பல்கலைக்கழகக் கட்டமைப்புகள் தோல்வியடையும் போது: பாலியல் தொந்தரவு வழக்கொன்றில் உயர்நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தலையீடு

ரம்யா குமார்

தனது ஆய்வு மேற்பார்வையாளருக்கு எதிராக பாலியல் தொந்தரவு தொடர்பான ஆரம்ப முறைப்பாட்டை முன்வைத்து ஏழு ஆண்டுகளுக்கும் மேலான காலத்தின் பின்னர், அன்றைய தற்காலிக விரிவுரையாளரும் இன்றைய பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி உதாரி அபேசிங்க அவர்களுக்கு இறுதியாக நீதி கிடைத்துள்ளது. 2026 மே 8 ஆம் திகதி, உதாரியின் அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. “1) முதலாவது, பிரதிவாதி [அவரது ஆய்வு மேற்பார்வையாளர்], ஊதியத்துடனோ அல்லது ஊதியமற்றதோ, கௌரவப் பதவியோ அல்லது வேறு எந்தவிதமான நியமனமோ என்ற பேதமின்றி, எந்தவொரு பல்கலைக்கழகம், கல்வி நிறுவனம் அல்லது பிற கல்விசார் நிறுவனத்திலும் எந்தப் பதவியையும் ஏற்கக் கூடாது; 2) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC), தனது அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கும், முதலாவது பிரதிவாதிக்கு ஊதியத்துடனோ, ஊதியமற்றதோ அல்லது கௌரவ நியமனமோ உட்பட எந்தவொரு பதவியையும் வழங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்; 3) பேராதனைப் பல்கலைக்கழகம், அதன் பேரவை மற்றும் தொடர்புடைய பிரதிவாதிகள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்காக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பாலியல் அல்லது பால்நிலை அடிப்படையிலான தொந்தரவு மற்றும் பாலியல் வன்முறை தொடர்பான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன் ஒரு பகுதியாக அனைத்து கல்விசார் பணியாளர்கள், ஏனைய பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் கட்டாய கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டும்.”

இத்தீர்ப்பைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை (SGBV) தொடர்பான செயன்முறைகளுக்கு எதிராக அவர் மேற்கொண்ட நீண்ட போராட்டத்தின் அனுபவங்களை அறிந்துகொள்வதற்காக நான் அண்மையில் உதாரியுடன் உரையாடினேன்.

வன்முறையும் அநீதியும்

உதாரி தனது முதுதத்துவமாணி (எம்.பில்.) ஆய்வினை ஆரம்பித்த காலத்தில் தற்காலிக விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார். அவரது ஆய்வு மேற்பார்வையாளர், அவரது பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியரும் பீடாதிபதியுமாக இருந்தார். அவருக்கெதிரான பாலியல் தொந்தரவுகள் 2017 ஆம் ஆண்டில் ஆரம்பமாயின.

உதாரி, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை தொடர்பான குழுவிடம் (SGBV Committee) உதவி கோரியபோது, அக்குழுவின் தலைவர் முறைப்பாடு செய்யப்பட வேண்டிய செயன்முறைகளை அவருக்கு விளக்கினார். அதில், அவரது சார்பில் மூன்றாம் தரப்பினரொருவர் முறைப்பாடு செய்யக்கூடிய நடைமுறையும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, 2018 ஜூலை மாதத்தில் உதாரியின் தாயார் துணைவேந்தருக்கு எழுத்துமூல முறைப்பாட்டொன்றை சமர்ப்பித்தார்.

இதுகுறித்து உதாரி கூறுகையில்,

அடுத்த நாளே [எனது மேற்பார்வையாளர்] எனக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, இந்த முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு கூறினார். இல்லையெனில் அது எனது எதிர்காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். முறைப்பாடு செய்தவரையும் குற்றஞ்சாட்டப்பட்டவரையும் பல்கலைக்கழகம் உடனடியாகப் பிரித்திருக்க வேண்டும். ஆனால் அப்படியான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.” எனக் குறிப்பிட்டார்.

உத்தியோகபூர்வ முறைப்பாட்டை முன்வைப்பதற்கு முன்னரே உதாரி தனது பீடத்திலுள்ள சில கல்விசார் பணியாளர்களிடம் உதவியை நாடியிருந்தார். தனது அனுபவங்களை நெருக்கமான சில சக பணியாளர்களுடன் பகிர்ந்துகொண்டார். அவர்களில் பலர், அப்பீடத்தை விட்டு விலகிச் செல்லுமாறே ஆலோசனை வழங்கினர்.

பீடத்தில் யாரும் வெளிப்படையாக எனக்கு ஆதரவளிக்கவில்லை. சிலர் தனிப்பட்ட ரீதியில் அனுதாபம் தெரிவித்தனர். ஆனால் நான் ஒரு தற்காலிக விரிவுரையாளராக இருந்தேன். உண்மையில் எனக்காக யாரும் அக்கறை காட்டவில்லை.”

பாலியல் தொந்தரவுகள் குறித்து அறிந்திருந்த சில கல்விசார் மற்றும் கல்விசாராத பணியாளர்களும் தங்களை இவ்விடயத்தில் தொடர்புபடுத்த வேண்டாம் என உதாரியிடம் கோரியிருந்தனர். உயர் நிர்வாக மட்டங்களிலிருந்து பழிவாங்கப்படலாம் என்ற அச்சமே அதற்குக் காரணமாக இருந்தது.

உதாரியின் முறைப்பாடு முதலில் ஆரம்பகட்ட விசாரணைக்கும் பின்னர் முறையான ஒழுக்காற்று விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டது. ஆரம்பகட்ட விசாரணை, முறைப்பாடு செய்யப்பட்டு சுமார் நான்கு மாதங்களுக்குப் பின்னர் நடைபெற்றதுடன், விசாரணைக் குழு முழுமையான விசாரணை ஒன்றை முன்னெடுக்க பரிந்துரைத்தது. அதனைத் தொடர்ந்து, ஆரம்ப முறைப்பாட்டிற்கு ஏறத்தாழ ஓராண்டுக்குப் பின்னர் முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்பகட்ட விசாரணையின் போது வழங்கப்பட்ட அனைத்து வாக்குமூலங்களையும் [எனது மேற்பார்வையாளர்] எப்படியோ பெற்றுக்கொண்டதாகவும், பின்னர் சில சக பணியாளர்களை அழுத்தம் கொடுத்து முறையான விசாரணையில் தங்களது வாக்குமூலங்களை மாற்றுமாறு வற்புறுத்தியதாகவும் அதிகாரபூர்வமற்ற வகையில் அறிந்துகொண்டேன்.”

முறையான விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில், பணியாளர்களிடையே பெயரில்லா அவதூறு துண்டுப் பிரசுரமொன்று (“கல்பத்திரய”) பரப்பப்பட்டது.

அது என்னுடைய நற்பெயரைக் களங்கப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட குணநலன் படுகொலையாக இருந்தது. அவ்வாறான ‘கல்பத்திரய’ அவ்வப்போது மீண்டும் மீண்டும் பரப்பப்பட்டுக்கொண்டே இருந்தது.”

முறையான விசாரணைக் குழு தனது அறிக்கையையும் பரிந்துரைகளையும் சமர்ப்பித்த பின்னர், பல்கலைக்கழகப் பேரவை குறித்த அறிக்கையை நிராகரித்துள்ளதாக உதாரிக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையோ, முறையான விசாரணை அறிக்கையோ எனக்கு வழங்கப்படவில்லை. ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையைப் பெறுவதற்குக்கூட நான் துணைவேந்தரிடம் தனியாக எழுத்துமூல கோரிக்கை விடுக்க வேண்டியிருந்தது. முறையான விசாரணை அறிக்கையை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் விண்ணப்பித்தே பெற்றுக்கொண்டேன். என்னுடைய புரிதலின்படி, [எனது மேற்பார்வையாளர்] பல்கலைக்கழகப் பேரவையின் மீது செல்வாக்கு செலுத்தியிருந்தார். அதனால்தான் அவர்கள் விசாரணை அறிக்கையை நிராகரித்தனர். முறைப்பாடு செய்வதில் ஆறு மாத தாமதம் ஏற்பட்டதாகக் காரணம் கூறப்பட்டது.”

(குறிப்பு: பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை தொடர்பான உபவிதிகளில் முறைப்பாடு செய்வதற்கான காலவரையறை எதுவும் விதிக்கப்படவில்லை. எனினும், வேறு சில பல்கலைக்கழகங்களில் இத்தகைய காலக்கெடுகள் காணப்படுகின்றன.)

இதனைத் தொடர்ந்து, உதாரி 2020 ஆகஸ்ட் மாதத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும், 2020 டிசம்பர் மாதத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் உத்தியோகபூர்வ முறைப்பாடுகளைச் சமர்ப்பித்தார். இறுதியில், 2021 மார்ச் மாதத்தில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்தார். அதன்பின் ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், 2026 மே 8 ஆம் திகதி, உதாரியின் முறைப்பாடு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கான நீதி நிலைநாட்டப்பட்டது.

பல்கலைக்கழகச் செயன்முறைகளும் விசாரணைகளும்

உதாரியின் தாயார் அவரது ஆய்வு மேற்பார்வையாளருக்கு எதிராக முறைப்பாட்டைச் சமர்ப்பித்த காலத்தில், உதாரி தற்காலிக விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார். பீடமொன்றின் உறுப்பினருக்கு எதிராக முறைப்பாடு செய்ததன் பின்னர் தனக்கு நிரந்தர கல்விசார் பதவியொன்று வழங்கப்படாது என்ற நம்பிக்கையின்மையின் காரணமாக, பல்கலைக்கழகக் கல்வித்துறையில் தனது தொழில் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற கனவையே அவர் கைவிட்டிருந்தார். பின்னர் உதாரி நிரந்தர நியமனம் பெற்றமை நம்பிக்கையூட்டும் விடயமாக இருந்தாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மாணவர்களும் ஆரம்பநிலை கல்விசார் பணியாளர்களும் தமது கல்விசார் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக தமக்கு நேரும் அநீதிகளை சகித்துக்கொண்டு மௌனம் காக்கும் நிலையிலேயே காணப்படுகின்றனர். மேலும், பழிவாங்கும் நடவடிக்கைகளிலிருந்து பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான போதுமான செயன்முறைகள் தற்போது எமது பல்கலைக்கழகங்களில் காணப்படுவதில்லை.

உதாரியின் கருத்துப்படி, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை (SGBV) தொடர்பான குழுவின் முன்னாள் தலைவரும், ஆரம்பகட்ட விசாரணைக் குழுவின் உறுப்பினர்களும் அவரது வழக்கில் தீர்மானகரமான பங்கினை வகித்தனர். அவரது சொற்களில் கூறுவதானால், அவர்கள் “செல்வாக்கு செலுத்தப்பட முடியாதவர்களாக” இருந்தனர். எனினும், அரச பல்கலைக்கழகங்களில் நடைமுறையிலுள்ள பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை தொடர்பான உபவிதிகள், அளவுக்கு மீறிய அதிகாரங்களை பல்கலைக்கழகப் பேரவைக்கும் துணைவேந்தருக்கும் வழங்குகின்றன.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் குறித்த உபவிதிகளின்படி, பதினைந்து உறுப்பினர்களைக் கொண்ட பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை தொடர்பான குழுவை பல்கலைக்கழகப் பேரவையே நியமிக்கின்றது. அக்குழுவில், “பல்கலைக்கழகப் பேரவையின் உறுப்பினர்களில் இருவர் (02), நிரந்தர மற்றும் சிரேஷ்ட கல்விசார் சமூகத்தைச் சேர்ந்த பத்து (10) உறுப்பினர்கள், மேலும் பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருந்து, பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற கல்விசார் அல்லது நிர்வாக உத்தியோகத்தர்களில் மூவர் (03)” இடம்பெற வேண்டும் என (பிரிவு 2.1) குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “பால்நிலை உணர்திறன் கொண்டவர்களாகவும், பால்நிலைச் சமத்துவம் மற்றும் சமவாய்ப்பு தொடர்பான விடயங்களில் நிரூபிக்கப்பட்ட அக்கறையுடையவர்களாகவும், பாலியல் அல்லது பால்நிலை அடிப்படையிலான தொந்தரவு மற்றும் பாலியல் வன்முறை தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கும் ஆராய்வதற்கும் பயிற்சிபெற்றவர்களாகவும்” இருப்பவர்களை நியமிக்க வேண்டும் என உபவிதிகள் பரிந்துரைக்கின்றன (பிரிவு 2.1). எனினும், நடைமுறையில் இப்பரிந்துரைகள் பல சந்தர்ப்பங்களில் பின்பற்றப்படுவதில்லை என்பதை நாம் அறிவோம்.

பல பல்கலைக்கழகங்களில் எந்த முறைப்பாடுகள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதையும், அவை ஒழுக்காற்று விசாரணைக்கு முன்னெடுக்கப்பட வேண்டுமா என்பதையும் தீர்மானிப்பதில் துணைவேந்தர்கள் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்துகின்றனர். இதன் விளைவாக, அரச பல்கலைக்கழகங்களில் தற்போது நடைமுறையிலுள்ள பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை தொடர்பான முறைப்பாட்டு நடைமுறைகள் குறித்து மாணவர்களும் பணியாளர்களும் பெரிதளவில் நம்பிக்கையிழந்த நிலையிலேயே காணப்படுகின்றனர்.

உதாரியின் அனுபவம் எடுத்துக்காட்டுவது போன்று, விசாரணைக் குழுக்கள் வழங்கும் தீர்மானங்களைக்கூட பல்கலைக்கழகப் பேரவைகள் மீறி நிராகரிக்க முடியும். இது, பல்கலைக்கழகப் பேரவைகளுக்கு பொருத்தமான உறுப்பினர்களை நியமிப்பதன் அவசியத்தை தெளிவுபடுத்துகின்றது. பதவியின் அடிப்படையில் (Ex-officio) பேரவையில் உறுப்புரிமை பெறும் பீடாதிபதிகள், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமது சொந்த நலன்களையும் தாம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதிகாரப் பரப்புகளையும் பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்து செயற்படுகின்றனர். அதேவேளை, பேரவைகளுக்கு வெளியக உறுப்பினர்களை நியமிக்கும் செயன்முறையும் ஆழமான அரசியல்மயப்படுத்தலுக்கு உட்பட்டதாகவே காணப்படுகின்றது.

தற்போது, வெளியக உறுப்பினர்களை நியமிப்பதற்கு முன்னர் திறந்த விண்ணப்ப அழைப்போ, தகுதிசார் மதிப்பீட்டுச் செயன்முறையோ நடைமுறையில் இல்லை. பதவியில் உள்ள அரசியல் நிர்வாகத்துக்கு ஆதரவானவர்களாகக் கருதப்படுபவர்களே பொதுவாக இப்பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர். மேலும், பேரவையின் வெளியக உறுப்பினர்கள், விவாதிக்கப்படும் விடயங்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதில் பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் படிநிலைகளையே சார்ந்திருக்க வேண்டிய சூழலில் உள்ளனர். அத்தகவல்களின் முழுமையான விவரங்களும் பல சந்தர்ப்பங்களில் அவர்களிடமிருந்து மறைக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில், பல்கலைக்கழகப் பேரவைகள் அதிகாரத்தின் பக்கச்சார்பாகவே தீர்மானங்களை வழங்குகின்றன என்பது ஆச்சரியமளிக்கும் விடயமல்ல.

இறுதிப் பரிந்துரை

உதாரியின் முன்னாள் ஆய்வு மேற்பார்வையாளரை பல்கலைக்கழக அமைப்பிற்குள் எந்தவொரு பதவியையும் வகிப்பதிலிருந்து தடைசெய்திருப்பதற்கு அப்பால், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்விசார் மற்றும் கல்விசாராத பணியாளர்களிடையிலும் மாணவர்களிடையிலும் பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை (SGBV) தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களுக்கும் புதிய பணியாளர்களுக்கும் வழங்கப்படும் அறிமுக நிகழ்ச்சிகள் மற்றும் திசைநெறிப்படுத்தல் (Orientation) நிகழ்ச்சிகளில் பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்படுகின்றன. எனினும், உதாரியின் வழக்கின் தீர்ப்பில் முக்கிய பங்காற்றிய முறைப்பாட்டு நடைமுறைகளின் நுணுக்கங்கள், குறிப்பாக காலவரையறைகள் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் மாணவர்களும் பணியாளர்களும் தெளிவுபடுத்தப்பட வேண்டியது அவசியமாகும். ஆனால், விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமே போதுமானதா? தன்னிச்சையான அல்லது பாரபட்சமான தீர்மானங்களை எடுப்பது உள்ளிட்ட அதிகாரத் துஷ்பிரயோகங்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தை பொறுப்புக்கூறச் செய்வதற்கான பயனுள்ள வழிமுறைகள் எம்மிடம் உள்ளனவா?

உதாரியைப் பொறுத்தவரையில், அவரது அன்றாட வாழ்க்கை தொடர்ந்தும் சிரமங்களால் நிரம்பியதாகவே உள்ளது. அவரது செயற்பாடுகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதாக அவர் உணருகின்றார்.

“2024 நவம்பர் மாதத்தில், எனது வழக்கு தொடர்பான செய்தியொன்றை நான் பகிர்ந்திருந்தேன். உயர்நீதிமன்றம் எனது அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளதாக வெளியான பத்திரிகைச் செய்தி அதுவாகும். அந்தச் செய்தியை வெறுமனே புகைப்படமெடுத்து எந்தவிதமான குறிப்பும் எழுதாமல் எனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டேன். சில வாரங்களுக்குப் பின்னர் உயர் நிர்வாக அதிகாரிகளால் நான் அழைக்கப்பட்டேன். சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பீடத்தினதும் பல்கலைக்கழகத்தினதும் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக பல கல்விசார் பணியாளர்கள் என்னைப் பற்றி வாய்மொழி முறைப்பாடு செய்துள்ளதாகவும், அவ்வாறெனில் எனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் பல்கலைக்கழகப் பேரவைக்கு இருப்பதை நான் அறிந்திருக்க வேண்டும் என்றும் எனக்கு கூறப்பட்டது. அந்தச் சந்திப்பில் எனது வழக்கு பற்றியும் சுருக்கமாக உரையாடப்பட்டது. ஒரு கட்டத்தில், குறித்த நபரிடம் (குற்றஞ்சாட்டப்பட்டவரிடம்) நான் ஓரளவு நேர்மறையான அணுகுமுறையைக் காட்டியதாலேயே இந்தத் தொந்தரவு எனக்கு ஏற்பட்டது என்றும் கூறப்பட்டது.”

எதிர்காலத்தில் பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களை மீண்டும் மீண்டும் பாதிப்படையச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் பல்கலைக்கழக நிர்வாகங்கள் சிந்தித்து செயற்படும் என நம்புவோம். ஒரு பல்கலைக்கழக சமூகமாக, பல்கலைக்கழகங்கள் இயங்கிவரும் படிநிலை அடிப்படையிலான அதிகாரக் கட்டமைப்புகளை மீளாய்வு செய்வதுடன், மாணவர்களும் பணியாளர்களும் எந்தவிதமான எதிர்விளைவுகளையும் அச்சமின்றி முறைப்பாடுகளை முன்வைக்கக்கூடிய அர்த்தமுள்ள நிறுவனரீதியான செயன்முறைகளை உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

இந்த முக்கியமான முன்னெடுப்பை மேற்கொண்டதற்காக உதாரிக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். பல்கலைக்கழக நிர்வாகங்கள் இனிமேலாவது நிறுத்தி, செவிமடுத்து, தங்களது நடைமுறைகளில் அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன