GotaGoHomeமிலிருந்து #அமைப்பு மாற்றத்தை நோக்கி

கௌஷல்யா பெரேரா

GotaGoHome பல்தரப்பட்ட கோரிக்கைகளை உள்ளடக்கியது. அவற்றில் ஒன்றே அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். புதிய பிரதமரின் நியமனம்
நமக்கு எதை உணர்த்த முடியுமாக இருக்கின்றதென்றால், இலங்கையின்
சமூக, அரசியல் அமைப்புகளின் மீதான நீண்டகால மாற்றமானது
ஏற்படுவதற்கு மிக நீண்ட காலம் எடுக்கலாம் என்பதும் தற்போதைய
பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை எட்டுவது மட்டும் அதற்கான வழியாக
அமைய முடியாது என்பதுமாகும்.


இன்று நாம் கல்வியமைப்பின் மீது ஏற்பட வேண்டிய மாற்றங்களை
நோக்கலாம். நாட்டை அனைவரும் வாழ முடியுமான இடமாக மாற்றுவதில்
கல்வியமைப்பில் ஏற்படுத்தப்பட வேண்டிய சீர்திருத்தம் முக்கிய
பங்காற்றுகின்றது. தற்போதைய நெருக்கடியில் பிரஜைகளான நாங்கள் சில
அடிப்படையான விடயங்களில் புரிதலுடன் எம்மை பயிற்றுவிக்க வேண்டிய
தேவை உருவாகியுள்ளமையிலிருந்து இதனை விளங்கிக்கொள்ளலாம். அரசு,
அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகளின் தற்போக்கு
ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடுகளை விளங்கிக்கொள்ளுதல்
அவ்வாறான அடிப்படையான விடயமாகும். நாட்டுக்கு பாதகமான
அம்சமென்று தெரிந்தும் நிறுவனங்கள் வரிகளை தள்ளுபடி செய்வது ஏன்?
ஒரு ஜனாதிபதியால் சுயமாக பதவியிலிருந்து விலக முடியுமா,
அவ்வாறாயின் அதன் பின்னர் நடப்பது என்ன? ஒரு அமைதியான
ஆர்ப்பாட்டமொன்றில் ஒருவர் எவ்வாறு நடந்துகொள்ளலாம்? 1953ல்
இலங்கையில் என்ன நடந்தது? இவ்வாறான கேள்விகள் கட்டாயம்
பதிலளிக்கப்பட வேண்டியவையாகும்.


நாம் ஏன் இவ்வாறான விடயங்களிலிருந்து திசைதிருப்பப்பட்டோம்?
கல்வியின் நோக்கமென்பது வகுப்பறையில் கற்றவற்றை வெளியுலகில்
நடைமுறைக்கு கொண்டுவருவதென ஒருவர் எண்ணலாம். எமது செயற்பாடுகளின் மீதான பிரதிபலிப்பாகவும் எண்ணலாம். தேவையான
நேரத்தில் தேவையானதை பேசவுமான நிலையாகவும் கொள்ளலாம். கல்வி
எமது பெறுமானங்களை சுயவிமர்சனம் செய்யத்தூண்டுவதுடன் தனிநபர்
தேர்வுகளும் விருப்புகளும் சமூக நன்மைகளுக்கு எதிராக மாறும்
தருணங்களை கண்டுகொள்ளவும் உதவவேண்டும். இருப்பினும் இவ்வாறான
ஒரு கல்வியமைப்பு எம்மிடம் காணப்படவில்லை, காரணம் எமது
கல்வியமைப்பு பல தசாப்தங்களாக‌ நெருக்கடியில் உள்ளது. எமது
கல்வியமைப்பின் அடித்தளம் பலமற்றதாக இருக்கையில் எவ்வாறு
அர்த்தமுள்ள பிரஜைகள் உருவாவார்கள்?


இலங்கையில் கல்வியில் தற்போது காணப்படும் சிக்கல்களின் சுருக்கம்

எமது நாட்டில் கல்வி தொடர்பாக பல அமைப்புகள் காணப்படுகின்றன.
பாலர்கல்வி ஒழுங்கமைக்கப்படவில்லை; பாலர் பாடசாலை ஆசிரியர்கள்
சரியாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. தேசிய, மாகாண மற்றும் தனியார்
பாடசாலைகள் ஒருவகையான ஒழுங்குவிதிகளின் படி இயங்குவதோடு
சர்வதேச பாடசாலைகள் நிறுவனங்கள் அல்லது அறக்கட்டளை நிறுவனங்கள்
போல இயங்குகின்றன. மூன்றாம்நிலைக்கல்வி தொழிநுட்பக்கல்லூரிகள்,
அரசபல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள்
போன்றவற்றின் மூலம் வழங்கப்படுகின்றன.


அரச (மத்திய மற்றும் மாகாண), தனியார் மற்றும் சர்வதேச பாடசாலை
ஆசிரியர்கள் பலவகையான வரைகூறுகளின் அடிப்படையில்
சேர்க்கப்படுகின்றார்கள். புதிதாக இணைந்த ஆசிரியர்கள் கிட்டத்தட்ட 40,000
ரூபாய் சம்பளமாகப் பெருகின்றார்கள். தனியார் மற்றும் சர்வதேச
பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் இதைவிட அதிக சம்பளம்
வாங்குவதாக பலர் எண்ணினாலும் அது அரிதான விடயமாகும்.
இலங்கையில் அதிகமான ஆசிரியர்கள் தமது வேலையின் போதுதான்
பயிற்சி பெறுகின்றார்கள், ஏற்கனவே பயிற்சிபெற்ற ஆசிரியர்கள்
பெரும்பாலான நேரங்களில் வேலையின் போதான பயிற்சிகளுக்கான
வாய்ப்பை இழக்கின்றார்கள்.

பாடசாலைகளின் பாடத்திட்டங்களிலும் பல சிக்கல்கள் காணப்படுகின்றன.
அரசாங்க பாடசாலைகளின் பாடத்திட்டங்கள் பெரும்பாலும்
அலுப்பானதாகவும், காலத்திற்கேற்ப மேம்படுத்தப்படாதனவாகவும், நாட்டில்
காணப்படும் இனவாதம் மற்றும் தன்பால்மேண்மையியத்தை எதிர்ப்பனவாக
இருப்பதில்லை. சர்வதேச பாடசாலைகளின் பாடத்திட்டங்களில் இவ்வாறான
சிக்கல்கள் குறைவாக காணப்பட்டாலும் இலங்கையின் வாழ்க்கை
அமைப்புக்குப் பொருத்தமானதாக இருக்கின்றனவா என்பது
கேள்விக்குறியாகும். நாம் குப்பி ஆக்கங்களில் அடிக்கடி பேசுவது போல
உயர்கல்வியிலும் சிக்கல்கள் காணப்படுகின்றன.


கல்விக்காக தமது சொந்த பணத்தை செலவளிக்க இலங்கை அரசானது தனது
பிரஜைகளை இணங்கவைத்துள்ளதோடு தனது பொறுப்பிலிருந்து
துறந்துசெல்லும் நிலைக்கு வந்துள்ளது. இதன் வெளிப்பாடே அரசாங்கப்
பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் குறைந்த சம்பளமாகும். கடந்த
வ‌ருடம் சமர்ப்பிக்கப்பட்ட 2022ம் ஆண்டுக்கான‌ பாதீட்டின்படி இலங்கையில்
‘நலன்புரி’க்காக ஒதுக்கப்பட்ட தொகைகளின் விபரம்: ரூபா 2,445,500,000
பாதுகாப்பு மற்றும் இராணுவ சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள
அதேவேளை 1,825,000,000 ரூபாய்களே கல்விக்காகவும் 2,000,000,000 ரூபாய்களே
சுகாதார நலன்புரிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால்தான் நாட்டில்
சிறுவர்களுக்கிடையிலான ஊட்டச்சத்து குறைப்பாட்டை தடுக்க உதவும்
பாடசாலைகளுக்கான உணவுத்திட்டமானது பாதீட்டில் ஒதுக்கப்பட்ட
நிதியிலன்றி வெளிநாட்டிலிருந்து எடுக்கப்பட்ட மானியங்களால்
வழங்கப்படுகின்றது. பெருந்தொற்று காலத்தில் இத்திட்டம்
இல்லாமலாக்கப்பட்டதற்கான காரணம் இன்னும் புலப்படாமலேயே
இருக்கின்றது. அரசாங்க பாதீட்டில் கல்விக்கான ஒதுக்கீடு குறைவாக
இருப்பதனாலேயே நாட்டின் பிரஜைகள் கல்விதொடர்பாக பல
செலவீனங்களை (பாடசாலை போக்குவரத்து, காகிதாதிகள், தொடர்ச்சியான
நன்கொடைகள், பாடசாலை நிகழ்வுகள், தனியார் வகுப்புகள்,
உணவுச்செலவுகள், பாடசாலைகளை சுத்தம்செய்தல் போன்றன) மேற்கொள்ள
வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.

நாம் ‘அரகலய’ என அழைக்கப்படும் ஆர்ப்பாட்டம் பலரின் எதிர்பார்ப்புகளை
தூண்டியுள்ளது. இருப்பினும் இந்த ஆர்ப்பாட்டங்களை காலம் மற்றும் இடம்
கடந்து நாங்கள் எடுத்துசெல்ல வேண்டுமாயின் நாம் இயங்கும் அமைப்புகள்
மற்றும் நிலையங்களில் நிலையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.


அரசியல்மயமாக்கம், ஊழல் மற்றும் தகுதியற்றவர்கள் பதவியில் அமர்தல்
போன்றவை எமது பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக
மானியங்கள் ஆணைக்குழு உட்பட எல்லா அமைப்புகளிலும்
ஊடுருவியுள்ளன, அவை எமக்கு புலப்படவில்லையெனில் இவ்வாறான
விடயங்கள் சாதாரணமாக்கப்பட்டுள்ளன என்பதே அர்த்தம். கடந்த இரு
தசாப்தங்களில் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசியல்
நியமனங்கள் குறித்து விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் மிக அரிதாகவே
வெளிப்பட்டன. கொள்கை முரன்பாடுகள் தொடர்பான நடத்தைகள்
கல்வியியலாளர்களிடமிருந்தே மங்கி வருகின்றன. கேள்விக்குட்படுத்தாமல்
கட்டுப்படல் என்பது இலங்கையின் உயர்கல்வி அமைப்பின் அவலமாக
மாறியுள்ளது. மாற்றம் பிரச்சினைக்கான ஆணிவேராக பார்க்கப்படுகின்றது.


ஒரு அமைப்பு அதனுள் செல்லரித்துச் செல்லும் செயற்பாடு உடனடியாக
புலப்படத்தக்க அம்சமாக இல்லாததால் கல்வியமைப்பில் தனிச்சிறப்பான
மாற்றங்களை எய்துதல் கனாவாக மாறியுள்ளது. இதற்கான ஆதாரங்களையே
நாங்கள் கண்கூடாக காண்கின்றோம். கல்வித்துறையின் வீழ்ச்சியை தடுப்பது
ஆசிரிய தொழிற்சங்கங்களுக்கு இயலாத விடயமாக மாறியுள்ளதோடு
FUTAவின் நீண்ட நாளைய ஆர்ப்பாட்டமான “இலவசக்கல்வியை காப்பாற்றும்”
செயற்றிட்டங்கள் மூலம் பல்கலைக்கழகங்களை ஜனநாயகப்படுத்த
இயலாமல் இருக்கின்றது.


பிரஜைகளுக்கான கல்வி உரிமையை இலங்கையில் தொடர்ந்துவந்த
அரசாங்கங்கள் மறுத்த்தமையை தற்போதைய நெருக்கடி
வெளிப்படுத்தியிருக்கின்றது. நாம் சரியான பிரஜைகளாக இருக்கக்கூட
முடியாமல் இருக்கின்றோம். அரசாங்கங்களின் திறமையின்மை, ஊழல்,
தான்தோன்றித்தனம் ஆகியவற்றால் பிரஜைகளான நாங்கள் எமது வேலைகளைச் செய்து முடிக்க எமக்குள் உருவான தொடர்புகளை
நம்பியிருக்கவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எம்மை
தெளிவாக்குவதென்பது இவ்வாறான நிலைகள் தவறானவை என உணர்வதும்
அவற்றுக்கெதிராக பேசமுடியுமான நிலையை உருவாக்க முயல்வதும்
சட்டரீதியான முறைகளில் அவற்றுக்கெதிராக போராடுவதுமாகும்.


கொள்கைகளில் சீர்திருத்தங்களை வேண்டும்போது நாங்கள் தற்போது
காணப்படும் கொள்கைகளுக்கு முற்றிலும் மாற்றீடான கொள்கைகளைக் கோர
வேண்டும். தற்போதைய நிலவரப்படி கல்வியானது எமது தனிநபர்
விருத்திக்கும் அடுத்த தனிநபரை வென்று முன்செல்லும் நிலையை
உருவாக்கவுமே உதவுவதோடு கூட்டு சமூக வளர்ச்சியை அடிப்படையாக
மாற்றவில்லை. கல்வித்தரம், நாம் கல்வியை எப்படி பெற்றோம் போன்ற
பெறுமானங்கள் செல்லாக்காசாக மாறியிருப்பதோடு எமது கல்வித்தகுதிகள்
மாத்திரமே மேலே உயர்த்தப்படுகின்றன. இவ்வாறான நிலைகளை
மாற்றுவதன் மூலம் எமது அரசியல், பொருளாதார, அறம் மற்றும்
ஒழுக்கம்சார் திண்டாட்டங்களை சரிசெய்ய முடியுமானதும் எமதும் எமது
நாட்டினதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதுமான கல்வியை
சாத்தியப்படுத்தலாம். இதனை நிலைநிறுத்தவேண்டுமாயின் கல்வி
தொடர்பாக நாம் கொண்டுள்ள போட்டித்தன்மையுள்ள, சுயநல எண்ணங்களை
மாற்ற வேண்டும்.


புரட்சிகர மாற்றத்தை கொண்டுவரக்கூடிய கல்வியமைப்பொன்று
வேண்டுமென்றால் பாலர் பாடசாலை, ஆரம்பப்பள்ளி, பல்கலைக்கழகமென
எவ்விடத்திலும் கற்பிக்க இயலுமான ஆசிரியர்கள் உருவாக வேண்டும்.
அதாவது, பாடசாலை ஆசிரியர்கள் உயர்சம்பளங்கள் வழங்கப்படுவதோடு
அவர்களின் உற்சாகமான பணிக்கு ஏதுவான பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்க
வேண்டும். எமது கல்வித்திட்டங்கள் மாற வேண்டுமென கோரிக்கை விடுக்க
வேண்டும். அரசானது கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டிய சரியான நிதியை
ஒதுக்காமலும் அர்த்தபூர்வமான கொள்கைகள் வகுக்கப்படாமலும் இருக்கும்
நிலையில் இவ்வாறான மாற்றங்கள் சாத்தியமாகாதன.

இக்கருத்துகள் வெறுமனே லட்சியவாதமாக நோக்கப்படலாம். நாட்டில்
உணவு, எரிபொருள் போன்ற அடிப்படைகளே கிடைக்காமலிருக்கும் போது
கல்விச்சீர்திருத்தம் குறித்த கலந்துரையாடல்கள் தேவைதான போன்ற
கேள்விகள் எழலாம். இருப்பினும், இன்றிலிருந்து சில மாதங்களுக்கு
முன்னர், இலங்கை ஜனாதிபதியின் மிரிஹான இல்லத்துக்கு முன்னர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென்பது நகைப்புக்குரிய விடயமாக இருந்திருக்கும்.
ஆனால் இன்று அது சாத்தியமாகியுள்ளது. அதைப்போல அரசியல்
அறிஞர்கள், மொழியியல் ஆசிரியர்கள், விஞ்ஞான ஆசிரியர்கள்,
பொருளியலாளர்கள் மற்றும் வரலாற்றாய்வாளார்களென எம்மில்
அனைவருக்குமான கடமைகள் உள்ளன. கறுப்பின பெண்ணிய எழுத்தாளர்
பெல் ஹூக்ஸ் சொல்வதுபோல ‘வகுப்பறைகளே புரட்சிகர வாய்ப்புகள்’. GotaGoHome என்பது அமைப்பு மாற்றத்துக்கான வெகுசன கோரிக்கையாகும். இதனை நாம் கட்டாயம் உணர வேண்டுமென்பதோடு இதனை நோக்கிய
எமது செயற்பாடுகளை முடுக்க வேண்டும். எம்மால் இன்னும் உயரப்பறக்க
முடியும்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன