உதாரி அபேசிங்க
அண்மையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வொன்றில் பகிடிவதை தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய அண்மைய தீர்ப்பின் தாக்கங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறித்த தீர்ப்பில், பகிடிவதையைத் தடுப்பது என்பது சம்பவம் நிகழ்ந்த பின்னர் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் மட்டுப்படாத விடயமாகும் என்பதோடு, பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அனுபவங்களை வெளிப்படுத்தவும் தேவையான ஆதரவுகளைப் பெற்றுக்கொள்ளவும் இயலுமையுடைய பல்கலைக்கழக மட்டத்திலான கட்டமைப்புகளும் செயன்முறைகளும் அவசியமானவை என உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. சட்டம், பல்கலைக்கழக நிர்வாகம், உளவியல் மற்றும் மாணவர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன் நடைபெற்ற இக்கலந்துரையாடல், சட்டரீதியான தடைகள் காணப்பட்டபோதிலும் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பகிடிவதை ஏன் தொடர்ந்தும் நிலைத்திருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சித்தது. சட்ட மற்றும் நிறுவனரீதியான பல பரிமாணங்கள் விவாதிக்கப்பட்ட போதிலும், ஒரு மையக் கருத்து தெளிவாக வெளிப்பட்டது. அதாவது, பகிடிவதையை எதிர்கொள்வது என்பது சட்டங்களும் ஒழுக்காற்று விதிமுறைகளும் மாத்திரம் கொண்ட செயற்பாடல்ல; மாறாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய ஆதரவை வழங்கக்கூடிய நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்குவதையும் உள்ளடக்கியதாகும்.
1990களில் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற பல துயரமான சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கை அரசு 1998ஆம் ஆண்டில் “கல்வி நிறுவனங்களிலான பகிடிவதை மற்றும் ஏனைய வன்முறை வடிவங்களைத் தடைசெய்யும் சட்டம்” (இலக்கம் 20) என்பதனை இயற்றியது. அவற்றுள் மிகவும் நினைவுகூரப்படும் சம்பவங்களில் ஒன்றாக 1997ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மாணவரான எஸ். வரப்பிரகாஷின் மரணம் காணப்படுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் நாட்டை உலுக்கியதோடு, மாணவர் படிநிலைகளை அடிப்படையாகக் கொண்ட வன்முறைமிக்க பண்பாடுகள் தொடர அனுமதிப்பதன் விளைவுகளையும் வெளிச்சமிட்டுக் காட்டின. 1998ஆம் ஆண்டுச் சட்டம், பகிடிவதையை குற்றவியல் குற்றமாக அங்கீகரிப்பதன் மூலம் ஒரு முக்கியமான சட்டரீதியான தலையீடாக அமைந்தது. கல்வி நிறுவனங்களில் பகிடிவதை அல்லது ஏனைய வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் மீது அபராதம் மற்றும் சிறைத்தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை இச்சட்டம் அறிமுகப்படுத்தியது.
எனினும், இச்சட்டம் நடைமுறையில் அமலுக்கு வந்தது முதல் ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள் கடந்துள்ள நிலையிலும், அதன்கீழ் மேற்கொள்ளப்பட்ட வழக்குத் தொடுப்புகள் மிகவும் அரிதானவையாகவே காணப்படுகின்றன. பல்கலைக்கழகங்களின் பல பகுதிகளில் தொடர்ந்தும் பகிடிவதை சம்பவங்கள் பதிவாகின்றன என்றாலும், அவற்றில் பெரும்பாலானவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவதில்லை. பல்கலைக்கழக நிர்வாகங்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்படும் சம்பவங்கள்கூட குற்றவியல் நீதி முறைமையின் கீழ் அல்லாது, உள்நாட்டு ஒழுக்காற்று நடைமுறைகளின் ஊடாகவே கையாளப்படுகின்றன. இதன் மூலம், பிரச்சினை சட்ட ஏற்பாடுகளின் பற்றாக்குறையில் மட்டும் இல்லை என்பதும், மாறாக பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து முறைப்பாடுகளைத் தொடரக்கூடிய இயலுமையுடன் தொடர்புடையதாகவும் இருப்பது வெளிப்படுகின்றது.
துயரத்தை மீள நினைவூட்டும் நிகழ்வுகள்: வரப்பிரகாஷ் மற்றும் பசிந்து ஹிருஷான் சம்பவங்கள்
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவரான வரப்பிரகாஷ், பகிடிவதையின் ஒரு பகுதியாக மூத்த மாணவர்களால் கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்ய வற்புறுத்தப்பட்டார். இதன் விளைவாக அவருக்கு தீவிரமான உள்காயங்களும் கடுமையான சிறுநீரக செயலிழப்பும் ஏற்பட்டதோடு இறுதியில் அவரது உயிரிழப்பிற்கும் அது காரணமானது. 2022ஆம் ஆண்டில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவருக்கு கடத்தல் மற்றும் கொலை குற்றச்சாட்டுகளின் கீழ் வழங்கப்பட்ட தண்டனையை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இவ்வழக்கு பகிடிவதையின் கொடூரத்தன்மையை மட்டுமல்லாது, பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பங்களும் நீதியை அடைவதற்காக எதிர்கொள்ள வேண்டிய நீண்ட மற்றும் கடினமான பயணத்தையும் எடுத்துக்காட்டுகின்றது.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அனுபவங்களை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களில்கூட அவர்கள் எதிர்கொண்ட துன்புறுத்தல்களின் முழு பரிமாணத்தையும் பகிர்ந்துகொள்வதில்லை. வரப்பிரகாஷ் சம்பவத்தில், அவர் தமது தந்தையிடம் தமக்கு “டிப்ஸ்” மற்றும் “சிட்-அப்ஸ்” போன்ற பயிற்சிகளைச் செய்யுமாறு கூறப்பட்டதாக மட்டுமே தெரிவித்திருந்தார் என நீதிமன்றத் தீர்ப்பில் பதிவாகியுள்ளது. எனினும், தமது மகன் அவமான உணர்வின் காரணமாக அவர் அனுபவித்த துன்புறுத்தல்களின் உண்மையான அளவை முழுமையாக வெளிப்படுத்தவில்லை என வரப்பிரகாஷின் தந்தை சாட்சியமளித்திருந்தார்.
வரப்பிரகாஷின் மரணத்திற்கு இரு தசாப்தங்களுக்கும் மேலான காலம் கடந்த பின்னரும் பகிடிவதையால் ஏற்படும் துயரங்கள் முடிவுக்கு வரவில்லை. 2025ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத் தீர்ப்பு, 2020 மார்ச் மாதத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் 21 வயதான மாணவரான பசிந்து ஹிருஷானுக்கு ஏற்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டது. புதிய மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் மூத்த மாணவர்களால் படிக்கட்டுகளில் உருட்டிவிடப்பட்ட டயர் ஒன்று அவரது தலையில் மோதியதில் அவர் தலையில் கடுமையான காயங்களுக்கு உள்ளானார். பின்னர் அவர் பக்கவாத நிலைக்கு தள்ளப்பட்டதோடு, உயிர் ஆதரவு கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்று பல மாதங்களுக்குப் பின்னரே வீட்டிற்கு திரும்ப முடிந்தது.
1990களில் பகிடிவதையின் உயிர்க்கொல்லி விளைவுகளை வரப்பிரகாஷ் சம்பவம் வெளிப்படுத்தியிருந்தாலும், 1998ஆம் ஆண்டுச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் கடந்த பின்னரும் பல்கலைக்கழகங்கள் தீவிரமான வன்முறைகளைத் தடுக்கத் தவறிவருகின்றன என்பதை பசிந்து ஹிருஷான் சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. நிறுவன ரீதியான இத்தொடர்ச்சியான தோல்விகளின் பின்னணியிலேயே உயர்நீதிமன்றம் 2025ஆம் ஆண்டு தனது உத்தரவுகளைப் பிறப்பித்தது. அவற்றில் முக்கியமாக வலியுறுத்தப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக பல்கலைக்கழகங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவுக் குழுக்களை (Victim Support Committees) நிறுவுதல் காணப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் ஆதரவு தேவைப்படுகிறது?
