கல்வி முன்னிட்ட விவாதத்துக்கான நிபந்தனைகளை நிர்ணயித்தல்

“இலவசக் கல்வி என்பது வானத்தில் இருக்கும் ஒன்றல்ல. என்னால் அதைத் தொட முடிகிறது, என்னால் அதை உணர முடிகிறது.”

அடிப்படை எழுத்தாற்றல் வகுப்பொன்றில் ஒரு மாணவி எழுதிய மேற்கண்ட வரிகள் என்னை எல்லையில்லா ஆச்சரியத்திற்குட்படுத்தின. இலவசக் கல்வி தொடர்பான ஒரு கருத்து இவ்வளவு எளிமையாக, தத்துவபூர்வமாக, சிந்தனையைத் தூண்டும் வண்ணம் முன்வைக்கப்பட்டதை நான் இதுவரை கண்டதில்லை. செய்த்திதாள்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அரசியல்வாதிகள், கொள்கை அமைப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நடாத்திவரும் சொற்போர்களுக்கு மத்தியில், புதிதாகக் கற்று, தன்னுடையதுதான் என்று சொந்தம் பாராட்ட ஆரம்பித்த ஒரு மொழியில் இலவசக் கல்வி பற்றி தட்டுத்தடுமாறி உணர்ச்சிபூர்வமாக முன்வைக்கப்பட்ட இம் மாணவியின் கருத்து என் சிந்தையைக் கவர்ந்தது. எமது பல்கலைக்கழகங்களில் அர்த்தம் நிறைந்த அனைத்தையும்; அது அணுகலாகட்டும், அறிவு மேம்பாடாகட்டும், எம்மைச் சுற்றியுள்ள உலகம் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்வதாகட்டும், அதாவது வேறு முறையில் கூறின் சமுதாய நிலையில் உண்டாகும் முன்னேற்றம் அல்லது சமுதாயம், நாடு மற்றும் உலகத்தில் தன் நிலை பற்றிய உணர்வு போன்ற சகல அம்சங்களையும் கச்சிதமாகத் தன் கருத்தில் புகுத்தியிருக்கிறாள் அம்மாணவி.

சாதாரண வழக்கில் கூறினால் குடியுரிமை என்றால் என்ன என்பதன் அடிக்கற்களில் ஒன்றாக இருப்பது கல்வி எனலாம். உள் நாட்டிலோ வெளி நாட்டிலோ அதிகாரம் மிக்க நிறுவனங்கள், சமுதாயம், கலாசாரம், ஊடகங்கள், வேறு அதிகாரம் மற்றும் அந்தஸ்து கொண்ட நிறுவனங்களை அணுகுவதற்கான சமுதாய நிலை முன்னேற்றத்தை ஏற்படுத்துவது கல்வியே. பல்வேறுபட்ட சமூகக் காரணிகளால் பிளவுபட்டிருப்பினும் எம் ஒவ்வொருவருக்கும் தனி மனிதன் என்ற வகையிலும் சமூகரீதியிலும் நான் யார் என்பது பற்றி நம்மீது நாமே கொண்டுள்ள ஒரு பொறுப்புணர்வைத் தருவதும் கல்விதான். பரந்துபட்ட ஒரு நோக்கில் பார்த்தோமானால் ஒரு குடிமகன் என்ற ரீதியில் கல்வி தொடர்பான எமது பங்கு என்ன என்பது பற்றிய விளக்கத்தைப் பெறவும் வெளிப்படுத்தவும் இப்பொறுப்புணர்வு எம்மை உந்துகிறது. அப் பொறுப்புணர்வானது பல்வேறுபட்ட முகப்புக்களிலும் அரசியல் நடவடிக்கைகளை  ஆரம்பித்தும், மேம்படுத்தியும் மாற்றத்தை உருவாக்கக் கூடிய அறிவுசார் கூட்டத்தின் ஒரு பகுதியாக, அதற்கான முகவர்களாக மாற எம்மை ஊக்குவிக்கும் ஓர் உந்துசக்தியாக அமைகிறது. கல்வியைப் பொறுத்த வரையில் சிந்தையில் வைத்திருக்க வேண்டிய, ஜனநாயகத்தை நோக்கிய ஒரு நகர்வு என நான் இதனைக் கூறுவேன்.

கல்விக்கான நெருக்கடியும் கல்வியிலுள்ள நெருக்கடியும்: பெரு நிறுவனம் சார் திறன்களும்,அரச நிறுவனங்களின் தனியார்மயமாக்கலும்.

