அருணி சமரக்கோன்
… நான் இஸ்ரேல்லையும் பலஸ்தீனத்தையும் பற்றி பாடுகிறேன்:
இந்த உலகம் உன்னுடையதும் அல்ல, என்னுடையதும் அல்ல:
எத்தனை பலவிதமான ஆண்கள் (இங்கு) பொருந்துவார்கள்?
அவர்கள் எவ்வளவு வேகமாக அவ்விடத்துக்கு செல்வார்கள்?
ஒரு பெண்ணின் உடல் ஓர் பிரபஞ்ச தங்குமிடம் போன்றது
பேய்களுக்கு அல்லது மாதிரி(கள்) போன்ற இனிப்புசுவைக்கு,
வீட்டில் முகத்துகு முகம் தொடங்கும், முடியும்
தேவைக்கு அடிபணிந்து நாங்கள் ஒவ்வொருவரும் உண்ணலாம் அல்லது விட்டு வெளியேறலாம்
எங்களுடைய காலத்தில் வாழ்ந்த தாய்மார்களின் உருவாக்கப்பட்ட இடத்தை போன்று அற்புதமானது –
நாங்களும் எங்களை அப்படிப் பார்க்கலாமா
அதன் பகுத்தறிவை குறைப்பதற்கு?
விலா என்புகள், சுவாசத்தசைகள், அனைத்து கொழுப்புக்கும் ஆசை தேவை…”
– ஜூன் ஜோர்டான்: பாலஸ்தீனத்துகான கவிதை
ஜூன் ஜோர்டான் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க கவிஞர் மற்றும் ஆர்வலர் ஆவார், அவர் வர்க்கம், பாலினம், இனம், குடியேற்றம், முதலாளித்துவ கட்டமைப்பால் உருவாக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தின் அரசியல் சிக்கல்கள் ஆகியவற்றின் அடிப்படை யதார்த்தங்களை ஆராய்வதற்கான கற்பித்தல் முறை சார்ந்த நிறுவனத்தை வைத்திருக்கிறார். மேலே கூறப்பட்ட கவிதை 1982இல் லெபனானின் பெய்ரூட்டுக்கு அருகிலுள்ள சப்ரா மற்றும் ஷதிலாவில் பாலஸ்தீனிய அகதிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து எழுதப்பட்டது. இந்தக் கவிதையில், ஜோர்டான் பாலஸ்தீன மக்களின் வலியை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், இஸ்ரேலிய அரசாங்கத்தின் வன்முறை அணுகுமுறையை சவால் செய்த இஸ்ரேலிய மனித உரிமை ஆர்வலரும் கல்வியாளருமான ஷுலமித் கோனிக்கின் துணிவையும் எடுத்துக்காட்டுகிறார். வலியின் யதார்த்தங்களையும் பெண்களின் துணிச்சலையும் இஸ்ரேலிய , லெபனான் அரசாங்கங்களின் இராணுவமயமாக்கல், வன்முறை அணுகுமுறைகளுக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த நிலைப்பாடாக அதை மாற்றுகிறார் – அந்த நேரத்தில், நெசெட் (பாராளுமன்றம்) இல் 112 ஆண்களும் எட்டு பெண்களும் மட்டுமே இருந்தனர் என்பதுடன் லெபனான் அரசாங்கத்தில் பெண் பிரதிநிதித்துவம் இல்லை. தாய்மார்களின் அடையாளங்கள், பெண்களின் படைப்பு சக்திகளின் ஊடாக, பெண்கள் தங்கள் சொந்த கருப்பைகளில் குறிப்பிடத்தக்க இடங்களை எவ்வாறு உருவாக்குகிறார்கள், அவர்களின் சுய உணர்வைப் பற்றிக்கொண்டு, வன்முறையின் யதார்த்தங்களை எதிர்கொள்ளவும் சவால் செய்யவும் தைரியத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை அவர் சித்தரிக்கின்றார். ஜூன் ஜோர்டான் ஏன் முக்கியமானவர், அவரது கற்பித்தல் முறையியல் இலங்கை சூழலுக்கு எவ்வாறு பொருத்தமானது என்று வாசகர்கள் கேட்கலாம்.
எனவே, இந்தக் கட்டுரை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: முதல் பகுதி பெண்ணிய புலமையையும், அவை எவ்வாறு அன்றாட வாழ்க்கை அனுபவங்கள் மூலம் வரலாற்றைக் கற்பித்து ,கற்று எவ்வாறு மறுவரையறை செய்கிறது என்பதையும் ஆராய்கிறது. இரண்டாவது பகுதி வரலாற்றுக் கற்பித்தலில், சீர்திருத்தங்கள் எப்படி, எவ்வாறு அவசியம் என்பதை விளக்குகிறது. மூன்றாவது பகுதி கட்டுரையின் முடிவை முன்வைக்கிறது.
ஜூன் ஜோர்டானின் வரலாற்று கற்பித்தல், வரலாற்று நிகழ்வுகளை, அடித்தள சமூகங்களின் வாழ்ந்த அனுபவங்கள் மூலம் பெற்றுக்கொள்வதை வலியுறுத்துகிறது, ஏனெனில் இந்த சமூகங்கள் பெரும்பாலும் நிகழ்வுகளின் பொருள்களாகவே இருக்கின்றனவே தவிர அவற்றை உருவாக்கும் முகவர்கள் அல்ல. வேறு விதமாக கூறினால், வரலாற்று ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட, , நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளை விளக்குவதற்கு சாதாரண மக்களின் ‘அன்றாட அனுபவங்களை’ அவரது கற்பித்தல் முறை முன்னோட்டமாகக் காட்டுகிறது. இந்த கண்ணோட்டதின் மூலம், ஜோர்டான், அமெரிக்கா மற்றும மத்திய கிழக்கில் அதன் கூட்டணிகளின் தன்னிச்சையான இராணுவ விரிவாக்கங்களை, குறிப்பிட்ட இனங்கள் அல்லது இனக்குழுக்களின் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு புதிய தாராளவாத, பாலின திட்டத்தின் ஒரு பகுதியாக அடையாளம் கண்டுள்ளார்.
இந்த இராணுவ அணுகுமுறைகளும் கூட்டணிகளும் புதிய நவதாராளவாதத்தை எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதை விவரிக்கும் ஏஞ்சலா டேவிஸ், சிந்தியா என்லோ, நான்சி ஃப்ரேசர் , கிம்பர்லே கிரென்ஷா போன்ற சோசலிச பெண்ணிய அறிஞர்களால் ஜோர்டானின் புலமை மேலும் வலுப்படுத்தப்படுகிறது. இந்த பெண்ணிய அறிஞர்களின்படி, பாலின பரிமாணம் என்பது இந்த கட்டமைப்புகளில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதால் மட்டுமல்ல, இந்த அணுகுமுறைகள் அதிகாரத்தைப் பயன்படுத்துதல், அமுலாக்கம், அடிமட்ட சமூகங்களின் முறையான அதிகாரமழிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்த அறிஞர்கள், நவீன நவதாராளவாத அரசுகளின் செல்வாக்கு இராணுவ உத்திகளுக்கு அப்பால், கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரி, வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் கொள்கை போன்ற துறைகளின் சீர்திருத்தங்கள் வரை நீண்டுள்ளது என்றும், இவை பெரும்பாலும் அடிமட்ட சமூகங்களின் அன்றாட அனுபவங்களை போதுமான அளவு பிரதிநிதித்துவப்படுத்தாமல் உருவாகின்றன என்றும் வாதிடுகின்றனர். இதன் விளைவாக, இந்த அனுபவங்களின் பிரதிநிதித்துவம் வர்க்கம், இனம், பாலினம் ஆகியவற்றின் ஊடறுக்கும் இயங்கியலால் பெருகிய முறையில் வடிவமைக்கப்படுகிறது, இதன் விளைவாக வகைப்படுத்தப்பட்ட இனம், பாலின சார்புடைய வரலாறுகள் உருவாகின்றன.
இலங்கையின் சூழமைவை பார்க்கும்போது, தற்போதைய அரசாங்கம் சில கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்த பிறகு, நிகழ்நிலைத் தளங்களில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் விவாதம் பரவலாக நடந்துள்ளது, இதில் சில தரங்களுக்கு வரலாற்றுப்பாடம் இனி கட்டாயமாக்கப்படவில்லை. இந்த முடிவு இணையவழியில் பரவலான ஒரு பொது ஈடுபாட்டை உருவாக்கியுள்ளது. வரலாற்றைக் கற்பித்தல், கற்றல் கட்டாயமாக்கப்பட வேண்டுமா என்பது குறித்துதான் விவாதத்தின் பெரும்பகுதி மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், வரலாறு எப்படி, என்ன, எவ்வாறு கற்பிக்கப்படுகிறது, மேலும் யாருடைய அன்றாட வாழ்க்கை அனுபவங்கள் வரலாற்றுக் கதைகளை உருவாக்குவதில் மையமாகின்றன என்பதும் மிகவும் முக்கியமான கேள்விகள்.
வரலாறு, பொதுவாக, பாலின, இன சார்புகளைக் கொண்டுள்ளது. பெரும்பாலும் அதிகாரத்தில் இருப்பவர்களின் குரலை பிரதிபலிக்கிறது. சிந்தியா என்லோ, “போரின் பன்னிரண்டு பெண்ணியப் பாடங்கள்” (2023) இல் குறிப்பிடுவது போல, பெண்ணிய வரலாற்றாசிரியர்கள் எப்போதும் அதிகாரத்தில் இருப்பவர்கள், அதிகாரம் இல்லாதவர்கள் ஆகிய இருவரின் வாழ்ந்த அனுபவங்களுடன் தொடர்புடைய வரலாற்று உள்ளடக்கத்தை ஆராய்ந்து, கேள்விகள் கேட்கப்பட்டு ஆராய்கின்றனர். இந்தக் கண்ணோட்டம் இலங்கை வரலாற்றைக் கற்பிப்பதற்கும் கற்றுக்கொள்வதற்கும் முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது: நீடித்த உள்நாட்டுப் போர் வரலாற்று கற்றல் (மூலப்)பொருட்களால் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது? அந்தப் போரின் வாழ்ந்த அனுபவங்கள் எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன? இந்த வாழ்ந்த அனுபவங்களை முன்னிலைப்படுத்திய ரஜனி திராணகம போன்ற அறிஞர்கள் வரலாற்றுப் பாடத்திட்டங்களில் எவ்வாறு இடம் பெற்றுள்ளனர்?
மேலும், போரின் விளைவு – புதிய நவதாராளவாத கூட்டணிகள் மூலம் வெற்றியாக வடிவமைக்கப்பட்டது – கதைகளில் மையப்படுத்தப்பட்டு, இராணுவமயமாக்கலுக்கான கூடுதல் இடத்தை உருவாக்கிறது– என்லோ மற்றும் ஜோர்டான் அவர்களின் புலமையில் விளக்குவது போல? இந்தக் கேள்விகளை ஆராய்வது, வரலாற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்ந்த அனுபவங்களை யார் வெளிப்படுத்துகிறார்கள், எவற்றை பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது என்பதற்கான பகுப்பாய்வோடு இணைக்கிறது, வரலாறு, பாலினம், இனம், வர்க்கம் என்பவற்றை வெளிப்படுத்துகிறது, ஏனெனில் அது பெரும்பாலும் ஒரு பக்கப்பார்வையை அடிப்படை யதார்த்தங்களாக வடிவமைக்கிறது.
வரலாற்றுக் கல்வியியல் சீர்திருத்தங்கள்
எந்தவொரு போரின் முடிவிலும், ஒரு அரசாங்கத்தின் அடுத்த கவனம் பெரும்பாலும் பொருட்கள், மனித மூலதனம் இரண்டையும் மேம்படுத்துவதில் அமைந்திருக்கும். மனித மூலதனத்தைப் பொறுத்தவரை, இது முதன்மையாக போருக்குப் பிந்தைய புதிய நவதாராளவாத சந்தைத் தேவைகளுடன் ஒத்துப்போகும் வேலைவாய்ப்புத் திறன்களைக் கொண்ட ஒரு தொழிலாளர் படையின் வளர்ச்சியைக் குறிக்கிறது. இதன் விளைவாக, தேசிய மக்கள் சக்தி (NPP) இப்போது புதிய நவதாராளவாத பொருளாதார நிகழ்ச்சி நிரலைப் பூர்த்தி செய்ய திறமையான தொழிலாளர் படையை மேம்படுத்தும் சவாலை எதிர்கொள்கிறது, இது வறுமை, அதிகரித்து வரும் வேலையின்மை, இலவச கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற நலன்புரி கொள்கைகளைப் பராமரித்தல், வயதான மக்களின் அழுத்தங்களை நிர்வகித்தல் போன்ற கட்டமைப்பு பொருளாதார பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் கட்டமைப்புப் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க, உயர்கல்வித் துறையில் சீர்திருத்தங்களை NPP வலியுறுத்தியுள்ளது, குறிப்பாக தகவல், தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்தில் (ICT) திறமையான தொழிலாளர்களைப் பயிற்றுவிப்பதில் கவனம் செலுத்துகிறது. இருப்பினும், திறமையான தொழிலாளர்களின் உற்பத்தி மட்டும் கட்டமைப்பு பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்காது, அவை திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறையில் மட்டுமல்ல, இலாபங்கள் மற்றும் பொருளாதார நன்மைகளின் சீரற்ற விநியோகத்திலும் வேரூன்றியுள்ளன. இந்தப் பிரச்சினைகள் பகுதி வரிவிதிப்புக் கொள்கைகளுடன் மேலும் இணைக்கப்பட்டுள்ளன – யாருக்கு வரி விதிக்க வேண்டும், எப்படி வரி விதிக்க வேண்டும் என்பது பற்றிய முடிவுகள்.
NPP திறமையான தொழிலாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தால், குறைந்தபட்சம், இந்தத் தொழிலாளர்கள் சமகால சமூகப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு பெற உரிமை உண்டு, NPP அதன் கல்வி சீர்திருத்தங்களில் அவற்றைக் கவனிக்க வேண்டும். குறிப்பாக, மாதவிடாய் வறுமை, சுகாதாரக் கல்வி மற்றும் மாதவிடாய் நிறுத்தம் போன்ற தலைப்புகள் பற்றி பள்ளி பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட வேண்டும், ஏனெனில் இவை பெண்களின் உடலின் பிறப்பிலிருந்து அமையப்பெற்ற இயற்கையான செயல்முறைகள் – மேலும் பெண்கள் தொழிலாளர் சக்தியில் குறிப்பிடத்தக்க பகுதியினை வகிக்கின்றர்.
முடிவுரை
முடிவாக, வரலாற்றைக் கற்பித்தல், கற்றல் என்பது அடிப்படை யதார்த்தங்களைப் புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கியமான வழிமுறைகளுடன் இணைக்கப்படும்போது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நான் வலியுறுத்துகிறேன். இந்த அடிப்படை யதார்த்தங்கள் அன்றாட வாழ்க்கை அனுபவங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் அந்த அனுபவங்களை வைத்திருப்பவர்களில் யாருடைய குரல் வரலாறாக மாறுகிறது, எந்தக் குரல்கள் வரலாற்றுப் பொருட்களில் கற்பிக்கப்பட்டு கற்றுக்கொள்ளப்படுகின்றன என்ற திறனாய்வு கேள்விகளை எழுப்பும் ஊடறுப்புக்களை குறிக்கின்றனர்.
கற்பித்தல் முறையியலில் அன்றாட வாழ்க்கை அனுபவங்களை இணைக்கத் தவறினால், வரலாறு என்பது கருத்துமுதல் வாதத்தின் விளக்கமான பாடமாக மாறும் அபாயம் உள்ளது. ஆசிரியர்கள், கற்பவர்கள், அறிவு, வரலாற்று விவரிப்புகளை வடிவமைக்கும் தற்போதைய அதிகார கட்டமைப்புகளுக்குள் அடைத்து வைக்கப்படுகிறார்கள். அடிப்படை கல்வி சீர்திருத்தங்கள், கல்வி சிக்கல்கள் கல்வியிலிருந்தே எழுவதாகக் கருதுவதற்குப் பதிலாக, புதிய நவதாராளவாதத்தின் கட்டமைப்பு சிக்கல்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதை அங்கீகரிப்பது அவசியம். ஜூன் ஜோர்டான் மற்றும் பிற பெண்ணிய அறிஞர்களால் தெரிவிக்கப்பட்ட இந்த கண்நோட்டம், அடிப்படை கட்டமைப்புகளைப் புரிந்துகொள்வதையும், பின்னர் அவை தற்போதைய நெருக்கடிகளை எவ்வாறு உருவாக்குகின்றன என்பதையும் பகுப்பாய்வு செய்வதை வலியுறுத்துகிறது – அதாவது வளங்களின் சீரற்ற விநியோகம், இடம்பெயர்வு, அடையாள பிரதிநிதித்துவம், அங்கீகாரம், காலநிலை மாற்ற தாக்கங்கள் போன்றவை.
கோவிட்-19 தொற்றுநோய் ஒரு செயலூக்கியாக செயல்பட்டு, இந்தக் கட்டமைப்புச் சிக்கல்களைத் தீவிரப்படுத்தி, பூகோள வடக்கு மற்றும் தெற்கு இரண்டிலும் இடதுசாரி புரட்சிகர பிரக்ஞையின் எழுச்சி மற்றும் அமைப்பைத் தூண்டியுள்ளது. சீர்திருத்தங்கள் மட்டும் போதாது என்பதை இது காட்சிப்படுத்துகிறது; நிலையான தீர்வுகளுக்கு, வாழ்ந்த அனுபவங்களை முன்னிறித்தி, அவற்றை வடிவமைக்கும் கட்டமைப்புகளை திறனாய்வு (விமர்சன) ரீதியாக ஆராயும் வரலாற்றைக் கற்பித்தல் மற்றும் கற்றல் தேவைப்படுகிறது.



