அகிலன் கதிர்காமர்
இலங்கையில் தற்போதைய சூழ்நிலையின் படி ஒரு புதிய அரசாங்கம்
உருவாகியிருப்பதோடு அது, நாட்டுக்கான வித்தியாசமான சமூக மற்றும்
பொருளாதார பாதைகளை தேட வேண்டிய நிலையில் இருக்கின்றது. இதே
வேளையில், அமெரிக்காவில் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிபீடம் ஏறியிருப்பதோடு
அது உலகை மாற்றும் நிகழ்வாக கொள்ளத்தக்கதாக இருக்கின்றது. இந்த
நிலையில், இலங்கையில் இலவசக்கல்வியின் நீண்ட பாதை எதை நோக்கி
பயணிக்கப்போகின்றது?
1970களின் பின்னரான இலங்கையின் திறந்த அரசியல் போக்கு மற்றும்
அதனூடான சீர்திருத்தங்கள் இலவசக்கல்வி மீதான நிதியீட்டத்தை
குறைப்பதிலும் அதன் காரணமாக கல்வி அமைப்பின் மீதான மெதுவான
வீழ்ச்சியாகவுமே பதிவாகி இருக்கின்றது. அதிலும் குறிப்பாக கடந்த
தசாப்தத்தில் அரச கல்வியின் வீழ்ச்சி கவனமாக
காய்நகர்த்தப்பட்டிருப்பதோடு அது, கல்வித்துறையை வணிகமயமாக்குவதில்
வெற்றி கண்டுள்ளது. தனியார்மயமாக்கம், கட்டணம் அறவிடப்படும் கல்வி
நிறுவனங்களின் வளர்ச்சி என்பன கல்வியை ஒரு பணம் கறக்கும் பசுவாக
மாற்றியிருப்பதோடு மட்டுமல்லாமல் மாணவர்களை கடன்காரர்களாகவும்
பணக்காரர்களுக்கான வாய்ப்பாக மாறவும் உதவியிருக்கின்றன. ஏனைய
சமூகத் தூண்களைப் போல கல்வியும் பல பாதைகளாக பிரிந்து செல்லும்
தொகுதிகளை முகங்கொடுக்க நேர்வதால் இந்த ஆக்கத்தினூடாக நான்
அதற்கான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய சமூக நுட்பங்களை
ஆராய விளைகின்றேன்.
கன்னங்கரா மற்றும் டூவீ
இலங்கையின் இலவசக்கல்வி அமைப்பை பொருத்தவரை, அது கன்னங்கரா
அவர்களால் 1944ல் கொண்டுவரப்பட்ட இலவசக்கல்வி மசோதாவிலிருந்து முன்னகர்கின்றது. உண்மையில், கன்னங்கரா அப்போது கோரியதன்படி
இலங்கையைப் போன்ற புதிய ஜனநாயக அரசுகளுக்கு இலவசக்கல்வி
மிகவும் வேண்டப்பட்டதாக இருந்தது. இருப்பினும், சுதந்திரத்துக்குப்
பின்னரான இலவசக்கல்வி அமைப்பில் பல தரப்பினர்
உள்ளடக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்: முக்கியமாக
தாழ்த்தப்பட்ட சாதியினர், கிராம மற்றும் கீழ்வகுப்பு மக்கள் மற்றும்
தமிழர்களாக இருந்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள்.
