ஹசினி லேகம்வசம்
கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அந்தச் சீர்திருத்தங்களின் உள்ளடக்கத்திற்கு நாம் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை, அவை ஏற்படுத்திய எதிர்வினைகளுக்கும் கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். அத்தகைய எதிர்வினைகள், நமது சமூகத்தில் கல்வி எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறது என்பதன் பிரதிபலிப்பாகும். அத்துடன், இந்தப் புரிதலையும் அது உருவாக்கும் முன்னுரிமைகளையும், கல்விக் கொள்கைகளில், குறிப்பாக சீர்திருத்தக் கொள்கைகளில், கட்டாயம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இருப்பினும், இந்தக் கட்டுரையில் எனது நோக்கம், இந்தப் பொது ஈடுபாட்டை, உலகளாவிய சந்தையில் நமது சாத்தியக்கூறுகளைக் கட்டமைக்கும் வரலாற்று-கட்டமைப்பு யதார்த்த தொடர்புகளை விமர்சனப் பார்வையுடன் இணைப்பதும், இந்த முயற்சியில் கல்வியாளர்களின் வகிபங்குகளை பற்றிச் சுருக்கமாக விவாதிப்பதுமாகும்.
இரண்டு முக்கிய எதிர்வினைப் போக்குகள்
முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களுக்கான எதிர்வினைகளை, பரவலாக ‘ஆதரவு’ , ‘எதிர்ப்பு’ என வகைப்படுத்தலாம். இவற்றில், முதலில் எதிர்ப்புத் தரப்பின் எதிர்வினைகளைப் பற்றி விவாதிக்க விரும்புகிறேன். சீர்திருத்தங்களுக்கு எதிரான பெரும்பாலான எதிர்ப்புகள், ஓரினச்சேர்க்கையாளர் சந்திப்புத் தளம் ஒன்று தற்செயலாக ஆறாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்திட்டத்துடன் இணைக்கப்பட்ட பிரச்சினையை நோக்கியே இருப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற ஒரு செயல்பாட்டில் கண்டிப்பின் முக்கியத்துவத்தை எவ்வளவு கூறினாலும் மிகையாகாது என்றாலும், இதன் மீது குவிக்கப்படும் ஆற்றலின் பெரும் அளவானது, நமது சமூகம், குறிப்பாக தொழிற்சங்கங்களில் உள்ளவர்கள் உட்பட்ட கல்வியாளர்கள், எந்த அளவிற்கு நம்பிக்கையற்ற முறையில் ஓரினச்சேர்க்கையாளர்களை வெறுக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. இந்த மனப்பாங்கே, கல்வி சீர்திருத்தங்கள் தேவைப்படுவதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்றாகும். தகவல் தொழில்நுட்பம், திறன்கள் போன்றவற்றில் ‘உலகத்துடன் போட்டிபோடுவதில்’ உள்ள ஆர்வத்தில் ஒரு சிறு அளவாவது இந்தத் துறையிலும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!
அத்துடன், இந்தச் சீர்திருத்தச் செயல்முறை அதிக ஜனநாயகத்தன்மை வாய்ந்ததாக இல்லை என்று ஆசிரியர் தொழிற்சங்கங்களும் மற்றவர்களும் எழுப்பும் எதிர்ப்பை நான் (, உயர்கல்வியில் உள்ள பலரும், https://island.lk/general-educational-reforms-to-what-purpose-a-statement-by-state-university-teachers/என்ற இணையத்தளத்தில் கிடைக்கும் அண்மைய அறிக்கையே இதற்குச் சான்று) முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், பாலினப் பாகுபாட்டை ஊக்குவிக்க விரும்புபவர்களால் இந்த உரையாடல் அபகரிக்கப்பட்டு, கல்வியால் மட்டுமே நம்மைக் காப்பாற்றக்கூடிய குறுகிய மனப்பான்மையை மேலும் ஆழமாக வேரூன்றச் செய்துவிடக் கூடாது என்று நான் உள்ளார்ந்து நம்புகிறேன். இந்த பிரதான நிபந்தனையுடன் அரசாங்கம், சீர்திருத்தச் செயல்முறையைப் பற்றி மக்களுக்கு வெறும் ‘தகவலை’ தெரிவிப்பதோடு நிறுத்திவிடாமல், அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று நானும் விரும்புகிறேன். அவசரகால ஆட்சியின் தொடர்ச்சியான நீடிப்பு, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை (PSTA) தாக்கல் செய்தல், மத்திய உயர்நிலப்பகுதிகளின் பாதுகாப்பிற்காக ஒரு புதிய ஆணையகத்தை முன்மொழிதல் போன்ற பிற அண்மைய நிகழ்வுகளைக் கருத்தில் கொள்ளும்போது (பொதுவாக அறியப்பட்டபடி, ஆணையகங்கள் நேரடியாக நிர்வாகத்தின் கீழ் வருகின்றன, எனவே அவை ஜனாதிபதி பதவியை மேலும் வலுப்படுத்துகின்றன; இந்த நோக்கத்திற்காக தற்போதுள்ள அமைப்பை ஏன் வலுப்படுத்த முடியாது என்பது ஒரு நியாயமான கேள்வியாக இருக்கும்), இது குறிப்பாக சந்தேகத்திற்குரியதாகவும் தோன்றுகிறது.
