உடாரி அபேயசிங்க
பல்கலைக்கழகச் சூழல்களில் கல்வியாளர்கள் எதிர்கொள்ளும் சக ஊழியர் உறவு முதல் நுட்பமான பகைமை வரையிலான பல்வேறுபட்ட அனுபவங்களைக் கருத்தில் கொள்ளும்போது, உயர்கல்வி நிறுவனங்கள் தங்களின் இளைய உறுப்பினர்களைக் கண்ணியத்துடன் பணியாற்ற உண்மையாகவே அனுமதிக்கின்றனவா என்று கேட்பது அவசியமாகிறது. நமது கல்விச் சூழல்கள், உண்மையிலேயே தகுதியான நியாயம், மரியாதை மற்றும் அங்கீகாரத்தை வளர்க்கின்றனவா, அல்லது இந்தக் கொள்கைகளையே தொடர்ந்து சிதைக்கின்றனவா? மாணவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளாக பகிடிவதை, பாலியல்-பாலின அடிப்படையிலான வன்முறை (SGBV) பற்றி நாம் அடிக்கடி பேசுகிறோம், ஆனால் கல்விப் பணியாளர்கள் மீது அவை ஏற்படுத்தும் நீடித்த தாக்கத்தை நாம் அரிதாகவே ஒப்புக்கொள்கிறோம். பகிடிவதை, பாலியல்-பாலின அடிப்படையிலான வன்முறையைத் தொடரச் செய்யும் அச்சுறுத்தல், மௌனமாக்குதல், பழிவாங்குதல் ஆகியவற்றைச் சகித்துக்கொள்ளும் அதே மனப்பான்மைதான், கல்வியாளர்கள் தங்கள் பணியிடங்களை அனுபவிக்கும் விதத்தையும் வடிவமைக்கிறது. இந்தச் சிந்தனைகள் என்னுடையவை மட்டுமல்ல என்பதை, காலப்போக்கில் நான் உணர்ந்துகொண்டேன். அவை நமது பல்கலைக்கழகங்கள் முழுவதிலும் உள்ள பல கல்வியாளர்களின் மௌனப் போராட்டங்களைப் பிரதிபலிக்கின்றன.
என் பார்வையில், பணியிடத்தில் கண்ணியம் என்பது ஒரு ஆடம்பரம் அல்ல. அது நியாயமாகவும், மரியாதையுடனும் நடத்தப்படுவதற்கும், ஒருவரின் பங்களிப்பிற்காக அங்கீகரிக்கப்படுவதற்குமான உரிமையாகும். அவமானம், சுரண்டல் அல்லது அச்சமின்றி ஒருவரின் கடமைகளைச் செய்ய முடிவதே அதன் பொருள். கல்வித்துறையில், கண்ணியம் என்பது அச்சுறுத்தலோ அல்லது மௌனமாக்கலோ இன்றி, சிந்திக்கவும், கற்பிக்கவும், பேசவும் உள்ள சுதந்திரத்தையும் குறிக்கிறது. உயர்கல்வி கற்பிக்கும் பணியாளர்களின் நிலை குறித்த யுனெஸ்கோவின் பரிந்துரை (1997) நமக்கு நினைவூட்டுவது போல, ஆசிரியர்கள் “கற்பித்தல், கலந்துரையாடலுக்கான சுதந்திரத்தையும்”, “கற்பித்தல், கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றில் தங்கள் கடமைகளை நிறைவேற்ற” அனுமதிக்கும் “நியாயமான-சமமான பணிச்சுமையையும்” பெற்றிருக்க வேண்டும். அந்த நிலைமைகள் மறைந்துவிடும்போது, கண்ணியம் சிதைந்துவிடுகிறது. நமது பல்கலைக்கழகங்கள், தங்களுக்குள்ளேயே நிகழும் ஆழமான வன்முறை வடிவங்களுக்கு எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதற்கும் இதனையே கூறலாம். பல்கலைக்கழகத்தின் ஒரு தளத்தில் அச்சுறுத்தல், அச்சம் , மௌனம்(மௌனித்தல்) ஆகியவை சகித்துக்கொள்ளப்படும்போது, அவை தவிர்க்க முடியாமல் மற்ற தளங்களுக்கும் ஊடுருவி, மாணவர்கள், கல்வியாளர்கள் இருவரினதும் பணியிடத்தில் தங்கள் பாதுகாப்பு, மரியாதைக்கான உரிமையை அனுபவிக்கும் விதத்தை அவை வடிவமைக்கின்றன.
வேலைப்பழு
சோர்வு கல்வித்துறையினுள் தற்போது ஒரு கௌரவப் பதக்கமாகிவிட்டது போல தெரிகிறது. குறிப்பாக குறைந்த பணியாளர்களைக் கொண்ட துறைகளில்தலைமை வகிக்கும் ஆரம்ப, நடுத்தர நிலை ஆய்வாளர்கள், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் நிர்வாகப் பணிகளின் தாங்க முடியாத பழுவை சுமந்து வருகிறார்கள். இதன் விளைவாக ஓய்வு எடுக்கவும் ஆழமாக சிந்திக்கவும் அவர்களுக்கு மிகக் குறைவாகவே வாய்ப்பு கிடைக்கிறது.
புலமைத்துவத்திலும் வழிகாட்டுதலிலும் பல்கலைக்கழக வாழ்க்கையின் அழகு உள்ளது. ஆனால் நிர்வாகச் சுமையும் கற்பித்தல் அழுத்தமும் அதிகரிக்கும் போது இவ்விரண்டையும் தான் முதலில் இழக்கிறோம். பல வருடங்களாக பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் நீடிக்கும் நிலையில் கல்வியியலாளர்கள் மூன்றுமடங்கு பணிச்சுமையை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் மனிதச் செலவு மிகப்பெரியது. ஓய்வு, சிந்தனை மற்றும் ஆராய்ச்சிக்கான நேரம் முற்றிலும் மறைந்து போகிறது. மனச்சோர்வு (burnout) ஒரு சாதாரண விடயமாக மாறுவதோடு “நிறுவனத்திற்காக செய்யும் தியாகம்” என்ற கதை முறைசார் புறக்கணிப்பை மறைக்கும் ஒரு முகமூடியாக செயல்படுகிறது. ஆய்வுகளும் இதையே உறுதிப்படுத்துகின்றன. அதிகப்படியான கற்பித்தல் மற்றும் நிர்வாகச் சுமைகள், அத்தோடு குறைவான சுதந்திரம் ஆகியவை உணர்ச்சிகளின் சோர்வு மற்றும் பணியிலிருந்து விடுபடுதல் ஆகியவற்றின் முக்கிய காரணிகள் என 2023 ஆம் ஆண்டில் உயர்கல்வி பீட ங்களில் மனச்சோர்வு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு காட்டுகிறது (Koster et al., 2023). கல்வியாளர்கள் தங்கள் வேலைப்பழுவை குறைக்கவும் முடியாத நிலையில், நிறுவன ஆதரவும் மிகக் குறைவாக கிடைக்கும் போது அவர்களின் நலன் கற்பித்தலின் தரம் ஆகிய இரண்டிலும் குறையேற்படுகின்றன என்பது இந்த ஆய்வின் முடிவாகும்.
சோர்வு அறிவுசார் இன்பத்தை பதிலீடு செய்யும் போது நம் பணிகள் இயந்திரத்தனமாக மாறுகின்றன. மேலும், அளவுக்கு மீறிய உழைப்பைத் “தன்னிலை அர்ப்பணிப்பு” என போற்றத் தொடங்கும் போது மரியாதை அரவமின்றி நழுவி விடுகிறது. மரியாதையுடன் வேலை செய்வதற்கு ஒருவரது பதவி அல்லது நிலை எதுவாக இருந்தாலும் சிந்திக்கவும், உருவாக்கவும், அதைவிட முக்கியமாக சுவாசிக்கவும் வாய்ப்பு அவசியம்.
அதிகாரப் படிநிலைகள் மற்றும் பாரம்பரியத்தின் நிழல்
பல்கலைக்கழகங்களில் கல்விசார் ஒடுக்குதல் அடிக்கடி நாகரிகத்தின் பெயரில் மறைந்து கிடக்கிறது. அது ஒரு கூட்டத்தில் கேலியாய் உயர்த்தப்படும் புருவம், அவமானப்படுத்தும் நோக்கில் பொதுவெளியில் செய்யப்படும் திருத்தம், அல்லது முடிவெடுப்பதில் புறக்கணித்தல் போன்ற வடிவங்களில் வெளிப்படுகிறது. திறமையை அல்லது தன்னம்பிக்கையை வெளிக்காட்டும் இளம் கல்வியியலாளர்கள் பதவி, தரம் மற்றும் வயது மட்டுமே அதிகாரத்தை வழங்கும் என்று நம்புகிறவர்களுக்கு மத்தியில் நம்பிக்கையின்மையை உண்டாக்கலாம். ஏனெனில் அவர்கள் வழிகாட்டுதலுக்குப் பதிலாக தமது ஆதிக்கத்தை/ பிறருக்கு தாழ்வு மனப்பான்மையை வழங்குகிறார்கள்.
உயர்கல்வி துறையில் பணியிட ஒடுக்குதலும் தொல்லைகளும் தவறுதலாக நிகழ்பவை அல்ல; அவை முறைசார்ந்தவை என 140 நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டின் வரையறை ஆய்வு உறுதிப்படுத்துகிறது (Hodgins et al., 2024). இந்த ஆய்வு, அதிகாரப் படிநிலை அமைப்பு, அதிகாரம், சார்ந்திருத்தல் மற்றும் இது குறித்து நிறுவனங்களின் மெளனம் ஆகியவையே ஒடுக்குதலை உண்டு பண்ணும் முக்கிய காரணிகள் எனக் குறிப்பிடுகிறது. அதேபோல், கல்வித் துறையில் இடம்பெறும் கொடுமையை, “நிறுவனங்களின் கட்டமைப்புச் சார்ந்த அதிகார வெளிகளில் இருந்து பிரித்து பார்க்க முடியாது” என டெய் (2023) வலியுறுத்துகிறார். இளைய கல்வியாளர்களின் செயற்பாடுகள் ஒவ்வொன்றையும் இவ்வதிகாரப் படிநிலையே நிர்ணயிக்கிறது. தமது திறமையை நிரூபிக்கவும், ஒப்புதல்களைப் பெறவும், பதவியுயர்வு மற்றும் நிரந்தர நியமனங்களை வழங்கும் அதிகாரமுள்ளவர்களின் அதிருப்திக்குள்ளாகாமல் இருக்கவும் அவர்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டியுள்ளது. “மரியாதையற்றவர்” அல்லது “சிக்கலானவர்” எனச் சித்தரிக்கப்பட்டு விடுவோமோ என்ற பயம் கேள்வி கேட்காது அவர்களை கீழ்ப்படியச் செய்கிறது. அதேவேளை, நிறுவனங்கள் விமர்சனத்துக்கு தன்னாய்வு மூலம் பதிலளிப்பதற்குப் பதிலாக தற்காப்பு மனப்பான்மையுடன் எதிர்வினையாற்றுகின்றன. இவ்வாறான மெளனம் நடுநிலையானதல்ல. இது தீமையையே விளைவிக்கும். அது தைரியத்திற்கு பதிலாக சரணடைதலையும், புலமைக்கு பதிலாக தக்கனப்பிழைத்தலையும் கற்றுக்கொடுக்கிறது. அமைப்பானது நீதி வழங்காது மெளனமாயிருபக்க முடிவெடுக்கும் ஒவ்வொரு முறையும், அது கல்வியியல் சமூகத்தின் கூட்டு மரியாதையை மெதுவாக அழித்துக் கொண்டே செல்கிறது.
தவறான “பாரம்பரியங்களுக்கு” எதிராக கொள்கைசார் நிலைப்பாட்டை கைக்கொள்வோர், சில சமயம் தொழில்முறை புறக்கணிப்பையும் விரோதத்தையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. ஒரு நாடக இயக்குநரான எனது ஒரு கல்விசார் தோழி தன் அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார். பட்டப்பயிலுனர் என்ற வகையில் அவர் பகிடிவதையை கடுமைாா எதிர்த்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகும் கலை சாதனைகள் பல அவர் புரிந்திருந்தாலும், மாணவர் சங்கங்கள் அவரை “பகிடிவதை-எதிர்ப்பாளர்” என அடையாளப்படுத்துவதால், அவரது நாடகங்களை பல்கலைக்கழகத்தின் முக்கிய விழாக்களுக்கு ஒருபோதும் அழைப்பு விடுக்கப்படுவதில்லை. நிறுவனப் பண்பாடு கீழ்ப்படிதலை ஊக்குவித்து தைரியத்தைக் கண்டிப்பதால் மரியாதையுடன் வேலை செய்வது என்ற எண்ணமே ம ஒரு தொலைதூரக் கனவாக மாறிவிடுகிறது.
அலட்சியப்படுத்தப்படும் உண்மைகள்
நான் இதைப் பற்றி முன்பும் எழுதியிருக்கிறேன்; ஆனால் மீண்டும் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது. SGBV (Sexual and Gender-Based Violence) இன்னும் எங்கள் பல்கலைக்கழகங்களில் வேரூன்றி நிலைத்திருக்கிறது. கொள்கைகளும் குழுக்களும் இருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில் அரிதாகவே பாதுகாப்பை உணர்கிறார்கள். பழிவாங்கல், கெளரவம் பறிபோதல், மற்றும் தொழில் முன்னேற்றம் நின்றுவிடும் என்ற பயம், பலரை மெளனியாக்கி விடுகிறது.
SGBV-க்கு எதிராக பேசுகிறவர்கள் அடிக்கடி மெல்லிய, மறைமுகமான பழிவாங்கல்களை எதிர்கொள்கிறார்கள். புகார் அளிப்பவர்கள், அல்லது குற்றவாளிகளை பொறுப்புக்கூறச் செய்ய முயற்சிப்போர், பெரும்பாலும் “பிரச்சினைக்காரர்கள்” என குற்றம் சாட்டப்படுகிறார்கள். நிறுவனங்கள் தவறான நடத்தைக்கு காட்டும் சகிப்புத்தன்மையைப் பற்றி கேள்வி எழுப்பும் போது, அவை பெரும்பாலும் தற்காப்பு மனப்பான்மையோடு பதிலளிக்கின்றன; சிலர், இத்தகைய பிரச்சினைகளைப் பொது வெளியில் பேசுவது நிறுவனத்தின் “நல்ல பெயரை” கெடுக்கிறது என வலியுறுத்துகின்றனர். Hodgins et al. (2024) விவரிப்பதுபோல், இம்முறையானது அமைதியும் செயலற்ற நிலையும் ஒன்றிணைந்து தீங்கினைத் தொடர்ந்து உருவாக்குகின்ற ஒரு வகையான நிறுவன அடக்குமுறை (institutional violence) ஆகும். மரியாதையுடன் வேலை செய்வதற்கு உடல்சார்ந்த மற்றும் உணர்ச்சிசார்ந்த பாதுகாப்பு இரண்டும் அவசியம். இவை இல்லாதபோது கல்வியியலாளர் எவரும் உண்மையாக வளர்ச்சி அடைய முடியாது.
கண்ணியம் மிக்க பண்பாட்டை நோக்கி
கல்வி துறையில் கண்ணியத்தை மீட்டெடுக்க, முதலில் நாம் கட்டாயமாக மரியாதைக்குறைவான செயற்பாடுகளைக் பெயரிட்டு வெளிக்கொணர வேண்டும். அளவுக்கு மீறிய உழைப்பு அர்ப்பணிப்பு அல்ல; பணியிடத்தொல்லைகள் பாரம்பரியம் அல்ல; அதிகாரப்படிநிலை ஞானம் அல்ல. இவற்றுக்கெதிராக குரல் கொடுப்போரை பாதுகாக்கும் அமைப்புகளைக் பல்கலைக்கழகங்கள் உருவாக்க வேண்டும். அண்மைக்காலத்தில் பல்கலைக்கழகக் கொள்கைகள், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு(UGC) சுற்றறிக்கைகள், மற்றும் பகிடிவதை தடுப்பு குறித்து விவரமான வழிகாட்டுதல்களை வழங்கும் உச்சநீதிமன்ற உத்தரவு வழியாகவும் கூட பகிடிவதை மற்றும் SGBV ஆகியவற்றில் கவனம் செலுத்துவது தொடர்பில் முன்னேற முயற்சி செய்துள்ளது. இவை அனைத்தும் முக்கியமான முன்னேற்றத்தை நோக்கிய படிகள். இருப்பினும், பணியிட கண்ணியம் என்பது வெளிப்படையான வன்முறையைத் தடுப்பதால் மட்டும் முடிந்து விடாது. அது அன்றாடம் நிகழும் மன உறுதியையும் நேர்மையையும் மெது மெதுவாக குலைக்கும் கல்வித்துறை சார் கொடுமைகளையும் புறக்கணிப்புகளையும் , இகழ்ச்சிகளையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் சமாளிப்பதை அவசியமாக்குகிறது.
இப்போது பல்கலைக்கழகங்கள் மேலும் முன்னேறி, பிற உயர்கல்வி அமைப்புகளில் பரிந்துரைக்கப்படுகிறவற்றை ஒத்த தெளிவான ஒடுக்குதல்களுக்கு எதிரான கொள்கைகளை (anti-bullying policies) ஏற்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது(Hodgins et al., 2024). இவ்வாறான கொள்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைகளைத் தெளிவாக வரையறுக்க வேண்டும்; இரகசியமாக புகார் அளிக்கும் முறைகளை உறுதி செய்ய வேண்டும்; மற்றும் பக்க சார்பற்ற விசாரணை செயல்முறைகளை உருவாக்க வேண்டும். புகார் அளிப்பவர்களையும் சாட்சிகளையும் பழிவாங்கலிலிருந்து பாதுகாக்க வேண்டும், மேலும் பதவி அல்லது பட்டம் எதுவாக இருந்தாலும், குற்றவாளிகளை பொறுப்புக்கூறச் செய்ய வேண்டும்.
பண்பாட்டு மற்றும் நடைமுறை மாற்றங்கள் மிக முக்கியமானவையாக காணப்பட்டாலும் கல்விப் பணியின் பொருளாதார நியதிகளைக் கருத்திற்கொள்ளாது அவை முழுமையாக வெற்றி பெற முடியாது. போதிய பணியாளர்கள் இல்லாமை, ஆட்சேர்ப்பு நிறுத்தம் மற்றும் உயர்கல்விக்கு வழங்கப்படும் அரச முதலீடு தொடர்ந்து குறைவது ஆகியன கல்வியியலாளர்களின் சோர்வை அதிகரிக்கின்றன. கற்பித்தல் பணியாளர்கள் நேர்மையான மற்றும் நியாயமான வேலைப்பழுவிற்கு உரித்துடையவர்கள் என UNESCO-வின் 1997 பரிந்துரை வலியுறுத்துகிறது. ஆனால் கட்டமைப்பு குறைவுகளுடன் திண்டாடும் நிறுவனங்களில் இதனை நடைமுறைப்படுத்த முடியாது. நம் பணியைச் சரியாகச் செய்யும் திறன் இல்லாதபோது, பணியிடத்தில் கண்ணியம் நிலைத்திருக்க முடியாது. ஆகையால், பல்கலைக்கழகங்கள் பண்பாட்டு மாற்றத்தையும் கட்டமைப்பு மாற்றத்தையும் இணைக்க அரசாங்கம் ஆதரவு வழங்க வேண்டும் அதாவது முன்போலவே ஆட்சேர்ப்பை மீண்டும் ஆரம்பித்தல், பணியாளர்கள் சமமாக பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்தல், மற்றும் பொது நிதியை நிலையான மட்டத்திற்கு மீட்டெடுத்தல். இல்லையெனில், கண்ணியக்கோரல் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியை இழந்து, வெறும் குறியீட்டளவில் மாறும் அபாயம் உள்ளது. கல்வியாளர்களின் உண்மையான நலன் நீண்டகால சகிப்புத்தன்மையிலிருந்து கிடைப்பதல்ல. அது சுதந்திர மனப்பான்மை மற்றும் நிறுவன ஆதரவிலிருந்து உருவாகிறது. பயம் மேலோங்கும் இடத்தில் கண்ணியம் வளராது. பரஸ்பர அங்கீகாரம் நிலவும் இடத்திலும், நீதி தெளிவாக இருக்கும் இடத்திலும் மாத்திரமே கண்ணியம் மலரும்.



