சுமதி சிவமோகன்
மிகக்குறுகிய காலப்பகுதியான கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில், ‘டிட்வா’ (Detwah) சூறாவளி நம்மிடையே முன்னொரு போதும் இல்லாத அளவிலான ஒரு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பெரும்பகுதியை சுழற்றியடித்துள்ள இப்புயல், பல நூற்றாண்டுகள் பழைமையான கட்டமைப்புகளின் அரண்களைத் தகர்த்தெறிந்துள்ளதோடு, ஒரு காலத்தில் பாதுகாப்பானது எனக் கருதப்பட்ட பகுதிகளையும் தாக்கியுள்ளது.
மழை நின்றிருக்கலாம். வெள்ள நீர் வடியும், கடைகள் மீண்டும் திறக்கப்படும், குழாய்களில் தண்ணீர் வரும், நாம் மீண்டும் எமது அன்றாட வாழ்க்கையைத் தொடரலாம். ஆனால், இனி நிலைமை முன்பிருந்தது போல் இருக்காது; இருக்கவும் கூடாது. நமக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ இது வழமையான ஒன்றாக இருந்துவிடக் கூடாது. கடந்த சில ஆண்டுகளில், இலங்கையிலுள்ள சமூகங்கள் அடுத்தடுத்து இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் தள்ளப்பட்டுள்ளன. இத்தகைய நெருக்கடிகள் எப்போதுமே அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் தூரநோக்கற்ற கொள்கைகளால் தீவிரமடைந்ததோடு, எமது சமூகங்களுக்குள் வேரோடியுள்ள படிநிலை, பாலினம் மற்றும் இன ரீதியான பிரிவினைகளால் மேலும் தூண்டப்பட்டுள்ளன. இன்றைய சூழலில், அரசாங்கம் தனது கொள்கைகளை மறுபரிசீலனை செய்வதும், ஒட்டுமொத்த நாடும் தள்ளப்பட்டுள்ள நெருக்கடியான பாதையைப் பற்றி மீண்டும் சிந்திப்பதும் காலத்தின் கட்டாயமாகும்.
நவதாராளவாதப் பேரழிவு (Neoliberal disaster)
இயற்கைப் அனர்த்தத்தினால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, நமது வாழ்வியலைப் பற்றிய அடிப்படை கேள்விகள் எழுந்துள்ளன. ஒட்டுமொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ நமது இந்த அவலநிலை இப்புவியின் சுற்றுச்சூழல் மிக மோசமாகவும் குரூரமாகவும் நிர்வகிக்கப்பட்டதன் விளைவேயாகும். நமது பொருளாதாரத்தின் தன்மை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. நிலம் பயன்படுத்தப்படும் விதத்தை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மக்களின் நலனை முன்னிறுத்தியும், காலநிலை மாற்றம் குறித்த கொள்கையை உருவாக்குவதன் மூலமும் வாழ்வாதாரங்கள் புதிதாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
கருத்தாளர்கள் குறிப்பிடுவது போல, பிரம்மாண்டமான கட்டுமானத் திட்டங்களே (Mega construction projects) இதற்குக் காரணமான முக்கிய குற்றவாளிகளாகும். மலையகத்தில் ஏற்படும் நிலச்சரிவுகள், ‘டிட்வா’ சூறாவளி நமது கடற்கரைகளையும் மலைகளையும் தாக்கியதன் விளைவு மட்டுமல்ல; அவை பல நூற்றாண்டுகால நில நிர்வாகச் சீர்கேட்டைச் சுட்டிக்காட்டும் ஒரு கட்டமைப்பு ரீதியான பிரச்சனையாகும்.(https://island.lk/weather-disasters-sri-lanka-flooded-by-policy-blunders-weak-enforcement-and-environmental-crime-climate-expert/). மேலும், தமக்குக் கிடைக்கக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளுக்குள், ஒரு நிலையான வாழ்வாதாரத்தைத் தேடும் முயற்சியில், மக்கள் தாங்களாகவோ அல்லது நிர்ப்பந்தம் காரணமாகவோ அபாயகரமான நிலப்பகுதிகளுக்குள் தள்ளப்பட்டுள்ள விதத்தைப் பற்றியதுமாகும்.
எந்த விலையைக் கொடுத்தாவது பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கட்டமைக்கப்பட்டதும், தடையற்ற நில அபகரிப்பைத் கோருவதுமான நவீன தாராளவாதக் (Neo-liberal) கொள்கைகள், நகர்ப்புற-கிராமப்புற இடைவெளியை மென்மேலும் அதிகரித்து வருகின்றன. இக்கொள்கைகளின் குறுகிய மற்றும் நீண்ட கால விளைவுகள் குறித்துக் கூர்மையாக ஆராயப்பட வேண்டும். இந்த பொருளாதார உந்துதல்கள் எவையுமே எமது பொருளாதாரத்திற்கு எவ்வித நிம்மதியையோ அல்லது புத்துயிரையோ கொண்டு வரவில்லை. உதவி மற்றும் மீளெழுச்சி என்ற போர்வையில் எங்களை மேலும் ஆழமான கடன் பொறிக்குள் தள்ளியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கொடுங்கோல் பிடிக்குள் நாம் சிக்கியுள்ளோம்.
2025 அக்டோபரில் அகிலன் கதிர்காமர் எழுதியது போல், 2027ஆம் ஆண்டின் இறுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் இந்தத் திட்டம், “இலங்கையை அடுத்த நெருக்கடிக்குத் தயார் செய்யும்.” பணவீக்கக் குறைவு மற்றும் அதிகரித்து வரும் வறுமை நிலைக்கு மத்தியிலும், கடுமையான வட்டி விகிதங்களைக் கடைப்பிடிக்கும் மத்திய வங்கியினதும் அரசாங்கத்தினதும் நிதிக் கொள்கையையும் அவர் கடுமையாகச் சாடுகிறார். கடந்த மாதமும் ரூபாயின் மதிப்பை நாம் குறைக்க வேண்டியிருந்ததுடன், அந்நியச் செலாவணியின் முக்கிய ஆதாரமாக மேற்கு ஆசியாவிலுள்ள வீட்டுப் பணியாளர்களின் உழைப்பையே தொடர்ந்தும் நம்பியிருக்கிறோம். சிவில் சமூகத்தினர் (civil society) கடன் நீதியை (Debt justice) வலியுறுத்தி வருகின்ற போதிலும், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் பெரும்பாலும் நிவாரணம் மற்றும் உட்கட்டமைப்பு மறுசீரமைப்பு ஆகியவற்றிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றது.
அரசாங்கம் எவ்வித தயக்கமுமின்றி பெருவணிக வர்க்கத்திற்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இவை அனைத்திலும் மிகக்கொடூரமான விடயம் என்னவென்றால், “இலங்கையைக் கட்டியெழுப்புதல்” (Rebuilding Sri Lanka) எனும் பிரம்மாண்டமான பெயரைக் கொண்ட பேரிடருக்குப் பிந்தைய மீட்புக் குழுவிற்கு, உயர்மட்டக் கார்ப்பரேட் ஆளுமைகள் சிலரை நியமித்திருப்பதாகும். இதனால் சொல்ல முற்படும் செய்தி மிகவும் தெளிவானது; சுரண்டல் மனப்பான்மை கொண்ட கார்ப்பரேட் (corporate) ஒட்டுண்ணிகளின் பேராசைக்கு நேர் எதிரான தேவைகளைக் கொண்ட இந்நாட்டின் பாட்டாளி வர்க்கத்தின் முகத்தில் அறைந்தாற்போல இது அமைந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி என்பது, இதுவரை நாம் எதை அவ்வாறு நினைக்க நிர்ப்பந்திக்கப்பட்டோமோ அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். உதாரணமாக, அதிக லாபத்திற்கான முதலீடு மற்றும் சந்தையில் வாங்குதல்-விற்றல் ஆகிய வணிகங்களுக்குப் பதிலாக, ஒட்டுமொத்த மக்கள் நலனுக்காக முதலீட்டையும் உழைப்பையும் மாற்றியமைக்க வேண்டும். ‘நிலையான அபிவிருத்தி’ போன்ற கவர்ச்சிகரமான வாசகங்கள் கூடத் தமது இலக்கைத் தவறவிட்டுள்ளன. நாம் பொருளாதாரத்தை மிகவும் முழுமையான ரீதியில் சிந்திக்க வேண்டும்; அத்துடன் அதனை வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் இப்புவியின் நலன் ஆகியவற்றின் நிலைபேறாகக் காண வேண்டும்.
கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை இவ்வனர்த்தம் ஏற்படுத்தியுள்ளது. இதில் மிக முக்கியமான துறைகளில் கல்வியும் ஒன்றாகும். கல்வித் துறை இன்று இரண்டு அடிப்படை சவால்களை எதிர்கொள்கிறது: அவை நிதி ஒதுக்கீடு மற்றும் முன்னுரிமைகள். டிசம்பர் 02ஆம் திகதி வர்த்தக சபைக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய மீள்கட்டுமான முயற்சிகள் குறித்துப் பேசுகையில், ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். அந்த வரவு செலவுத் திட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வெறும் 2.4% மட்டுமே கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி சீர்திருத்தங்கள்
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள Transforming General Education in Sri Lanka 2025 (இலங்கையில் பொதுக் கல்வியை உருமாற்றுதல் 2025) எனும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கல்விக்கொள்கை மற்றும் அதன் அமுலாக்கம் குறித்த திருத்தங்களை அரசாங்கம் எவ்வித முன்னறிவிப்புமின்றி, பொதுமக்களுடன் கலந்தாலோசிக்காமல் அறிவித்துள்ளது. இது ஒரு மாற்றத்தை உண்டாக்கும் கொள்கை என பிரதமரால் (https://news.lk/current-affairs/in-the-prevailing-situation-it-is-necessary-to-act-strategically-while-creating-the-proper-investments-ensuring-that-actions-are-discharged-on-paper-policies-pm) பாராட்டப்பட்ட போதிலும், இக்கொள்கையானது ஏற்கனவே நடைமுறையில் உள்ளவற்றின் மோசமான மறுவடிவமே அன்றி வேறில்லை. இதில் தொழிற்பயிற்சிக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் போன்ற சில வரவேற்கத்தக்க விடயங்கள் இருந்தாலும், பாடத்திட்டத்தின் முக்கிய பகுதிகள் தொடர்பான பின்வரும் மூன்று கவலைக்குரிய விடயங்களை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: 1) ஆரம்ப வயதிலேயே மாணவர்களைத் தரம் பிரித்தல்; 2) அதனோடு தொடர்புடையதாக, STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) கல்விக்கு முன்னுரிமை மற்றும் சலுகை அளித்தல்; மற்றும் 3) கடன் புள்ளி (Credit) அடிப்படையிலான பகுதிவாரிக் (Modular) கல்வியை அறிமுகப்படுத்துதல்.
1. கனிஷ்ட இரண்டாம் நிலைக் கல்வியிலேயே ஒரு தொழில்சார் ஆர்வத் தேர்வு (Career interest test) மூலம் மாணவர்களை வகைப்படுத்தும் பணி ஆரம்பமாகிறது என்பது இக்கொள்கை ஆவணத்தை ஆய்வு செய்வதனூடாக தெளிவாகும். இது மாணவர்கள் உயர்கல்வியில் ஒரு குறிப்பிட்ட துறையைத் தேர்ந்தெடுப்பதை ஊக்குவிக்கிறது. “கனிஷ்ட இரண்டாம் நிலைக் கல்வி” மற்றும் “சிரேஷ்ட இரண்டாம் நிலைக் கல்வி முதலாம் கட்டம்” ஆகிய இரண்டிலும் உள்ள மேலதிக கற்றல் தொகுதிகள் (Further Learning Modules) இப்போக்கை மேலும் உறுதிப்படுத்துகின்றன. ஏற்கனவே எமது கட்டுரையில் குறிப்பிட்டது போல, இந்த இலக்கை முன்னெடுக்கும் உளச்சார்புத் தேர்வுகள் (Psychometric testing) விசித்திரமான ஒரு நிலையை நோக்கி இட்டுச் செல்கின்றன. (https://kuppicollective.lk/psychometrics-and-the-curriculum-for-general-education/)
2.சிரேஷ்ட இரண்டாம் நிலைக் கல்வியின் முதலாம் கட்டத் தகுதிப் பரீட்சைக்கான பாடத்திட்டத்தின் மையப்பகுதியில் தாய்மொழி, கணிதம் மற்றும் விஞ்ஞானம் உட்பட ஐந்து கட்டாயப் பாடங்கள் உள்ளன. அங்கு சமூக விஞ்ஞானம் அல்லது மானுடவியல் சார்ந்த கட்டாயப் பாடங்கள் எதுவும் இல்லை. வரலாறு மற்றும் புவியியல் ஆகியவற்றைத் தனித்தனிப் பாடங்களாகக் கொண்ட விருப்பத் தெரிவுப் பாடத் தொகுதியிலிருந்து ஒருவர் இரண்டு பாடங்களைத் தேர்வு செய்ய முடியும். இருப்பினும், ஒரு மானுடவியல்/சமூக விஞ்ஞான பாடமாவது கட்டாயப் பாடப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
3.தரமதிப்பீடு (Credit-based) அடிப்படையிலான பகுதிவாரிக் கல்வி (modular education): பல்கலைக்கழகங்களில் ஒரு துறையை ஆழமாகப் பயிலும் நிலையில் கூட, நம்மில் பலர் இந்தப் பகுதிவாரிக் கல்வி முறையினால் சிரமப்படுகிறோம். துண்டு துண்டான கற்றல் செயல்முறையை ஊக்குவிக்கும் இந்தக் தர மதிப்பீட்டு முறையினால் எண்ணியல் ரீதியான தர மதிப்பீடுகளாக மதிப்பிடப்படும் துரித கல்வியின் பொருட்டு கற்றலின் ஆழம் இழக்கப்படுகிறது.
பாடத்தின் அடிப்படைகள் மற்றும் அந்த அடிப்படைகளின் விரிவான விளக்கங்களை விட, துண்டு துண்டாக மதிப்பிடப்படும் கற்றல் அலகுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இரண்டாம் நிலைக் கல்வியில் இத்தகைய பகுதிவாரிக் கல்வி முறையை அறிமுகப்படுத்துவதால் ஒரு பாடத்தை ஆழமான மட்டத்தில் தொடர்ச்சியாகக் கற்கும் மாணவரின் திறனை வளர்ச்சியில் மோசமான பாதிப்பு ஏற்படும்.
கல்வி ரீதியாகவும், கற்பித்தல் முறையியல் ரீதியாகவும், தொழில்நுட்பப் பாடங்கள் உள்ளிட்ட விஞ்ஞானம் சார்ந்த துறைகளை, மானுடவியல் மற்றும் சமூக ஆய்வுகளில் இருந்து பிடிவாதமாகத் தனிமைப்படுத்துவது குறித்து நாம் கவலைப்பட வேண்டியுள்ளது. இந்தப் பிளவே விஞ்ஞானம் சார்ந்த பாடங்களை ‘STEM’ என்று அழைக்கும் கருத்தாக்கத்திற்கு வழிவகுத்ததுடன், மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞானங்களை தானாகவே குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. முரணாக, இன்று பல்கலைக்கழகங்கள் சில சந்தர்ப்பங்களில் இந்த இரு கல்விப்பிரிவுகளையும் தமது பாடத்திட்டங்களில் கலக்க முயற்சி செய்துள்ளன, ஆனால் அதில் சிறிய அளவிலான வெற்றியே கிடைத்துள்ளது; ஏனெனில் கல்வியின் ஒட்டுமொத்த முன்னுதாரணமானது, கல்வி இலக்குகள் மற்றும் கற்பித்தல் தேவைகளை விட, தொழில்நுட்ப ரீதியான முன்னுரிமைகளான வகைப்படுத்துதல், துண்டாடப்படுதல் மற்றும் துண்டுதுண்டான நுகர்வோர்வாதம் ஆகியவற்றையே மையமாகக் கொண்டுள்ளது. அபிவிருத்தித் தேவைகளுக்கான ஒரு முழுமையான அணுகுமுறை என்பது இத்தகைய முன்னுரிமைகள், வகைப்பாடுகள் மற்றும் விசேட தேர்ச்சிகள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒரு சமூக மற்றும் சமூகவியல் அணுகுமுறையானது எமது அனைத்து கல்வி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களிலும் உள்வாங்கப்பட வேண்டும்.
தேசிய அனர்த்தங்களும் சமூகத்தை மீள கட்டியெழுப்புதலும்
ஓர் அனர்த்தத்தின் பின்னரான காலத்தில், கல்வியின் பங்கானது தீவிரமாக மறுசீரமைக்கப்பட வேண்டும். ‘STEM’ மற்றும் மானுடவியல் என்ற இருமை நிலைக்குள் சிக்கிக்கொள்ளாத, மிகைப்படுத்தப்பட்ட முறையில் நெறிப்படுத்தப்படாத மற்றும் துண்டாடப்படாத ஒரு பாடத்திட்டம் நமக்குத் தேவை. காலநிலை மாற்றத்தை ஒரு பாடத்துறையாக அறிமுகப்படுத்துவதோ அல்லது சூழல் அழிவு குறித்த கவனம் ஒரு ‘STEM’ பாடமாகவோ, ஒரு சமூக விஞ்ஞானம்/மானுடவியல் பாடமாகவோ அல்லது அவ்விரண்டின் கலவையாகவோ இருக்க முடியாது. இது சூழலையும் பொருளாதாரத்தையும் மக்கள் நலனின் அங்கமாகமொன்றாகப் பார்க்கும் ஒரு பொருளாதார-கல்விக் கொள்கை சார்ந்த பார்வையாகும். கல்விச் சீர்திருத்தங்கள் இத்தகைய அடிப்படைத் தத்துவங்களின் மீது கட்டியெழுப்பப்பட வேண்டுமே தவிர, நவதாராளவாதக் கொள்கைகளாலும் இலாப நோக்கம் கொண்ட முதலாளித்துவ வர்க்கத்தாலும் ஊக்குவிக்கப்படும் உண்மையான அல்லது கற்பனையான குறுகிய கால இலக்குகளினால் அல்ல.
நான் இதை எழுதும்போது, பல நாட்களாகத் தொடர்ந்த இடைவிடாத மழையினதும் இருளினதும் பின்னர், வானம் தனது முதல் ஒளிக்கீற்றுகளுடன் பிரகாசிக்கிறது. இது எமது இதயங்களில் நம்பிக்கையையும், ஒவ்வொரு நொடியும் வானிலை மாற்றத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் உற்சாகத்தையும் கொண்டு வருகின்றது. கூட்டானதும் சமூக ரீதியானதுமான இந்நம்பிக்கையுணர்வு எம்மை முன்னோக்கிச் செல்ல அனுமதிக்கும். அனர்த்தத்தினை இலங்கை சமூகங்கள் எதிர்கொண்ட விதம் மனதுக்கு மிக நெகிழ்ச்சியளிப்பதாக அமைந்ததுடன், இன்னும் நம்பிக்கையற்ற நிலையில் இருக்கும் பலரது வாழ்வில் நம்பிக்கையை ஊட்டியுள்ளது. இந்தக் கூட்டு முயற்சியின் உத்வேகமே மீட்சிக்கான அடித்தளமாக அமைய வேண்டிய வாக்குறுதியைக் கொண்டுள்ளது. மக்களின் கோரிக்கைகளையும் தேவைகளையும் கருதி கொள்கை மறுபரிசீலனையை வடிவமைக்க வேண்டும், குறிப்பாக இது கல்வி மற்றும் பொருளாதாரம் ஆகிய முக்கிய துறைகளில் அவசியமாகும்.



