கலைப்பீடங்களும் ஆய்வுகளின் மேம்பாடும்

கெளஷல்யா பெரேரா

அரச பல்கலைக்கழகங்கள், குறிப்பாக மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் அல்லது கலைப்பீடங்கள் பல வருடங்களாக ஆய்வுகளில் ஈடுபடாதுள்ளன என்பது ஒரு பொதுவான குற்றச்சாட்டாகும். நாம் எத்தனை ஆய்வுகளில் ஈடுபடுகின்றோம்? அதன் தரம் என்ன? விஞ்ஞானப் பிரிவுகளுக்கு எம்மால் ஈடுகொடுக்க முடியாதிருப்பது ஏன்? ஏன் எமது ஆய்வுகள் வெளியிடப்படுவதில்லை? போன்ற கேள்விகள் மிகச் சரியானவை. அவற்றுக்கான பதில்களும் வழங்கப்பட வேண்டியது அவசியம்.

ஆய்வுகளின் மேம்பாடு

அரச பல்கலைக்கழகங்கள் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமாயின் இரண்டு விடயங்கள் தேவைப்படுகின்றன.  முதலாவது நிதி, இரண்டாவது நிதி ஒதுக்கும்போது ஆய்வுகளுக்கான முன்னுரிமை. உலகில் ஆய்வுகளுக்குப் பெயர்போன பல்கலைக்கழகங்களில் வருடாந்தம் ஆய்வுகளுக்கு மட்டுமே சுமார் ஒரு பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அவ்வாறான பல்கலைக்கழகங்களுக்குப் போதியளவு நிதி உள்ளது என்பது உண்மையே. அத்தோடு அவை ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்கள். எம்மைப் போன்ற கற்பித்தல் பல்கலைக்கழகங்கள் அல்ல என்ற கருத்தும் சரியானது. எனினும் இங்கு எமக்கும் அவர்களுக்குமுள்ள முக்கிய வேறுபாடு, அவர்கள் ஆய்வுகளுக்கு முன்னுரிமை வழங்குவதாகும். அவர்கள் அதற்குத் தேவையான நேரம், இடம், மற்றும் பணத்தை ஒதுக்குகின்றார்கள். ஆய்வுக்கான உபகரணங்கள், உதவியாளர்களுக்கான சம்பளங்கள், போக்குவரத்துக்கான சலுகைகள், மானியங்கள் போன்றவற்றை வழங்குகின்றார்கள். அவர்களது நிர்வாகச் சுமையும் அரசாங்கத்தின் புறக்கணிப்பும் குறைவானவை. அதோடு ஆய்வுக்காகக் கணிசமானளவு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களோ வறுமையில் உள்ளன. திறைசேரி ஊடாகவே நிதியைப் பெறுகின்றன. 4 பிரிவுகள், 11 துறைகள், மற்றும் 3000 மாணவர்களைக் கொண்ட எமது பீடத்திற்கு 2021 இல் ஒதுக்கப்பட்ட வருடாந்த நிதி ஒரு மில்லியன் ரூபாவிலும் குறைவானது எனக் கேள்வியுற்றோம். திறைசேரி நிதிகள் ஆய்வுகளுக்கான செலவுகளை ஈடுசெய்ய மாட்டா. ஆகவே அய்வுகளுக்கு நிதி தேவைப்படின் பல்கலைக்கழகங்கள் அதனை உழைத்துத் தான் பெற வேண்டும்!

அரச பல்கலைக்கழகங்களில் கட்டணம் அறவிடும் கற்கை நெறிகள், வெளிப் பட்டங்கள் போன்ற வருமானம் ஈட்டும் திட்டங்களின் தோற்றத்துக்கான காரணங்களில் இதுவும் ஒன்று. உள்ளக மாணவர்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களே இவ்வாறான கற்கை நெறிகளையும் முன்னெடுக்கின்றனர். ஒரு தொழிற்சாலையானது குறித்த ஒரு வேலைக்குத் தேவையான தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்கினரையே வேலைக்கமர்த்துகின்றது எனக் கருதுவோம். இங்கு வேலைகள் வினைத்திறனாக மேற்கொள்ளப்படாததோடு சில வேலைகளைப் பூர்த்தி செய்ய முடியாது போகுமல்லவா? இவ்வுதாரணம் எமது அரச பல்கலைக்கழகங்களுக்கும் அதன் ஆய்வுகளுக்கும் நன்று பொருந்துகின்றது.

பல்கலைக்கழகங்களில் நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆய்வுக்கான செலவுகள் அவற்றின் வருமானம் ஈட்டும் சக்தியில் தங்க வேண்டியுள்ளது. NCAS போன்ற வேறு சில அரச தாபனங்களால் நிதி பெறப்படுவதுண்டு. உலக வங்கியின் கடன் திட்டங்களும் நிதிக்கான ஒரு மூலமாகக் காணப்படுகின்றன. எனினும் இக்கடன் திட்டங்களோடு வேறு பிரச்சினைகள் எழுவதுண்டு. உதாரணமாக உலக வங்கியின் நிபந்தனைகள், நிறுவனம் அல்லது ஆய்வாளரின் இலக்குகளுக்குப் பொருந்தாத பகுதிகள் மீது அதிக கவனம் செலுத்துதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

நிதி பெறப்பட்டபோதும் ஆய்வு மேற்கொள்ளப்படாமை

தேசிய விஞ்ஞான மன்றமானது (NSF) அதன் மானியம் வழங்கும் திட்டத்தில் முன்னுரிமை பெறும் துறைகளில் மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞானங்களை இவ்வருடம் உள்ளடக்கவில்லை. இலங்கையின் முன்னணி ஆய்வு நிறுவனங்களிலொன்று கலைப் பிரிவை எவ்வாறு நோக்குகின்றது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவுள்ளது. இங்கு எமது துறை கடந்த சில தசாப்தங்களில் எதிர்கொண்டுள்ள வேறு சில சவால்களையும் குறிப்பிட வேண்டியுள்ளது.

அரச பல்கலைக்கழகங்களின் ஆய்வுகள் “தேசிய அபிவிருத்திக்குப்” பொருத்தமானதாக இருக்க வேண்டும். அதாவது விஞ்ஞானம், மருத்துவம் அல்லது தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகள் கலைப் பிரிவின் ஆய்வுகளிலும் பார்க்கப் பொருத்தமானவை என்ற கருத்து இங்கு வெளிப்படுகின்றது. எனினும் “பொருத்தம்” என்பதன் அர்த்தம் வேறுபடக்கூடியது. உதாரணமாக, ஒரு வரலாற்று நிகழ்வு, சிறுபான்மை மொழி, ஒரு நோய் தொடர்பாக சமூகத்தின் விளக்கம் போன்றவை தொடர்பான ஆய்வுகள் நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையானவை அல்லவா? ஆகவே “பொருத்தம்” என்பதை நிவர்த்தி செய்ய ஆய்வுகள் குறித்த அரசாங்கத்தின் ஆர்வங்களுக்கேற்பவோ, பொதுவாக சமூக அபிவிருத்தி பற்றியோ இருக்க வேண்டிய தேவை இல்லை அல்லவா?

இங்கு இன்னொரு சிக்கலாக இருப்பது அதிகாரபூர்வமான எமது நிர்வாகத்தின் தொன்மையாகும். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உரைகளை நிகழ்த்தக் கல்வியாளர்களால் குறுகிய கால அவகாசத்தில் செல்ல முடியாதுள்ளது. இதன் காரணம் பிரயாணம் மற்றும் நிதிகளுக்கான அனுமதியைப் பெற மாதக் கணக்கான நேரம் தேவைப்படுகின்றமையாகும். நிர்வாகத்தினூடான செயன்முறைகள் நீண்ட காலம் எடுப்பதால் ஆய்வாளர்கள் தமது பல்கலைக்கழகங்களிலிருந்து மானியங்களைப் பெறத் தயங்குகின்றனர். அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் தேவை. அதனைப் பெற வருடங்கள் செல்வதால் வெளிநாட்டு ஆய்வு நிறுவனங்களுடனான பெறுமதியான தொடர்புகள் பல இழக்கப்படுகின்றன.

சக மதிப்பாய்வு செய்யப்பட்ட, சர்வதேச அங்கீகாரமுள்ள இதழ்களிலேயே ஆய்வுகள் வெளியிடப்பட வேண்டும் என்ற நிபந்தனையை நிறுவனங்கள் கொண்டிருப்பதன் மூலம் கல்வியாளர்கள் உயர்வான தரங்களை எட்ட ஊக்குவிக்கப்படுகின்றனர். எனினும் h-சுட்டி போன்ற அளவுகோல்கள் பிரச்சினைக்குரியவை. இச் சுட்டியானது ஒரு ஆய்வின் பெறுமதியை மேற்கோள்களின் எண்ணிக்கை அடிப்படையில் மதிப்பிடுகின்றது. இது ஒப்பீட்டளவில் குறுகிய மற்றும் துரிதமாக வெளியிடப்படக் கூடிய மருத்துவ மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார் ஆய்வுகளுக்குப் பக்கச்சார்பாக அமைகின்றது. கலைப் பிரிவின் கட்டுரைகள் 8000- 10 000 சொற்கள் கொண்டிருப்பதோடு அதனை வெளியிட ஒரு வருடத்திற்கும் அதிகமான காலம் தேவைப்படுகின்றது. சர்வதேச அங்கீகாரம் பெற்ற இதழ்களில் வருடாந்தம் மூன்றே ஆய்வுகளை வெளியிடும் சமூகவியலாளர் அத்துறையில் சிறந்த ஒருவராகக் கருதப்படுகின்றார். எனினும் h-சுட்டி அல்லது கல்வி ஊக்குவிப்புத் திட்டத்திற்கேற்ப விஞ்ஞானம், மருத்துவம் அல்லது தகவல் தொழில்நுட்பத்திலும் பார்க்க அது பெறுமதி குறைந்ததாகவே மதிப்பிடப்படுகின்றது.

ஆய்வு என்பது தொடர்பான சீரான கருத்தொன்றைத் தாபிப்பதும் சிக்கலான விடயமாகும். ஒரு உளவியலாளர், தாவரவியலாளர், தொற்று நோயியல் நிபுணர், மற்றும் இசையமைப்பாளரின் ஆய்வுகள் ஒரே வடிவத்தைக் கொண்டிருப்பதில்லை. ஒரு நாடகத்தின் விமர்சனத்தையோ, ஒரு புதிய பல்லியினத்தின் கண்டுபிடிப்பையோ, ஒரு வரலாற்றுக் கலைப்பொருள் பற்றிய பகுப்பாய்வையோ ஒரே அளவுகோல்களாலோ ஒரே நபர்களாலோ மதிப்பிட முடியாதல்லவா. ஆகவே துறைகளுக்கேற்றவாறு அளவுகோல்களும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

ஆய்வுக்கான சூழலின் மாற்றம்

இவ்வாறான மதிப்பீடுகளும் “பொருத்தம்” பற்றிய கருத்துக்களும் சில பின்விளைவுகளைக் கொண்டுள்ளன. கலைப் பிரிவானது பெறுமதி குறைவானதாகக் கருதப்படுவதால் அதற்குக் குறைந்தளவு நிதியே ஒதுக்கப்படுகின்றது. இதனால் வளங்களைப் பெறும் தன்மை, பயிற்சிகளின் மும்முரம், முதுகலைப் பட்டத்திற்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அணுகுவதற்கான சந்தர்ப்பங்கள், சர்வதேச கல்வித் தரவுத்தளங்களை உபயோகிக்கும் தன்மை போன்றவை குறைவடைகின்றன. இது ஏற்கனவே எமது பல்கலைக்கழகங்களில் சிந்தனை மற்றும் ஆக்கத்திற்கான பற்றாக்குறையை உருவாக்கியுள்ளது.

ஆக்கபூர்வமான, மும்முரமான, சமூகத்திற்குப் பொருத்தமான கலைப் பிரிவு ஆய்வுகளை உருவாக்க வேண்டுமெனில் நாம் இப்போதே அதற்காகச் செயற்பட வேண்டும். ஆய்வுகளை முடக்கும் தொன்மையான, நீண்ட நிர்வாக மற்றும் நிதி ரீதியான செயன்முறைகள் சீர்திருத்தப்பட வேண்டும். அரச பல்கலைக்கழகங்களின் நம்பகத்தன்மையைப் பேணுவதற்கான பாதை இவ்வளவு நீண்டதாக இருத்தல் அவசியமல்ல. தற்போது தலைதூக்கி வரும் தேசியவாத மற்றும் நவ தாராளவாதக் கருத்தியல்களை எதிர்க் கேள்வி கேட்க வேண்டும். தேசியவாதக் கருத்தியல்கள் இனப் பாகுபாட்டை அதிகரிக்கும் ஆய்வுகளையும், நவ தாராளவாதம் ஆய்வுகள் முன்னெடுப்பதன் தீவிரத்தைக் குறைப்பதையுமே ஊக்குவிக்கின்றன. அடுத்த ஐம்பது வருடங்களில் நல்ல ஆய்வுகளை நாம் உருவாக்க விரும்பினால் இவ்வாறான கருத்தியல்கள் முதலில் எதிர்க்கப்பட வேண்டும்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன