செல்வராஜா விஷ்விகா
“உள்ளூர் மக்கள் தோட்டத் துறையில் வேலை செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே இங்கு வேலை செய்ய இந்தியாவிலிருந்து மக்கள் கொண்டு வரப்பட்டனர்”
பதினாறு வயதுடையவராக க.பொ.த சாதாரணதர பரீட்சை எழுதுகின்ற போது இந்த வார்த்தைகளின் தீவிரத்தை நான் ஒருபோதும் உணரவில்லை. நமது நாட்டின் வரலாற்றைப் பற்றி விவாதிக்கும் போது ஒரு சிந்தனையாக முன்வைக்கப்பட்ட போது, ஒரு முழு சமூகமும் அவர்களின் போராட்டக் கதையும் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை என்னால் உணர முடியவில்லை. அத்துடன், முடிவற்ற வரலாற்று அரசியல் சீர்திருத்தங்களின் பின்னணியில் இந்த சுருக்கமான குறிப்பின் முக்கியத்துவத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எங்கள் பாடப்புத்தகங்கள், உள்ளூர் மக்களின் தேவைகளை முன்வைத்து, கோப்பி தோட்டங்களை அறிமுகப்படுத்துவதில் ஆர்வமாக இருந்த முன்னாள் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களின் ஆசையை நிறைவேற்ற வெளிநாட்டிலிருந்து எளிதில் தொழிலாளர்களை எவ்வாறு கொண்டுவர முடியும் என்பதையே வலியுறுத்தின. ஆனால், அந்தத் தொழிலாளர்களைப் பெறும் செயல்முறை, அவர்கள் இந்த கடின உழைப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை, அல்லது அவர்களின் தனிப்பட்ட மனிதத்துவத்தை பொருளாகக் குறைத்து, அவர்களை அவர்களின் சம்மதமின்றி மற்றொரு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது என்ற நிலைமை, ஆகியவை எங்கள் இலங்கையின் சிறப்பான வரலாற்றுக் கதைப் பகுதியில் காணாமல் போயின. பரீட்சையில் தேர்ச்சி பெறுவதே எங்கள் ஒரே நோக்கமாக இருந்தால், அது முக்கியமற்றதாகிவிட்டது. அவர்கள் இந்த நாட்டில் நுழைந்ததிலிருந்து அவர்களை இரண்டாம் நிலை குடிமக்களாக, அறியாமலேயே வேறுபடுத்தி வைப்பதில் நாம் வெளிப்படுத்திய இணக்கம், அப்போது பதினாறு வயதுகளில் எங்கள் மனதில் பதிவாகவில்லை.
ஆனால், சுவாரஸ்யமாக, தோட்டங்களில் உழைக்கும் மக்களின் இருப்பு அழிக்கப்பட்டாலும், இலங்கையைப் பற்றிய எந்த சர்வதேசக் குறிப்பிலும் இயல்பாகவே கேமரா, செழித்து வளரும் தோட்டங்களை நோக்கித் திரும்புகிறது. எப்போதும் புன்னகையுடன் வரவேற்கும் பெண்கள் தங்கள் வைக்கோல் கூடைகளைக் கையில் ஏந்தி, தங்கள் நுட்பமான விரல்களால் தேயிலை இலைகளை பறிக்கும் காட்சி இலங்கையர்களாகிய எங்கள் அடையாளத்தில் அழிக்க முடியாத ஒரு பகுதியாக தேயிலையை உறுதிப்படுத்துகிறது. சரியான வர்த்தக அடையாளம் மற்றும் தரக்கட்டுப்பாட்டுடன், பல வருடங்களாக தரப்படுத்தப்பட்ட பொருளாக தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டு, உலகளாவிய சந்தையை உறுதிப்படுத்தி இலங்கையின் வருவாய்க்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது. இன்று சுற்றுலாப் பயணிகள் கூட, தங்களின் இலங்கை அனுபவத்தின் ஓர் அங்கமாக சில நிமிடங்களுக்கு தேயிலையைப் பறிக்கும் ஆடம்பரத்தை அனுபவிக்க முடிகிறது. சுமதி சிவமோகன், தனது “Two leaves and a bud: the history of Malaiyaham as pedagogy” (02.01.2024) என்ற குப்பி கட்டுரையில், சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு வந்த இந்த தேயிலைத் தொழிலாளர்களின் வரலாறு, அவர்களின் சமூக நிலை, மற்றும் புறக்கணிப்பைத் தொடர்ந்து ஆராய்கிறார். 