சில தசாப்தங்களுக்கு முன்னர் நான் இலங்கையின் இலவசக்கல்வி அமைப்பு
குறித்த சிந்தனையை ஆரம்பித்தப்போது அமெரிக்க நடைமுறைவாதி ஜோன்
டூவீயின் புத்தகமாக கல்வி மற்றும் ஜனநாயகத்தை ஆர்வத்துடன்
வாசித்தேன். இந்த நூலின் மூலம் டூவீ அவர்கள் ஜனநாயக ஈடுபாட்டுக்கு
கல்வியூடான விமர்சன சிந்தனையின் தேவை குறித்தான கல்விசார்
தத்துவத்தை பேசியிருந்தார். கல்விசார் சிந்தனை மற்றும் கொள்கை
அமலாக்கம் குறித்த இவ்வாறான மேம்பாட்டு சிந்தனைகளே இரண்டாம்
உலகப்போரின் பின்னான நலன்புரி அரசுகளின் தோற்றம் காலனித்துவ
ஒழிப்பின் பின்னான மூன்றாம் உலக நாடுகளின் உருவாக்கத்துக்கும்
பின்னணியில் இருந்தன. இருப்பினும், 1970களின் பின் வந்த பொருளாதார
வீழ்ச்சியின் விளைவாக உருவாகிய நவதாராளவாத கொள்கைகளின் ஆக்கம்
சமூக நலன்புரி அமைப்பை அப்படியே சுருட்டி வைத்ததோடு கல்வியை
கைவிட்டு சந்தைகளின் நூல்பொம்மையாக மாற்றியது.
தற்போது அத்தகைய தாராளவாத ஒழுங்கே ட்ரம்பின் தெரிவோடு
தாக்குதலுக்கு கீழே வந்திருப்பதால் என்ன விழையும்? அது மென்மேலுமான
சந்தை பொருளாதார அடிப்படையான கல்வியாக மாறுமா அல்லது லிபரல்
கல்வியின் பெறுமானங்களான மதச்சார்பின்மை மற்றும் முற்போக்கான
பால்சமத்துவம் குறித்த பெறுமானங்கள் மீதான பழமைவாதிகளின்
தாக்குதலுக்கு வழிவகுக்குமா? உண்மையில் அமெரிக்காவின் தற்போதைய
நிலையானது கிறிஸ்தவ வலதுசாரிகளின் கரங்களால் ஏவப்பட்ட வழியாகவே
இருக்கின்றது.
இந்த சூழ்நிலையில் இலங்கையின் கல்வித்துறை எதை நோக்கி நகரும்?
NPPயின் கல்விக்கொள்கை அண்மையில் நாம் அவதானித்த உலகளாவிய
இலவசக்கல்விக்கொள்கை மீதான வணிகமயமாக்க உந்துதலிலிருந்து
வெளியேறி வேறு திசையை நோக்கி பயணிக்குமா? இதற்கான பதில்
கொழும்பின் உயர்குடியினர் மற்றும் உலக வங்கியின் அரசாங்கத்துடனான
ஈடுபாட்டிலும் மக்களின் ஊடாக எழும் எதிர்ப்பு அலையிலுமே தங்கியுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 6% எனும் கோரிக்கை
NPPயின் கருத்துப்படி அரச செலவீனத்தில் 6%த்தை கல்வித்துறைக்காக
ஒதுக்கும் கோரிக்கையை படிப்படியாக நடைமுறைப்படுத்தும் நோக்கம்
அதற்கு உள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்குவாரங்கள் மற்றும் IMFன்
உடன்படிக்கை ஊடான செலவீனங்களில் மேற்கொள்ளப்படும் குறைப்பு
ஆகியன, அரசாங்கத்தின் தொடர்ச்சியான கல்வித்துறை மீதான செலவீன
அதிகரிப்புக்கு குறிப்பிடத்தக்க அரசியல் நாட்டம் தேவைப்படும் என்பதோடு
IMFன் சிக்கன நடவடிக்கை கோரிக்கைகளில் இருந்தான விலகலையும்
மேற்கொள்ள வேண்டி ஏற்படும்.
12 வருடங்களுக்கு முன்னர் FUTAவின் பாரிய ஆர்ப்பாட்டமான GDPயில் 6%
எனும் கோரிக்கையை அடுத்து, 2012ல் எம்மில் சிலர் யாழ்ப்பாண
மாவட்டத்தில் உள்ள அரச கிராமிய பாடசாலைகளை மையமாகக் கொண்டு
ஒரு ஆய்வை மேற்கொண்டோம். எமது முடிவுகளின் படி, பாடசாலைகளில்
சிறந்த ஆசிரியர்கள் மற்றும் பொருத்தமான வசதிகள் காணப்பட்டும்
மாணவர்கள், நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலை காரணமாக
குறைவான சித்திகள் எடுத்திருந்ததோடு பலர் பாடசாலைகளை விட்டும்
விடுபட்டிருந்தனர். இதன் முடிவுகளின் ஒரு பகுதியை நான் ஒரு
அத்தியாயமாக, “யாழ்ப்பாணத்தின் விளிம்புகளில் இருந்து: கல்வி மீதான
நெருக்கடி குறித்த ஒரு அரசியல் பொருளாதாரம்” (கல்வி மற்றும்
கருத்தாடலில் உள்ள நெருக்கடி, தொகுதி XXXIX 2012). இந்த ஆய்வில் நான் எதிர் யதார்த்த இயக்கவியலை கையாண்டு உலக வங்கியின் கல்வி சார்ந்த
அடைவு உயர் வருமான அடைவை ஏற்படுத்தும் என்ற கருத்தை
விமர்சித்ததோடு, யதார்த்தத்தில் சமூக மற்றும் பொருளாதார விலக்கல்
கல்விசார் அடைவை தடுக்கும் என குறிப்பிட்டிருந்தேன்.
இலங்கை முகங்கொடுத்திருக்கும் நீண்ட பொருளாதார நெருக்கடி இவை
அனைத்தையும் தேவையாக்கி இருக்கின்றது. நாம் இன்று
முகங்கொடுத்திருக்கும் சமூக மற்றும் பொருளாதார தாக்கம் யுத்த காலத்தில்
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சந்ததிகளாய் தொடர்ந்த கல்விச்சீரழிவுக்கு
சமமானது. மாணவர்கள் பாடசாலைகளில் உணவுகளை தவிர்ந்திருப்பதோடு
தொடர்ந்தேச்சையான மாணவர் வருகை வீழ்ச்சி காணப்படுவதோடு மலிவான
சம்பளத்துக்காக மாணவர்கள் பல்கலைக்கழகங்களை விடுத்து
தொழில்வாய்ப்புகளை நாடுகின்றனர். கல்வித்துறை மீதான அரசின்
உடனடியான முதலீடு எந்தளவு முக்கியமோ, அந்தளவுக்கு தொழிலாளர்
வகுப்பு மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு சமூக பாதுகாப்பு
நிகழ்ச்சிநிரல்கள் மற்றும் பொருளாதார் மீள்கட்டியெழுப்பல் திட்டங்களும்
அவசியமாகும். இன்னொரு வகையில் சொல்வதானால் தற்போதைய IMFன்
சிக்கன வேலைப்பாட்டு திட்டங்கள் அரச கல்வியின் மீதான நிதியீட்டத்தை
குறைத்திருப்பது மட்டுமல்லாமல் முடக்கப்பட்ட சமூகங்களின் கல்வி
தொடர்பான அணுகல் மற்றும் ஈடுபாட்டையும் கட்டுப்படுத்தியுள்ளது.
குறிப்பாக பொருளாதார நெருக்கடி நிலையின் போதுதான் கல்வி மீதான
சமூக அணிக்கோவைகளையும் அதே வழியில் சுகாதாரம் மற்றும் சுகாதாரம்
மீதான அணிக்கோவைகளின் வலிவூட்டங்களையும் ஆராயும் தேவை நமக்கு
அதிகரிப்பதாக நான் நம்புகின்றேன்.
விடுதலைப்போக்குடைய தொடக்கப்புள்ளி
இலங்கை தற்போது ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை தாண்டி
நிமிர்ந்திருக்கும் வேளையில் அடுத்த ஆறு மாதங்கள் கல்வித்துறைக்கு மிக
தீர்மானகரமான காலமாகும். கன்னங்கரா மற்றும் டூவீயின் பார்வையில்
கல்வி ஜனநாயகத்தின் விமர்சனப்பார்வைக்கு அவசியம் என்பதோடு கல்வி அமைப்பு என்பது பரந்துபட்ட அரசியல், சமூக மற்றும் பொருளாதார
மாற்றங்களால் தீர்மானிக்கப்படுகின்றதென்பதை வலியுறுத்துகின்றேன்.