பல்கலைக்கழகங்களில் பகிடிவதை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றது. வாய்மொழி அவமானப்படுத்தல், உடல் ரீதியான துன்புறுத்தல், உளவியல் அச்சுறுத்தல் மற்றும் சில சந்தர்ப்பங்களில் பாலியல் தொந்தரவு போன்ற வடிவங்கள் அவற்றில் அடங்குகின்றன. பகிடிவதையின் அனைத்து வடிவங்களும் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவையாக இருந்தாலும், பாலியல் தொந்தரவுடன் தொடர்புடைய சம்பவங்கள் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து முறைப்பாடு செய்வதற்கு மேலதிக தடைகளை உருவாக்குகின்றன.
பலவீனமான நிறுவனரீதியான செயன்முறைகள், பழிவாங்கப்படுவோம் என்ற அச்சம், அல்லது தமது அனுபவங்கள் உண்மையாகக் கருதப்படுமா என்ற நிச்சயமின்மை ஆகிய காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்வதில் தயக்கம் காட்டலாம். பல சந்தர்ப்பங்களில், தங்களது அனுபவங்களை வெளிப்படுத்த முயல்பவர்கள் குற்றஞ்சாட்டப்பட்ட செயற்பாட்டின் மீது அல்லாது அவர்களது சொந்த நடத்தையின் மீது கவனத்தை திருப்பும் கேள்விகளை எதிர்கொள்கின்றனர்: ஏன் அவர் உரையாடலைத் தொடர்ந்தார்? கூறப்படுவது போன்று தொந்தரவு இடம்பெற்றிருந்தால் ஏன் உடனடியாக அங்கிருந்து விலகவில்லை? ஏன் அந்தச் சூழலில் தொடர்ந்தும் இருந்தார்? அல்லது அவரது நடத்தையே குற்றஞ்சாட்டப்பட்டவரின் செயற்பாட்டை ஊக்குவித்ததா?
இவ்வாறான எதிர்வினைகள், ஒரு சம்பவத்தை அறிவிக்க முன்வரும் தருணத்திலேயே பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு இரண்டாம் நிலை விசாரணை மற்றும் சந்தேகத்திற்குள் உட்படுத்தப்படுகின்றார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன. நம்பப்படாமை, குறைத்து மதிப்பிடப்படுதல் அல்லது குற்றப்பொறுப்பு தமக்கே சுமத்தப்படுதல் போன்ற நிலைகள் நிலவுகின்ற சூழலில், மௌனம் காப்பது பலருக்கும் தங்களை வெளிப்படுத்துவதை விட பாதுகாப்பான தெரிவாகத் தோன்றலாம். இத்தகைய சூழலில் வழிகாட்டல், பாதுகாப்பு மற்றும் ஆதரவை வழங்கக்கூடிய நம்பகமான நிறுவனரீதியான அமைப்பு ஒன்றின் இருப்பு மிக முக்கியமானதாக மாறுகின்றது. இதுவே பல்கலைக்கழகங்களில் பயனுள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவுக் குழுக்களின் தேவையை வலியுறுத்துகின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவுக் குழுக்கள் என்ன செய்ய வேண்டும்?
உயர்நீதிமன்றத்தின் எதிர்பார்ப்புக்கு அமைவாக, செயற்திறன் மிக்க பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவுக் குழுவொன்று, தனது செயற்பாடுகளின் மையத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் நிலைநிறுத்தும் நம்பகமான நிறுவனரீதியான கட்டமைப்பாக தொழிற்பட வேண்டும். பகிடிவதை சம்பவங்களை அச்சுறுத்தல் அல்லது பழிவாங்கல் குறித்த பயமின்றி அறிவிக்கக்கூடிய பாதுகாப்பான மற்றும் இரகசியத்தன்மை உறுதிப்படுத்தப்பட்ட தொடர்பாடல் மையமாக அக்குழு செயற்பட வேண்டும்.
அதேபோல், பாதிக்கப்பட்டவர்கள் தமக்குக் கிடைக்கக்கூடிய முறைப்பாட்டு நடைமுறைகளைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கும் தேவையான உதவிகளை வழங்க வேண்டும். தொடர்ச்சியான தொந்தரவு அல்லது அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்ற சந்தர்ப்பங்களில், அவர்களுக்கு உடனடியான பாதுகாப்பு கிடைப்பதை உறுதிப்படுத்துவதும் அக்குழுவின் பொறுப்பாகும்.
பகிடிவதை உளவியல் ரீதியாக ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், ஆலோசனைச் சேவைகள் மற்றும் உணர்வுரீதியான ஆதரவு வழங்கும் சேவைகளுக்கான அணுகலை ஏற்படுத்திக் கொடுப்பதும் இக்குழுவின் முக்கிய கடமையாகும். நடைமுறை ரீதியில் பார்க்கும்போது, சம்பவங்களை ஆவணப்படுத்துதல், வாக்குமூலங்களை பதிவு செய்தல் மற்றும் ஒழுக்காற்று அல்லது சட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான சான்றுகளைப் பாதுகாத்தல் போன்ற விடயங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும்.
மேலும், முறைப்பாடுகள் உடனடியாகவும் பொறுப்புணர்வுடனும் கையாளப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியுள்ளது. அதேவேளை, முன்வந்து முறைப்பாடு செய்பவர்களின் அடையாளமும் நலன்களும் பாதுகாக்கப்படும் வகையில் கடுமையான இரகசியத்தன்மையையும் பேண வேண்டும்.
தனிப்பட்ட சம்பவங்களுக்கு பதிலளிப்பதற்கு அப்பால், பகிடிவதை குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளிலும் இக்குழுக்கள் பங்களிக்க வேண்டும். இதன் மூலம் பகிடிவதை தீவிரமாக நிராகரிக்கப்படும் சூழலை உருவாக்குவதோடு, சம்பவங்களை அறிவிப்பதில் மாணவர்கள் பாதுகாப்பாக உணரக்கூடிய பல்கலைக்கழகச் சூழலையும் கட்டியெழுப்ப முடியும். இவ்வாறான ஆதரவு கட்டமைப்புகள் இல்லாத நிலையில், ஏற்கனவே துன்புறுத்தலின் உளவியல் தாக்கங்களுடன் போராடிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு நீதியை நாடும் செயன்முறை தாங்க முடியாத சுமையாக மாறக்கூடும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவுக் குழுக்களை செயற்திறனுடன் இயங்கச் செய்தல்
நீதிமன்ற உத்தரவுகளின்படி, இக்குழுக்களில் கல்விசார் மற்றும் கல்விசாராத பணியாளர்களின் பிரதிநிதிகள், தகைமையுடைய ஆலோசகர் அல்லது மருத்துவ உளவியலாளர், சட்ட அமுலாக்கம், சுகாதாரம் அல்லது சமூக சேவைகள் தொடர்பான அனுபவம் கொண்ட நிறுவனத்திற்கு வெளியேயான சுயாதீன நபர் ஒருவர், மேலும் குற்றப்பதிவுகள் அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகள் இல்லாத இறுதியாண்டு மாணவர்களில் அதிகபட்சம் மூவர் ஆகியோர் உள்ளடக்கப்பட வேண்டும். மாணவ உறுப்பினர்கள் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கும் அப்பால், மாணவர் நலன், உளவியல், பாலினக் கற்கைகள், மனித உரிமைகள் மற்றும் சட்ட அமுலாக்கம் போன்ற துறைகளில் நிபுணத்துவமும் உண்மையான அர்ப்பணிப்பும் கொண்ட நபர்களே இக்குழுக்களில் இடம்பெறுவதை பல்கலைக்கழகங்கள் உறுதிப்படுத்த வேண்டும். உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டல்களின் உள்ளார்ந்த நோக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் அன்றி பதவியின் அடிப்படையில் தானாக உறுப்புரிமை பெறும் (ex officio) நபர்களைக் கொண்டு பெருமளவில் நிரப்பப்படும் அமைப்புகளாக மாறக்கூடாது.
இக்குழுக்களை சிறப்பு அறிவு, உணர்திறன் மற்றும் பரிவுணர்வு தேவைப்படும் பொறுப்புகளாக கருதாது, வழக்கமான நிர்வாகப் பதவிகளாக மட்டுமே அணுகினால், அவை செயற்பாட்டு வலிமையுடைய அமைப்புகளாக அல்லாது குறியீட்டு ரீதியான அமைப்புகளாக மட்டுமே மாறும் அபாயம் காணப்படுகின்றது.
நியமனச் செயன்முறையில் அதிக வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் இக்குழுக்களின் நம்பகத்தன்மையை மேலும் பலப்படுத்த முடியும். இதற்காக, தொடர்புடைய துறைகளில் நிபுணத்துவமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதில் நிரூபிக்கப்பட்ட அர்ப்பணிப்பும் கொண்ட நபர்களிடமிருந்து விருப்ப வெளிப்பாடுகளை (expressions of interest) பல்கலைக்கழகங்கள் கோரலாம். இத்தகைய அணுகுமுறை, இப்பொறுப்பை திறம்பட நிறைவேற்றுவதற்கு மிகச் சிறந்த முறையில் தகுதி பெற்றவர்களின் அறிவும் அர்ப்பணிப்பும் இக்குழுக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்த உதவும்.
உயர்நீதிமன்றத் தீர்ப்பானது மேலும் முக்கியமான பாதுகாப்பு ஏற்பாடொன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, பல்கலைக்கழக மட்டத்திலான பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவுக் குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு (UGC) வழங்கப்பட்டுள்ளது. இவ்வதிகாரம் நேர்மையுடனும் பொறுப்புணர்வுடனும் பயன்படுத்தப்படுமானால், இக்குழுக்கள் அதிக சுயாதீனத்தன்மையுடன் செயற்படுவதை உறுதிப்படுத்த முடியும்.
மேலும், நிறுவனங்களுக்குள் சில நேரங்களில் தோன்றக்கூடிய ஒரு சிக்கலையும் இது சமாளிக்க உதவக்கூடும். அதாவது, வன்முறை, தொந்தரவு அல்லது மாணவர் நலன் போன்ற விடயங்களில் குறிப்பிடத்தக்க நிபுணத்துவமோ உறுதியான அர்ப்பணிப்போ கொண்ட நபர்கள், உள்நாட்டு நிர்வாக விருப்பத் தேர்வுகளின் காரணமாக நிறுவனரீதியான கட்டமைப்புகளில் எப்போதும் இடம்பிடிப்பதில்லை. இத்தகைய சூழலில் UGC-யின் வெளிப்புற மேற்பார்வை, அத்தகைய நபர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவுக் குழுக்களில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதோடு, இக்குழுக்களின் செயற்திறனையும் வலுப்படுத்தக்கூடும்.
இறுதியில், அண்மைய உயர்நீதிமன்றத் தீர்ப்பின் வெற்றியானது அது வெளியிட்டுள்ள வழிகாட்டல்களிலோ, பல்கலைக்கழகங்கள் நிறுவும் குழுக்களின் எண்ணிக்கையிலோ, அவை நடத்தும் கூட்டங்களின் எண்ணிக்கையிலோ, அல்லது நிர்வாகப் பட்டியல்களில் குறியிடப்பட வேண்டிய செயற்பாடுகளிலோ தங்கியிருக்காது. மாறாக, அவ்வழிகாட்டல்கள் எந்தளவிற்கு உண்மையான அர்ப்பணிப்புடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதிலும், இக்குழுக்கள் மாணவர்களிடமும் பணியாளர்களிடமும் எந்தளவிற்கு நம்பிக்கையை உருவாக்குகின்றன என்பதிலுமே அதன் வெற்றி அமையும்.
சட்டங்கள் பகிடிவதையைத் தடைசெய்ய முடியும். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அனுபவங்களை பாதுகாப்பாக வெளிப்படுத்தக்கூடிய சூழலை அவை தன்னிச்சையாக உருவாக்க முடியாது. அந்தப் பொறுப்பு நிறுவனங்களின் மீதே தங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குரலைக் கேட்கும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் மற்றும் அவர்களது அனுபவங்களை உரிய தீவிரத்தன்மையுடன் அணுகும் கட்டமைப்புகளை பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் போது மட்டுமே, கண்ணியமும் கற்றலும் ஒன்றோடொன்று இணைந்து நிலைத்திருக்கக்கூடிய இடங்களாக அவை மாறும்.



