அரச பல்கலைக்கழகங்களை துண்டாடும் பாதீடு

அகிலன் கதிர்காமர்

1930க்குப் பின்னர் இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பாரிய
பொருளாதார நெருக்கடியின் விளைவாக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும்
நிலைப்படுத்தற்கொள்கைகள் காரணமாக நாட்டின் அரசியல் பொருளாதார
நிலை வேகமாக மாறி வருகின்றது. இவ்வாறான மாற்றங்களுக்கு மத்தியில்,
பொதுவாக கல்வித்துறையும் குறிப்பாக பல்கலைக்கழகங்களும் கடும்
சிக்கலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றன.

இந்த ஆக்கத்தின் மூலம், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பாதீடு
தொடர்பான விவாதங்களின் அடிப்படையில் எதிர்கால சந்ததியினரின்
பல்கலைக்கழக கல்விக்கான அணுகலில் ஏற்படப்போகும் ஆபத்துகளை
கலந்துரையாடலாமென நினைக்கின்றேன். அடுத்த வருடத்திற்கான
ஒதுக்கீடுகள் அரச பல்கலைக்கழகங்களுக்கு மேற்கொள்ளப்படும்
நிதியொதுக்கீடுகளில் தொடர்ந்தும் குறைவான தன்மையையே
கடைபிடிக்கின்றன. மேலும், இந்நிலை பல்கலைக்கழகங்களில்
நிர்வாகமுறையை முழுமையாக மாற்றவும் ‘தனியார் உயர்கல்வி
நிறுவனங்களை’ அரச பல்கலைக்கழகங்களில் ஸ்தானத்துக்கு எடுத்துவரவும்
அவற்றின் செயற்பாடுகளை உயர்கல்விப்புலத்தில் விரிவாக்கவுமான
அரசாங்கத்தின் நோக்கத்தை மேலும் வலுவூட்டுகின்றது.

நிதியீட்டத்தை குறைத்தலும் வணிகமயமாக்கலும்

கடந்த சில வருடங்களாக அரச பல்கலைக்கழகங்களுக்கான நிதியீட்டம்
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 0.6%மான அளவிலிருந்து 0.25% வீதமாக
பாதிக்குப் பாதியாக குறைந்துள்ளது. பல்கலைக்கழகங்களின் எதிர்கால
வளர்ச்சிக்கான அரசாங்கத்தின் உறுதியளிப்பாக இருக்கக்கூடிய‌ மூலதனச்
செலவீனத்தை பொருத்தவரையில் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.14% வீதத்திலிருந்து 0.02% வீதமாக குறைந்திருக்கின்றது, இது நான்கு
வருடங்களுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட நிதியிலும் பார்க்க ஏழில் ஒரு
பங்காகவே காணப்படுகின்றது.

2024க்கான ஒதுக்கீடுகள் மிகக்குறைவாக காணப்பட்டாலும் அவை
செலவிடப்படும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதற்கான காரணம், அவை
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வருமான இலக்குகளை எட்டவேண்டி
இருப்பதாலாகும். மேலும் ஒரு வருடத்திற்கான மாணவ அனுமதி
2016இலிருந்து 2023 வரை 50% வீதமாக, அதாவது வருடத்திற்கு
29,000த்திலிருந்து 2023ல் 44,000மாக அதிகரித்துள்ளது. நிதியீட்டத்தில்
காணப்படும் ஆபத்தான வீழ்ச்சியும் மாணவ அனுமதியில் காணப்படும்
அபிரிமிதமான வளர்ச்சியும் அரச பல்கலைக்கழகங்களை திட்டமிட்டு
தோற்கடிப்பதற்கான அரசாங்கத்தின் ஏமாற்றகரமான நோக்கத்தையும்
உயர்கல்விப்புலத்தை விரிவுபடுத்துவதில் அரச பல்கலைக்கழகங்களுக்கான
ஆதரவின் வீழ்ச்சியையுமே சுட்டுகின்றன.

அரச பல்கலைக்கழகங்களுக்கான நிதியீட்டத்தை குறைக்கும் நடவடிக்கை
புதிதல்ல, மேலும் இந்நடவடிக்கை தனியார் பல்கலைக்கழகங்களை
ஆரம்பிக்கும் மற்றும் முன்னேற்றும் நடவடிக்கைகளுடன் கூடவே தொடர்ந்து
வந்த அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்டது. இலங்கை தற்போது உலக
நாடுகளில் சில நாடுகளைப் போன்று இலவச உயர்கல்வியை வழங்கும்
நாடாக காணப்படுவதோடு இதனால் பொருளாதாரநிலையில் பின் தங்கிய
மாணவர்கள் பெரிதும் நன்மைபெற்று வருகின்றனர். எமது இந்த மரபு
1940களில் இருந்து வந்திருக்கும் நிலையில் தனியார்
பல்கலைக்கழகங்களுக்கான உருவாக்கத்துக்கு உலக வங்கி உட்பட உலகின்
பல்வேறு நிதி நிறுவனங்களே பல தசாப்தங்களாக அழுத்தம் கொடுத்து
வருகின்றன. மிக அண்மையில், உலக வங்கியின் 2024 தொடக்கம் 2027க்கான
உள்நாட்டு கூட்டாண்மை சட்டகமானது வெளிப்படையாக இலங்கை
பல்கலைக்கழகங்களின் வணிகமயமாதலுக்கான அழைப்பை விடுக்கின்றது.
உலக வங்கி தொடர்ந்தும் அரசின் சமூக நலன்புரி செயற்றிட்டங்களை உதிர்த்து உயர்கல்வியை வணிகமாக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டு
வருகின்றது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி சர்வதேச முதலீட்டாளர்களுக்கும்
நாட்டின் உயர்குடியினருக்கும் தமது வணிக நலன்களை பெருக்கும்
வாய்ப்பாக மாறியிருக்கின்றது. பாதீட்டு விவாதத்தில் பேசிய ஜனாதிபதி
வெளிப்படையாகவே கூறிய விடயம், அரசாங்கம் தற்போது நில
உரிமைச்சட்டம் தொடக்கம் பொதுமக்கள் நிதிச்சட்டம், வங்கிச்சட்டம் உட்பட
60 எண்ணிக்கையான‌ புதிய சட்டமூலங்களையும் சீர்திருத்தங்களையும்
இயற்றும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகும். உண்மையில், ராஜபக்ச
பெரும்பான்மை கொண்ட விக்ரமசிங்கவின் சட்டபூர்வமற்ற அரசாங்கம்
பாராளுமன்ற தேர்தல்களுக்கு முன்னர் சட்டங்களை மாற்றும் முனைப்பில்
ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு அங்கமே, சட்டசீர்திருத்தங்கள் மூலம்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை அகற்றிவிட்டு தேசிய
உயர்கல்வி ஆணையத்தை கொண்டுவந்து தனியார்
பல்கலைக்கழகங்களையும் அரச பல்கலைக்கழகங்களையும் ஒரே
நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதன் மூலம் பல்கலைக்கழக அமைப்பை
புதிய சட்டங்கள் மூலம் வீழ்த்தும் செயற்பாடாகும்.

பேரங்காடிகளைப் போன்ற பல்கலைக்கழகங்கள்

“அரசு அல்லாத பல்கலைக்கழகங்களுக்கான பலமான விதிகளை வரைந்த
பிற்பாடு உலகின் அனைத்து ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்வி நிறுவனங்களையும்
இலங்கையில் பல்கலைக்கழகங்கள் அமைக்க அனுமதிப்போம். இதன் மூலம்
இலங்கையில் உயர்தர பரீட்சையில் சித்தியெய்திய அனைத்து
மாணவர்களும் உயர்கல்வி கற்க முடியுமான நிலை உருவாவதோடு
வெளிநாட்டு மாணவர்களின் அனுமதி மூலம் இலங்கையில் அண்ணிய
செலாவனி பெறப்படவும் ஏதுவாக இருக்கும். அரசு அல்லாத
பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு கடன் உதவிகளும்
வழங்கப்படும்.”

தற்போது அதிகரித்து வரும் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான
பாதீட்டு உரை இதுவாகும். 1970களின் பிற்பகுதியில் ஜே.ஆர் ஜயவர்த்தன
அவர்கள் திறந்த பொருளாதார முறைமையை அறிமுகப்படுத்திய போது
“கொள்ளைக்கார தொழிலதிபர்கள் நாட்டுக்குள் வரட்டுமென்று!”
உரையாற்றியமை பிரபலமானது. அதைப்போலவே தற்போது விக்ரமசிங்க
அவர்கள் கொள்ளைக்கார தொழிலதிபர்களை பல்கலைக்கழகங்கள் அமைக்க
அழைக்கின்றார். மேலும் இவர் சர்வதேச மாணவர்களை டொலர்களில்
கட்டணம் செலுத்தி உயர்கல்வியை தொடரவும் அழைப்பு விடுக்கின்றார்.
1970களில் நவதாராளவாதம் எவ்வாறு பேரங்காடிகளின் அதிகரிப்பிலும்
வளார்ச்சியிலும் வெளிப்பட்டதோ அதைப் போலவே தற்போது நவதாராளவாத
கல்விக் கொள்கைகளின் விளைவாக பேரங்காடிகளைப் போன்ற
பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டு வளார்ச்சியடைகின்றன.

அரசாங்கமானது தனியார் கல்வி நிறுவனங்களை (NSBM, SLIIT, ஹொரைசன்
வளாகம் மற்றும் ரோயல் நிறுவனம் ஆகியவை) பல்கலைக்கழகங்களாக
தரமுயர்த்தவும் தொழிநுட்பம், காலநிலை மாற்றம் மற்றும் கல்வி போன்ற
துறைகளில் குறைந்த ஆறு பல்கலைக்கழகங்களை உருவாக்கவும்
திட்டமிடுகின்றது. மாகாண சபைகள் கூட பல்கலைக்கழகங்களை
அமைக்கலாம்.

நவீனமயமாக்கம் என்ற பேரில் உலகில் காணப்படும் எல்லா புதினமான
வார்த்தைகளையும் பாதீட்டு உரையில் கொண்டுவரும் அரசாங்கம், 3
பில்லியன்களை செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய நிறுவனத்துக்கும்,
சுமார் 8 பில்லியன்களை தேசிய ஆய்வுக் கொள்கை உருவாக்கத்துக்கும்
ஒதுக்குவதாக கூறியுள்ள நிலையில், கடந்த வருடங்களில் அரச
பல்கலைக்கழகங்களின் ஆய்வுப்பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை
தொடர்ந்தும் குறைத்துக் கொண்டே வருகின்றதென்ற கசப்பான விடயம்
நினைவில் எழாமல் இல்லை. ஏற்கனவே காணப்படும் பல்கலைக்கழகங்களே
அல்லலுரும் நிலையில் இத்தகைய நிதிவசதிகளை அரசாங்கம் எங்கிருந்து
திரட்டுமென்பதே புரியாத புதிர்.

தனியார் பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும்
மானிய அடிப்படையிலான கடன்கள், மற்றும் வட்டியில்லா கடன்கள்
ஆவ்ர்களை கட்டணம் செலுத்தும் கற்கைநெறிகளுக்குள் உள்ளீர்க்கும்
வழிமுறையாகும். இம்முறைமை பல நாடுகளில் தோல்வியடைந்த
முறைமையாகவும் மாணவர்களுக்கு சுமக்க முடியாத கடன்களில் அவை
கொண்டு வந்து நிறுத்தியிருப்பதுவும் குறிப்பிட மறுக்கப்படும்
விடயங்களாகும். 23/10/2023 அன்று வெளியிடப்பட்டுள்ள பர்சானா ஹனீபாவின்
ஆக்கம் இந்நிலையை தெளிவுணர்த்துகின்றது.

தெளிவுணர்ச்சியும் ஆதரவும்

இலங்கையில் வாழும் உயர்குடி மக்களின் கருத்துப்படி தனியார்
பல்கலிக்கழகங்கள் அரச பல்கலைக்கழகங்களில் நுழைய முடியாத
மாணவர்கள் தமது பட்டக்கல்வியை தொடர்வதற்கான வரப்பிரசாதமாகும்.
இவ்வாறு கூறும் இவர்களே இலங்கையில் அரச
பல்கலைக்கழகங்களுக்கெதிராக பலமாக குரல்கொடுக்கின்றனர்.
இதனிடையில் இருக்கும் சிலர், குழப்பகரமான நிலையில், அரசாங்கம்
பல்கலைக்கழகங்களுக்கு உரிய ஆதரவை வழங்க வேண்டுமென்று
குறிப்பிடுவோராகவும், அதேவேளையில் தனியார் கல்வி நிறுவனங்களின்
உருவாக்கத்திற்கும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இவை இரண்டிற்கும்
இடையில் ஈடுகட்டும் நிலைக்கு எதிரானவர்கள் இவர்கள். தனியார்
பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டதுமே, அரசாங்கம் அரச
பல்கலைக்கழகங்களை கைவிடும் நிலைக்கு வருவதோடு அரச
பல்கலைக்கழகங்கள் வளக்குறைபாட்டை முகங்கொடுக்கும் நிலையில்
அவற்றில் ஒரு அவலமாக தனியார் பல்கலைக்கழகங்கள்
விரிவுரையாளர்களை வளைத்துப்போடும் நிலையும் ஏற்படும்.

மக்கள் மைய கருத்தென பிரபலமாக அழைக்கப்படும் அரசாங்கத்தின் கருத்து
யாதெனில், தனியார் பல்கலைக்கழகங்கள் இல்லாமல் எமது நாட்டில் வாழும்
பெரும்பாலான இளைஞர்கள் உயர்கல்விக்கான வாய்ப்புகளை இழக்க
நேரிடும் என்பதாகும். உண்மையில், 2022 தரவுகளின் படி, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த 91,000 அளவிலான மாணவர்களில்
கிட்டத்தட்ட 44,000 பேர், அதாவது பாதியளவான மாணவர்கள் அரச
பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள். உண்மையில்,
அரசாங்கம் ஒதுக்கிடும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.25% வீதத்தின்
மும்மடங்கினை, கிட்டத்தட்ட ஒரு வீதத்தினை உயர்கல்வித்துறைக்கு
ஒதுக்கிட்டாலும் மீதி பாதியளவிலான மாணவர்களை அரச
பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்கி விடலாம். மேலும்,
பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்கப்படுதல் குறித்து நியாயபூர்வமான
அணுகல் முறைமையை உறுதிப்படுத்தும் மாற்றுவழிகளை, அரசாங்கம்
உயர்குடி மீதான சொத்து வரி போன்ற இன்னோரன்ன அறவிடல் வழிகளின்
மூலமான மீள்விநியோகத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் ஏற்படுத்தலாம்.
இவையெல்லாவற்றையும் விடுத்து, தற்போது கடன் மறுசீரமைப்புக்காக
வருடாவருடம் தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியத்திலிருந்து
அறவிடப்படும், 0.5% வீதமான மொத்த உள்நாட்டு உற்பத்தியை
பல்கலைக்கழக அமைப்பிற்கு செலவளித்தாலுமே அதனை பாதுகாக்கலாம்.

தற்போதைய சூழ்நிலையில், அரசாங்கத்தின் அரச பல்கலைக்கழகங்களின்
மீதான தீவிரமான தாக்குதலின் பின்னணியில் மாணவ அமைப்புகள்,
பல்கலைக்கழக் ஆசிரிய அமைப்புகள் மற்றும் சிவில் சமூகம் இணைந்து
உயர்கல்விக்கான பாதீட்டு முன்மொழிவுகளை தோற்கடிக்க வேண்டும்.
இல்லாவிடின், நாம் அர்த்தமற்ற ஒரு பல்கலைக்கழக அமைப்புடனும், எமது
எதிர்கால சந்ததிகள் ஒரு கைவிடப்பட்ட பல்கலைக்கழக அமைப்புடனும்
தரமற்ற பேரங்காடியில் ஒவ்வொரு பண முகப்பிடங்களிலும்
விற்பனையாகும் தரங்குறைந்த பட்டக்கல்வியோடும் விடுபடக்கூடும்.