துருவப்படுத்தப்பட்டுள்ளா உலகில் உலகளாவிய தெற்கானது பாரிய சுரண்டல்
மற்றும் வளச்சுரண்டலுக்கு ஆட்பட்டிருக்கும் நிலையில் தொழிலாளர் வர்க்க
மக்களின் கல்விக்கான சாத்தியங்கள் மிக இலகுவாக சுரண்டப்படத்தக்கன.
இந்த நிலையில், உயர்குடி அல்லாத மக்களின் பரந்துபட்ட ஆதரவால்
அதிகார்த்துக்கு வந்த இடதுசாரி அரசு இலவசக்கல்வியின் நலிவுநிலையை
போக்க என்ன செய்ய வேண்டும்?
எனது வாதத்தின் படி கல்வித்துறைக்கு அதிக ஒதுக்கீடுகளை மேற்கொள்வது
மட்டும் போதாது. கல்வியின் வணிகமயமாக்கத்துக்கு எதிராக நாம் போராட
வேண்டி இருப்பதோடு மீண்டுமொருமுறை அனைவர்க்குமான
இலவசக்கல்விக்காக குரல் கொடுக்க வேண்டி இருக்கின்றது. மேலும்,
இலவசக்கல்வியானது எமது சமூகத்தில் காணப்படும் தாழ்த்தப்பட்ட மக்களை
நோக்கிய தேவையான சமூக ஆதரவை ஏற்படுத்தும் திட்டங்களோடு
வருவதன் மூலம் கல்விக்கான அணுகலை அதிகரிப்பதும் இது சிக்கன
வேலைத்திட்டங்களை இல்லாமலாக்குவதன் மூலம் நிகழ்த்தப்படும் என்பதும்
குறிப்பிடத்தக்கதாகும். மேலும், உலகளாவிய அளவில் முகங்கொடுக்கப்படும்
பாசிச மற்றும் சர்வாதிகார ஆட்சிகளின் எழுச்சியானது கல்வி மீதான
தாக்குதலாக கல்வி நிறுவனங்கள் ஊடான பொருளாதார சுரண்டல் மற்றும்
தாராண்மைவாத சுதந்திரங்களின் பறிப்பு ஆகிய பாணிகளில்
மேற்கொள்ளப்படும்.
இந்த சூழ்நிலையில், கல்வியில் மேற்கொள்ளப்படும் அடைவு உயர்
சம்பாத்தியம் மற்றும் சமூக அசைதிறம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என்ற
பொருளாதார நெருகடியால் மக்களின் வாழ்வாதரங்கள் நசுக்கப்பட்டிருக்கும்
சூழ்நிலையிலும் கல்விக்கான அணுகல் சிஞ்சிற்றும் காணப்படாத
நிலையிலும், ஒரு மூலையில் கட்டி ஒதுக்கப்பட வேண்டும். நாம் சுயதேவை
பூர்த்தி மற்றும் எமது மக்களின் நலம் குறித்து சிந்திக்க வேண்டிய இந்த
சூழலில் இலவசக்கல்விக்கான போராட்டம் தீவிரமான சிந்தனைகளுக்கு
எம்மை இட்டுச்செல்ல வேண்டும். எனது அகத்தூண்டல் போலோ ப்ரேயாரின் “தாழ்த்தப்பட்டோருக்கான கற்பித்தல் கலை” என்பதிலிருந்து
ஊற்றெடுப்பதோடு எமது நாட்டில் உரிமையிடக்கப்பட்டு வறுமைக்கோட்டுக்கு
தள்ளப்பட்டுள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கான விடுதலைக்கான
சிந்தனையாக வெளிப்பட வேண்டும். இலவசக்கல்வியை நாம் ஜனநாயகம்,
சமத்துவம் மற்றும் சுதந்திரத்தின் அடிப்படையாகக் கொண்டு அதற்காக
போராடுதல் இன்றியமையாதது.