எரந்திக்கா டி சில்வா
கல்விக்கான வாய்ப்பைப் பொறுத்த வரையில் இலங்கையின் முக்கிய மக்கட் தொகை மையங்களுக்கும் அதன் புறத்தே இருப்பவர்களுக்கும் சமனற்ற தன்மையே காணப்படுகின்றது. இங்கு கல்வியின் தரத்திலுள்ள வேறுபாடுகள் பற்றி அதிகம் பேசப்படுவதுண்டு. எனினும் கல்வி வாய்ப்பிலுள்ள வேறுபாடுகள் பற்றிய கலந்துரையாடல்கள் அரிதானவை. பாடத்திட்டங்களை மறுசீரமைத்துக் கல்வியைத் தரப்படுவது மாத்திரம் இச் சமத்துவமின்மைக்குத் தீர்வாக அமையுமா? வட இலங்கையில் திரட்டிய சில அனுபவங்களூடாக “புறப்பகுதிகளில்” கல்வியின் தரப்படுத்தல் பற்றிக் கலந்துரையாடுகின்றது இக்கட்டுரை.
தரங்களை வகுத்தல்
ஒவ்வொரு மாணவனும் சமத்துவமான முறையில் பள்ளிக்கூட அல்லது பல்கலைக்கழகக் கல்வியை ஆரம்பிப்பதில்லை எனும் போது எவ்வாறு தரத்தினை வகுப்பதென்ற கேள்வி எழுகின்றது. ஒவ்வொரு நகரத்திற்கும் கூட ஒரு மையமும் புறப்பகுதிகளும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. வலய மட்ட ஆங்கில தினப் போட்டியொன்றில் நடுவராகக் கலந்து கொண்ட போது யாழ்ப்பாணத்தில் காணப்படும் சமத்துவமின்மையைக் கண்கூடாகக் கண்டு கொண்டேன். யாழ்ப்பாணத்தில் வளங்கள் கொண்ட, வசதியான கிறிஸ்தவப் பாடசாலை ஒன்று சிறப்பான நாடகத்தை முன்வைத்திருந்தது. அவர்களது இம்முயற்சி அறிவுசார் நபர்கள்/பெற்றோர்கள் என்ற மூலதனத்தை அவர்கள் கொண்டிருப்பதைப் பிரதிபலித்தது. 1950 களின் காணிப்பிரச்சினையை அவர்களது நாடகம் கருப்பொருளாகக் கொண்டிருந்தது. மாறாக மற்றைய பாடசாலைகளின் கதைகள் பள்ளி மாணவர்களால் இயற்றப்பட்ட நாளாந்த வாழ்க்கைக் கதைகளாகவும், குறைந்தளவு மேடையமைப்பு வசதிகளைக் கொண்டவையாகவும் காணப்பட்டன. இவ்வாறு சமத்துவமற்ற ஒரு மேடையில் ஏற்றப்பட்ட இந் நாடகங்களுக்கு எதனடிப்படையில் புள்ளிகள் வழங்குவது என்ற உள்ளக்குமுறல் ஒரு புறம். ஆகவே மறுபடியும் தரத்தினை எங்கு வகுப்பது என்ற கேள்வியே தோன்றுகின்றது. இயல்பாகவே வளங்கள் மிக்க “மையங்கள்” தரத்தினை வகுத்துவிடுகின்றன அல்லவா? இவ்வாறான தரம் சமத்துவமானதா?
வகுப்பறையில் டெய்லரின் கோட்பாடு
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஏற்படுத்தும் பாடத்திட்டத் திருத்தங்களின் மத்தியில் பல கல்வி முறை சார் பிரச்சினைகளை புறப்பகுதிகள் நோக்குகின்றன. கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் தர உத்தரவாதப் பொறிமுறைகளூடாக விஞ்ஞானம் மற்றும் நிர்வாகம் சார் முறைகளால் இத் திருத்தங்கள் அணுகப்படுவதோடு இவை நன்கொடை நிதியில் தங்கிக் காணப்படுகின்றன. கைத்தொழிலுக்காக ஃபெரெட்ரிக் டெய்லர் முன்வைத்த “விஞ்ஞான முறையிலான நிர்வாகம்” என்ற கோட்பாடு கல்வித் துறைக்கும் நீட்டிக்கப்படுவது தெளிவாகின்றது. இருபதாம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்காவில் டெய்லரின் “விஞ்ஞான முறையிலான நிர்வாகம்”, ஊழியத்தை தரப்படுத்தல், பொறிமுறையாக்கல், மற்றும் உருப்படியாக்கல் மூலம் வேலைத்தளத்தின் வினைத்திறனைப் பன்மடங்கு அதிகரித்திருந்தது. டெய்லரின் இம்முறையானது வியாபாரம் மற்றும் கைத்தொழில் துறைகளாலும் பயன்படுத்தப்பட்டதோடு கல்வி மற்றும் ஏனைய துறைகளிலும் வெகு துரிதமாக ஊடுருவியது. பல்கலைக்கழகங்களுக்கும் கண்கணிப்பு, தரப்படுத்தப்பட்ட பரிசீலனைகள், நிறுவனம் சார் அதிகாரம் மற்றும் கட்டுப்பாடு போன்றவை ஏற்படுத்தப்பட்டதோடு கல்வி நடவடிக்கைகளை மதிப்பிட “வினைத்திறன் வல்லுனர்கள்” அமர்த்தப்படுகின்றனர். இவற்றினூடாக எமது கல்வியும் முதலாளித்துவப் பொருளாதாரத்துக்கு ஏற்ற உற்பத்தி வரிசையாக மாறிவிடுகின்றது. கல்வியின் வினைத்திறனை மதிப்பிட அளவிடக்கூடிய அளவைகள் கையாளப்படுவதோடு இவை பட்டதாரிகள் எவ்வளவு தூரம் வேலைக்கமர்த்தப்படக் கூடியவர்கள் என்பதையே மையமாகக் கொண்டுள்ளன. “வேலைக்கமர்த்தக்கூடிய தன்மையின்” அடிப்படையிலேயே மக்களின் வரிப்பணமும் வெவ்வேறு துறைகள் மத்தியில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. தேசிய அறிக்கைகளிலும் கூட இவ்வளவைகள் பயன்படுத்தப்படுவதோடு கலைப்பட்டதாரிகளை வேலைக்கமர்த்த முடிவதில்லை என்பதன் அடிப்படையில் கலைப் பிரிவுக் கல்வியை இவை புறந்தள்ளுகின்றன.
இவ்வாறான அளவைகள் மாணவர்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். கலை மற்றும் மனித நேயப் பீடங்களின் பாடத்திட்டங்கள் செயற்கையான, மாணவர்களால் அடையக் கடினமான அதீத இலக்குகளை உள்ளடக்கிய தரங்களைக் கொண்டுள்ளன. கல்வி வெளிப்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட அதிகார ரீதியான இந்த முறைகளை அணுகுவதற்கே குறிப்பிடத்தக்களவு முன்னாயத்தம் தேவைப்படுகின்றது. கற்கை நெறிகளுக்குரிய முன்கூட்டிய தேவைகளை வகுத்து அவற்றை அடைவதற்கு மாணவர்களுக்குப் போதிய நேரம் வழங்கப்பட வேண்டும்.
சமத்துவத்தினடிப்படையில் விதிமுறைகளை மாற்றல்
கல்வியைப் பேணுபவர்களாகப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் காணப்படும்போதும் சமத்துவத்தினைக் கருத்தில் கொண்டு சில இடங்களில் விதிமுறைகளை அவர்கள் மாற்றியமைக்கின்றனர். உதாரணமாக யாழ் பல்கலைக்கழகத்தில் கற்பித்த எனது குறுகிய அனுபவமானது சில மாணவர்களைப் பொறுத்த வரையில் விரிவுரைகளுக்கான வருகை, காலக்கெடுவைகள், மதிப்பீடுகள் போன்றவற்றில் நான் தளர்வாக நடந்து கொள்ள வேண்டிய தேவையை உணர்த்தியது. பட்டப்படிப்பின் இரண்டாம் ஆண்டிலுள்ள மாணவர்கள் முறையான குறிப்பிடல் முறைகள் பற்றியோ, கல்விசார் முறையற்ற நடத்தைகள் பற்றியோ அறிந்திருக்கவில்லை என நான் கண்டுகொண்டேன். இங்கு கல்வியாளர்களாக நாம் எதிர்கொள்ளும் சிக்கலானது கல்விசார் விதிமுறைகளைப் பேணாதிருப்பதற்கு அவர்களைத் தண்டிப்பதா அல்லது அதற்குரிய காரணங்களைக் கண்டறிவதா என்பதாகும். அதிகாரத்துவமான எமது அமைப்பு முறையில் எவ்வளவு தூரம் இப் பிரச்சினைகளை நாம் கையாள முடியுமென்பது கேள்விக்குறியானது. கற்பித்தல், மதிப்பிடல், ஆய்வு, நிர்வாகம் என்ற வேலைப்பழுவின் மத்தியில் எத்தனை ஆசிரியர்களுக்குப் பல்வேறுபட்ட பின்னணிகளிலிருந்தும் வரும் மாணவர்களிடையிலான சமத்துவமின்மையை நிவர்த்திப்பதற்கான சந்தர்ப்பம் அமைகின்றது?
உயர் கல்வியின் நிர்வாகிகள் கல்வி முறைகளைப் பொறுத்த வரையில் “விஞ்ஞான முறை” சார் அணுகுமுறையைப் பின்பற்றுகின்றனர். முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட தரங்களையும் இலக்குகளையும் அடையும் நோக்கில் வெளிப்பாடுகளையும் செயல் திறனையும் அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டு முறைகளின் பால் உயர் கல்வி ஈர்க்கப்படுகின்றது. இவ்வாறு வெளிப்படுகளை ஒத்திசைக்கச் செய்வதன் மூலம் குறிக்கோளான இலக்குகளை அடையக்கூடிய பட்டதாரிகளை உருவாக்க எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கு மாணவர்களின் ஆக்கத்திறன்களும், வித்தியாசங்களும், திறமைகளும் புறக்கணிக்கப்படுகின்றமை கவலைக்குரியது.
கல்விச் சீர்திருத்தங்கள் பலவும் உயர்கல்வியின் அதிகாரத்துவத் தளர்வுகளை நிவர்த்தி செய்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன. இவ்வாறு கல்வியைத் தரப்படுத்துவது சமூக-பொருளாதார சமத்துவமின்மையையோ எமது கல்வி முறையிலுள்ள பிரச்சினைகளையோ கருத்தில் கொள்கின்றதா? முதன்மை மற்றும் இரண்டாம் நிலைக் கல்வியில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சமத்துவமின்மையை நிவர்த்திக்க முன் கல்வியைத் தரப்படுத்துவது நியாயமானதா? தரமான அடிப்படைக் கல்விக்கான வாய்ப்பை வழங்காது உயர் கல்வியைத் தரப்படுத்துவது டுபோய்ஸ் குறிப்பிட்டவாறு புறப்பகுதிகள் தொடர்ந்தும் “வெள்ளை மனிதனின் மர்மமான எழுத்துக்களை” அறியப் போராடும் “கேனானுக்கான மலைப்பாதைக்குச்” சமானமாகிவிடுகின்றது.
“இது ஒரு களைப்பூட்டும் கடினமான செயலாகும். ஆங்காங்கு அங்குலமாக உண்டாகிய முன்னேற்றங்களையும், பாதையினின்றும் நழுவியவர்களையும், வீழ்ந்தவர்களையும் உணர்ச்சியின்றிக் குறிப்பெடுக்கின்றார் புள்ளிவிபரவியலாளர். களைத்துச் சோர்ந்த யாத்திரிகளுக்கு மலையுச்சி இருண்டே காணப்பட்டது, பனி மூட்டம் குளிர்ந்தது, கேனான் அடைய முடியாத் தூரத்திலேயே காணப்பட்டது”- W.E.B டுபோய்ஸ் (W.E.B DuBois)