ஆங்கில மொழி சார்ந்த வகுப்பறைகளில் தரவரையறைகளை கட்டுடைத்தல்

ருத் சுரேந்திரராஜ்

6 மாசி, 2024ல் விஷ்விகா அவர்களால் எழுதப்பட்ட குப்பி ஆக்கமான
‘இலங்கையில் ஆங்கிலத்தின் பேரில் நடைபெறும் குரல் பறிப்பு,’
இலங்கையில் ஆங்கிலக் கல்வி கற்பவர் மீது திணிக்கப்படும்
தரவரையறைகளில் உள்ள பல்வேறான சிக்கல்கள் குறித்து அலசுகின்றது.
அவரின் அவதானங்களில் முக்கியமானது ஆங்கிலக் கல்வி பயிற்றுனர்கள்
(ELT) அனைவராலும் எதிர்கொள்ளப்படும் வருந்தத்தக்க யதார்த்தமான
‘தரவரையறைகளை’ பேணும் இறுக்கத்தில் ஆங்கிலக் கல்வி கற்பவர்களின்
கருத்தாக்கங்களை பயிற்றுனர்கள் இருட்டடிக்கும் நிலை உருவாவதாகும்.
இந்த விவாதத்தை விரிவாக்கும் நோக்கில் மதுரங்க கலுகம்பிட்டிய
அவ்ர்களால் 2 சித்திரை, 2024ல் எழுதப்பட்ட ‘இலங்கையில் ஆங்கில மொழிக்
கற்பித்தல் புலத்தில் இலங்கை ஆங்கிலத்தை நிலைப்படுத்தல்’ என்ற
ஆக்கமானது யதார்த்தமான வகையில் கட்டமைக்கப்பட்ட
தரவரையறைகளானவை, அது சார்ந்த நிலப்பரப்பிற்கேற்ப தகவமைக்கப்பட்டு
அதன் மொழிப்பாவனையாளர்களை சந்தர்ப்பங்களுக்கேற்ப பொருத்தக்கூடிய
அமைப்பை உருவாக்குபவை ஆகும். இந்த ஆக்கத்தின் படி, ‘தரவரைஅறைகள்’
என குறிப்பிடப்படுபவை மொழி உருவாக்கத்தில், குறிப்பாக மொழியை
கற்பவர்களிடம் நாம் சாதாரணமாக ஏற்றி வைக்கும் எதிர்பார்ப்புகளாகும்.
உதாரணமாக, அவர்களின் மொழிப்பாவனையில் சொற்களை உச்சரிப்பதில்
உள்ள திருத்தங்கள் மற்றும் வெளிப்பாடுகள் குறித்து நமக்கு கருத்து
வேறுபாடுகள் இருக்கலாம். இவ்வாறான கருத்துநிலைகள் மொழி குறித்த
‘ஏற்றுக்கொள்ளப்பட்ட’ வெளிப்பாடு சார்ந்த திறன் என வரையறுக்கப்படும்
விடயங்களை நோக்கி நம்மை கொண்டு செல்கின்றன.

இரு எழுத்தாளர்களும் மொழிப்பயன்பாட்டில் அதன் பாவனையாளருக்கு/
கற்பவருக்கு வழங்கப்பட வேண்டிய முன்னுரிமை விடயத்தில் தெளிவாக
இருக்கின்றனர். வெளிப்படையாகக் கூறினால், தரவரையறைகள் படிநிலைகளை உறுதிப்படுத்தும் மற்றும் மொழிகளின் பகுதிகளை குறிக்கப்
பயன்படுத்தும் மிகவும் சிக்கலான விடயங்களாக‌ இருக்கின்றன. அவை
எப்போதுமே குறிப்பிட்ட பாரம்பரியங்கள் மற்றும் வகுப்பு சார்ந்த வாழ்க்கை
முறைகளின் வரலாறுகள் மற்றும் உரிமைகளில் இருந்து பெறப்படுவதாகவே
இருக்கின்றன. அவை மிகவும் தெளிவான வரையறைகளை
முன்வைப்பதோடு எம்மையும் எதாவதொரு தெரிவை மேற்கொள்ள
வற்புறுத்துவதாக‌வே இருக்கின்றன. ஆங்கில மொழிக் கல்வியின்
பயிற்றுவிப்பாளர்கள் தமக்கு நேர்மையாக இருக்க நாடுவார்களாயின்
அவர்கள் பூரணமான பகுதியென கருதப்படுவதிலிருந்து தவறுபவர்களாகவே
இருப்பார்கள். மொழியை கற்பவர்களை மையமாகக் கொண்டு சிந்திப்பதை
நாம் உறுதிப்படுத்துவோமேயானால் தரவரையறைகள் எனும் இருண்மையான
பகுதியை கடப்பதில் நாம் அவதானத்துடன் செயற்படலாம்.

இந்த சிறு ஆக்கத்தின் மூலம் இத்தனை காலமாக கல்வி மற்றும்
பொதுத்தளத்தில் ஆராயப்படாத புது விடயங்களை நான் முன்வைப்பதாக
வரவில்லை. இருப்பினும், நான் மிக அவதானமாக இருக்கும் விடயம்
யாதெனில், மொழியை கற்பவர்களுக்கான தளத்தை வழங்க வேண்டிய
நிலையிலும் அதே நேரத்தில் மாணவர்கள் மீது தொடர்ந்தும் திணிக்கப்படும்
தரவரையறைகள் தொடர்பான விழிப்புணர்வும் காணப்படும்
முரண்நிலைகளின் நடுவே நிற்பதாகும். எமது மாணவர்கள் தொழில் சார்ந்த
விடயத்தில் தமக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வார்களா என்ற
தீர்மானத்தை மேற்கொள்ளும் சில வகையான உச்சரிப்புகள் குறித்த
கவலைக்கிடமான விழிப்புணர்வு காணப்படும் நிலையிலும் இவற்றை
கவனத்திற்கொள்ளாது இருக்கும் நிலை என்னைப் பொறுத்தவரையில்
தப்பிக்கும் மனப்பான்மை அல்லது பொறுப்பற்றதன்மையாகவே பார்க்கப்படும்.
எனவே, மொழிப்பயிற்றுவிப்பாளர்கள் இவ்வாறான முரண்நிலைகளை
எதிர்கொள்ளும் நிலை காணப்படுவது தவிர்க்கவியலாத விடயமாகும். நான்
இந்த ஆக்கத்தின் மூலம் எனது மாணவர்களை பூரணத்துவம் என்ற பேரில்
பலிக்கடாக்களாக ஆக்காமலிருப்பதற்காக நான் மேற்கொள்ளும் சில
வழிமுறைகளை கலந்துரையாடுகின்றேன்.

ஆசிரியர்களின் உள்ளுணர்வு சார்புத்தன்மைகளை எதிர்கொள்ளுதல்

கடந்த இரு தசாப்தங்களில் மானுட மற்றும் சமூகவியல் விஞ்ஞானங்களின்
ஆய்வுத்துறைகளில் ஆய்வாளார்களின் அகநிலை சார்புத்தன்மைகளை ஏற்று
எதிர்கொள்ளும் தேவை உருவாகியிருப்பதை நாங்கள் காணலாம்.
உதாரணமாக, ஒரு ஆய்வாளர் தாம் ஒரு விடயத்தை தற்சாரா நோக்கில்
ஆய்வுக்குட்படுத்துவதாக எண்ணலாம். இருப்பினும், அந்த ஆய்வாளார் தமது
தற்சார்புத்தன்மைகள் குறித்த விழிப்புணர்வோடு இருப்பாராயின் தமது
வளர்ப்பு முறை, பொருளாதார நிலை போன்ற விடயங்கள் தான் ஒரு
விடயத்தை எதிர்கொள்வதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன
மற்றும் அது தான் ஆய்வுக்குட்படுத்தும் சமூகம் குறித்த பொருள்கோடலில்
எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகின்றன‌ எனக் கண்டுகொள்வார்.
இந்நடைமுறை ஆங்கில மொழிக்கல்வியிலும் பாரிய விழிப்புணர்வை
ஏற்படுத்தியதன் காரணம், ஒரு ஆசிரியர் தனது சுயசார்புநிலைகள் மற்றும்
நாம் வகுப்பறைகளில் எம்மை நிலைப்படுத்துவது குறித்த விழிப்புணர்வை
அவருக்கு வழங்குவதாகும். உதாரணமாக மொழியை கற்பதில் நாம்
மேற்கொண்ட தனிப்பட்ட முயற்சிகள் எமது மாணவர்களில் நாம் எத்தகைய
எதிர்பார்ப்பை கொண்டிருக்கின்றோம் என்பதை எடுத்துக் காட்டுகின்றன.
இருப்பினும் ELT வகுப்பறைகள் இவ்வாறான தரவரையறைகள் குறித்தான
கலந்துரையாடல்களில் இருந்து முற்றாக தவிர்ந்திருப்பதற்கான காரணம்,
நேரவரையறைகள் மற்றும் மாணவர்களிடம் இருந்தான சரியான பதிலைத்
தவிர வேறேதும் எதிர்பார்த்திராத அனுமானிக்கப்பட்ட ஆர்வமின்மை
ஆகியவை ஆகும்.

இவற்றில் சில விடயங்கள் பெரும்பாலும் நலிவுறுநிலைகளில் எம்மை நாம்
நிலைப்படுத்தாத மறுப்புகளில் இருந்து வேரூன்றுவதாகும். இதன்
தொடர்ச்சியாகவே நாம் ஆசிரியரை அறிவின் ஊற்றாக முன்னிருத்தும்
செயற்பாட்டில் ஈடுபடுவதோடு இந்த நிலை, தற்போதைய சூழ்நிலையில்,
அதாவது, செயற்கை நுண்ணறிவு மற்றும் அறிவை வளர்ப்பதற்கான
கருவிகளின் அணுக்கம் பெருகியிருக்கும் நிலையில் நகைப்புக்குரியதாகக்
கொள்ளப்பட வேண்டி இருக்கின்றது. எனவே, கடினமான விடயமாக இருந்தாலும், நான் எனது மாணவர்களிடம் நாம் சொல்வதை ஏன்
சொல்கின்றேன் என்றும் எனது மத்தியதர, நகர்ப்புற வளர்ப்புமுறையினால்
நான் எதிர்பார்க்கும் தரவரையறைகள் குறித்தும் மாணவர்களோடு
கலந்துரையாடுகின்றேன். இதன் மூலம் மாணவர்கள் என்னை நிபுணராகக்
கருதினாலும் கூட தற்சார்பு நிலைகளில் இருந்து நான் விலக்கப்பட்டவளல்ல
என்ற அறிதல் அவர்களிடம் காணப்படும். இதன் மூலம் மாணவர்கள் எனது
கருத்துகளை விமர்சனங்களின்றி ஏற்கும் சிக்கலுக்குள் ஆளாகாமல்
இருப்பதோடு எனது கருத்துநிலைகளை கேள்விக்குட்படுத்தும்
செயற்பாட்டுத்தளமும் உருவாக்கப்படுகின்றது.

பலதரப்பட்ட தரவரையறைகளின் பால் நம் கவனத்தை திருப்புதல்

ஆங்கிலக் கல்வி பயிற்றுவிப்பாளர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான மற்றும்
பொதுவான சவாலாக ஒன்றுக்கொன்று போட்டியிடும் (சமயத்தில்
முரண்படக்கூடிய) தரவரையறைகளை குறிப்பிடலாம். மொழி என்பது
தொடர்ந்தும் பரிணாம வளர்ச்சியடைந்து வருவதாக இருந்தால், அது
சூழலுக்கேற்ப தகவமைக்கப்படும் கருவியாகவே இருக்கும். உதாரணமாக,
ஒவ்வொரு சந்ததியினரும் தமக்கேயுரிய மொழிநடைகளை அகவயப்படுத்திக்
கொள்கின்ற முறையை நாம் பார்க்கலாம். ஒவ்வொரு சந்ததியினரும், தாம்
பயன்படுத்தும் குறுமொழி அல்லது மொழிவழக்குகள் பின்வரும்
சந்ததியினருக்கு தெளிவில்லாததாக இருப்பதை கண்டுகொள்வார்கள்.
இதைப்போலவே ஒரு பிராந்தியத்தில் திளைத்த ‘அயல்மொழி’ எனக்
கருதப்படுவதும் ஒரு பிராந்தியத்தை விட்டு அடுத்த பிராந்தியத்துக்கு
பயணிக்கும் போது அறியப்படாததாக, இன்னும் சமூக வலைத்தளங்களிலும்
சில பிராந்தியங்களை சேர்ந்தவர்களுக்கு அறியப்படாததாக‌ இருப்பதைக்
காணலாம். இதுவே மொழியின் வழியாக இருப்பதோடு, ஆங்கிலமும் இதே
மாதிரியான நடத்தையையே வெளிப்படுத்துவதோடு அதன் தொடர்ச்சியாக
பல்வேறு கலாசாராங்களை தன்னுள் அகவயப்படுத்திக் கொண்டு
இருக்கின்றது.

இந்த யதார்த்தமானது, எனது வகுப்பறையில் மாணவர்களை தொடர்ந்தும்
ஒன்றுக்கொன்று போட்டியிடும் தரவரையறைகள் குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்த ஊக்குவிக்கின்றது. இந்த தரவரையறைகள் சிலநேரங்களில்
நேரிடையாக, அதாவது ஒவ்வொரு சொற்களும் எவ்வாறு உச்சரிக்கப்பட
வேண்டுமென்பதை வரையறுப்பதாயும், சில வேளைகளில்
பிறமொழித்தன்மைகளை வெளிப்படுத்துவதாயும், அதாவது, எவ்வாறு ஒரு
சொல்லை உச்சர்ரிப்பதன் மூலம் சில வகையான சமூக வட்டங்களில்
ஒருவர் தம்மை தக்கவைக்கலாம் என்பதை வரையறுப்பதாயும் இருக்கின்றன.
இருப்பினு, இவ்வாறான தரவரையறைகளுடன் ஒன்றிப்போவது மிகவும்
சிரமமானதாகவும் அதே நேரம், அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதாகவும்
இருக்கின்றது. மேலும், இந்தப் பார்வை சில வேளைகளில் மொழியை
கற்பவருக்கு ஊக்குவிப்பாகவும் சில வேளைகளில் அயர்ச்சியை
ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றது. எனவே, ஒவ்வொரு
தரவரையறைகளையும் குறித்தான விழுப்புணர்வோடு இருக்க வேண்டிய
அதேநேரம், மாணவரின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப துலங்க வேண்டிய
தேவையும் காணப்படுகின்றது.

கணிப்பீட்டு தரவரையறைகளுடனான உரையாடலில் ஈடுபடுதல்

IELTS மற்றும் TOEFL போன்ற பரீட்சைகள் பொதுவாக எமது நாடு போன்ற
நாடுகள் விடயத்தில் பாரபட்சமாக நடப்பதான குற்றச்சாட்டுகள் அதிகமாக
முன்வைக்கப்படுகின்றன. நீங்கள் எத்தகைய உயர்தர ஆங்கிலம் பேசப்படும்
சூழலில் பிறந்து வளர்ந்தாலும், ஆங்கிலத்தின் துணைநிலைத்தொடர்களின்
விதிகள் குறித்த தெளிவின்றி உங்களால் ஆங்கில மொழி பேசப்படும்
நாடொன்றில் தொழில்செய்ய முடியாது. அதேவேளையில், ஒரு ஆங்கில
மொழியை தாய்மொழியாக பேசும் நபர் ஒருவரைக்காட்டிலும் மொழி
குறித்தான பரீட்சயம் நமக்கு காணப்படலாம். இவ்வாறான விடயங்களை
தோலுரிக்கும் விவாதங்கள் எவ்வாறானதெனவும் அவை எவ்வளவு
சிக்கலானதெனவும் விவாதிக்கப்படுவதோடு சில மொழி குறித்தான
தரவரையறைகள் விமர்சன நோக்கின்றி எவ்வாறு எல்லா சந்தர்ப்பங்களிலும்
பயன்படுத்தப்படுகின்றதெனவும் விவாதத்திற்குட்படுத்தலாம். இந்நிலை எல்லா தரவரையறைகள் குறித்தும் காணப்படலாம் என்பதால் அவை தொடர்பான
தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுவது காலத்தின்
தேவையாகும்.

இதனை நான் ஒரு கணிப்பீட்டுக்கான திருத்தல் எடுத்துக்காட்டுகள்
தொடர்பில் மாணவர்களுடனான கலந்துரையாடலை கணிப்பீட்டுக்கு
முன்னரே மேற்கொள்வதன் மூலம் கைக்கொள்கின்றேன். இதன் முதல்
கட்டமாக, இரு எளிமைப்படுத்தப்பட்ட திருத்தல் எடுத்துக்காட்டை
மாணவர்களிடம் முன்வைத்து அதற்கான கருத்துகளை பெறுவதோடு
அதனடிப்படையில் அதனை மாற்றியமைப்பேன். இதன் நடைமுறையில்
மாணவர்கள் தரவரையறைகள் குறித்தான தங்களின் பொருள்கோடல்களை
வைத்து கணிப்பீட்டுக்கான திருத்த எடுத்துக்காட்டுகள் குறித்த தமது
கருத்துகளை முன்வைப்பார்கள். இது பொதுவாக மிகவும் சுவாரஷ்யமான
கலந்துரையாடலாக இருப்பதோடு மாணவர்கள் தரவரையறைகளை எவ்வாறு
நடைமுறைக்கேற்ப பொருள்கோடல் செய்கின்றார்கள் என்ற தெளிவும்
ஏற்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் தாம் கணிப்பிடக்கூடிய
திருத்த எடுத்துக்காட்டுகள் குறித்த தெளிவோடு கணிப்பீடுகளை
எதிர்கொள்வதோடு இந்த கலந்துரையாடல் இதனை மேலும் அவர்களுக்கு
பரீச்சயமாக்குகின்றது. இதன் மூலம் மாணவர்கள் தரவரையறைகள் குறித்து
அச்சம் கொள்ளாதிருப்பதோடு அவற்றை விமர்சன நோக்கில் எதிர்கொள்ளும்
நிலைக்கு முன்னேறுகின்றார்கள்.

சில அவதானங்கள்

ஒரு மொழி அது பயன்படுத்தப்படும் சூழ்நிலைக்கேற்ப விளங்கிக்கொள்ளும்
செயற்பாட்டில் அம்மொழி கைக்கொள்ளும் தரவரையறைகள் மற்றும்
அவற்றுக்கு பின்னான செயல்நிரல்களை விளங்குவதன் மூலமும் அவற்றை
அம்மொழி கற்கும் மாணவர்களுடனான கலந்துரையாடலை மேற்கொள்வதன்
மூலமும் நிர்ணயிக்கலாம். இதன் மூலம் மொழி பயிற்றுவிப்பாளார்கள் தமது
சார்புநிலைகள் குறித்த அறிதலை மேற்கொள்ளவும் முடிவதோடு
மொழிக்கற்றலில் மாணவர்களுடன் முழுமையான ஈடுபாட்டில் செயற்படலாம். இதன் மூலம் மாணவர்களுக்கு நாங்கள்
தரவரையறைகளையும் அவற்றை சரியாக நிலைப்படுத்துவதையும்
அவற்றுக்கேற்ப தம்மை நிலைப்படுத்தி சிறப்பான நிலையை அடைவதையும்
உறுதிப்படுத்தலாம். தரவரையறைகளை அறிந்து, அவற்றில்
பொருத்தமானவற்றை தெரிந்து அவற்றுக்கு இயல்பாக்கமடைந்து அல்லது
தரவரையறைகளை நிலைகுலைப்பதன் மூலம் மாணவர்கள்
மொழிக்கற்றலில் பூரண ஓர்மத்துடன் செயற்பட முடியுமாகின்றது.