உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள காலகட்டத்தில் ஆங்கில மொழி கற்பித்தல் குறித்த சில சிந்தனைகள்

மதுரங்க கலுகம்பிட்டிய

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது சில
வருடங்களாகவே கல்விப்புலத்தில் பேசப்பட்டு வரும் விடயமாக
இருப்பதோடு முக்கியமாக அது சலனங்களை நிகழ்த்தும் துறையாக ஆங்கில
மொழிக் கற்பித்தலை குறிப்பிடலாம். ஆங்கில மொழிக் கற்பித்தல் துறையில்
உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின்
பங்களிப்பை பலர் நேர்மறையான விடயமாகக் கண்டாலும் கூட சிலர் அதன்
எதிர்மறையான தாக்கங்களையும் குறித்து அக்கறைப்படுகின்றனர். இதனை
பல கோணங்களில் அணுகும் நோக்குடன் ஆய்வு மாநாடுகளும்
முன்னெடுக்கப்படுகின்றன. இந்த துறையில் வெளியிடப்படும்
ஆய்வுக்கட்டுரைகள் ஊடாக இத்துறையானது கல்விப்புலத்தில் அதிகளவு
ஆய்வு மேற்கொள்ளப்படும் துறையாக மாறி வருகின்றது.

முக்கியமான சூழ்நிலைசார் குறிப்புகள்

இலங்கையின் சூழ்நிலையை பொருத்தவரையில், உருவாக்கும் திறனுள்ள
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழிக்கல்வி
குறித்தான புரிதலுக்கு மூன்று முக்கிய சூழ்நிலைசார் குறிப்புகள்
அவசியமாகும். முதலாவதாக, சமூக‍ப்பொருளாதாரச் சூழமைவு குறித்தான
புரிதல் மூலம் இத்தொழில்நுட்பம் மீதான அணுகல் குறித்த பார்வையை
பெறலாம். இத்தொழில்நுட்பத்தை யார் வேண்டுமானாலும் பாவிக்கலாம்
என்ற பொதுவான சிந்தனை காணப்படுகின்றது; இருப்பினும் தொழில்நுட்பக்
கருவிகளின் அணுகலை கருத்திற்கொள்ளும் போது இத்தொழில்நுட்பமானது
அனைவரின் கைகளிலும் காணப்படுவதில்லை என்பது புலனாகும்.
இதனடிப்படையில் பார்க்கும் போது உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது அனைவரின் கைகளிலும் இலவசமாக
கிடைக்கும் ஒரு விடயமென்பது வகுப்புவாத கருத்தாகும்.

இரண்டாவது சூழமைவு சார் விடயமாக ஆங்கில மொழி குறித்து
இலங்கையில் காணப்படும் பொதுவான மனப்பான்மையை குறிப்பிடலாம்.
பலர் ஆங்கில மொழியுடன் கொண்டுள்ள இருமுக உறவு குறித்து பல
விடயங்கள் எழுதப்பட்டுள்ளன. இலங்கையின் அரசியல் யாப்பில் ஆங்கில
மொழி தேசிய மொழியாக கொள்ளப்படாவிடினும் இலங்கையில் உள்ள மிக
முக்கியமான மொழியாக இது காணப்படுகின்றது. இது வாழ்க்கையில் அதிக
வாய்ப்புகளை உருவாக்கித் தரும் மொழியாக கருதப்படுகின்றது. ஆங்கில
மொழியுடன் பிணைந்துள்ள சமூகப்பொருளாதார சுழமைவு அதனை ஒரு
அபாயமாகவும் பார்க்கப்பட வைக்கின்றது. இதனில் காணப்படும் வகுப்புவாத
வெளிப்பாடுகள் பலரை அதனின்றும் விலக்கி வைத்துள்ளது. இவ்வாறான
நடைமுறை யதார்த்தங்கள் ஆங்கில மொழியை அரசியல் மற்றும்
கருத்தியல் சார்ந்து தாக்கப்படும் மொழியாக மாற்றியுள்ளதோடு அதன்
வெளிப்பாடாக ஆங்கில மொழிக் கற்கைத் துறையும் அழுத்தம் நிறைந்த
துறையாக மாற்றமடைந்துள்ளது.

மூன்றாவது காரணி இலங்கையில் பாவிக்கப்படும் ஆங்கில மொழியின்
வகையினத்தை அடிப்படையாகக் கொண்டது. நாம் பொதுவாக மொழிகளை
ஒருபடித்தான அம்சங்களாகவே நினைக்கின்றோம்; ஆனால் மொழிகள்
யதார்த்தத்துல் அவ்வாறானவை அல்ல. வகையினங்கள் மொழிகளின்
அடிப்படை அம்சங்களாக இருப்பதோடு ஆங்கிலம் போன்ற சர்வதேச
மொழிகளில் அவற்றின் வெளிப்பாடு அதிகமாக இருக்கும். உலகின் பல்வேறு
பகுதிகளில் பேசப்படும் ஆங்கில மொழியின் வித்தியாசமான வகையினங்கள்
குறித்தும் அவற்றின் சட்டபூர்வத்தன்மை குறித்தும் பலர் பேசியிருக்கின்றனர்.
அதுபோலவே, இலங்கையின் சூழமைவை கருத்திற்கொண்டால் நாம்
இலங்கைக்கே உரித்தான ஆங்கில மொழியை பேசுகின்றோம். இலங்கையில்
பேசப்படும் ஆங்கில குறித்தான மனப்பான்மை அதனை தரக்குறைவான,
இலக்கணப்பிழையோடு பேசப்படும் விதம் என்பதிலிருந்து இலங்கையின் யதார்த்த நிலைகளுடன் ஒன்றிய வகையில் பேசப்படும் ஆங்கில மொழியின்
வகையினம் வரை விரிவுபட்ட மனநிலையுடன் அணுகப்படுவதை காணலாம்.
ஒருவர் இலங்கையில் பேசப்படும் ஆங்கில மொழியின் வகையினம்
தொடர்பாகக் கொள்ளும் மனப்பான்மையை விடுத்து இலங்கையில்
கற்பிக்கப்படும் மற்றும் அதிகமாக வழக்கில் இருக்கும் வகையினம் என
வரைய்யறுக்கப்படுவது இலங்கைக்கான ஆங்கில மொழியின் வகையினம்
எனக்கொள்ளலாம். அது, நாட்டின் சூழமைவுகளுக்கேற்ப மொழியின்
அர்த்தங்களை விளக்கப்பயன்படுத்தும் வகையினமாகும்.
இவ்வகையினத்தினை முழுதுமாக உள்வாங்கிய தொழில்நுட்பமாக
உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு காணப்படுமா என்பது
கேள்விக்குறியாகும்.

பொதுவான பார்வை

செயற்கை நுண்ணறிவு தொடர்பான பொதுவான பார்வையாக ஆங்கில
மொழி ஆசிரியர்கள் மிகை இருப்புக்கு ஆளாக்கப்படுவார்கள் என்ற கருத்து
இரு அடிப்படைகளில் முன்வைக்கப்படுகின்றது. முதாலவதாக, மொழியை
கற்பவர் தமது சந்தேகங்களாஇ தீர்த்துக்கொள்ள நேரடியாக
இத்தொழில்நுட்பத்தை அணுகலாம். பொதுவாக, மொழி சார்ந்த
சந்தேகங்களளை தீர்க்கும் பணி ஆசிரியர்களுடையதாக இருந்தது ஆனால்
தற்போது அதனை இத்தொழில்நுட்பம் கைக்கொண்டுவிட்டது. இரண்டாவதாக,
இத்தொழில்நுட்பத்தின் மூலம் மொழி சார்ந்த பணிகளை, முக்கியமாக
எழுத்துப்பணிகளை, இலகுவாக முடிக்கக்கூடியதாக இருக்கின்றது.
இத்தொழில்நுட்பத்தின் மூலம் மொழியை கற்பவனர்கள் இலகுவாக
விடைகளை, கட்டுரைகளை, அறிக்கைகளை ஏன் கவிதைகளை மற்றும்
சிறுகதைகளைக் கூட எழுதிவிடலாம். இத்தொழில்நுட்பத்தின் மூலம்
அடையப்படும் ஒரு வகையான தன்னுரிமை, ஆசிரியர்களின் பணியின்
தேவையை கேள்விக்குறியாக்கி இருக்கின்றது.

மொழி மற்றும் மொழியை கற்பித்தல் தொடர்பான தற்போதைய கோட்பாடு இப்பார்வை குறித்து நான் வாதிட முடியுமான காரணம் என்னவென்றால்,
நாம் மொழி மற்றும் மொழியை கற்பித்தல் தொடர்பான குறிப்பிட்ட
கோட்பாட்டை அடிப்படையாக வைத்திருப்பதாகும். எமது மொழி குறித்தான
பார்வை எவ்வகையானதென்றால், அது ஒரு சட்டகப்படுத்தப்பட்ட, குறிப்பிட்ட
வகையான சத்தங்கள் மற்றும் எழுத்துருக்களை குறிப்பிட்ட வகையில்
கோர்த்து மேற்கொள்ளப்பட்ட சட்டகமாகக் காணுகின்றோம். ஒலியியல்
என்பது ஒரு மொழியின் சத்தங்கள் எவ்வாறு உருவமைக்கப்படுகின்றன
என்பதை அடிப்படையாகக் கொண்டதாகும். இதன் அடிப்படை யாதெனில்,
தனிப்பட்ட சத்தங்கள் ஒவ்வொன்றினதும் உருவாக்கம் மற்றும் அதனால்
அவை ஒவ்வொன்றும் எப்படியாக தம்மை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடும்
வகையில் நிலைப்படுத்திக் கொள்கின்றன என்பதே இதன் அடிப்படை
குவியமாக இருக்கின்றது. இதுவே நாம் அமைப்பியல் என்ற கோட்பாட்டின்
கீழ் எவ்வாறு ஒவ்வொரு சொற்களும் உருவாக்கப்படுகின்றன என்பதை
பார்க்கின்றோம். அதாவது, மொழிக்குப் பின்னால் இருக்கும் ஒவ்வொரு
சத்தங்களுக்கும் அவற்றின் உருவாக்கம் குறித்த கோட்பாடும் அவை எவ்வாறு
தம்மை நிலைப்படுத்திக் கொள்கின்றன என்பதற்கான அறிதல் முறையும்
சட்டகமும் காணப்ப‌டுகின்றன. மொமியின் சொற்கள் குறித்தான கற்கை
அதன் சட்டகம் குறித்து பேசுகின்றது. அதாவது, மொழியில் பாவிக்கப்படும்
சொற்கள் எவ்வகையான சட்டகங்களைக் கொண்டு பெரிய வார்த்தைகள்,
வசனங்கள், கூற்றுகள் மற்றும் சொற்றொடர்களாக உருவாக்கப்படுகின்றன
என்பதே இக்கோட்பாடுகளின் அறிதலாகும். மொழி குறித்தான இப்பார்வை,
மொழியின் சட்டகத்தையே அதன் அடையாளமாக கைக்கொள்கின்றது. இதன்
வெளிப்பாடாகவே நாம் மொழியை சத்தங்கள் மற்றும் சொற்களின்
நிலைப்பட்ட கூட்டங்களாகவும் அவை பல விதிகளாலும் சட்டங்களாலும்
ஆளப்படுவதான பார்வையை கொண்டிருக்கின்றோம்.

மொழி குறித்தான இவ்வகையான பார்வையை கொண்டிருப்பது மொழியை
கற்பிக்கும் போது, அதன் வெளிப்பாடாக மொழியை கற்பவருக்கு அவ்வாறான
விதிகளையும் சட்டகங்களையும் திணிப்பதாகவே மாறுகின்றது. இதன்
வெளிப்பாடே மொழிக் கற்பித்தல் என்பது பெரும்பாலும் மொழியின்
இலக்கணத்தை கற்பிப்பதாகவே இருப்பதாகும். இதனாலேயே மொழியை கற்பிப்பதன் அடைவாக, மாணவர் அல்லது மொழியை கற்பவர் மொழியின்
விதிகள் மற்றும் சட்டகங்களை சரிவர பாவிக்கத்தெரிந்தவராக மாற்றுவதாக
இருக்கின்றது. இலக்கணப்பிழைகளை சரிசெய்வது என்பது இவ்வகையான
அணுகல்முறையின் முக்கிய பணியாக இருக்கின்றது. இலக்கணப்பிழைகள்
மொழியின் விதிகள் மற்றும் சட்டகங்களை மீறும் செயற்பாடாக
கொள்ளப்படுவதோடு இவற்றின் சரியான போக்கினை உறுதிப்படுத்தும்
வகையிலேயே இலக்கணப்பிழைகள் சரிசெய்யப்படுகின்றன. இதனாலேயே
மொழிக்கற்பித்தல் அடிப்படையில் உச்சரிப்புப் பிழையை திருத்துதல், சொல்
உருவாக்கம் மற்றும் வசனங்களை உருவாக்குதல் என்பவற்றிலும் இவற்றில்
ஏற்படும் தவறுகளை சரிபார்த்தல் ஆகிய துறைகளில் இயங்குகின்றது.

