி, தூய விஞ்ஞானம் மற்றும் சமூக
விஞ்ஞானத்துக்கிடையில் சரியான ஒருங்கல் செயற்பாடு நிகழ்த்தப்பட
வேண்டுமெனவும் எமது எதிர்காலத்துக்கான சரியான அணுகுமுறையாக அது
கொள்ளப்பட வேண்டுமெனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.