தேசிய கல்விக்கொள்கை சட்டகம் 2023 Inequality Inc.இனால் சுட்டிக்காட்டப்படும் உயர்கல்வியா?

ரம்யா குமார்

உலகளாவிய அளவில் ஏற்றத்தாழ்வு என்றுமில்லாத வகையில்
அதிகரித்திருக்கின்றது. அண்மையில் வெளியிடப்பட்ட ஒக்ஸ்பாம்
அறிக்கையொன்றில் (Inequality Inc. ஜனவரி 2024) உலகில் காணப்படும் 43%மான
சொத்துகள் 1%மான பணக்காரர்களாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன;
பெருங்கொள்ளை நோய்க்காலத்தில் 5 மிகப்பெரும் பணக்காரர்கள் தமது
சொத்துகளை இரண்டு மடங்குகளாக பெருக்கிய அதேவேளையில் 5
பில்லியன் மக்கள் மேலும் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டார்கள்.
குறைந்துகொண்டே வருகின்ற கூலி (தொழிலாளர்களுக்கானது),
அதிகரித்துக்கொண்டே வருகின்ற வரிச்சலுகைகள் மற்றும் ஏய்ப்புகள்
(பெருநிறுவனங்களுக்கானது மற்றும் பெருநிறுவனங்களால்
மேற்கொள்ளப்படுவது), பொதுச்சேவைகள் தனியார்மயமாக்கப்படுதல் போன்ற
செயற்பாடுகளால் பெருநிறுவங்களில் குவியும் சொத்துகளாலும்
அதிகாரத்தினாலும் அவர்களின் செல்வாக்கு கொள்கைவகுப்புத் தளத்திலும்
அதிகரிப்பதாக ஒக்ஸ்பாம் கூறுகின்றது.

இலங்கையில் பெருந்தொற்றை தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகளின்
விளைவாக மெய்க்கூலி பாதியாக குறைவடைந்து, பெறுமதிசேர் வரிகள்
அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை பணக்காரர்களுக்கான வருமான வரியின்
உச்ச எல்லை 30%மாகவே தொடர்கின்றது. சர்வதேச நாணய நிதியத்தின்
கட்டளைகள் படி அரசாங்கம் செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில்
அரசாங்க சொத்துகளை, இயற்கை வளங்களை, அரசுக்கு சொந்தமான
நிலங்களை தான்தோன்றித்தனமாக விற்று வருகின்றது. இவ்வாறான
சூழ்நிலையில் அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய கல்விக் கொள்கை
சட்டகம் 2023 NEPF கல்வித்துறையை தனியார் துறைகளுக்கு தாரைவார்த்துக்
கொடுக்கும் வகையில் மாற்றங்களை ஏற்படுத்தும்படி வரையப்பட்டுள்ளது. சட்டபூர்வமற்ற பாராளுமன்றமொன்றால் வரையப்பட்டு வெளியிடப்பட்ட
கொள்கைச் சட்டகம் என்ற வகையில் முழுமையாக புறமொதுக்கப்பட
தகுதியான NEPFஇன், கருத்தியல் உட்கிடைகள் மற்றும் அவற்றினால்
உயர்கல்வித்துறையில் விளைய இருக்கும் எதிர்கால பாதிப்புகளை இந்த
ஆக்கம் அலசுகின்றது.

கருத்தியல், செயற்பாட்டுத் தளத்தில்

“கற்பித்தல், கற்றல் மற்றும் அங்கீகாரப்படுத்தல் ஆகியவற்றில் அமைப்பு
மாற்றங்களை கொண்டுவருவதன் ஊடாக கல்வித்துறையின் அணுகல், தரம்,
பொருத்தப்பாடு மற்றும் டிஜிட்டல் மாற்றத்தை நிலையான அளவில்
அதிகரித்தல்; பரிபாலனம்; பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டை
அதிகரிப்பதற்காக வள மற்றும் முதலீட்டுத் தளங்களில் அமைப்பு
மாற்றங்களை ஏற்படுத்தல்” என்பதே NEPFன் இலக்காகும். NEPFன் 7
குறிக்கோள்களில் ஒன்று “இனம், இனத்துவம், சாதி, மதம், தேசியம், மொழி,
வருமானம் அல்லது ஊனநிலை ஆகியவற்றை விடுத்து அனைத்து
குழந்தைகளுக்கும்” கல்விக்கான அணுகலை உறுதிசெய்வதாக இருக்கின்றது
(p.28). உயர்கல்வித்துறையில் இந்த அடைவை மேற்கொள்ள NEPF எவ்வாறு
எதிர்பார்த்திருக்கின்றது?

இந்த இலக்கின் முக்கியமான உந்துசக்தியாக உயர்கல்வித்துறையில் தனியார்
துறையின் பங்களிப்பை அதிகரிப்பது காணப்படுகின்றது. இதனை
மேற்கொள்ளும் முகமாக அரசு “அனைத்து துறைகளிலும் அரச- தனியார்
கூட்டாண்மை நிறுவனங்கள் உட்பட அரச சார்பற்ற நிறுவனங்களின்
பங்களிப்பை” (p.28) வசதிசெய்து கொடுப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
குறிப்பிடப்பட வேண்டிய விடயம் யாதெனில், இலவசக் கல்விக் கொள்கை,
குறிப்பாக கட்டணம் அறவிடப்படாத உயர்க்லவி அமைப்பு இக்கொள்கை
சட்டகத்தின் படி சாத்தியமாகப்போவதில்லை, காரணம் இச்சட்டகத்தின் படி,
“அரசாங்க மானியங்கள், அரசாங்கம் வழங்கும் கடன் உதவிகள் மற்றும்
தம்மாலான பங்களிப்புகளின்” (p.28) ஊடாக கேள்வி அடிப்படையிலான
மாதிரியை பின்பற்றி மாணவர்கள் கட்டணம் செலுத்தும் அமைப்பு முறை எடுத்துரைக்கப்படுகின்றது. குறிப்பாக “திறமைக்கான தேர்வு அளவைகள்
மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான இயலுமை உள்ளிட்ட
ஒவ்வொன்றுக்குமான பகிர்வு மற்றும் அதன் வழிமுறைகள் இன்னும்
நிர்ணயிக்கப்படவில்லை” என இச்சட்டகம் கூறுகின்றது. அதாவது,
பின்தங்கிய மாவட்டங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கான கல்வியின்
அணுகல் குறித்து இச்சட்டகத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

NEPFஆனது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை (UGC) விடுத்து
தேசிய உயர்கல்வி ஆணையகம் (NHEC) என்ற அமைப்பின் கீழ் அரச மற்றும்
தனியார் உயர்கலவி நிறுவனங்களை ஒருங்கிணைக்க பிரேரிக்கின்றது(p.26).
இந்நடவடிக்கையானது அரச மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களை
ஒரே தரத்தில் வைப்பதனால் அவை அனைத்தும் அரச நிதிகளுக்காக
தமக்கிடையே போட்டியிட வேண்டிய சூழ்நிலை உருவாக இருக்கின்றது.
“அரச மானியங்கள் மற்றும் அரசின் கடன் உதவிகளை பெறும் மாணவர்கள்
அரச அல்லது தனியார் உயர்கல்வி அமைப்புகளில் தமது தெரிவுகளுக்கேற்ப
கற்கலாம்”(p.9). மேலும் பல்கலைக்கழகங்களுக்கு “வரி உருப்படி
அடிப்படையிலான பாதீட்டிலிருந்து சேர்க்கை அடிப்படையிலான வரவு
செலவுத்திட்டத்துக்கு மாறுவதற்காக மூன்று வருடங்கள் தரப்பட
இருப்பதாகவும்” (p.28) இச்சட்டகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மானியங்கள்
செயல்திறன் அடிப்படையில் அமைய இருப்பதால் பின் தங்கிய கிராமங்களை
சேர்ந்த பல்கலைக்கழகங்கள் அதிகமான அளவில் பாதிக்கபடும். உதாரணமாக,
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு தெரிவு செய்யப்பட
இருக்கும் மாணவரொருவர் தனது விருப்பத்தின் பேரில் கொழும்பில் உள்ள
தனியார் மருத்துவ கல்லூரியொன்றுக்கு அனுமதிக்கப்படலாம். அரச
பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்காதவையால்
இந்நிலைமை காரணமாக அரச பல்கலைக்கழகங்கள் வளப்பற்றாக்குறை
காரணமாக மூளைசாலிகளின் வெளியேற்றம் அதிகரிப்பதோடு, “உயர்கல்வி
மற்றும் திறன் அபிவிருத்தியில் வெளிநாட்டு முதலீடுகளில்
மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடுகள்” (.29) காரணமாக அரச சொத்துகள்
மொத்தமாக விற்பனைக்குள்ளாகும் நிலைமையும் அதிகரிக்கலாம்.

NEPFன் கொள்கை இலக்குகளில் “அனைத்து மாணவர்களுக்கும் டிஜிட்டல்
கல்வி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவுக்கான சம வாய்ப்பை உருவாக்குதல்”
காணப்படுகின்றது. 2019ஆம் ஆண்டிலிருந்து 30%மாக அதிகரிக்கப்பட்டு வரும்
மாணவ அனுமதி மற்றும் சுகாதார, நல்வாழ்வு சேவைகளின் குறைப்பாடுகள்
போன்ற வளப்பற்றாக்குறை சிக்கல்களை தவிர்த்து டிகிட்டல் கல்வி மற்றும்
செயற்கை அறிதிறன் ஆகியவற்றை முக்கியத்துவன் வழங்கி இச்சட்டகம்
குறிப்பிடுகின்றது. பெருந்தொற்று காலத்தின் போது பாரிய தகவல்
தொழிநுட்ப நிறுவனங்கள் எவ்வாறு எல்லை கடந்த கொள்ளை லாபங்களை
கண்டன என்றும் பொருளாதார ரீதியில் நலிவுற்று வரும் கல்வித்துறைகள்
மீதான அவற்றின் ஆதிக்கம் குறித்தும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் தகவல் தொழிநுட்பம் மீது வழங்கும் இக்குவியமானது கல்வி
வியாபாரத்தில் இப்பாரிய தகவல் தொழிநுட்ப நிறுவனங்கள் ஆதிக்கம்
செலுத்துவதற்கும் “ed-tech” என்ற பேரில் வளங்களை ஒருங்கிணைக்கவும்
உறுதுணையாகப்போகின்றன. NEPFன் கருத்தியல் சாய்வு வெள்ளிடை
மலையானாலும் அதன் கொள்கைகளானது, கண்டுணரப்படாத பல
நெருக்கடிகளுக்கான தவறான தீர்வுகளையே முன்வைக்கின்றன.

தவறான அங்கீகாரம்


பல கொள்கை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டும் விடயமான இலங்கையில்
வெறுமனே 8.9%மான மாணவர்களே அரச பல்கலைக்கழகங்களில்
இருக்கிறார்கள் என்ற கூற்றைக் கொண்டே NEPF ஆவணம்
ஆரம்பிக்கப்படுகின்றது. இவ்வாறான தரவுகள் வழமையாக அரச
பல்கலைக்கழகங்களி உயர்கல்வி நிறுவனங்களின் மீதான‌ ஏகபோகத்தை
சுட்டிக்காட்டவே பயன்படுகின்றன. உயர்கல்விக்கான மாணவர் அனுமதியின்
குறைவானது அரச பல்கலைக்கழகங்களின் தவறாக கருதப்பட வேண்டிய
விடயமா? UNESCOவின் அளவீடுகளின் படி, மாணவர்களின் வயதை விடுத்து
ஒரு குறிப்பிட்ட கல்விநிலையை பெற்ற நாட்டின் மொத்த மாணவர்
சனத்தொகையில் இருந்து உயர்கல்விக்கான மாணவர்களின் அனுமதியையே
விகிதமாகக் கொள்கின்றது. 2021ல் 21.36% வீதமாக இலங்கையானது உலகில் 109 நாடுகளில் 89ஆவது இடத்தை வகிக்கின்றது (எல்லை: கிரேக்கம் 150.2%,
மாலாவி 2.4%). குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் UGC தரவு மூலங்களின்
படி, இத்தரவுச் சேகரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட அளவீடானது (அதாவது, ஒரு
குறிப்பிட்ட கல்விநிலையை பெற்ற‌ நாட்டின் மொத்த மாணவர்
சனத்தொகையில்), 2021ல் உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றிய
மாணவர்களில் மூன்றில் ஒன்று பகுதியினரில் (37.6%)
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படாத மாணவர்களையும்
உள்ளடக்கியிருக்கின்றது. அவர்களின் கால்வாசிக்கும் (24%)
மிகக்குறைவானரே உயர்கல்விக்காக அரச பல்கலைக்கழகங்களுக்கு
தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார்கள்.

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் சேர்க்கை வீதங்களை
அதிகரிக்கும் பொருட்டு பாரிய கட்டமைப்பு சார் மாற்றங்களை ஏற்படுத்த
வேண்டி இருக்கின்றது. கல்விக்காக ஒதுக்கப்படும் செலவீனமும் மிகவும்
குறைவானதாகும். UNESCOவின் கருத்துப்படி அரசாங்கங்கள் கல்விக்காக தமது
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 4ல் இருந்து 6%மாவது ஒதுக்க
வேண்டும். இலங்கையில், 2021ல் மேற்கொள்ளப்பட்ட தரவுகளின் படி
உலகிலேயே மிகவும் குறைந்த கல்விக்காக செலவீனங்களை மேற்கொள்ளும்
நாடுகளின் வரிசையில் இரண்டாவதாக காணப்படும் இலங்கை, மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.2% வீதத்தையே செலவளிக்கின்றது (உலக
வங்கியின் திறந்த தரவுகள், 2024). ஆச்சரியமான விடயம் என்னவென்றால்,
NEPFல் இது தொடர்பான எவ்வித குறிப்புகளும் இல்லை! ஆனால், அதனில்
உள்ளடக்கப்பட்ட விடயம் என்னவென்றால், கொள்கைச் சட்டகத்தில்
நெடுநோக்கும் கல்விச்சீர்திருத்தமானது, “ஏற்கனவே காணப்படும் வளங்களை
மறுபாவனைக்கு உட்படுத்தல், மேலதிக வளங்களை அரச‍- தனியார்
கூட்டண்மை நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகளின் மூலம்
நிதிப்பயனீடு செய்வதன் மூலம்” தேவையான நிதியீட்டங்களை
மேற்கொள்ளல் என்பதாகும். அதாவது, கல்வித்துறையில் முதலீடு செய்ய
அரசாங்கம் தயாராக இல்லாத நிலையில் தனியார் அமைப்புகளின் மூலம்
நிதி நல்கைகள் பெறும் அதேவேளை அரச மானியங்கள் மற்றும் மாணவர்
கடன்களை வழங்குவதன் ஊடாக துணையாதரவு அளிப்பதே அதன் திட்டமாகும் (p.29). இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் அரச
பல்கலைக்கழகங்கள் தகுதி பெற்ற மாணவர்களில் கால்வாசிக்கும் மேற்பட்ட
மாணவர்களுக்கு வெறுமனே சிறிய அளவிலான நிதியொதுக்கீட்டினைக்
கொண்டு கல்வி புகட்டி வருகின்றன (2023ல் எமது கணக்கீடுகளின் படி
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.06%மான நிதிகள்). தனியார்
நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாடு நீண்ட
காலவோட்டத்தில் பெரும் சுமைகளை தரவிருக்கும் அதேவேளை,
அரசாங்கமானது, அரச பல்கலைகழகங்கள் எதிர்கொள்ளும் இவ்வாறான
சிக்கல்களை தீர்க்கும் முயற்சிகளில் ஈடுபடலாம்.

அரச பல்கலைக்கழகங்கள் மீது மேற்கொள்ளப்படும் பரந்துபட்ட (மற்றும்
பாராமுகமான) விமர்சனங்கள் எமக்கு அணுகல் தொடர்பான அடிப்படையான
கேள்விகளில் இருந்து தள்ளிவைத்து விடுகின்றன. எண்களில் வழங்கப்படும்
குவியமானது, அரச பல்கலைக்கழகங்கள் பின் தங்கிய மாவட்டங்களில்
இருந்து வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை பார்ப்பதில்
இருந்து எம்மை வசதியாக குருடாக்கி விடுகின்றன. இவ்வாறான
மாணவர்களுக்கு அரச பல்கலைக்கழகங்கள் அன்றி உயர்கல்விக்கான எந்த
வாய்ப்புகளும் காணப்படுவதில்லை. அட்டவணை 1இனை அவதானித்தால்,
2021/2022 கல்வியாண்டில் பல்கலைக்கழக‌ அனுமதிப் பிரிவுகளின்
அடிப்படையில் வெவ்வேறு பீடங்களுக்கு தெரிவான மாணவர்களின் பகிர்வு
காணப்படுகின்றது. குறிப்பிடத்தக்க விடயம், கொழும்பு போன்ற
மாவட்டங்களில் அதிகமான மாணவர்கள் திறமை அடிப்படையிலான
அனுமதிப் பிரிவுகளில் தேர்வுசெய்யப்படும் அதேவேளை 60%மான பின்
தங்கிய கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் ஒதுக்கீட்டு அனுமதிப் பிரிவின்
ஊடாக அரச பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அடிக்குறிப்பில் குறிப்பிட்டதன் படி UGCயானது பல்வேறு நலிந்தோர்
நலநோக்குப் பணிகளின் ஊடாக பின் தங்கிய பிரதேச மாணவர்கள்
எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வு நிலைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருவதன் மூலம் அவ்வாறான மாணவர்களுக்கான வாய்ப்புகள்
அதிகரிக்கப்படுகின்றன. இவ்வாறான நலிந்தோர் நலநோக்குப் பணிகளில்
பல்வேறு யுக்திகள் கைக்கொள்ளப்பட்டு மாணவர்களுக்கான உயர்கல்வி அணுகல் பரவலாக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அரசாங்கம்
குவியப்படுத்தும் STEM கல்வியிலும் அதிகமாக இவ்வாறான மாணவர்களை
உள்ளீர்க்கும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (பார்க்க;
அட்டவணை 01)

மாணவர் கடன்களை இயலுறு நிதிசார் அமைப்பு முறையாக NEPF
முன்வைக்கின்றது. (24 ஐப்பசி, 2023)ல் ஃபர்சானா ஹனீபா அவர்களால்
எழுதப்பட்ட ஆக்கமானது மாணவர் கடன்கள் எவ்வாறு வினைத்திறனற்றதாக
தொழிற்படுகின்றன என்பதோடு மீளச்செலுத்துவதில் காணப்படும்
சிக்கல்களையும் சொல்லிச்செல்கின்றது. மாணவர் கடன்கள் மாணவர்களின்
தொழில்சார் தீர்மானங்களிலும் செல்வாக்கு செலுத்துகின்றன. உதாரணமாக,
மருத்துவத்துறையில் மாணவர் கடன்களானது இளம் வைத்தியர்களை
ஆதாயம் அளிக்கின்ற தொழில்களை நோக்கி நகர்த்துகின்றன. எமது
பட்டதாரிகளாஇ அதிகமான சம்பளம் பெறும் தொழில்களுக்கு அனுப்புவதா
அல்லது சேவை மைய மனநிலையில் செயற்படும் பட்டதாரிகளாக
உருவாக்குவதா என்பதை கொள்கைவகுப்பாளர்கள் கவனத்தில் எடுக்க
வேண்டி இருக்கின்றது.

மீண்டும் ஏற்படும் ஏற்றத்தாழ்வு

கல்வித்துறையை தனியார்மயப்படுத்தல், அரச சேவைகளில் வழங்கப்பட்
மானியங்களை குறைத்தல், சுரண்டலை மேற்கொள்ளும் தொழிலாளர்
சட்டங்களின் அறிமுகம், கடன் மீள்சீரமைப்பு நடவடிக்கைகள் என
பொருளாதார நெருக்கடியின் விளைவாக கொண்டுவரப்படும் புதிய
ஏற்பாடுகள் 99%மான பொதுமக்களை பாதிக்கவே செய்கின்றன. UNDPயின்
அறிக்கையின் படி 1%மான இலங்கையின் சனத்தொகை 31%மான தனிநபர்
சொத்துகளை ஆள்வதோடு 50%க்கும் குறைவான மக்கள் வெறும் 4%
சொத்துகளையே கொண்டிருக்கின்றனர். நெருக்கடிகளுக்கான தீர்வாக
முன்வைக்கப்பட வேண்டிய கொள்கைத்தீர்வுகள் சமூக நீதியை
அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட வேண்டி இருக்கின்றது.
இருப்பினும், எமது அரசாங்கம் சுதந்திரக்குப் பின்னரான 75 வருட வரலாற்றில் சமூக வளர்ச்சி என்ற பேரில் பழைய நிலைக்கே
மீண்டுகொண்டிருக்கின்றோம். அதே வழியில் செல்ல திடசங்கட்பம்
பூண்டிருக்கின் அரசாங்கங்கள் இலவசக் கல்வியை முற்றாக ஒழித்துக்
கட்டுவதன் ஊடாக தமது அழிவையும் தேடிக்கொள்ளும்.