மறுநெறிப்படுத்தலுக்கான தேவை

என்னைப் பொறுத்தவரையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
எங்களை மொழி மற்றும் மொழிக் கற்பித்தல் தொடர்பான கோட்பாடுகளை
நாம் வேறு தெரிவுகளின்றி மீளாய்வு செய்யவேண்டிய வரலாற்று
முக்கியத்துவமிக்க நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றது. இதனை நான்
முக்கியமான ஒரு சந்தர்ப்பமாக பார்ப்பதோடு இதன் மூலம் மொழி தன்னை
சட்டகவடிவிலான அடையாளத்திலிருந்து விலத்திக்கொள்ள முடியுமாக
இருக்கின்றது. அதாவது, இந்த சட்டக வடிவிலான பார்வை மொழியை
யதார்த்தத்தின் ஒருபடித்தான அம்சத்தின் வெளிப்பாடாக காட்டியதோடு, இந்த
அணுகலே பல மொழியியல் கோட்பாட்டாளார்களின் அடிப்படை அணுகலாக
இருந்தது. இந்த வகையான சிந்தனையின் வெளிப்பாடு ஒவ்வொரு
மொழியும் ஒவ்வொரு வகையான சிந்தனையை மேற்கொள்வதாகவும்
உலகம் மற்றும் எமது நிலவுகையை ஒவ்வொறு வகையில் அணுகுவதாகவும்
காட்டுகின்றது. இரு வேறுபட்ட மொழிகள் ஒரே வகையான உலகியல்
பார்வையை தர மாட்டாது எனக்கூறும் சில கோட்பாட்டாளர்களும்
இருக்கின்றார்கள். இந்த வகையில் வெவ்வேறு மொழிகள் வெவ்வேறு
குரல்கள் என நாம் கொள்ளலாம்.

மொழிக்கோட்பாட்டின் இந்த மாற்றம் மொழிக் கற்பித்தல் கோட்பாட்டின்
மாற்றமாகவும் நாம் கொள்ளலாம். மொழி ஒரு குரலின் வெளிப்பாடு
என்கின்ற சூழமைவில் மொழிக் கற்பித்தல் என்பது அக்குரலை
கையகப்படுத்தும் செயற்பாட்டை வசதிப்படுத்தும் பணியாக பார்க்கபப்டும்.
மொழியை ஒருவர் கற்பது என்பது, உலகத்தை வித்தியாசாமான ஒரு
வகையில் சிந்தித்தல் மற்றும் அதனை பேசுதல் என்பதாக கொள்ளப்பட
வேண்டும். இதனால், மொழியின் இலக்கணத்தை கற்பித்த்ல் மற்றும் அதனை
சரிபார்த்தல் ஆகிய பணிகளை மொழிக் கற்பித்தலின் பகுதிகளாக ஆக்க
முடியாமல் இருக்கலாகாது. மாறாக, மொழிக் கற்பித்தல் என்பது
இப்பணிகளில் சுருங்கி விடக்கூடாது என்பதே இதன் பொருளாகும்.
இம்மறுநெறிப்படுத்தலின் முன்வைப்பு, விமர்சன கற்பித்தல் கலையின்
இலக்கான மாணவரையுமவரின் குரலையும் பலப்படுத்துவதோடு, அவர்
பகுதியாக உள்ள பாரிய அதிகார உறவுகளின் தமக்கான இருப்பை
நிலைப்படுத்தும் குரலை மேற்கொள்ள வசதிப்படுத்தும் நோக்கத்தில்
மேற்கொள்ளப்படுவதாகும்.