பாகுபாடுகளை வெல்லுதல்: பொதுப்பல்கலைக்கழத்தை
கூட்டுறவுத்தளங்களாக கட்டமைத்தல்

மகேந்திரன் திருவரங்கன்

பொதுப்பல்கலைக்கழகங்களை நாம் பொதுவாக அறிவு உற்பத்தி மற்றும்
அறிவுசார் விசாரணைக்குமான தளங்களாகவே காண்கின்றோம். எமது
அதிகமான கலந்துரையாடல்கள் பல்கலைக்கழகங்களின் கல்விசார்
பங்களிப்புகளை ஆய்வுசெய்வதிலும் அவை வழங்கும் கல்வியில் எவ்வாறு
மேம்பாட்டை ஏற்படுத்தலாம் என்பதிலுமே சுழன்றுகொண்டிருக்கும்
வேளையில், பல்கலைக்கழகங்கள் எனும் அமைப்பு மற்றும் அதன்
தொழிற்பாடு பலரின் முயற்சி மற்றும் உழைப்பால் உருவானது என்பதையும்
அத்தகையோரின் நலன்புரி மற்றும் நல்வாழ்வு தொடர்பில் போதிய அழுத்தம்
வழங்கப்படுவதில்லை என்பதுமே உண்மையாகும். எமது
பல்கலைக்கழகங்கள் பாகுபாடுகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இடம்
என்பது மிகவும் கவலைக்கிடமானது. அவை வெளிப்படுத்தப்படும் சில
தருணங்களாக, கல்விசார் ஊழியர்கள் சிலரின் எண்ணவோட்டத்தில் அவர்கள்
‘கல்விசாரா ஊழியர்களை’ விட தரத்தில் உயர்ந்தவர்கள் என்றும் நிர்வாக
பதவிகளை வகிப்போர் கல்விசார் மற்றும் கல்விசாரா உறுப்பினர்கள்
ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் பணிச்சுமைக்கு மேலதிகமாக அவர்களுக்கு
வேலைகளை வழங்க முடியுமான நிலை காணப்படுவதையும் நாம்
காணலாம். இவ்வாறான எண்ணவோட்டங்கள் பல்கலைக்கழகங்களை
முரண்பாடுகள் மற்றும் எதிர்ப்புணர்வு கொண்ட இடங்களாக
மாற்றிவிடுகின்றன. குப்பி ஆக்கங்களின் இன்றைய பகுதியானது,
அண்மையில் இடம்பெற்ற கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க
நடவடிக்கையை பிரதிபலித்து, அவர்களின் போராட்டத்தில் ஆதரவு மற்றும்
கூட்டுழைப்போடு இணைய முடியாத கல்விசார் ஊழியர்களின் நிலையை
சுட்டி பல்கலைக்கழகங்கள் எவ்வாறு கூட்டுறவு மற்றும் குழும இணைவின்
தளங்களாக உருவாக்கப்படலாம் என்பதை கலந்துரையாடுகின்றது.

கல்விசார் ஊழியர்கள் மத்தியில் காணப்படும் மேட்டிமைவாதம்

கல்விசாரா ஊழியர்களால் இரு மாதங்களுக்கும் மேலாக தொடரப்பட்ட
தொழிற்சங்க நடவடிக்கை அடிப்படையில் இலங்கையில் அதிகரித்துவரும்
வாழ்க்கைச்செலவை சுட்டி சம்பள அதிகரிப்பைக் கோரியதாக
தொடங்கப்பட்டதாகும். பல கல்விசார் ஊழியர்கள் இதனை
நியாயப்படுத்தினாலும், தொழிற்சங்க நடவடிக்கைக்கான வெளிப்படையான
ஆதரவு குறைவாகவே வழங்கப்பட்டது. உண்மையில் இந்நடவடிக்கையை
இழித்துரைத்தும் இம்முக்கியமான போராட்ட நடவடிக்கையானது இலக்கின்றி
நீண்ட நாட்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், தேவையற்றதாகவும்,
இடையூறாகவும் பாவித்து கல்விசார் ஊழியர்கள் கருத்துகளை
வெளியிட்டனர். சில ஊழியர்கள் இந்நடவடிக்கை அவர்களின் தொழில்
செய்வதற்கான உரிமையை மீறும் நடவடிக்கை என்றும் கூறினர்.
பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களின் ஒன்றியம் வெளியிட்ட
அறிக்கையில், கல்விசாரா ஊழியர்கள் தமது மாதாந்த இழப்பீட்டு
கொடுப்பனவில் கேட்கும் அதிகரிப்பை கல்விசார் ஊழியர்கள் தமது கல்வி
கொடுப்பனவில் கேட்கும் அதிகரிப்புக்கு ஒப்பிடக்கூடாது எனும் பாணியில்
கருத்து வெளியிடப்பட்டிருந்தது. இவ்வாறான கருத்துகள் கல்விசார்
ஊழியர்களின் அகந்தை மற்றும் மேட்டிமைத்தனத்தை காட்டுவதாக உள்ளது.
இவ்வாறானவர்கள் சர்வதேச நாணய நிதியத்தால் தொழிற்படுத்தப்படும் கடன்
சீராக்க நடவடிக்கை காரணமாக நாட்டின் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும்
வாழ்வாதார சிக்கல்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் சுமுகமான
செயற்பாட்டுக்கு கல்விசாரா ஊழியர்களின் நலன் என்பது முக்கியமானது
என்ற விடயத்தையும் காணத்தவறுகின்றனர்.

அரச பல்கலைக்கழகங்களின் தொழிற்பாட்டுக்கு கல்விசாரா ஊழியர்களின்
பங்களிப்பு அத்தியாவசியமானதாகும். வகுப்பறைகளை சுத்தமாக
பேனுவதிலிருந்து தடையற்ற நீர்வழங்கலை வழங்குவது வரை, எமது
ஆய்வுகூடங்களை பேணுவது தொடக்கம் பரீட்சைகளுக்கான ஆயத்தங்களை
மேற்கொள்வது வரை, எமது சம்பள விடயங்களை கையாள்வது தொடக்கம்
பட்டமளிப்பு விழாக்களை ஏற்பாடு செய்வது வரை, எமது பல்கலைக்கழகங்களின் கல்விசார் மற்றும் கல்விசாரா செயற்பாடுகளின்
சுமுகமான செயன்முறைக்கு கல்விசாரா ஊழியர்களின் பங்களிப்பு தவிர்க்க
முடியாதது. இவ்வாறான முக்கியமான செயற்பாடுகளில் அவர்களின்
பங்களிப்பு அளப்பரியதாக இருப்பதனாலேயே அவர்களின் தொழிற்சங்க
நடவடிக்கை காரணமாக பல்கலைக்கழகங்கள் இரு மாதங்களாக இயங்க
முடியாத சூழல் உருவாகியது. கல்விசாரா ஊழியர்களின் அளப்பரிய
பங்களிப்பை நாம் மதித்திருந்தால், அவர்களின் பங்களிப்பு ஏன் மற்றும்
எவ்வாறு கல்விசார் நடவடிக்கைகளின் செயற்பாட்டுக்கு அடிப்படையாக
இருக்கின்றதென்பதை விளங்க முயற்சித்திருந்தால், நாம் கல்விசாரா
ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை அவமதித்திருக்கவோ, ஒரு
பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டதை போன்று அவர்களின்
நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கையோ மேற்கொண்டிருக்க
மாட்டோம். எமது இந்த தயைகூறும் மனப்பான்மை என்பது
பல்கலைக்கழகங்களின் கூட்டு நடவடிக்கைகான வேலைத்தளமாக நாம் காண
முடியாத இயலுமையில் இருந்து உருவாவதாகும்.

வஞ்சனையான அரசு

ஒரு நாட்டின் செயற்பாட்டுக்கு பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும்
வெளியேயும் தொழிற்சங்கங்களின் இயக்கம் மிக முக்கியமானதாகும்.
நவதாராளவாதம் வேகமாக விரிவடைந்தும் அரசியல் ஒடுக்குமுறை
அதிக்ரித்தும் வரும் இக்காலகட்டத்தில் தொழிற்சங்கங்கள் தமது இருப்பையும்
தம்மை சார்ந்த தொழிலாளர்களையும் அவர்களின் உரிமைகளையும்
பாதுகாப்பது கட்டாயமானதாகும். மேலே குறிப்பிட்ட சூழ்நிலைகள்
தொழிற்சங்கள் தமக்கு உள்ளேயும் ஏனைய தொழிற்சங்கங்களுடனும்
ஒன்றிணைந்து கலந்துரையாடல்களை உருவாக்கி, ஆதரவு நல்கி,
கூட்டுறவை வலுப்படுத்திக் கொள்வதை தேவையாக மாற்றுகின்றன.
அண்மைய தொழிற்சங்க நடவடிக்கையின் போது இடம்பெற்ற எவ்வித
க‌லந்துரையாட‌ல்களும் இன்றி கல்விசாரா ஊழியர்களுக்கு பாரம்பரியமாக‌
வழங்கப்படும் பணிகளை கல்விசார் ஊழியர்கள் கைக்கொள்ளும் நடவடிக்கை வரவேற்கத்தக்க விடயமல்ல.இவ்வாறான செயற்பாடுகள் கல்விசாரா
ஊழியர்களால் கல்விசார் ஊழியர்கள் செய்யும் மேதகு வேலைகளாக
பார்க்கப்படுவதோடு எதிர்காலத்தில் அரசாங்கமானது பல்கலைக்கழகங்கள்
தற்போதைய சூழலை விட குறைந்தபடச ஊழியர்களோடு இயங்க
முடியுமென்று கூறி கல்விசாரா ஊழியர்களின் சேவைகளை கீழ்மைப்படுத்தும்
நடவடிக்கைகளுக்கும் ஏதுவாக மாறிவிடும்.

அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இக்காலகட்டத்தில்
நாங்கள் நல்ல நோக்கத்தில் நெருக்கடி நிலையை சமாளிக்கவல்ல
செயற்பாடுகள் என முன்னெடுக்கும் செயற்பாடுகள் அரசாங்கத்தை அதன்
ஊழியர்களை விலக்கும் செயற்பாட்டை நியாயப்படுத்தவும், புதிய ஆளனியை
உள்ளீர்ப்பதை தாமதப்படுத்தவும், கல்விசாரா ஊழியர்களை ஒப்பந்த
அடிப்படையில் நியமிக்கவும், சில பல்கலைக்கழகங்களில்
முன்மொழியப்பட்டதைப் போல கல்விசாரா ஊழியர்களுக்கான ஆள‌னி
சேர்ப்பை அதிகளவில் குறைக்கவுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள
ஏதுவாக அமைந்து விடும். இது பலரின் வாழ்வாதாரத்தில் பலத்த அடியாக
விழக்கூடும் என்பதோடு பல்கலைக்கழகங்களில் தொழில்புரியும் கல்விசாரா
ஊழியர்களின் பணிச்சுமையை அதிகரிப்பதோடு பல்கலைக்கழகங்களால்
வழங்கப்படும் கல்வியின் தரத்திலும் பாதிப்பு ஏற்படும். நாம் உடனடி
தீர்வுகளை நாடி மேற்கொள்ளும் சிந்தனையற்ற செயற்பாடுகள்
அரசாங்கத்தின் கல்வியை தனியார்மயப்ப‌டுத்தும் நடவடிக்கைக்கும் அரச
பல்கலைக்கழகங்களை வலுவிழ்க்கச்செய்யவும் உதவக்கூடும். இதனால் நாம்
கல்விசாரா ஊழியர்க்ளின் தொழிற்சங்க நடவடிக்கையை கவனமாகவும்
பரிவோடும் கையாண்டிருக்க வேண்டும்.

வஞ்சனையான அரசுகள் மாற்றுக்கருத்தையும் எதிர்ப்பையும் கட்டுக்குள்
கொண்டுவர பாவிக்கும் தொடர்ச்சியானதும் பிரபலமானதுமான உத்தி
தொழிற்சங்கங்களை ஒன்றுக்கொன்று முரணாக மாற்றி விடுவதாகும்.
இப்பிரித்தாளும் கொள்கை அரசாங்கத்தை தனது நடப்புநிலையை
பாதுகாப்பதற்கும் அதன் நியாயமற்ற தாந்தோன்றித்தனமான செயற்பாடுகளை
கேள்விகேட்போருக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரங்களை முடுக்கி விடுவதற்கும் உதவுகின்றது. அரசு அதன் தொழிலாளர்களை இரு பகுதிகளாக
பிரிக்கின்றது: ஒன்று அரசின் அமைப்பை சுமுகமாக கொண்டு செல்ல உதவும்
அரசின் கட்டுக்கோப்புக்குள் இருக்கும் தொழிலாளிகள் மற்றும் இரண்டாவது
நாட்டின் வளர்ச்சியை முடுக்குவதாக அரசுகள் காட்டும் அரச அமைப்புக்கு
எதிராக இயங்கும் மக்கள் ஆகியவையே அவையாகும். சில மக்கள்
மேற்கூறிய இரண்டாவது வகையான சொல்லாடலை மீளநிறுத்தி
ஏனையோரின் ஜனநாயக போராட்டங்களை குழிபறிக்கும் செயற்பாடுகளில்
ஈடுபடுவது சர்வாதிகார அரசினை வெல்லவைப்பதிலேயே கொண்டு வந்து
நிறுத்தும். எனவே, நாங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளின் போதான
ஆதரவையும் கூட்டுணர்வையும் செயற்படுத்தும் புள்ளிகளை இனங்காணுவது
அவசியமாகும். தற்போது, கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க
நடவடிக்கைகளை உடைக்கும் செயற்பாடுகளை கல்விசார் ஊழியர்களைக்
கொண்டு செய்விக்க முனையும் அரசு, நாளை கல்விசார் ஊழியர்கள்
இணைந்து மேற்கொள்ளும் தொழிற்சங்க நடவடிக்கையின் போது
அதற்கெதிராக கல்விசாரா ஊழியர்களை முன்னிருத்தும் செயற்பாட்டில்
ஈடுபடும் என்பது வெள்ளிடைமலை.

எதிர்காலத்துக்கான வழிகள்

கல்விசார் ஊழியர்களாகட்டும், கல்விசாரா ஊழியர்களாகட்டும், தொழிற்சங்க
நடவடிக்கைகள் கல்வி நடவடிக்கைகளை பிற்போட்டு பரீட்சைகள் குறிப்பிட்ட
காலத்தில் நடைபெறுவதை குழப்பும் என்பது உண்மையாகும். ஏற்கனவே
பொருளாதார நெருக்கடிக்குள் மாட்டியிருக்கும் இளங்கலை பட்டதாரிகள்
தமது பட்டப்படிப்புகளை காலம் தாழ்த்தாமல் முடித்துவிட்டு தம்மையும்
தமது குடும்பத்தாரையும் பாதுகாக்கும் நோக்கில் தொழிலொன்றை அடையும்
நோக்கிலேயே செயற்படுவர். தொழிற்சங்க நடவடிக்கையொன்றை திட்டமிடும்
தீர்மான மட்டத்தில் இருக்கும் அங்கத்தவர்கள், இவ்வாறான விளைவுகளை
கருத்திற்கொண்டு தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதே சிறப்பானதாகும்.
தொழிற்சங்க நடவடிக்கையின் போது அரசாங்கத்துடனான
கலந்துரையாடலில் நான் அனுகூலமான பக்கத்தில் இருப்போமாயின்
நடவடிக்கையில் இருந்து வெளியேறும் வழிகளை ஆராய்ந்து தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிடும் உத்திகளை சரியாக பாவிப்பது
முக்கியமானதாகும். இது, கல்விசார் ஊழியர்களான எமக்கும் பொருந்தும்,
ஏனென்றால் நாமும் தொழிற்சங்க நடவடிக்கைகளை
முன்னெடுத்திருப்பதோடு அவை பின்னடைவுகள் மற்றும் தவறுகளாலும்
வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு இடையில் கூட்டுறவை
வளர்ப்பதற்கு என்ன வழி? எதிர்காலத்தில் ஒரு தொழிற்சங்க நடவடிக்கையை
நாம் முன்னெடுக்கும் போது கைக்கொள்ள வேண்டிய உபாயங்கள் என்ன?
இந்த புள்ளிகளிலேயே கலந்துரையாடலின் தேவை அதிகமாகின்றது. நாம்
தனித்தனியாகவும் கூட்டாகவும் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து கல்விசார்
மற்றும் கல்விசாரா ஊழியர்கள் தொடர்ந்தும் கலந்துரையாடலில் ஈடுபட
வேண்டும் என்பதோடு அவற்றை கூட்டாக எவ்வாறு முகங்கொடுக்கலாம்
எனவும் கலந்துரையாடப்பட வேண்டும். நாம் எமது பொறுப்புகள் மற்றும்
கடமைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் நெருக்கடி சூழ்நிலைகளில்
கைக்கொள்ளும் உத்திகளை மேற்கொள்ள முன்னர் கல்விசாரா
ஊழியர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, அவர்களின்
உள்ளீட்டை பெற்று எமதும அவர்களதும் தேவையை பூர்த்திசெய்யும்
வகையில் செயற்பட வேண்டும்.

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் அந்நடவடிக்கை அரச
பல்கலைக்கழகத்தின் சேவைகளை வழங்கவும் தமது தரத்தை குறைக்காமல்
இருக்கவுமான நிலைக்கு எவ்வாறு பங்களிக்கின்றது என்பது பற்றி தமது
குடும்பத்தால் மற்றும் சமூகத்துக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
அண்மையில் கல்விசாரா ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட தொழிற்சங்க
நடவடிக்கையின் போது அவதானிக்கப்பட்ட முக்கியமான பிரதிகூலம்
யாதெனில், அவர்கள் ஏன் தொழிற்சங்க நடவடிக்கையை
ஆரம்பித்திருக்கின்றார்கள் எனவும் அவர்களின் கோரிக்கைகள் என்ன என்பது
பற்றியும் பொதுமக்கள் விழிப்புணர்வோடு காணப்படவில்லை என்பதாகும்.
ஏற்கனவே அரசு கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பமான அரகல ஆர்ப்பாட்டத்துக்கு பின்னரான அனைத்து வேலைநிறுத்தம் மற்றும்
தொழிற்சங்க நடவடிக்கைகளும் தேவையற்றதாகவும் நாட்டை
குழப்புவதாகவுமே இருப்பதென்ற விம்பமானது கல்விசாரா ஊழியர்களின்
செயற்பாட்டின் போதும் எதிரொலிக்க தவறவில்லை. எதிர்காலத்தில்,
பல்கலைக்கழகங்கள் ஒன்றிணைந்து அரசின் இந்த அஜென்டாவை
முறியடிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். இதற்கு கவனமான
திட்டமிடலும் ஒன்றிணைவும் அவசியமாகும்.

வேலைநிறுத்தம் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அப்பால்
தொழிற்சங்கங்களும் மாணவ அமைப்புகள் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளே
எவ்வாறு உள்ளீர்க்கக்கூடிய ஜனநாயக நடைமுறைகளை உருவாக்கலாம் என
சிந்திக்க வேண்டும். உடனடியான நடவடிக்கைகளை காட்டிலும்
தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மூலம் அரசின் ஒடுக்குமுறை மற்றும்
அவசரகால சூழ்நிலைகளை வினைத்திறனாக எதிர்கொள்ள உதவும்.
இவ்வாறான கலந்துரையாடல்கள் நாம் ஏலவே உருவாக்கி
சாதாரணமயப்ப‌டுத்தி வைத்திருக்கும் அதிகார அடுக்குகளை
வைத்துக்கொண்டு யதார்த்தமாக்க முடியாது. இருப்பினும், இவ்வாறான
கலந்துரையாடல்களை ஆரம்பிக்கும் உள உறுதியை நாம்
பெற்றுக்கொள்வதோடு அதன் மூலம் எமது அரச பல்கலைக்கழங்களை
பாதுகாக்கும் செயற்பாட்டில் ஒன்றிணைவோம்.