மேலும், கல்வி அமைச்சகத்தின் செயலாளர் நலக்க கலுவேவவின் கூற்றுப்படி: “[திசாநாயக்க அரசாங்கம் பதவியேற்றபோதே] [கல்வி] சீர்திருத்தங்களுக்கான முழுமையான கட்டமைப்பு ஏற்கனவே நடைமுறையில் இருந்தது” (https://www.wsws.org/en/articles/2025/08/12/wxua-a12.htmlதி மார்னிங், ஜூலை 29-ஐ மேற்கோள் காட்டுதல்). முன்னாள் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் சித்தாந்தச் சார்புகளையும், அக்காலத்தில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளையும் கருத்தில் கொள்ளும்போது, அத்தகைய சூழலில் தொடங்கப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் மிகச் சிறிய மாற்றங்களுடன் தொடர்ந்தது, அவற்றின் நோக்கத்தைப் பற்றி எவ்வித சந்தேகங்களையும் ஏற்படுத்தவில்லை: அதாவது, உலகளாவிய சந்தைக்கு மலிவான உழைப்பை உற்பத்தி செய்வதை எளிதாக்குவதும் (வெளிப்புற உந்துதல்களிலிருந்து மிகக் குறைந்த பாதுகாப்போடும், உலகளாவிய ஏற்றத்தாழ்வுகளை மீண்டும் உருவாக்குதலுமாகும்), அதே நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தேவையான வருவாயை ஈட்டுவதுமே அந்த நோக்கமாகும்.
இந்த செயல்முறை STEM பாடங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது, ஏனெனில் அவை “தங்கள் பட்டதாரிகளிடையே உயர் மட்ட ‘வேலைவாய்ப்புக்கு’ பங்களிப்பதாகக் கருதப்படுகின்றன… மாற்றத்தக்க திறன்கள், நிரூபிக்கக்கூடிய தகுதி நிலைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதால், STEM பாடங்கள் முதலாளித்துவத்திற்குத் தேவையான உழைப்பின் கருத்தாக்கத்திற்கு மிகவும் பொருத்தமான கருவிகளை வழங்குகின்றன, குறிப்பாக உலகளாவிய அளவில், பரந்த அளவிலான தொழிலாளர் சந்தைகளில் ஒப்பீட்டுத்தன்மை முன்னையகாலங்களை விட முக்கியத்துவம் பெறுகிறது” (இந்த தொகுப்பில் 29 அக்டோபர் 2024 அன்று வெளியான எனது முந்தைய கட்டுரையில் குறிப்பிடப்படுள்ளது.) இருப்பினும், உலகளாவிய சந்தைக்கு நமது தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க எந்தக் காரணமும் இல்லை என்பதோடு, அத்தகைய ஒரு நோக்கு இலங்கைக்குள் அனைத்துத் துறைகளிலும் நிலைமைகளை மேம்படுத்துவதற்கான ஒரு உத்தியைப் புறக்கணிக்கும் தன்மையில் இருப்பதாலும் , உலகளாவிய சந்தைக்குப் பதிலளிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும் ஒரு கல்விக் கொள்கையின் விவேகம் இந்தக் கட்டுரையிலும் மற்ற இடங்களிலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இதனால்தான், உள்நாட்டில் செழிப்பின் பலன்களை அனைவரும் அனுபவிக்கும் வகையில், ஒரு நியாயமான சமூகத்தைக் கட்டமைப்பதை நோக்கமாகக் கொண்ட, கல்விக்கான ஒரு விடுதலை நோக்கு நமக்குத் தேவைப்படுகிறது.