மாறும் இந்த சமூகச் செயன்முறையானது அழுத்தத்திற்கும், கல்வியின் உந்துசக்திகளாக அமையும் காரணிகள் முற்றுகைக்கும் உட்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்றைய நிலைப்பாட்டில் கல்வியானது இரட்டிப்புச் சவால்களை எதிர்கொண்டுள்ளது. அதாவது கல்விக்கான நெருக்கடியும் கல்வியிலுள்ள நெருக்கடியும் ஒருங்கே நிலவி வருவதோடு அவை ஒன்றுடனொன்று தொடர்புபட்டவையாகக் காணப்படுகின்றன. கல்வியானது ஜனநாயக ரீதியில் தன்வசமிருக்கும் சக்தியையும், கடமையையும், அதாவது சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டிருக்கும் சிறுபான்மை மக்களை ஊக்குவிப்பது மற்றும் மேலதிக ஜனநாயகமயமாக்கலுடன் கூடிய ஒரு உலகத்தின் பால் எம் நோக்கைத் திசைதிருப்புவது ஆகிய இரு பணிகளையும் மறந்திருப்பதே கல்வியில் தற்போதுள்ள நெருக்கடி எனலாம். இது எமது கல்வித்திட்டத்தின் பொருளடக்கம் மற்றும் குறிக்கோள்கள் சார்ந்தது. கல்வி வழங்குனர்கள் என்ற வகையில் நாம் யாருக்கு சேவை வழங்குகிறோம்? புதுமுக நடிகர்கள் அறிமுகமாகுவது போன்று மெல்ல எழுந்துவரினும் இன்னும் அதிகாரம் மிக்கவர்கள் என்ற நிலையை எட்டாத மக்களுக்கா அல்லது ஏற்கனவே அதிகாரம் மிக்க பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள், அதாவது பெரு நிறுவனத்தாருக்கா? வியாபாரமயமாக்கல் போன்ற அந்நிய சக்திகளால் கல்வியானது தானே ஊக்கமிழந்திருப்பது, அதன் நிறுவனங்கள், அதன் மக்கள், ஆசான்கள், மாணாக்கர், மற்றும் அதன் கொள்கைகளின் மெதுவான நிலைதழும்பல்களே உண்மையில் கல்வியிலுள்ள நெருக்கடிகளாகக் காணப்படுகின்றன.

முதலாவதாக வியாபார சக்திகள் எவ்வாறு தனிச்சுதந்த்திரம் மற்றும் சலுகைகளைக் கொண்டுள்ளன என்பது பற்றியும் எவ்வாறு இத் தனிச்சுதந்திரமானது எமக்குக் கேடு விளைவிக்கின்றது என்பது பற்றியும் பார்வையிட விரும்புகிறேன். நடைமுறையை எடுத்தோமானால் உலகமயமாக்கல் என்பது, முதலாளித்துவ நிதிமயமாக்கலின் அதிதுரித வளர்ச்சியோடு ஒன்றுதிரண்ட சக்தியான உழைப்பாளிகள் மற்றும் குடிமக்களின் சமூகமயமாக்கம் நோக்கிய நகர்வின் கலைப்பு என்பவற்றுக்கான மறு பெயர் எனக் கூறலாம். இன்றைய வியாபாரத்துவக் கொள்கைகள் கல்வியை ஒரு விலை பேசக்கூடிய பொருளாகவும், தான், தனிமனிதன், சமூகம் என்பவற்றுடன் தொடர்பற்ற தேர்ச்சிகள் மற்றும் திறன்களின் ஒரு தொகுப்பாகவுமே நோக்குகின்றன. கல்வியானது மாணவன், கல்வி நிறுவனம் மற்றும் சமூகத்தின் உடலியல், உளவியல் நன்னிலைகளோடு தொடர்பிழந்துள்ளது. இரண்டாவதாக, கல்வி நிறுவனம், குறிப்பாக பல்கலைக்கழகங்கள் தம்மைப் பற்றிய அடிப்படைப் புரிந்துணர்வை இழக்கும் தறுவாயில் உள்ளன. கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளின் பங்களிப்பு மற்றும் கற்றலுக்கும் சமூகத்துக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய வாதங்களுக்கான நிபந்தனைகளை நிலை நாட்டும் இடமாக இருப்பவை பல்கலைக்கழகங்கள் என்ற நீண்ட கால கருத்து இதற்கு முரணாக உள்ளது. இக்கருத்து இவ்வாறு ஒரு சவாலை எதிர்கொள்வதில் பாதகமில்லாதபோதிலும், மேற்குறிப்பிட்ட பங்களிப்பானது குறுகிய சிந்தனைகளைக் கொண்ட அரசியல் மற்றும் அரசியல்மயமாக்கப்பட்ட சக்திகளால் இன்று திசை திருப்பப்பட்டிருப்பது கருத்தில்கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமாகிறது.

ஒரு புறம் குறித்த ஒரு விடயம் அல்லது பாடம் தொடர்பான ஆழமான விளக்கம் அதாவது பாட நெறி என்பதோடு மறு புறம் பாவ்லோ பிரையர்,  “ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை” என்ற அவரது பிரபல எழுத்தாக்கத்தில் சுட்டிக் காட்டியது போல் திறனாய்வு மிக்க சிந்தனையின் சுய விமர்சனக் கோட்பாடுகள் மற்றும் அரசியல் உரைகள் போன்ற அம்சங்களைக் குறிக்கோள்களாகக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்களின் வலுவிழந்த நிலையை மேற்குறிப்பிட்டவை ஒருங்கே சுட்டிக் காட்டுகின்றன. கூறப்போனால் நாம் தற்சமயம் கல்வி நிறுவனங்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மற்றும் வேறு நபர்கள் போன்ற அனைத்துத் தரப்பினரும் மெல்ல ஊக்கமிழப்பதைக் கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கிறது.

அடுத்தடுத்து வரும் அரசாங்கங்களினால் ஆற்றப்படும் அரசியல்க் கொடூரங்களில் ஒன்று பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளை நிதி ரீதியாக அழுத்தத்திற்குட்படுத்தியிருப்பதாகும். நிதி திரட்டுவதன் பொருட்டு கட்டணம் அறவிடும் கற்கை நெறிகளூடாகத் தனியார்மயமாக்கலுக்குக் கதவைத் திறந்து விடும் நிர்ப்பந்தத்துக்கு தொடர்ச்சியாகப் பல்கலைக்கழகங்கள் ஆளாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதே சமயம் பிரபல நிகழ் கால நடைமுறைகளும் போக்குகளும் “திறன்கள்”, “தேர்ச்சிகள்” என்ற பெயரில் அர்த்தமற்ற, ஆழமற்ற ஒரு கற்கையாக, அதாவது கல்வியை ஒரு வியாபாரப் பண்டமாக மாற்ற விளைந்து கொண்டிருக்கின்றன. உண்மையான கற்றலை விடுத்து வியாபாரம்சார் திறன்களைக் கோரி அதிகாரபூர்வமான கட்டளைகளிலிருந்து உளவியல் ரீதியான அழுத்தங்கள், கவர்வதற்கான முயற்சிகள் வரை சகல உத்திகளையும் உள்ளடக்கியவாறான சுற்றறிக்கைகள், மதிப்பாய்வுகள், விதிமுறைகள், மற்றும் விரிவுரைகள் என்பவற்றை நாம் தினந்தினம் எதிர்கொள்கிறோம்.

கல்வியை வியாபாரமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் அதனை ஒரு விலை பேசக்கூடிய பொருளாக மாற்றுவதை நியாயப்படுத்தி பல்வேறுபட்ட நிறுவனங்களால் தீவிரமான, துல்லியமான ஆராய்ச்சிகள் என முன்வைக்கப்படும் ஆய்வுகளை நாம் அடிக்கடி எதிர்கொள்கிறோம். இந்த வகையில் மிகவும் முன்னிலை வகித்திருப்பது, இலங்கை மீதான உலக வங்கியின் நாடுசார் ஆய்வுகளாகும். இவ்வாய்வுகளுக்கு IPS, பாத் பைன்டர் நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் மேலும் கைகொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாய்வுகளின் தொடரில் மிகவும் அண்மையில் சேர்க்கப்பட்டிருக்கும் பிரிட்டிஷ் சபையின்  “அபிவிருத்தியில் மூன்றாம் நிலைக் கல்வியின் பங்களிப்பு” எனும் ஆவணம் தற்போது சில பல்கலைக்கழகங்களின் வாசிப்புப் பட்டியல்களில் நுழைந்துள்ளது.

பல்கலைக்கழகங்களின் இப்புதி ய தாராளவாத கட்டமைப்பில், ஆசான் என்பவன் அறிவை எட்டுவதற்காக வழிசமைத்துக் கொடுப்பவனாகவும், மாணவனோ பல்பொருள் அங்காடியொன்றில் நுகர்வுக்காகப் பண்டங்களை வாங்குபவனுக்கு ஒப்பாகவும் காணப்படுகிறார்கள். ஆனால் இப்புதிய ஒப்பந்ததில் ஆசானோ மாணவனோ, இரு சாராரும் ஊக்குவிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. இங்கு மாணவன் எனும் வாடிக்கையாளன் வெறுமையான ஒரு பல்பொருள் அங்காடியில் சுற்றுலாக்காட்சி மட்டுமே செய்யக்கூடிய அதேவேளை, ஆசான் என்பவன் பொருளாதாரத்துக்கோ, சமூக-அரசியல் கலாசாரத்துக்கோ எவ்வகையிலும் கைகொடுக்காத பண்டங்களின்   விற்பனையாளனாகிறான்.

வேலைக்கமர்த்த முடியாத பட்டதாரி எனும் கட்டுக்கதை

பாரிய துறையான முறைசாராத் துறையை மதிப்பீட்டில் உள்ளடக்காவிடினும், இலங்கைத் தொழிலாளர் முன்னணியின் மதிப்பாய்வின்படி இலங்கையின் தற்போதைய (2020) வேலையின்மை வீதம் 5.4% ஆகக் காணப்படுகிறது. எமது அரசாங்கத்தின் அமைப்பு முறையில் பட்டதாரிகளின் வேலையின்மை வீதத்தை அளவிடுவதற்கான தெளிவான அளவுகோல் ஒன்று இல்லை. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் 2018 இல் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின்படி பெருந்தொகையான கலைப் பீட பட்டதாரிகள் வேலையின்மைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். எனினும் இவ்வாய்வின் அமைப்பு பற்றிய ஆராய்ச்சியின் போது ஏற்றுக்கொள்ள முடியாத இடைத் தொடர்புகளும், குறிப்பிடத்தக்க அளவு பாரபட்சமும் இருந்திருப்பது வெளியாகிறது. உதாரணமாக ஆய்வில் பங்கு கொண்ட 1265 நபர்களில் பெருந்தொகையான பதில்கள் வந்திருப்பது கலைப் பீட பட்டதாரிகளிடமிருந்தே என அவ்வறிக்கை கூறும் சந்தர்ப்பத்தைக் கருதலாம். இவ்வாறான பாரபட்சம் ஆய்வின் முடிவுகளை குறிப்பிடத்தக்க அளவு பாதித்து விடுகிறது. இவ்வாய்வானது வேலையின்மையால் பாதிக்கப்பட்ட ஆண் பட்டதாரிகளோடு ஒப்பிடுகையில் பெண் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதன்பாலும் எம் கவனத்தைத் திருப்புகிறது. ஆயினும் இந் நிலை குறித்த மேலதிக தேடல்களைக் காணவில்லை. இந்த ஆய்வு வேலைவாய்ப்புகள் இருப்பதைச் சுட்டும் அதேவேளை ஒரு பட்டதாரி வேலையின்மைக்கு ஆளாகுதல் அக் குறித்த மாணவனினதோ அவனது சூழ் நிலையினதோ தவறு எனக் கருதுகிறது. தொழில்வாய்ப்புக்களையோ தொழில்வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கப்பெறக்கூடிய இடங்களையோ ஆராயும் பணியில் இவ்வாய்வானது இறுதிவரை இறங்கக் காணோம். இவ்வாய்வின் முடிவுகள் அல்லது கலந்துரையாடல்களில் வேலையின்மைய்க்கான காரணம் பட்டதாரிகளின் வேலைக்கமர்த்தமுடியாத தன்மை என வெகு சாதாரணமாக, அலட்சியமாகக் கூறப்பட்டுள்ளது. இருந்தபோதும் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின், இலங்கை: தொழிலாளர் கேள்வி மதிப்பீடு 2017, தனியார் துறை சார்பாக வழங்கிய  தரவுகள், வேலைவாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுவது பட்டமொன்றுக்கான தேவையற்ற துறைகளான ஆடை மற்றும் பாதுகாப்புத் துறைகள் எனத் தெளிவாக எடுத்தியம்புகின்றன.

வழக்கம் ஒன்றை உருவாக்குதல்

கல்வியானது வெறும் எண்கள் மற்றும் தரவுகளை மட்டுமே மையமாகக் கொண்டிருக்க முடியாது. வேலைவாய்ப்புகள் பற்றிய ஆய்வுகள் அரசு, நிறுவனங்கள், பொருளாதாரம், கல்வி, கலாசாரம், மற்றும் சமூகம் என்பவற்றுக்கிடையிலான தொடர்புகள் பற்றிய கேள்விகளை எழுப்ப வேண்டும். அதிகார பூர்வமான அல்லது சர்வாதிகாரமான பிரகடனங்கள் மற்றும் அர்த்தமற்ற வெறுமையான கருத்துக்களுக்கான ஒருவழிப் பாதையாக இது இருந்துவிட முடியாது. அடிப்படை ஆரம்பமாக முதலில் வேலைவாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய தன்மை பற்றிய ஊகங்களையும் அனுமானங்களையும் மாற்றியமைக்க வேண்டும். நாம் கல்வியை, சிறுபான்மையினரை அல்லது ஓர இடம்சார் மக்களை மையமாகக் கொண்ட, பொருளாதாரம் மற்றும் சமுதாயத்திற்குள்ளடங்கிய, ஒரு மாறிக்கொண்டே இருக்கும் ஒத்து-வாழ்வு முறை எனவும் நீதி பற்றிய விமர்சன சிந்தனையுடைய கேள்விகளை எழுப்பும், அது தொடர்பாக சமூகம் பற்றிய ஆராய்ச்சிகளை முன்னெடுக்கும் ஒரு கருவி எனவும் கருதினால் எந்த ஒரு நபருமே வேலையின்மைக்கு ஆளாகுவதைத் தவிர்க்கும் ஒரு நிலையை உருவாக்க முடியும். இதன் பொருட்டு எமது சூழ்நிலை சார்ந்த ஆழமான ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும். மாணவன் என்பவன் இச் சூழ்நிலையின் ஒரு பகுதியாகவும், அச் சூழ்நிலையை மாற்றியமைக்கக் கூடிய ஒரு மாறும் சமூக முகவர் எனவும் குறிப்பிடலாம். இதனை அடிப்படையாகக் கொண்டும் இதனை அடைவதை இலக்காகக் கொண்டுமே எமது ஆரம்பம் அமைய வேண்டும். வேலைக்கமர்த்தப்படுவதற்கான தகுதி, மாற்று வழியின்மை போன்ற பதங்களைத் தவிர்த்து, வேலைவாய்ப்பென்பது ஒரு எல்லையில்லா சந்தர்ப்பங்களைக் கொண்டிருக்கும், முடிவிலியான பாதை என்ற சிந்தனைப் போக்கை ஆரம்பிக்க வேண்டும்.

கல்வியை அழுத்தத்திற்குட்படுத்தியிருக்கும் நவீன போக்குகள் பற்றிய தற்போதைய கருத்துக்களை முன்வைத்தும், தனிமனிதன் என்ற வகையிலும், ஒன்றுதிரண்ட ஒரு மக்கட் சக்தி என்ற வகையிலும் நோக்கும், பேசப்படவேண்டிய, உயிர்பான ஒரு செயலாகக் கல்வியச் சித்தரிப்பதன் மூலமும், ஆரம்பத்தில் குறிப்பிட்ட எனது மாணவியின் கருத்தை, இந் நாட்டின் பெரும்பாலான மக்களின் மேலதிக ஊக்குவிப்பு அல்லது மேம்பாடு என நான் மீள அர்த்தப்படுத்தியிருக்கின்றேன். இன்னமும் மேம்பட்ட ஒரு கல்வி வழங்கல் முறை, கல்வியை மேலும் ஜனநாயகமயமாக்கல், மற்றும் எம்மீதான இன்னும் சிறந்த ஒரு தூர நோக்குடைய பார்வை ஆகியவை இன்றியமையாதவையாகின்றன. இவ்வாறான கருத்துக்களுடன் கல்வி சம்பந்தமான எமது இரண்டு வாரங்களுக்கொரு முறை வெளியிடப்படும் “குப்பி டாக்” என்ற கட்டுரைத் தொடரை ஆரம்பித்து வைக்கின்றோம். இக் கட்டுரைத் தொடரில் கல்வி தொடர்பான மேலும் பல பிரச்சனைகள், மற்றும் இவ்வுலகை மேலும் சிறந்த ஒரு இடமாக மாற்ற கல்விக்கிருக்கும் சக்தி பற்றி இனி வரும் வாரங்களில் ஆராய்வோம்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன