இலங்கை பல்கலைக்கழகங்களில் நரம்பியல்பன்முகத்தன்மை, உள்ளீர்க்கும் கல்வி மற்றும் தர உத்தரவாதம்

சுதேஷ் மந்திலக்க‌

இந்த ஆக்கம் நரம்பியல்பன்முகத்தன்மை என்ற கருத்தாக்கத்தின் மூலம்
எமது கல்வியை மேலும் உள்ளீர்க்கும் வகையில் கற்பனை செய்வதை
நிகழ்த்துகின்றது. முதலில் நான் ஆட்டிசம்‍ மன இறுக்க நோயின்
நிறமாலையான நரம்பியல்பன்முகத்தன்மை நிலையை குறித்து பேசிவிட்டு
உள்ளீர்க்கும் கல்வி தொடர்பில் இலங்கையில் காணப்படும் சவால்களையும்
அவற்றை உறுதிப்படுத்துவதில் இலங்கை பல்கலைக்கழகங்களில்
காணப்படும் தற்போதைய தர உறுதிப்பாட்டு செயன்முறையில் இருக்கும்
கட்டுப்பாடுகளையும் ஆராய்கின்றேன்.

இலங்கையில் ‘கலாசார பன்மைத்துவம்’ அல்லது ‘உயிர்‍பல்வகைமை’
போன்ற சொற்றொடர்கள் அறியப்பட்ட அளவிற்கு ‘நரம்பியல்பல்வகைமை’
என்ற பதம் அறியப்படவில்லை. பொது நிகழ்வுகளில் “நாம் கலாசார
பன்மைத்துவத்தை ஆதரிக்கின்றோம்” போன்ற கோஷங்கள்
மேற்கொள்ளப்படும் போது எமது நாடு ஒரு பல்கலாசார நாடென்பதை
ஏற்றுக்கொள்கின்றோம். கலாசார பன்மைத்துவத்தை போலவே
நரம்பியல்பல்வகைமை என்பது, எமது மூளை எவ்வாறு நரம்பியல் ரீதியாக
நமது செயற்பாடுகளோடு பின்னிப்பிணைந்திருக்கின்றது என்பதையும்
இதனால் எமது அனுபங்கள் தனித்தன்மை வாய்ந்தாக காணப்படுவதோடு
நாம் உலகோடு ஊடாடும் முறைமைகளும் வித்தியாசப்படுவதையும்
அறிவதாகும். உதாரணமாக ஒருவர் மறைமுக அர்த்தம் கொண்ட
நகைச்சுவையை மேற்கொள்ளும் போது சிலர் அதன் நேரடி அர்த்தத்தை
கண்டுகொள்வதோடு மற்றும்சிலர் அதன் மறைமுக அர்த்தத்தை
கண்டுகொள்கின்றனர். ஒருவர் எப்போதும் நேரடியான அர்த்தத்தை
புரிவாராயின் (மறைமுக அல்லது குறிப்பான அர்த்தத்தை விடுத்து) அது ஒரு நரம்பியல் சார்ந்த நிலையை உணர்த்துகின்றது. உதாரணமாக,
நரம்பியல்பன்முகத்தன்மையை ஆதரிப்பவரான‌ எலிசபத் விக்லேன்டர்
அவர்கள் தன்னை ‘மன இறுக்கநிலை’ கொண்டவராக
அடையாளப்படுத்துவதோடு லண்டன் பில்ஹார்மோனிக் ஓச்செஸ்ட்ராவுடன்
இணைந்து பரிசுவென்ற செல்லோ இசைக்கருவி வாசிப்பவராகவும்
காணப்படுகின்றார். ஒரு TED டோக் நிகழ்ச்சியில் அவர் பேசும் பேசும்போது,
அவர் தனது மெய்நிகர் உணர்தன்மையால் வாய்மொழிசார் மற்றும்
வாய்மொழிசாரா சமூக நிலைகளின் நுணுக்கங்களோடு எப்போதும்
சிக்கல்தன்மையை உணர்வதாக கூறுகின்றார். “எனக்கு நகைச்சுவைகளோ
கேலி நையாண்டிகளோ எப்போதுமே புரிவதில்லை. எனது மனம் எப்போதும்
விடயங்களை நேரடியாகவே புரிந்துகொள்ளும். அது எல்லாவற்றையும்
கூர்ந்து ஆராயவே செய்யும். எனது உலகம் மிகவும் அழுத்தமானது”
என்கின்றார். இவரின் கருத்துப்படி, மன இறுக்கமே அவரின் சிந்தனைகள்,
கற்பனை, உணர்வுகள், உணர்வெழுச்சிகள் மற்றும் தான் எவ்வாறு
தகவல்களை முறைவழிப்படுத்துவதில் செல்வாக்கு செலுத்துவதாக
கூறுகின்றார்.

இருப்பினும், சமூகத்தில் பெருவாரியான மக்கள் உலகத்தோடு ஊடாடும்
முறைகளில் பொதுத்தன்மை காணப்படுவதால், அது ‘வழமையாக’ அல்லது
சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் கருத்துருவாக மாறும் நிலை ‘நரம்பியல்
பொதுத்தன்மை’ என குறிப்பிடப்படுகின்றது. “நரம்பியல் பொதுத்தன்மை
உடைய” நபர்கள் சமூகத்தின் பெரும்பான்மையான அல்லது ஆதிக்கம்
செலுத்தும் கலாசார நிலையில் இருந்து தகவல்களை
முறைவழிப்படுத்துகின்றனர். இவர்களின் மூளைகள் சமூகம் எதிர்பார்க்கும்
“வழக்கமான’ முறையில் தகவல்களை முறைவழிப்படுத்தி
செயலாற்றுகின்றன. இவ்வாறான ஆதிக்க மக்களின் இயல்புநிலையாக்கம்
நரம்பியல் பன்மைத்தன்மையை வெளிப்படுத்தும் வித்தியாசமான
நிலைகளிலான நிறமாலைகளை வெளிப்படுத்தும் மக்களுக்கு சவாலாக
அமைகின்றது. எனவே ‘நரம்பியல் பன்முகத்தன்மை’ என்பது 1990களில் சமூக
மற்றும் மனித உரிமைகளுக்கான இயக்கமாக உருவாகியதோடு ‘நரம்பியல் சிறுபானையினருக்கான’ உள்ளீர்ப்பை கோரி நிற்கும் அமைப்பாகவும்
வியாபித்திருக்கின்றது.

இலங்கையில் கல்வியும் மன இறுக்க நிலையும்

நரம்பியல் பன்முகத்தன்மை என்ற பதம் அனைத்து மக்களையும்
உள்ளடக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டாலும் அது குறிப்பாக
பயன்படுத்தப்படுவது ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் (ASD) மற்றும்
கற்றலில் உள்ள இடர்பாடுகளின் பிண்ணனியிலிருந்தே ஆகும். ASD என்பது
நரம்பியல் மற்றும் வளர்ச்சி சம்பந்தப்பட்டதும் மக்கள் அடுத்தவர்களோடு
ஊடாடுதல், தொடர்பாடுதல், கற்றல் மற்றும் நடத்தை சார்ந்ததுமான
கோளாறாகும். 2017ல் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் படி இலங்கையில்
ASDயின் நிலவல் 1.07%மாகும். இதன்படி, இக்கோளாறு
கண்டுபிடிக்கப்பட்டாலும் பாடாவிட்டாலும் எம்மில், எமது குடும்ப
அங்கத்தவர்களில் இதன் நிலவல் காணப்பட வாய்ப்புகளுண்டு என்பதாகும்.

இலங்கையில் காணப்படும் SLYCAN நிதியம் எனும் இலாப நோக்கற்ற
ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் எழுத்தாளரும் ஆய்வாளருமான
டேனிஸ் மொம்பயர் என்பவர் ASD மற்றும் இலங்கையில் கல்வி அமைப்பு
தொடர்பில் தனது ஆய்வுக்கவனத்தை அதிகம் செலுத்துபவராக இருக்கின்றார்.
‘இலங்கையில் மன இறுக்கக்கோளாறு: விழிப்புணர்வும் ஏற்றுக்கொள்ளலும்’
எனும் தனது ஆக்கத்தின் இறுதிப்பகுதியில் அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார்:
“ஆயிரக்கணக்கான மக்கள் ஆட்டிசத்தால் தமது சிறுபராயம் அல்லது
முதிர்ந்த வயதில் பாதிக்கப்படுவதோடு அவர்கள் தாம் எவ்வாறு
இருக்கின்றோம், எவ்வாறு செயற்படுகின்றோம் என்பதற்காக
ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மாத்திரமன்றி
முழு மொத்த சமூகமுமே அவர்களை ஏற்று சமூகத்தில் ஒன்றிணைத்துக்
கொள்வதோடு அவர்களின் ‘நரம்பியல் பெரும்பான்மையிலிருந்தான’
வித்தியாசங்களை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். ஆவ்ர்களின் குரல்கள்
கேட்கப்படவும், அவர்களின் அனுபவங்கள் அறியப்படவும்
வேண்டியிருப்பதோடு ஏனையோருடன் இணைந்து செயற்படும்படியாக சூழல்கள் மாற்றப்படவும் வேண்டும்”. களனிப் பல்கலைக்கழகத்தின்
இயலாமை சார்ந்த கற்கைகள் துறையை சேர்ந்த மூத்த விரிவுரையாளரான
நிமிஷா முத்தையா அவர்களின் ஆக்கமான ‘இலங்கையில் ஆட்டிசம்
ஸ்பெக்ட்ரம் டிசார்டர் (ASD)‍: நிலவும் சூழ்நிலை மற்றும் எதிர்கால
இலக்குகளில்’ இலங்கையில் காணப்படும் சூழ்நிலையில் எதிர்காலத்தில்
ஆட்டிசம் காணப்படும் இளம்வயதினர் எவ்வாறு கல்வி அமைப்பிலிருந்து
மறுக்கப்படுவார்கள் என்பதை சுட்டிக்காட்டுகின்றார். இலங்கையின் கல்வி
அமைச்சின் கருத்துப்படி நரம்பியல் பன்முகத்தன்மை கொண்ட
மாணவர்களுக்கு இடமளிப்படதில் அவர்கள் முகங்கொடுக்கும் மிக முக்கிய
சவாலாக பயிற்றப்பட்ட ஆசிரியர்களின்மையை குறிப்பிடுகின்றார்.

தர உறுதிப்பாடு தீர்வாகுமா?

பன்மைத்துவமான குழந்தைகளையும் இளைஞர்களையும்
கல்விக்கொள்கைக்குள் இணைப்பதற்கான முக்கியமான வழிமுறை
உள்ளீர்க்கும் கல்வி அமைப்பொன்றை ஏற்படுத்துவதாகும். UNICEFன் படி,
உள்ளீர்க்கும் கல்வி அமைப்பு என்பது, எவ்வகையான மாணவர்களாயினும்,
அவர்களின் இயலுமைகள் மற்றும் தேவைப்பாடுகள் யாதாகினும், அவர்களின்
தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ய இயலுமான நிலையில் அவர்களாஇ
வரவேற்று ஆதரவு புரியும் அமைப்பாகும். எமது கல்வி அமைப்பு ஏன்
உள்ளீர்க்கும் தன்மை உடையதாயில்லை? பலருக்கு இவ்விடயத்தில்
வித்தியாசமான கருத்துகள் இருக்கலாம். நரம்பியல் பன்மைத்துவம் மற்றும்
உள்ளீர்க்கும் கல்வி தொடர்பான விழிப்புணர்வின்மை போன்ற விடயங்கள்
தற்போதைய நிலைக்கு பங்களித்திருக்கக்கூடும். இருப்பினும், இவ்விடயம்
தொடர்பில் இலங்கையில் கொள்கையளவில் எவ்வித அக்கறையோ,
அரசியல் ஈடுபாடோ காணப்படவில்லை என்பதே உண்மையாகும். கடந்து
வந்த அரசாங்கங்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள், பேராசிரியர்கள்,
விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பொதுவாக நரம்பியல்
பொதுத்தன்மையையே உயர்த்திப்பிடித்திருப்பதோடு பெரும்பாலும்
இவ்வாறான விடயங்களில் மௌனமாக கடந்து சென்றுள்ளதே
உண்மையாகும்.

தர உறுதிப்பாட்டு செயன்முறை (QA) இலங்கையில் உள்ள உயர்கல்வி
நிறுவனங்களை சர்வதேச தரத்திற்கு இணையாக கொண்டுவருவதற்கு
ஏதுவான செயன்முறையாக முன்வைக்கப்படுகின்றது. கோட்பாட்டளவில்
இச்செயன்முறை முற்போக்காக காணப்பட்டாலும் இச்செயன்முறையில்
நடைமுறையில் நரம்பியல் பன்மைத்துவம் மற்றும் உள்ளீர்க்கும் கல்வி
ஆகியன இடம்பெற்றுள்ளதா? QA கையேடுகளில் “ஊனமுற்ற மாணவர்கள்
உட்பட அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட
வேண்டும்”, “சிறப்புத்தேவைகள் உடைய மாணாவர்களுக்கான வளங்கள்
மற்றும் சேவைகள் வழங்கப்பட வேண்டும்” போன்ற விடயங்கள்
கொள்கையளவில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், கொள்கைகளை விருத்தி
செய்வதை விடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தும்படியான எந்த
நடவடிக்கைகளுமே பல்கலைக்கழக/ துறைசார் அளவில் நடைபெறவில்லை.
உயர்கல்வி அமைச்சு உள்ளீர்க்கும் கல்விக்காக இருக்கட்டும், அரச
பல்கலைக்கழகங்களை நடாத்துவதற்கு போதுமான நிதிகளையே
ஒதுக்குவதில்லை. அகில கதிர்காமர் அண்மையில் எழுதிய (21.11.2023) குப்பி
ஆக்கத்தில் அரச பல்கலைக்கழகங்களுக்காக நிதி ஒதுக்கீடு மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் 0.25%மாக குறைந்திருப்பதாக
சுட்டிக்காட்டியிருக்கின்றார். இந்நிலையில் எவ்வாறு உள்ளீர்க்கும் கல்விக்கான
உட்கட்டுமானத்தையோ பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களையோ
உள்வாங்கலாம்? தர உறுதிப்பாட்டு செயன்முறையின் கீழ் கட்டாயம்
உள்ளீர்க்கும் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட வேண்டும்.

பன்மைத்துவத்துக்கான முறையான அக்கறை, செயற்பாடு மற்றும் ஈடுபாடு
இல்லாவிடின் கொள்கைகள் வெறுமனே அலங்காரங்களே. எமது கல்வி
அமைப்பில் நரம்பியல் பன்மைத்துவத்தை இடம்பெறச்செய்ய என்று நாங்கள்
நடவடிக்கை எடுக்கப் போகின்றோம்? எமது உயர்கல்வி அமைச்சும்
பல்கலைக்கழகங்களும் வெளிப்படையாக தெரியும் கலாசார பன்மைத்துவம்
மற்றும் அரசியல் யாப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள
மொழிக்கொள்கைகளையே கைக்கொள்ளத் தவறும் சூழலையே நாம்
காண்கின்றோம். அமைச்சும் பல்கலைக்கழக அதிகாரிகளும் தமது ஊழியர்களுக்கு மத்தியிலேயே கலாசார பன்மைத்துவத்தை கைக்கொள்ளாத
நிலையில் நரம்பியல் பன்மைத்துவத்தை ஏற்பதை நாம் எதிர்பார்க்கலாமா?
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கல்வி அமைச்சின் உயர்கல்வி
பிரிவினால் நிர்வாகபூர்வமாக சிங்களத்தில் “கல்விசார் ஊழியர்களின்
வெளிநாட்டு கற்கைக்கான விடுப்புக்காக நிகழ்நிலை விண்ணப்பித்தல்”
(ஆங்கிலத்தில் எழுத்தாளரின் மொழிபெயர்ப்பு) என்ற தலைப்பில் ஒரு கடிதம்
பகிரப்பட்டது. நான் கற்பிக்கும் பேராதனை பல்கலைக்கழகத்தின்
கலைப்பீடத்தில் கற்பிக்கும் பல சிங்களம் பேசாத/ தமிழ் பேசும் கல்விசார்
ஊழியர்களிடையே தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாத நிலையில் கேள்விகள்
எழுப்பப்பட்டன. இலங்கையின் அரசியல் யாப்பின் படி சிங்களமும் தமிழும்
தேசிய மற்றும் நிர்வாக மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மூல
ஆவணம் சிங்களத்தில் காணப்பட்டாலும் நிர்வாக ஊழியர்களிடையே பகிரும்
போது தமிழ் மொழிபெயர்ப்பு ஆவணமும் வழங்கப்பட வேண்டுமென
அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்ப்பட்டுள்ளது. ஒருவேளை
அமைச்சானது தமிழ் மொழிபெயர்ப்பு ஆவணத்தை வடகிழக்கு பகுதிகளுக்கு
பகிர்ந்திருக்கலாம். அப்படியாயின் தெற்கில் பணிபுரியும் தமிழ் பேசும்
கல்விசார் ஊழியர்களை என்ன செய்வது? துரதிஷ்டவசமாக, தர
உறுதிப்பாட்டு செயன்முறையானது கலாசார பன்மைத்துவத்துக்கான
இடத்தை வழங்குவதற்குக் கூட நிதியொதுக்கீடு
மேற்கொள்ளவில்லையெனின் நரம்பியல் பன்மைத்துவத்தைக் குறித்து
பேசவே முடியாது.

தற்போதைய QA செயன்முறையின் படி இலங்கையின் உயர்கல்வியில்
காணப்படும் சிக்கல்களை அடையாளம் காணுவதை விட அனைத்தையும்
ஆவணங்கள் ஊடாக சமர்ப்பிப்பதிலேயே குறியாய் இருக்கின்றது. QA
செயன்முறை வெறுமனே பல்கலைக்கழகங்கள் தமது தரத்தை
பேணுகின்றனவா என்பதை ஆவணங்கள் மூலம் ‘ஆதாரம்’ சேகரிக்கும்
செயன்முறையாக ஆகிவிடக்கூடாது. தற்போதைய நிறுவன திறனாய்வுக்கான
கையேட்டின் 4.9 படித்தரத்தின் படி “பல்கலைக்கழகம்/ உயர்கல்வி நிறுவனம்
விஷேட தேவையுடைய மாணாவ்ர்களுக்கான பொருத்தமான கல்வி
வளங்கள், கல்விசார் ஆதரவு சேவைகள், கற்பித்தலுக்கான உத்திகள், வழிகாட்டி, மற்றும் உட்கட்டுமான வசதிகளை மேற்கொள்ள வேண்டும்”.
எமது பல்கலைக்கழகங்கள் இவற்றை சரியான முறையில் வழங்குவதாக
ஆவணங்களில் ‘ஆதாரம்’ காட்டி அதனால் QA திறனாய்வில் A
படித்தரங்களை பெற்றாலும் நடைமுறையில் பல்கலைக்கழகங்களில் கற்கும்
விஷேட தேவையுடைய மாணவர்கள் பாரிய சவால்களை
முகங்கொடுக்கின்றனர். 10.10.2023ல் எரந்திகா டீ சில்வா அவர்களால்
எழுதப்பட்ட குப்பி ஆக்கத்தில் பல்கலைக்கழகங்களில் கற்கும் விஷேட
தேவையுடைய மாணவர்கள் முகங்கொடுக்கும் சவால்கள் விலாவாரியாக
எழுதப்பட்டிருக்கின்றன. வெற்றுக்கண்களால் மிகக்குறைந்த அளவே
அவதானிக்கக்கூடிய கற்றல் கோளாறுகள் உடைய நரம்பியல் பன்மைத்துவ
மாணவர்களின் அனுபவங்கள் நமக்கு மிகவும் அந்நியமாகவே இருக்கின்றன.

இலங்கை பல்கலைக்கழகங்களில் QA செயன்முறைகளை பார்க்கும் போது
சிங்கள் பழங்கதைகளில் வரும் இப்பழமொழியை நினைவுகூறாமல் இருக்க
முடியவில்லை: “நோயாளி மரித்துப்போனாலும் வயிறு சுத்தமாகி விட்டது”.
தற்போதைய QA செயன்முறை அவ்வாறே தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு
வருமாயின் எதிர்காலத்தில் நாமும் நிறுவன மற்றும் செயல்திட்ட
திறனாய்வுகளின் பின்னர் இதையே சொல்லும் நிலைக்கு வந்துவிடுவோம்:
“நோயாளி மரித்துப்போனாலும் வயிறு சுத்தமாகி விட்டது”. எமது
பல்கலைக்கழகங்கள் இறந்தோ செயலிழந்தோ காணப்படின் QA
திறனாய்வுகளின் பின்னர் வழங்கப்படும் A தரம் எதற்கு? எமது
பல்கலைக்கழகங்களை பாதுகாத்து அவற்றை நரம்பியல் பன்மைத்துவ
மாணவர்களுக்கான தளங்களாக மாற்ற வேண்டியது காலத்தின்
தேவையாகும்.