2003 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தால் நாட்டின் ஓர் அங்கமாக உரிமையுடன் இருக்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும், மலையகச் சமூகத்தினருக்கு, அவர்களின் இந்திய வேர்களின் காரணமாக, இன்றுவரை அவர்களின் சக மக்களுக்கு வழங்கப்படும் பல சலுகைகள் மறுக்கப்படுகின்றன. ஞானமுத்து, தனது “Education and the Indian Plantation Worker in Sri Lanka” எனும் நூலில் H.W.Cave இனை பின்வருமாறு மேற்கோள் காட்டுகின்றார், “சிறிது கூடுதலான கல்வியும், பழக்கமற்ற சுகவாழ்வும், இந்த (தோட்டத்துறை) குழந்தைகளுக்கு அவர்களின் பணி நோக்கத்திற்கு பொருந்தாததாகும்.” இதற்கேற்ப, இந்த சமூகத்தின் அடையாளத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தனியார் முயற்சிகளின் கீழ், இரவு (line) பாடசாலைகளும், மிஷனரிக் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும், இந்த வெளிப்புற மக்களுக்கு “சரியான” கல்வியை வழங்குவதற்கு அதிக செலவான முயற்சிகளில் ஈடுபடுவதற்குத் தயங்கின. ஏனெனில், ஒரு தொழிலாளியின் முதன்மையான “calling” பணி தோட்டங்களைப் பராமரிப்பதே எனக் கருதப்பட்டது. பின்னர், அரசு இந்தத் தோட்டப் பாடசாலைகளைப் பொறுப்பேற்று, கன்னங்கரா, (1945) மசோதா வகுத்த இலங்கையின் புகழ்பெற்ற பாகுபாடற்ற இலவசக் கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், இந்தச் சமூகத்தினர் ஆரம்பத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருந்து வந்தனர். மட்டக்களப்பு தேசிய கல்வியல் கல்லூரியின் முன்னாள் அதிபரான திரு.ராஜேந்திரன் குறிப்பிடுவது போல, தேயிலை பறிக்கும் பெண்களின் கவலைகளுக்கு மாறாக, தொழிலாளர்கள் குடியுரிமை மற்றும் குடியுரிமை இன்மையின் எல்லையின் விளிம்பில் நின்று உழைத்த போதும், நமது நாடு பல்கலைக்கழகங்களில் மேலாண்மை மட்டத்திலான தோட்ட மேலாளர்களை உருவாக்குவதற்கே ஆயத்தமாக இருந்தது. இந்தச் சிக்கலான சூழலில், இந்தச் சமூகத்தின் வளர்ச்சியை கல்வி மற்றும் எழுத்தறிவு இன்மையின் மூலம் தடுக்க வேண்டிய தேவை இருந்ததோடு, அதேநேரத்தில் அவர்கள் இரண்டு இலைகள் மற்றும் ஒரு மொட்டு, பறிப்பதற்கே தகுதியானவர்கள் எனவும் உறுதிப்படுத்த வேண்டிய நிலை காணப்பட்டது. எனவே, வளர்ச்சி, கல்வி, மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான பந்தயத்தில் இவர்களின் ஆரம்பம் அரசினால் தாமதமாக்கப்பட்டதுடன், இன்றளவும் அவர்கள் அதனுடன் இணைந்து முன்னேற்றத்தை எதிர்பார்த்து பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹற்றனில் நடைபெற்ற மலையகக் கல்வி மாநாட்டில் பங்குபற்றிய போது, அப்பகுதியில் வழங்கப்படும் கல்வித்தரம் குறித்த ஆய்வுக்கு பார்வையாளர்கள் வழங்கிய பிரதிபலிப்புகள் எனக்கு பயனுள்ளதாகத் தோன்றின. ஆரம்ப மற்றும் இடைநிலைப் பாடசாலைகளில் மாணவர்கள் தொடர்ச்சியாகப் படிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஆசிரியர்கள் கவலை தெரிவித்தனர். ஆனால், அவர்கள் எளிதாக பெற்றோர்களை நோக்கிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். மேலும் இந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், கணிதம் மற்றும் விஞ்ஞான துறைகளில் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு சிரமப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடப்பட்டது. மேலும், வேலை வாய்ப்பை உறுதி செய்யக்கூடிய இத் துறைகள் அல்லது பிற தொழில்நுட்பப் பாடங்களில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கும் கூட, ஆசிரியர்கள் பொதுவாகவே உயர்தரத்தில் வணிகப்பிரிவு அல்லது கலைப்பிரிவையே தேர்வு செய்ய ஊக்குவிக்கிறார்கள். இத்தகைய ஊக்குவிப்புக்கான, ஆசிரியர்களின் காரணமாக பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பின்னரும் ஏற்படுகின்ற கல்விக்கான மிகுந்த செலவு காணப்படுகின்றது. ஆனால், தோட்டப் பகுதிகளில் இப் பாடங்களை கற்பிக்கத் தேவையான தகுதியான ஆசிரியர்களும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளும் இல்லாமை என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். க.பொ.த உயர்தரத்துக்காகக் கட்டாயமாகக் கருதப்படும் தவிர்க்க முடியாத தனியார் கல்வி நிலையங்களின் ஆதரவைத் தவிர்த்து, மலையகச் சமூகத்திற்கான 1AB வகையான பாடசாலைகள் கிடைப்பது குறித்து கருத்துக்கள் எழுப்பப்பட்டன. இதனால், மத்திய மலைநாடு பகுதிகளில் கிடைக்கும் மிகக் குறைந்தளவிலான பாடசாலைகளைச் சுற்றி, தோட்டப் பகுதிகளில் இருந்து மாணவர்கள் தற்காலிகமாக இடம்பெயர்ந்து, கணிதம் மற்றும் விஞ்ஞானப் பிரிவுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை எழுதுகின்றனர். அரசாங்கம் தோட்டப்பகுதி மாணவர்களுக்கு இந்தப் பிரிவுகளில் பல்கலைக்கழக நுழைவுத் தொகையை அதிகரித்தாலும் தேவையான வழிகாட்டுதலோ அல்லது உட்கட்டமைப்பு வசதிகளோ இல்லாமல் அவர்களால் எதிர்பார்கப்படுகின்ற நிலையை அடைய முடியவில்லை. கலைப் பிரிவில் கற்பிக்கப்படும் பாடங்களும் பெரும்பாலும் புவியியல், அரசியல் விஞ்ஞானம், தமிழ் போன்றவையாகும். இந்தப் பாடங்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் சேரும் வாய்ப்பை அதிகரிக்கும் வைகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. ஆனால், இரண்டு நீண்ட ஆண்டுகள் இந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடத்திட்டத்தின் உள்ளடக்கங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட வேண்டும். உதாரணமாக, இந்த மலையகப் பகுதியில் வாழும் மக்களுக்கான நில உரிமை, புவியியல் கட்டுப்பாடுகள், தீர்வுகள் ஆகியவை விவாதிக்கப்படாத நிலையில், உயர்தரப் பரீட்சையில் புவியியலில் சிறந்த அறிவு என்று கருத்ப்படுவது எவ்வாறு பொருள்படும்? இந்தச் சமூகத்திற்கு எதிராக நிகழ்ந்த வெளிப்படையான மனித உரிமை மீறல்கள் மற்றும் அவர்கள் சந்தித்து வரும் தொடர்ச்சியான புறக்கணிப்பு குறித்த விவாதங்கள் எங்கே? பரீட்சைக்கான மதிப்பீட்டு முறையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளத்தக்கதற்கான கண்டிப்பான தரநிலைகளால், கல்வி எதைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்கான பட்டியலை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. மாணவர்கள் அதைத் தங்கள் வாழ்க்கை அனுபவத்திற்கு முற்றிலும் முரணான ஒரு கற்பனையாகவே ஏற்றுக்கொள்கிறார்கள். புவியியல், அரசியல் அல்லது வரலாறு என்ற அடையாளங்களில் மாணவர்கள் உலகம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதற்கான புரிதலைக் கற்றுக்கொள்கின்றார்கள். ஆனால், அது அவர்களின் வாழ்க்கைக்கு தொடர்புடையதா என்ற கேள்வியை எழுப்ப இடமளிக்கப்படவில்லை. தங்கள் சிக்கல்களை வெளிப்படுத்த வலுவான பாடத்தொகுதியினைப் பெற்றிருந்தாலும், அவர்களைச் சிதைக்கும் அமைப்புகளை மாற்றும் திறன் பறிக்கப்படுவதால், இந்தச் சமூகத்தின் சமத்துவப் போராட்டம் தொடர்கிறது. அவர்கள் தங்களது வரலாற்றையே பின்தொடர முடியாமல் இருக்கின்றனர். இந்த நாட்டின் கருத்தியல் தலையீடுகள், சமூகப் பிரிவுகளை உறுதிப்படுத்துவதோடு, பொதுப்பேச்சில் மலையக அடையாளத்தை உருவாக்கிய விதமும், தற்போதைய கல்வி அமைப்பின் மூலம் தொடர்ந்து நிலைத்திருக்கின்றது என்பதே கவலையளிக்கின்றது. சமூகப் படிநிலைகளை வலுப்படுத்தும் முடிவில்லாத கல்விச் சூழலில் சிக்கிக்கொண்ட நிலையில், புவியியல், அரசியல் விஞ்ஞானம், வரலாறு ஆகியவற்றில் எந்தப் பாடமும் மாணவர்களுக்கு மாற்றத்திற்கான உரையாடலுக்கான இடத்தை வழங்கவில்லை. அதற்குப் பதிலாக, சமூகத்தால் மேலும் புறக்கணிக்கப்படுவோமோ என்ற பயத்தால், அவர்கள் தங்களது நிலையை ஏற்றுக்கொண்டு அமைதியாக இருக்கின்றனர். இதன் மூலம், அவர்கள் விதிமுறைகளுக்கு இணங்குவதும் மௌனமாக இருப்பதும், அவர்களின் சமூகத்தின் விலையில் சமூகத்தின் ஒரு பொருளாக நுழைவதற்கு உதவுகின்றது.
கல்வி ஓர் உரையாடலாக இருக்க வேண்டும். கற்றல் நிகழ்வதை உறுதிப்படுத்த, நாம் மனப்பாடம் செய்வதிலேயே நிற்காமல், கவனிக்கவும், பேசவும் நமக்கு வரும் தகவல்களுடன் ஈடுபடவும் தயாராக இருக்க வேண்டும். புரிதலின்றி, ஒருவர் மனப்பாடம் செய்தவற்றை நினைவில் வைத்திருக்கும் திறனின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கும் கல்வி முறையால் நாம் திருப்தியடைய வேண்டுமா? அப்படியானால், ஒரு ஆசிரியரின் பணி என்ன? நமது மாணவர்கள் தாங்கள் கற்றுக்கொள்வதை தங்கள் அடையாளத்துடன் தொடர்புபடுத்த முடியாத நிலை எங்களுக்கு கவலையாக இருக்க வேண்டாமா? மனப்பாடம் செய்யப்பட்ட பாடங்கள், நிஜத்தை விமர்சனமாக அணுகுவதற்கோ அல்லது சமூக மாற்றத்திற்கான படிக்கட்டாக மாறுவதற்கோ வழிவகுக்காவிட்டால், அப்போது கற்றல் எங்கே, எவ்வாறு நடைபெறுகிறது? கல்வியின் மூலம் மாற்றத்திற்கான இடமிருந்தால், இந்தச் சமூகத்தினர் தங்களுக்கு மலையகத்தினர் எனும் அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு, தேயிலை பறிப்பவர், தோட்டத் தொழிலாளர், கள்ளத்தோணி போன்ற நாம் சமூகமாகச் சுமத்தி வைத்திருக்கும் அடையாளங்களுக்கு அப்பாற்பட்ட தங்கள் சுய உணர்வில் வளர்ந்து செல்ல முடியும்.
தேயிலைச் செடியின் சிறந்த பகுதியாகக் கருதப்படுவது பொதுவாக இரண்டு இலைகளும் ஒரு மொட்டும்தான். இவை மென்மையான புதிய முளைகளாக இருப்பதால் மிகுந்த தேடுதலுக்குட்படுபவை ஆகும். அதனை ஆரம்பத்திலேயே பறித்து விட்டால், அந்தச் செழுமை சரியான விலையைச் செலுத்தத் தயாராக இருக்கும் சிலருக்கே மட்டுப்படுத்தப்படுகிறது. இன்றுவரை, தரமான கல்விக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதன் மூலம், நாம் இன்னும் Cave இன் கருத்துக்களையே ஒலிக்கவைக்கின்றோமா? மலையகச் சமூகத்தின் அடையாளத்தை நாம் மொட்டிலேயே நொறுக்கி, அவர்களின் செழுமையையும் வளர்ச்சிக்கான இடத்தையும், அவர்களின் திறமையைப் பற்றிய பயத்தாலோ, அல்லது நாம் செலுத்த வேண்டிய விலையைப் பற்றிய அச்சத்தால், தடுக்கின்றோமா?