இலங்கையில் ஆங்கில மொழிக் கற்பித்தல் புலத்தில் இலங்கை
ஆங்கிலத்தை நிலைப்படுத்தல்

மதுரங்க கலுகம்பிட்டிய‌

பல தசாப்தங்களாக, குறிப்பாக திறந்த பொருளாதார முறைமை
அறிமுகப்படுத்தப்பட்ட 70’களுக்குப் பின்னரான காலத்தில் ஆங்கில மொழிக்
கற்பித்தலானது (ELT) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலைப்பாக நாட்டில்
காணப்படுகின்றது. ஆங்கில மொழி கற்பித்தலானது உடனடி மற்றும்
காலத்துக்கு தேவையான தேவையாக பார்க்கபப்டுவதோடு பூகோளமயமாதல்
எனும் பரந்த கருத்தியலில் நாட்டில் பொருளாதார அபிவிருத்தியோடு
நேரடியாக இணைத்து பார்க்கப்படுகின்றது. இத்தலைப்புடன் கோர்க்கப்படும்
முக்கியத்தை விடுத்து நாட்டில் ஆங்கில மொழிக் கற்பித்தலானது பரவலாக
தோல்வியடைந்த விடயமாக கருதப்படுகின்றது. நாட்டில் ஆங்கிலக் கல்வி
தொடர்பான தோல்விக்கு, இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்பிக்கும்
திறன்மிக்க ஆசிரியர்களின் போதாமை, செயலூக்கம் காணப்படாமை மற்றும்
மாணவர்களிடம் சரியான மனப்பான்மை காணப்படாமை ஆகிய காரணங்கள்
சுட்டிக்காட்டப்படுகின்றன. பொதுவாக முன்வைக்கப்படும் இப்படியான
பிம்பத்துக்கு எதிரான வாசிப்பான செல்வராஜ் விஷ்விக்காவின் அண்மைய
குப்பி ஆக்கமான‌ “இலங்கையில் ஆங்கிலத்தின் பேரில் நடைபெறும் குரல்
பறிப்பு” (6 மாசி, 2024) இவ்விடயத்தின் சில முக்கிய பரிமாணங்களின் மீதான
அகக்காட்சியை தருகின்றது.

விஷ்விக்காவின் மையக் கருத்தானது வெற்றிகரமான ஆங்கில மொழிக்
கற்பித்தலானது மாணவர்களை அவர்களின் சொந்தக் கருத்துகளை
வெளிப்படுத்துவதற்குரிய இயலுமையை வழங்கி அவர்களை பலப்படுத்த‌
வேண்டிய நிலையில், தற்போது ஆங்கில கல்விப் புலத்தில்
மேற்கொள்ளப்படும் சில நடைமுறைகள்- அவற்றில் சில சிறந்த
நடைமுறைகளாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன‍- மாணவர்களை அவ்விலக்கை நோக்கி செல்லும் பாதைக்கு தடைக்கற்களாக இருக்கின்றன.
விஷ்விக்கா முன்வைக்கும் கருத்து மிக முக்கியமானதாகும்.

கல்வி என்ற விடயத்தை எடுத்துக் கொண்டால் நாம் அதனை பொதுவாக
வகுப்பறை சூழமைவினுள் நடைபெறும் செயற்பாடாக மட்டுமே
கருதுகின்றோம். இதன் தொடர்ச்சியாக நாம் கல்வி/ கற்பித்தல் புலத்தில்
மேற்கொள்ளப்படும் வெற்றிகரமான நடைமுறைகளும் முதன்மையாக
வகுப்பறையினுள்ளே மேற்கொள்ளப்படும் விடயங்களாகவே பார்க்கின்றோம்.
நாம் வகுப்பறையுள் தாக்கத்தை ஏற்படுத்தும், ஆனாலும் வெளிவாரியான
காரணிகளான வளப்பற்றாக்குறை, போதுமான பயிற்சிபெற்ற ஆசிரியர்கள்
இன்மை போன்ற விடயங்களைப் பற்றி பேசினாலும், முறையாக
பயிற்சிபெற்ற ஆசிரியர் படையணி, ஊக்கத்துடனான மாணவர்கள்,
முறையான பாடப்புத்தக்கம் ஆகிய விடயங்கள் வெற்றிகரமான
கற்றல்/கற்பித்தல் அனுபவத்தை பெற்றுத்தரவல்லன என்பதே எமது
பொதுவான நிலைப்பாடாகும். இப்பொதுவான நிலைப்பாடு, இலங்கையில்
ஆங்கில கற்றல்/ கற்பித்தல் விடயத்தில் பிழையானதாக காணப்படுகின்றது.

மாணவர் ஒருவரின் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகின்றது என்பதை
தீர்மானிக்கும் முக்கியமான விடயமாக ஆங்கிலக் கல்வி காணப்படுகின்றது
என்ற கருத்தாக்கம் சோடிக்கப்பட்டதாகும். இவ்விடயத்தில், குறிப்பாக
பாடசாலை மட்டத்தில் எவ்வித தேர்வும் இல்லை. ஆங்கிலமானது,
பல்கலைக்கழக கல்வி வரையும், அதற்கு அப்பால் பல்கலைக்கழகங்களில்
ப‌ல கற்கை நெறிகளிலும் கட்டாயத்தேர்வாக காணப்படுகின்றது. அவ்வாறு
கட்டாயத்தேர்வாக அல்லது மொழிமூலமாக காணப்படாத கற்கைநெறிகளை
தேர்வு செய்துள்ள மாணவர்களும் ஆங்கிலக்கல்வியின் முக்கியத்துவத்தை,
குறிப்பாக அவர்களின் பாடநெறிகளின் முக்கியமான கற்றல் சாதனங்கள்
மற்றும் வளங்கள் ஆங்கில மொழிமூலத்தில் இருப்பதை உணர்ந்துகொள்வர்.
மேலும் அவர்கள் ஆங்கிலம் இல்லாத நிலையில் தொழில் உலகில்
தமக்கான தேர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டவையாக இருப்பதையும்
காண்பார்கள்.

ஏற்கனவே பல அறிஞர்கள் கூறியது போல, ஆங்கில மொழியானது
அரசியல்ரீதியாகவும் கருத்தியல்ரீதியாகவும் காலனித்துவத்தன்மையை
வெளிப்படுத்துவதோடு பின்காலனித்துவ அமைப்பிலும் அதே நிலையை
சுமந்திருப்பதாகவே இருக்கின்றது. பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து
மூன்று கால்நூற்றாண்டுகள் கடந்தும் பிரித்தானிய காலனித்துவ
யதார்த்தங்கள் இன்னும் வெவ்வேறு வழிமுறைகளில் காணப்படுவதானது
மிகையான கருத்தாக அமையாது. இந்நிலையை, பின்காலனித்துவம் மேலும்
சிக்கலாக மாற்றியிருக்கின்றது. அதாவது, ஆங்கில மொழியிலும் ஆங்கில
மொழிக்கூடாகவும் தான் இவ்வாறான அழுத்தங்களும் சிக்கல்களும்
காணப்படுவதோடு அதற்கான வெளிப்பாடுகளையும் பெறுகின்றன.
பெரும்பாலானோருக்கு ஆங்கில மொழி கொண்டிருப்பது சாத்தியப்பாடு
மற்றும் பயத்துக்கு இடையிலான அழுத்தமாகும். பெரும்பாலான மக்களில்
காணப்படும் கருத்தியலான, ஆங்கில மொழியை தன்னகப்படுத்த
குறிப்பிட்டதொரு வகுப்பு நிலையும், சமூக அந்தஸ்தும் காணப்பட
வேண்டுமென இருப்பது ஆங்கிலத்தை, ஏனையோர் கற்க ஆரம்பிக்க
முன்னரே அவர்களை தனிமைப்படுத்தவல்லதாக காணப்படுகின்றது.
ஆங்கிலத்தை உரிமையோடு தன்னகப்படும் குறித்த‌ சமூக வகுப்பு நோக்கிய
எட்டம் பொதுமக்களிடையே எவ்வளவு அதிகமாக காணப்படுகின்றதோ,
அவ்வளவு அதிகமாக அம்மொழியின் மீதான பயம் மற்றும் எதிர்ப்பு
வெளிப்படுத்தப்படும். இம்மன‌நிலை காரணமாக‌, அம்மொழியை பேசும்
போது தாம் நோட்டமிடப்படுகின்றோம் என்ற மனநிலையும் அதனூடாக
மொழிப்பிரயோகத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவித‌ சிறு பிழையும்
அம்மொழியை மேலும் பிரயோகிப்பதற்கான சந்தர்ப்பத்திலிருந்து
தூரமாக்கப்படுவதாகவுமான கண்ணோட்டம் உருவாக்கப்படுகின்றது.
இன்னொரு வகையில், பெரும்பாலான மக்களிடம் ஆங்கில மொழியானது
நம்பிக்கையை பெற்றுத்தருவதோடு “சிறந்த” மற்றும் ‘வெற்றிகரமான”
வாழ்க்கையை மேற்கொள்வதற்கான உத்தரவாதத்தையும் தருவதான
மனநிலை காணப்படுகின்றது.

பெரும்பாலான மக்களுக்கு ஆங்கில மொழி வழங்கும் அழுத்தநிலையை
காணும்போது அவர்கள் மிகச்சில சொற்களைத்தானும் ஆங்கிலத்தில் பேசுவதானது ஒரு முக்கிய அடைவை குறிப்பதாக இருக்கின்றது. இச்சிற்சில
சொற்பிரயோகங்களானது மூச்சுக்குழாய், குரல்வளை, தொண்டை மற்றும்
இறுதியாக வாய்க்குழி மற்றும் நாசித்துளைகள் வழியாக மாத்திரமன்றி இரு
நூற்றாண்டுகளாக நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறை மற்றும் கலாசார, சமூக
சிக்கல்களின் பற்பல அடுக்குகளை கடந்தே அவர்கள் பேச விழையும் விடயம்
ஒரு சொல்லாகவோ வசனமாகவோ வெளிப்படுகின்றது. இந்த அடைவானது,
மகோச்சதன் பிறப்பின் போது விலைமதிப்பற்ற வைரத்தை கையிலேந்தி
பிறந்ததைப் போல ஷேக்ஸ்பியரின் கவிதையை ஷேக்ஸ்பீரிய
இயல்புத்திரத்தோடு கூற இயலுமான ஆங்கிலத்தை கையிலேந்தி பிறக்கும்
அடைவைக்காட்டிலும் சிறந்ததாக கூறும் எல்லை வரை நான் செல்வேன்.

விஷ்விக்கா வாதிடுவதைப்போல மொழியானது முதன்மையாக
வெளிப்பாட்டுக்கான உபாயமாகவும் எனவே, மொழியை கற்பிப்பதன் பிரதான
இலக்காக மாணவர்களை அவர்களின் சொந்த குரலை அடைவதற்கான
ஆவனசெய்வதாக இருப்பின் அம்மொழியை மாணவர்கள் கட்டினிறி
தன்னுரிமையாக பயன்படுத்துவதற்குரிய அனைத்து வழிவகைகளையும்
ஏற்படுத்த வேண்டி இருக்கின்றது. மொழியின் மீது ஏற்றி வைத்திருக்கப்படும்
கண்டிப்பான விதிகளும் கட்டுப்பாடுகளும், அவற்றிலும் விஷேடமாக, எமது
உள்நாட்டு சூழ்நிலைக்கு பொருத்தமற்ற விதிகளும் கட்டுப்பாடுகளும்
மொழியை கற்க சிரமப்படும் மாணவர்களை மேலும்
தனிமைப்படுத்துவதோடு, எதிர் விளைவை ஏற்படுத்தவல்ல, மொழியை கற்க
வேண்டுமென்ற ஆர்வத்துடன் வரும் குறைந்தளவான மாணவர்களையும்
அதனை விட்டு தூரமாக்கும் செயற்பாட்டிலேயே ஈடுபடுகின்றன‌ என்பது
புரிந்துகொள்ள கடினமான விடயமன்று. அப்படியாயின் நாம் முன்செல்லும்
வழி யாது?

எனது நோக்கில், இதற்கான முன்னோக்கிய வழி ஆங்கில மொழிக் கற்றல்/
கற்பித்தல் தொடர்பாக தளர்ந்த அணுகுமுறையை பின்பற்றுவதாகும்.
இதற்கான அடிப்படை ஆரம்ப படிநிலை, மாணவர்களால் மாத்திரமன்றி
ஆசிரியர்களாலும் அணுகக்கூடிய மிக நெருங்கிய, ஆதலால் பரவலாக அணுகப்படக்கூடிய மொழியின் வடிவம், இலட்சியப்படுத்தப்பட்ட/ புகழப்படும்
வடிவங்களான எம்மிலிருந்து பல கடல்களுக்கு அப்பால் கண்டடையக்கூடிய
மொழி வடிவம் அன்றி, பண்புரீதியாக உள்நாட்டு தன்மையை
வெளிப்படுத்தும் மொழி வடிவமே எமது யதார்த்தங்களை கையகப்படுத்தும்
இயலுமையை கொண்டிருக்கின்றது. அத்தகைய மொழியின் வடிவம்
எதுவென நீங்கள் கேட்கலாம். தற்கால சொல்லாடல்களில் உள்ள ஆங்கில
மொழியின் புதிய வடிவங்களும் அதனிலும் குறிப்பாக இலங்கை ஆங்கில
வடிவத்தின் புதிய உள்ளீடுகளும் இத்தகைய வடிவம் தொடர்பான சட்டகத்தை
மெய்நிகராக்க உதவலாம். இச்சொல்லாடல்களில் ஒருவர் தன்னை
நிலைப்படுத்திக்கொள்வது காலத்தின் மீதே தங்கியுள்ளது.

இலங்கை ஆங்கிலம் என கருதத்தக்க வடிவத்துக்கு குறித்த வரைவிலக்கணம்
காணப்படாமையே அதன் அழகாகும். இலங்கை ஆங்கிலம் என்ற
வடிவத்துக்கு யாரிடமும் தெளிவான கருத்தியலோ அதன் எல்லைகள்
குறித்த புரிதலோ இல்லை. இவ்வாறாக அடைவுப்பண்பு காணப்படாத
நிலையில் மொழியின் பாவனையாளர்களுக்கு பரந்தளவிலான சுதந்திரம்
கிட்டுவதோடு பல்கலைக்கழக அளவிலும் ஆசிரியர்கள் மற்றும்
மாணவர்களும் மொழியின் புனிதத்தன்மை கெட்டுவிடக்கூடாதென
அனுமானிக்கும் நிலையிலிருந்து தம்மை விடுவிப்பார்களாயின்
பரந்தளாவிலான சுதந்திரமான மொழிப்பாவனையை உறுதிசெய்யலாம். நாம்
அறிவை வரைவிலக்கணப்படுத்தத்தக்க விடயமாக உள்ளீர்ப்பதன் காரணமாக
அடைவுப்பண்பு குறைவாக இருக்கும் வடிவங்களை நிலையற்ற
தன்மையோடு காண்கின்றோம். இலங்கை ஆங்கிலம் என்பது இன்னமும்
விருத்தியடையும் நிலையில் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இது குழப்பகரமான சூழ்நிலையாக இருந்தாலும் கூட குழப்பங்கள் எம்மை
தற்கால இயங்கியலில் காணப்படும் அமைப்புகளை குறித்த வாசிப்பை
மேற்கொள்ள உதவுவதோடு அந்த அமைப்புக்கு உள்ளேயும் வெளியேயும்
மாற்றுத்தீர்வுகளை தேடும் வாய்ப்புகளையும் எமக்கு ஏற்படுத்துகின்றது.
மாணவர்கள் தம்மை மொழியின் கர்த்தாக்களாக கருதுவது மிக
முக்கியமானதாகும். மேலும் ஆசிரியர்களும் வெறுமனே எமக்கு
பொருத்தமற்ற சூழலில் இயங்கும் மொழியின் சட்டவிதிகளை வலியுறுத்தும் கருவிகளாக தொழிற்படாமல் மொழியை இயங்காற்றல் கொண்ட
அறிவுப்பரப்பாக கருதி மாணவர்களை பயிற்றுவிப்பதற்கான
உணர்வெழுச்சியை பெற வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் மொழியுடன்
பரிசோதனை மேற்கொள்வதை வசதிசெய்து கொடுக்க முடிவதோடு
அவர்களுக்கான குரலை கண்டடையும் நிலையையும் உறுதிப்படுத்தலாம்.