சீர்திருத்தங்களுக்கான இரண்டாவது முக்கிய எதிர்வினைப் போக்கு , அவற்றை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாகும். இது உலகளாவிய சந்தையின் தத்துவத்தை எதிரொலித்தாலும், இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். சீர்திருத்தப் பணிகள் நிறுத்தப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பெற்றோர் கூறியது யாதெனில் “உலகம் புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்களுடன் முன்னேறி வருகிறது, ஆனால் இங்கே இலங்கையில், எங்கள் பிள்ளைகள் இன்னும் காலாவதியான முறைகளாலேயே சுமையாக சுமக்கின்றனர். எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கள் பிள்ளைகளை சர்வதேசப் பள்ளிகளுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ அனுப்புகிறார்கள், ஆனால் எங்கள் பிள்ளைகளோ இலவசக் கல்வியையே சார்ந்துள்ளனர். இந்தச் சீர்திருத்தங்களை நிறுத்துவது என்பது ஒரு தாயாக நான் கண்டதிலேயே மிகவும் கீழ்த்தரமான செயலாகும்” (https://www.newsfirst.lk/2026/01/17/pro-educational-reforms-protests-spread-across-sri-lanka). தங்கள் குழந்தைகளை சர்வதேசப் பள்ளிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்புவது எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல, உண்மையில் அரசியல்வாதிகள் மட்டுமல்ல என்பதைக் குறிப்பிடுவது அவசியமாக இருந்தாலும், இந்தக் கருத்து பொருத்தமானது. ஒரு சமூகத்தின் மாறிவரும் தேவைகளைப் பிரதிபலிக்கும் வகையில் பாடத்திட்டத்தைப் புதுப்பிப்பது, இலவசக் கல்விக்கான தேவையைத் தவிர்க்க முடியாமல் வலுப்படுத்தும். இருப்பினும், முன்பு குறிப்பிட்டது போல, நாட்டின் கல்வி விடுதலை ஆற்றலைப் பயன்படுத்தும் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் இணைக்கப்படாவிட்டால், அத்தகைய நடவடிக்கை, காலனித்துவ, நவகாலனித்துவ எஜமானர்களுக்கு மலிவான உழைப்பை உற்பத்தி செய்வதற்காக இலங்கையை உலகச் சந்தையுடன் ஒருங்கிணைக்கும் ஒன்றாகவே அமைந்துவிடும்.
இதே போன்ற ஒரு போராட்டத்தில் பங்கேற்ற மற்றுமோர் பெற்றோர் கூறுகையில் “எங்கள் குழந்தைகள் சுமையற்ற பள்ளிப்பைகள், ஒரு சிறந்த எதிர்காலம் குறித்து உற்சாகமாக இருந்தனர். இப்போது அவர்கள் விரக்தியில் தவிக்கிறார்கள்” (https://www.newsfirst.lk/2026/01/17/pro-educational-reforms-protests-spread-across-sri-lanka). தொடர்ந்து, இது ஒரு நியாயமான கவலைதான், ஆனால் இது அரசாங்கத்தின் சொல்விளையாடுகளை முழுமையாக நம்புவதாகத் தெரிகிறது. இந்தக் கட்டுரையில் ஏற்கனவே பல பதிவுகள் சுட்டிக்காட்டியுள்ளபடி, மதிப்பீட்டு கட்டமைப்புகள், அதிகத் தேர்வுகள் கொண்ட முறையிலிருந்து இடை மதிப்பீட்டு முறைகளுக்கு மாற்றினாலும் (இது மிகவும் வரவேற்கத்தக்கது), உண்மையில் பாடப்பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது மாணவர்களின் கல்வி பணிச்சுமையைக் குறைப்பதற்குப் பதிலாக மேலும் அதிகரிக்கும்.
எத்தகைய கல்வி?
மேலே கோடிட்டுக்காட்டப்பட்டுள்ள ‘ஆதரவு’ எதிர்வினைப் போக்கு நியாயமான கவலைகளிலிருந்து உருவாகின்றன, எனவே அவை தீவிரத்தன்மையோடு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இது தொடர்பாக, ஒரு நல்ல எதிர்கால வருமானத்தை உறுதி செய்வதற்கான ஒரு உறுதியான வழியாக STEM பாடங்களின் மீதான ஈர்ப்பு அதிகரித்து வருவதால், குறிப்பாக HSS கல்விச் சமூகத்தினர் காண விரும்பும் சில விளைவுகளான, பாடத்திட்டத்தில் HSS கூறுகளை அதிகரிப்பது, அத்தகைய பாடங்களுக்கு ஒதுக்கப்பட்ட முக்கியத்துவ விகிதங்களை மாற்றுவது, அவற்றை மீண்டும் கட்டாயப் பாடங்களின் பட்டியலில் சேர்ப்பது போன்றவை, இந்தச் செயல்முறையைப் பொதுமக்களின் பங்களிப்பிற்காக மாத்திரம் திறப்பதால் மட்டும் இவை கிடைத்துவிடாது என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
இருப்பினும், கல்வியாளர்களுக்கும் இதில் ஒரு பங்கு உண்டு: 1) சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்கோ அல்லது எதிர்ப்பதற்கோ பின்னால் உள்ள மக்களின் காரணங்களைப் புரிந்துகொள்வதற்காக, அவர்களுடன் தீவிரமாக ஈடுபடுதல்; 2) அத்தகைய விருப்பத்தேர்வுகள் எவ்வாறு உருவாகின்றன என்பதையும், அவை எதை உருவாக்குவதற்குப் பங்களிக்கின்றன என்பதையும் (அவை நிலைநிறுத்தும் உலகளாவிய மற்றும் உள்ளூர் உள்ளீர்ப்பு முறைகள், ஒடுக்குமுறைக் கட்டமைப்புகள் உள்ளிட்டவற்றை ) சிந்தித்துப் பார்த்தல்; 3) இந்தச் சிந்தனைகளை மேலதிக உரையாடல்களுக்குள் உட்கொண்டுவந்து, பரஸ்பரம் வலுவூட்டும் ஒரு பரிமாற்றத்தை சாத்தியமாக்குதல்; 4) மேற்கூறியவற்றின் அடிப்படையில், கல்வித்துறையைச் சீர்திருத்துவதற்கான ஒரு திட்டத்தை கூட்டாக வகுத்தல்; இது கொள்கைகளுக்கு நேரடியாக வழிகாட்டும் ஒரு ஏற்பாடாக இருப்பது விரும்பத்தக்கது. இத்தகைய தர்க்கரீதியான பரிமாற்றத்தால் வழிநடத்தப்படும் ஒரு சீர்திருத்தச் செயல்முறையும், இந்தச் சிந்தனைகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்வி முறையும், மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப அமைவதோடு, பெரும் உள்ளடக்க மதிப்பையும் கொண்டிருக்கும்.
இவ்வகையான முயற்சி வெற்றிபெறுவதற்கான இரண்டு முக்கிய முன்நிபந்தனைகள் உள்ளன: முதலாவதாக, கல்வியாளர்கள் இந்த அரசாங்கத்தை பகிரங்கமாக ஆதரித்தார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் இதில் பங்கேற்க வேண்டும்; இரண்டாவதாக, அரசாங்கம் எதையும் மறுக்காமலும், பழியைத் தனிநபர்கள் மீது சுமத்தாமலும், பணிவுடனும் பொறுப்புணர்வுடனும் பதிலளிக்க வேண்டும். இரண்டாவதை நம்மால் தவிர்க்க முடியாவிட்டாலும், முதலாவதிலிருந்து நாம் தொடங்கலாம்.
முடிவு
‘அமைப்பு மாற்றம்’ என்ற பெரும் அலையில் ஏறி ஆட்சிக்கு வந்த ஒரு அரசாங்கத்தைப் பொறுத்தவரை, இந்தச் சீர்திருத்தங்கள் சரியான காரணங்களுக்காகச் செய்யப்படுவதும், சரியான வழிமுறைகளைப் (கலந்தாய்வும் ஆலோசனை) பின்பற்றுவதும் ஏனைய எந்த அரசாங்கத்தையும் விட மிக முக்கியமானதாக இருக்கலாம். உதாரணமாக, மென்திறன்களை வளர்ப்பதையோ அல்லது பாடத்திட்டத்தில் தொழிற்கல்வியை இணைப்பதையோ, உலகப் பொருளாதார ஒழுங்கில் இலங்கையின் விளிம்புநிலையை மீண்டும் உருவாக்கும் விதத்தில் (இது ‘அமைப்புப் பாதுகாப்பு’ ஆகும்) அமைக்கலாம்; அல்லது, இந்த அணுகுமுறை வரம்புக்குட்பட்டதாக இருந்தாலும், முதன்மையாக, நாட்டிற்காக ஒரு தொழிலாளர் படையை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைக்கும் விதத்தில் அமைக்கலாம். இங்கு ‘நாடு’ என்பது எதைக் குறிக்கிறது என்பது ஒரு முடிவுறா கவலையாகும்: ஒரு சில செல்வந்தக் குழுக்களையா, ஒரு பெரும்பான்மை இன-மதப் பிரிவையா, அல்லது இங்கு வாழும் அனைவரையுமா? நாம் ‘நாடு’ என்பதை எவ்வாறு வரையறுக்கின்றோம் என்பது, கல்விக் கொள்கை (மற்றவற்றுடன்) எவ்வாறு வகுக்கப்படும் என்பதனை பிரதானமாக பாதிக்கும்; அதேபோல, கல்வியின் தரம், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கொள்கை வகுப்பாளர்கள், அதிகாரிகள், ‘நிபுணர்கள்’ என நாம் அத்தகைய பிரிவுகளைப் பற்றி எவ்வாறு சிந்திக்கிறோம் என்பதையும் பாதிக்கின்றது. இதனால்தான், ஏனைய எந்தத் துறையையும் விட கல்விக் கொள்கை வகுப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.



