தகுதிவழிக் கல்விக் கொள்கை: விரிந்துவரும் ஏற்றதாழ்வுகள்

அனுஷ்கா கஹண்டகமகே

சமீபத்தில் வெளியிவந்த கல்வி சீர்திருத்தங்கள் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அனைவரும் பங்களிக்க முயல்கின்றனர், ஆனால் அரசாங்கம் ஒரு ஆலோசனை செயல்முறை அல்லது சரியான ஆவணம் இல்லாமல், வளர்ந்து வரும் பவர்பொயிண்ட் நிகழ்த்துக் காட்சியை (PowerPoint Presentation) மட்டுமே நம்பி செயல்படுகிறது. சீர்திருத்தங்கள் தெளிவற்றதாக இருந்தாலும், சமூக ஊடக வலைத்தளங்களில் பரப்பப்படும் சீர்திருத்தங்கள் தொடர்பான செய்திகளை மக்கள் நம்பக்கூடாது என்பது குறித்து கல்வி அமைச்சர் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

அரசாங்க புலமைப்பரிசில் திட்டம்

கல்வி சீர்திருத்த செயற்திட்டம் மறைக்கப்பட்டிருந்தாலும், நிர்வாகம் அதை செயல்படுத்துவதில் வேகமாக முன்னேறி வருகிறது. எடுத்துக்காட்டாக, NPP தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று, ‘உயர் கல்வி பாடசாலை மாணவர்களுக்கு  உலகளவில் தரவரிசைப்படுத்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற ஒவ்வொரு ஆண்டும் 200 புலமைப்பரிசில் வழங்குவது’ என்பதாகும். இந்த நோக்கத்தை அடைவதற்கான முதல் கட்டமாக, அரசாங்கம், அண்மைய  உயர் தர பரீட்சையில் சிறந்து விளங்குபவர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது. சர்வதேச அளவில் தரவரிசைப்படுத்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கான புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்ற தலைப்பில் தி சண்டே டைம்ஸ் (ஆகஸ்ட் 24, 2025) இதழில் வெளியிடப்பட்ட ஒரு செய்தி: ‘நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளிலிருந்து உயர்தரத் பரீட்சையில் அதிக மதிப்பெண்கள்  பெற்ற இருபத்தைந்து முதல் ஐம்பது மாணவர்கள் அரசாங்க புலமைப்பரிசில் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் தரவரிசைப்படுத்தப்பட்ட சர்வதேச பல்கலைக்கழகங்களில் படிக்கத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.’ என்பதாகும்.

இக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதின் அடிப்படையில், உள்ளூர் பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படாத, தேசிய வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்று அரசாங்கம் கருதும் பட்டப்படிப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரசாங்கத்தின் ‘வளர்ச்சி’ என்ற திட்டம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை, அல்லது மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்குப் பதிலாக, உள்ளூர் பல்கலைக்கழக கட்டமைப்பில்  இந்தப் புதிய பாடங்களை அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்த இயலாது என்பதும்  தெளிவாகத் தெரியவில்லை.

புலமைப்பரிசில் முழுமையாக நிதியளிக்கப்படும்; கல்வியும் கல்விக் கட்டணங்களும், மாதாந்த  உதவித்தொகை, வைத்திய காப்புறுதி, அருகிலுள்ள விமான நிலையத்திற்கு, உள்ளூர் போக்குவரத்து உட்பட்ட ஒரு நபர் ஒருமுறை சென்று வருவதற்கான, சாதாரண வகை இருக்கைக்கான விமானக் கட்டணம் ஆகியவற்றையும்  உள்ளடக்கும். இந்தத் திட்டம் 2025 முதல் 2029 வரை மொத்தம் 200 புலமைப்பரிசில்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதன் மூலம் உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களில் புலமைப்பரிசில் பெறுநர்களை இடம் பெறச் செய்கிறது. நவீன தாராளவாத  பொருளாதார கட்டமைப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  இந்த திட்டம் சிறந்தது என்று நம்பலாம், ஏனெனில் இது அதிக சாதனை படைத்த மாணவர்களை  வெளிநாடுகளில் படிக்க அனுமதிக்கிறது. இருப்பினும், மேலோட்டமாக இது உண்மையாகத் தோன்றினாலும், அடிப்படை யதார்த்தங்களிலிருந்து  வேறுபட்டிருக்கலாம், மேலும் இந்த சீர்திருத்தம் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

தகுதியை கொண்டாடுதல்

ஒரு தகுதிவழிச் சமூகத்தில், உயர் சாதனையாளர்களின் வெற்றி தார்மீக ரீதியாக நியாயப்படுத்தப்படுகிறது, மேலும் வெற்றியாளர்கள் தங்கள் திறமையாலும் கடின உழைப்பினாலும்  மட்டுமே தங்கள் வெற்றியைப் பெற்றதாக நம்புகிறார்கள். அத்தகைய பார்வையில், தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள், கல்வித் திறனும் விருதுகளும் சாதனையாளரின் ஒரே வெற்றியாகத் தோன்றலாம். இருப்பினும், நாம் ஒரு சமத்துவமற்ற சமூகத்தில் வாழ்கிறோம், மேலும் மாணவர்களின் சமூக பொருளாதார நிலை, மதம்,பாடசாலை, பாலினம், இனம்,போன்ற  பல்வேறு காரணிகளைப் பொறுத்து, சிறந்த பாடசாலைகள், தனியார் கல்விக் கட்டணம், போக்குவரத்து, உணவு, பிற அடிப்படைத் தேவைகள் போன்ற வளங்களை அணுகுவது மாறுபடும். எனவே, தகுதியைப் பெறுவது என்பது திறமை, கடின உழைப்பைப் பொறுத்தது மட்டுமல்ல, பிற சமூக-பொருளாதார, அரசியல் காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. இருப்பினும், ஒரு தகுதிவாய்ந்த சமூகத்தில், இந்த சமமற்ற வாய்ப்புகளைப் புறக்கணித்து “தகுதி” கொண்டாடப்படும். புலமைப்பரிசில் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு போட்டிகள் இருக்கும் என்பதால், தேர்ந்தெடுப்பு முறைமை மாணவர்கள் மீது தேவையற்ற சுமையை சுமத்தும்.

ஒவ்வொரு மாணவரின் பன்முகத் திறனை அங்கீகரித்து, அவர்களை சரியான திசையில் வழிநடத்துவதற்குப் பதிலாக, அவர்களின் உயர்தரத்தில் சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு சர்வதேச புலமைப்பரிசில் வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டம் தற்போதைய பிற்போக்குத்தனமான தகுதி முறையை வலுப்படுத்துகிறது. தகுதி முறையானது ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வில் தொடங்கி, மாணவர்கள் பல்கலைக்கழகத்தை அடையும் வரை இந்த பொதுக் கல்வி தொடர்கிறது. இருப்பினும், நாட்டில் குறைந்தளவு பல்கலைக்கழகங்கள் இருப்பதால், தேர்வில் தேர்ச்சி பெறும் ஒவ்வொரு மாணவருக்கும் பல்கலைக்கழக வாய்ப்பு கிடைப்பதில்லை. வெளிநாட்டு புலமைப்பரிசில் வழங்கும் இந்த முயற்சி, கல்வி அமைச்சின் கல்வி சீர்திருத்தங்கள் நிகழ்த்துக் காட்சி பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் கொள்கைகளுக்கு முரணானது, இதில் ‘இலவச கல்வி, சமமான அணுமுறை’ ,’அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது’ ஆகியவை அடங்கும். வேறு சொற்களில் கூறுவதானால், அரசாங்கம் ‘உயர்-சாதனை’ உயர்தர மாணவர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விரும்பினால், அது அனைவருக்கும் சமமான ஏற்றுக்கொள்ளலைக் கொண்ட குறைந்த போட்டித்தன்மை கொண்ட கல்வி முறையை உருவாக்குவதற்கான அவர்களின் உறுதிப்பாட்டிற்கு முரணாக இருக்கும்.

விரிந்துவரும் ஏற்றதாழ்வுகள்

ஒரு தகுதிவாய்ந்த ஆட்சி, சமூக ஏற்றத்தாழ்வுகளை ஆழமாக்கும். அதிக சலுகை பெற்ற மாணவர்கள் அதிக தகுதியை அடைவதற்கான சிறந்த வாய்ப்பைப் பெற்றிருந்தாலும், பின்தங்கிய மாணவர்கள் வெளிநாட்டு பட்டப்படிப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான புலமைப்பரிசில் பெற முடியாத மாணவர்கள், நிதி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட இலங்கைப் பல்கலைக்கழக முறைமையிலேயே இருப்பார்கள்.அதிக வசதிகள் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிறந்த வசதிகளுடன் கூடிய தனியார் பல்கலைக்கழகங்களில் சேர விரும்புவார்கள். சில ஆண்டுகளில், நிதி குறைவாக உள்ள உள்ளூர் பல்கலைக்கழக முறைமையிலிருந்து பட்டம் பெறும் உள்ளூர் பல்கலைக்கழக மாணவர்கள், வேலைவாய்ப்புச் சந்தையில் வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுடன் போட்டியிட வேண்டியிருக்கும், அவர்களின் கல்வியும் அரசால் தான்  நிதியளிக்கப்பட்டது. அரசாங்க நிதி, வரி செலுத்துவோரின் பணத்திலிருந்து பெறப்படுகிறது, இது சலுகை பெற்றவர்கள், பின்தங்கியவர்கள் ஆகிய இருவராலும் பங்களிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்வது அவசியம். எனவே, இந்த நிதியை ஒதுக்கும்போது, ​​அரசாங்கம் வெளிப்படைத்தன்மையையும் நீதியையும் நிலைநிறுத்த வேண்டும்.

பொதுவாக, வெளிநாட்டில் படித்த மாணவர்கள் உள்ளூர் பல்கலைக்கழக பட்டதாரிகளை விட முடிவெடுக்கும் பதவிகளில் நியமிக்கப்படுவதற்கும் சிறந்த வேலைகளைப் பெறுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, மேலே குறிப்பிடப்பட்ட செய்தித்தாள் கட்டுரையில் கூறப்பட்டுள்ளபடி, இந்த பட்டதாரிகளை நாட்டின் அபிவிருதிக்கு பயன்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அந்த வகையில், உயர் முடிவெடுக்கும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யும்போது, ​​அரசாங்கம் இந்த பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கும். குறுகிய நோக்குடைய அரசாங்க கல்விக் கொள்கைகளால் உருவாக்கப்பட்ட ஏற்றத்தாழ்வு, நாட்டின் மக்களை நீண்டகால சமத்துவமின்மை சுழற்சியில் தள்ளும், இது எதிர்கால தலைமுறைகளைப் பாதிக்கும்.

உள்ளூர் பல்கலைக்கழகங்களின் பேண்தகு நிலையைத் தளர்த்தும் நிலை

உலகின் சிறந்த 500 நிறுவனங்களில் இளங்கலை கல்விக்காக 25–50 மாணவர்களை அனுப்புவது ஒரு விலையுயர்ந்த முயற்சியாகும். இந்த மாணவர்களுக்கான நிதி – நாட்டின் உயர்கல்வி முறையை மேம்படுத்தப் பயன்படுத்தக்கூடிய பணத்திலிருந்து எடுக்கப்படும். அந்த வகையில், இந்த புதிய முயற்சி நாட்டின் பல்கலைக்கழக அமைப்பில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். குறைவான நிதி ஒதுக்கப்படுவதால், உள்ளூர் பல்கலைக்கழகங்கள் தர நியமங்களின் கீழேயே இருக்கும். இந்தப் பின்னணியில், வெளிநாட்டு நிதியுதவி பெறும் பல்கலைக்கழகப் பட்டியலில் இடம் பெற முடியாத மாணவர்கள், அடுத்தடுத்த அரசாங்கங்களால் புறக்கணிக்கப்பட்ட அல்லது நிதி குறைவாக உள்ள உள்ளூர் பல்கலைக்கழகங்களில் சேர வேண்டியிருக்கும். அதே நேரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்விக்காக அனுப்பும் புதிய முயற்சி, அரசாங்கம் தற்போதுள்ள பல்கலைக்கழக அமைப்பை குறைத்து மதிப்பிடுதலையும், அதை மேம்படுத்த அவர்களின் இயலாமையையும் காட்டுகிறது.

காலனித்துவ கட்டமைப்புகளை நிலைநிறுத்துதல்

வெளிநாட்டு புலமைப்பரிசில் முயற்சி எனக்கு இலங்கையின் காலனித்துவ கல்விக் கொள்கையை நினைவூட்டுகிறது. 1870 ஆம் ஆண்டில், காலனித்துவ அரசாங்கம் ஒரு அறிஞருக்கு இங்கிலாந்து பல்கலைக்கழகங்களுக்கு சென்று படிப்பதற்கான  புலமைப்பரிசில் திட்டத்தை நிறுவியது. 1907 ஆம் ஆண்டில், அரசாங்கம் அதை இரண்டு புலமைப்பரிசில்களாக விரிவுபடுத்தியது, அடுத்த அடுத்த ஆண்டுகளில் ஒன்று கலைக்கும் மற்றொன்று அறிவியலுக்கும் வழங்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு வரை, உயர்கல்விக்கான வழிகள் பெரும்பாலும் காலனித்துவ அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட புலமைப்பரிசில் திட்டத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன, இது தேர்ந்தெடுக்கப்பட்ட, திறமையான மாணவர்கள் குழு ஐக்கிய இராச்சியத்தில் தங்கள் படிப்பைத் தொடர உதவியது. அதே நேரத்தில், இலண்டன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் வெளிப்புற பட்டப்படிப்புத் தேர்வுகள், குறைந்த எண்ணிக்கையிலான தனிநபர்கள் கல்விச் சான்றுகளை அடைவதற்கான பாதையை உருவாக்கியது. பிரித்தானிய பேரரசு அதன் காலனிகளில் உயர்கல்வியை எவ்வாறு அணுகியது என்பதைக் கருத்தில் கொண்டு, அது விமர்சன சிந்தனை அல்லது புதுமைகளை வளர்ப்பதில் முதலீடு செய்யவில்லை அதற்கு மாறாக அதன் முதன்மை இலக்காக காலனித்துவ நிர்வாகம், நிர்வாக ஆட்சிக்கு சேவை செய்யும் இடைநிலையாளர்களின் ஒரு சிறிய குழுவை – ஆங்கிலம் படித்த உயரடுக்குகளை – உருவாக்குவதாகும்.

உயர் கல்வியைப் பெற மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், அறிவு, சட்டபூர்வ அங்கீகாரம் , அதிகாரம் ஆகியவை உறுதியாக பிரித்தானியாவிலேயே மையமாகிக் கொண்டன; அதேவேளை, உள்ளூர் மக்கள்தொகையின் பெரும்பாலானோர் உயர்கல்வியை அணுகுவதிலிருந்து விலக்கப்பட்டவர்களாகவே இருந்து வந்தனர்.

இந்த முறையில் பார்க்கும்போது, ​​சமகால புலமைப்பரிசில் திட்டம் காலனித்துவ கட்டமைப்பின் தொடர்ச்சியாகத் தெரிகிறது. காலனித்துவத் திட்டமும் தற்போதைய அணுகுமுறையும், வெளிநாட்டில் ஒரு சிறிய, சலுகை பெற்ற குழுவிற்கு பயிற்சி அளிப்பதை முன்னுரிமைப்படுத்துகின்றன, அதே நேரத்தில் உள்ளூர் நிறுவனங்களில் முறையான முதலீட்டிற்கு குறைந்த முன்னுரிமையையே அளிக்கின்றனர். இந்தச் சூழ்நிலைகளில், கல்வி என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பயனளிக்கும் ஒரு பொது நலனாகப் பார்க்கப்படுவதில்லை, அதற்கு மாறாக ஒரு சிறிய ஆளும் சித்தாந்தம் அல்லது முடிவெடுக்கும் உயரடுக்கை உருவாக்கும் ஒரு முறையாகக் கருதப்படுகிறது. அடிப்படை விளைவு ஒன்றே: சமத்துவமின்மை சுழற்சியில் பெரும்பான்மையான மாணவர்கள் எல்லைப்படுத்தபடுகிறார்கள், அதே நேரத்தில் வெளிநாட்டுச் சான்றுகளைக் கொண்டவர்கள் அதிகாரம், செல்வாக்கு மிக்க பதவிகளை வகிக்கின்றார்கள்.

எனவே, ஒற்றுமை வெறும் மேம்போக்கானது மட்டுமல்ல என்பது தெளிவாகிறது. இரு ஆட்சி முறைகளும், பரந்த கல்வி, சமூக மாற்றங்களை விடத் தேர்ந்தெடுக்கப்பட்ட உயரடுக்கு  வளர்ச்சிக்கே முன்னுரிமை வழங்கும் ஒரு ஆட்சி சிந்தனையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. தற்போதைய அரசின் கல்வி புலமைப்பரிசில்  திட்டம், காலனித்துவ சிந்தனை இந்நாட்டின் கல்வி கொள்கை அடிப்படையில் எவ்வளவு ஆழமாக பதிந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. அறிவை ஜனநாயகப்படுத்துவதற்கும், முறையான வளர்ச்சியில் முதலீடு செய்வதற்கும் பதிலாக, இத்தகைய கொள்கைகள், பெரும்பான்மையினரின் இழப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு பயனளிக்கும் கல்விப் படிநிலைகளை நிலைநிறுத்துகின்றன.

வெற்றிக்கான பாதை நமது அரச பல்கலைக்கழக முறைமை  திறமையான மாணவர்களை உருவாக்க முடியாது என (எந்த ஆதாரமும் இல்லாத) கருத்தை முன்வைத்து, அரசாங்கம் திட்டமிட்ட முறையில் அரச பல்கலைக்கழக அமைப்பை பலவீனப்படுத்தி வருகிறது. இதன் மூலம் உயர்கல்விக்கான நிதியுதவியைச் சுருக்குவதற்கான தர்க்கத்தையும் உருவாக்குகிறது. நாட்டின் உயர்கல்வி அமைப்பை தரத்திலும் அளவிலும் உயர்த்துவதற்கான உண்மையான பாதை, கல்விக்கான நிதியை அதிகரிப்பதோடு, பொதுக்  கல்வி, உயர்கல்வி ஆகிய இரண்டிலும் முன்னேற்ற நோக்குடைய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதில்தான் உள்ளது. அதே நேரத்தில், புதுப்பிக்கப்பட்ட அறிவை ஒருங்கிணைத்தலும், பொது கல்வி, உயர்கல்வி ஆகிய இரண்டிலும் விமர்சன சிந்தனையை மேம்படுத்துவதும் மிக முக்கியமானதாகும். இதற்காக பாடத்திட்டங்களை மீள்-எழுதுதல் முதல் துறைகளுக்கு இடையேயான கற்றல், ஆராய்ச்சியும் புத்தாக்கங்களை ஆதரித்தல் வரை பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், ஆசிரியர் பயிற்சியை வலுப்படுத்துதல், உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், எண்ணிம  வளங்களை விரிவுபடுத்துதல், வளங்களுக்கான சமத்துவமின்மைகளை சரிசெய்தலும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் ஒத்துழைப்புகளை உருவாக்குதல் போன்றவை தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாணவர்களை உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டிய அவசியமின்றி கல்வி அமைப்பை மேம்படுத்த உதவும். இத்தகைய அடிப்படை முன்னேற்றங்களுக்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம், வெளிநாட்டு கல்வி புலமைப்பரிசில் மூலம் சிறிய ஒரு பகுதியினருக்கு மட்டும் முன்னுரிமை வழங்குவதற்குப் பதிலாக நாட்டின் பெரும்பாலான மாணவர்களுக்கு பயனளிக்கும் வலுவான உயர்கல்வி அமைப்பை உருவாக்க முடியும்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன