MBBSக்கான விண்ணப்பங்களைக் கோருதல்!
இராணுவ பாதுகாப்பின் கீழ் மருத்துவ கல்விக்கான கட்டணங்களை
அறிமுகப்படுத்தல்

ரம்யா குமார்

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் ஜனாதிபதியால் (பாதுகாப்பு அமைச்சராக)
அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவான கொத்தலாவல
பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (KDU) கட்டணம் செலுத்தும் உள்நாட்டு
மாணவர்களை மருத்துவ கற்கைகளுக்கு அனுமதிப்பதற்கான
முன்மொழிவானது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, KDU
இணையதளத்தின் மூலம் உள்நாட்டு மாணவர்களிடம் (விடுதியில் தங்காது
பயிலும் மாணவர்) MBBS கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்டு வெறுமனே 2 வாரங்களே வழங்கப்பட்ட
நிலையில் மே 5ஆம் திகதி முடிவுத்தேதியாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கையில் மருத்துவக் கல்வியானது 13 அரச மருத்துவப் பீடங்களில்
வழங்கப்படுவதோடு அவற்றில் 12 பீடங்கள் பல்கலைக்கழக மானியங்கள்
ஆணைக்குழுவின் (UGC) கீழும் ஒன்று KDUவினுடையதாகவும் இருக்கின்றது.
UGC மருத்துவ பீடங்களுக்கு உயர்தரத்தில் அதிக சித்திகள் பெறும்
மாணவர்களுக்கு கட்டணம் அறவிடப்படாத அமைப்பில் வாய்ப்புகள்
வழங்கப்படுவதோடு 5%மான வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான‌
வெளிநாட்டு மாணவர்களுக்கு 62,500 அமெரிக்க டாலர்கள் (12,500*5 அமெரிக்க
டாலர்கள்) கட்டணத்தில் மருத்துவ பீடங்களுக்கான அனுமதி
வழங்கப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் KDUவின் மருத்துவ
பீடமானது இராணுவ பணிநிலைப் பிரிவனரோடு சேர்த்து தொடர்ந்தும்
அதிகரித்து வரும் எண்ணிக்கையில் வெளிநாட்டு மாணவர்களையும்
இலங்கையில் வாழாத இலங்கையரையும் அனுமதித்து வருகின்றது.
இன்னொரு வகையில் கூறுவதாயின், இதுநாள் வரையில் KDUவோ ஏனைய மருத்துவ பீடங்களோ கட்டணம் செலுத்தும் உள்நாட்டு மாணவர்களுக்கான
மருத்துவ கற்கைக்கான அனுமதியை வழங்கவில்லை.

கட்டணம் செலுத்தும்/ தனியார் மருத்துவ கல்விக்கான எதிர்ப்பானது
கல்வியின் தரம்/ மாணவர்களுக்கான நியாயப்பாட்டின் அடிப்படையில்
மாணவ அமைப்புகளால் தொடர்ந்தும் எதிர்க்கப்பட்டு வந்தது. 2021ஆம் ஆண்டு
அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக
மசோதாவானது, திருட்டுத்தனமாக உள்நாட்டு மாணவர்களை கட்டணம்
அறவிடும் அடிப்படையில் KDUவின் மருத்துவ பீடத்துக்கு அனுமதிக்கும்
முன்மொழிவை மேற்கொண்டது. தற்போதைய சூழ்நிலையில் எவ்வித சட்ட
ஏற்பாடுகளுமின்றி அமைச்சரவை அனுமதியோடு ஜனாதிபதியின்
முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதோடு, இது நடைமுறையில்
வருமாயின் நாட்டின் மருத்துவ கல்வியின் நிலவியலானது பாரிய
மாற்றங்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் இருக்கின்றது.
அனுமதிக்கான தேர்வு அளவைகள்.

விடுதியில் தங்கிப்படிக்காத உள்நாட்டு மாணவர்களுக்கான KDU பீடத்தின்
மருத்துவ கற்கைக்கான தேர்வு அளவைகள் KDU இணையதளத்தில்
வெளியிடப்பட்டிருக்கின்றன. இவர்கள் 17௨4 வயதுக்கு இடைப்பட்ட
“திருமணமாகாத” இலங்கை பிரஜைகளாக இருப்பதோடு, மருத்துவ
கல்விக்கான குறைந்தபட்ச தரமாக கருதப்படும் க.பொ.த உயர்தரப்
பரீட்சையில் உயிரியல் துறையில் 2022ல் (அல்லது உள்நாட்டு/நிகரான
வெளிநாட்டு கற்கையில் 2023ஆம் ஆண்டில்) தோற்றி உயிரியல் துறையில்
குறைந்தபட்சம் இரண்டு கிரெடிட் சித்திகளோடு (c) ஒரு சாதாரண
சித்தியையும் (s) பெற்றிருத்தல் வேண்டும்.

மாணவ அனுமதியை விரிவாக்கும் இந்த தேர்வு அளவைகள் இரு கிரெடிட்
மற்றும் ஒரு சாதாரண சித்திகள் கொண்ட அனைத்து மாணவர்களையும்
உள்ளீர்க்கக் கூடியதாக மாற்றியிருக்கின்றது. இருப்பினும் KDUவானது தேர்வு
நாடுபவர்களில் அனுமதிக்கப்படுபவர்களுக்கான செயன்முறையை பற்றி
குறிப்பிட்டிருக்கவில்லை (எத்தனை பேர் அனுமதிக்கப்படுவர்?) என்பதோடு வெறுமனே தேர்வு நாடுபவர்கள் அவர்களின் Z மதிப்பெண்கள் மற்றும்
சித்திகளை வைத்து தேர்ந்தெடுக்கப்படுவதோடு அவர்கள் “கட்டமைக்கப்பட்ட
தேர்வு நேர்காணல்” மூலம் தெரிவு செய்யப்படுவதாக
குறிப்பிடப்பட்டுள்ளதோடு மேலாண்மைக் குழுமனே “பிரத்தியேக உரிமையை”
பெற்றிருப்பதாகவும் குறிப்பிடுகின்றது.

இதனை யார் அணுகலாம்

ஐந்து வருட மருத்துவ கற்கை நெறியானது வருடமொன்றுக்கு 2.5 மில்லியன்
ரூபாய்கள் கட்டணம் செலுத்தப்பட வேண்டுமென்ற அளவில் ஐந்து
வருடங்களுக்கு 12.5 மில்லியன் ரூபாய்களாக இருப்பதோடு அது 42,000
அமெரிக்க டொலர்களுக்கு சமானமானது. தனியார் உயர்கல்வி அமைப்பை
விரிவாக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவான சர்ச்சைக்குரிய தேசிய
கல்விக்கொள்கை சட்டகத்தின் (NEPF) முக்கிய அழுத்தக்குறிப்பான
மாணவர்களுக்கான மானியம் அல்லது புலமைப்பரிசில் வழங்கும்
அம்சமானது விண்ணப்பங்களுக்கான கோரிக்கைகளில் காணப்படவில்லை.
பெற்றோர் இலகுவாக கட்டணம் வழங்கி படிக்க வைக்கக்கூடிய
மாணவர்களை விடுத்து ஏனையோர் தமது சொத்துகளை விற்றோ கடன்களை
பெற்றோ தான் MBBS கற்கையை மேற்கொள்ள முடியுமாயிருக்கும். அதிலும்,
ஆங்கில மொழிப்பரீச்சயம் பெற்ற உயர்வர்க்க மாணவர்களுக்கு நேர்காணலை
எதிர்கொள்வது இலகுவாக இருப்பதோடு அவ்வாறான மாணவர்களுக்கு
இதுவொரு இலகுவான வாய்ப்பாக அமையும்.

உண்மையில் மருத்துவக் கல்வியானது உயர்வர்க்க தொழிலாக
மாறியிருப்பதோடு தேர்வுநாடிகளை “மென் திறன்கள்”, கல்விசாரா
நடவடிக்கைகளில் காணப்படும் ஈடுபாடு, சமுதாயப் பணி மற்றும் இவை
போன்ற ஏனைய அடைவுகளை அளவீடுகளாக வைத்து நேர்காணல்களில்
தேர்வு செய்யும் நடைமுறையானது இந்த அளவீடுகளை அடையக்கூடிய
குறிப்பிட்ட வர்க்க மாணவர்களுக்கே எட்டக்கூடியதாக இருக்கும். மேலும்
இலங்கையில், KDUவின் மேலாண்மைக் குழுவில் இருக்கும் ஒருவருக்கு
தெரிந்த ஒருவரிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்பு “தெரிந்தவருக்கு தெரிந்தவர்’ என்ற ரீதியில் மாணவர்களுக்கான அணுகலை ஏற்படுத்தும்
வாய்ப்பும் அதிகம். இலங்கையின் வட கொழும்பு மருத்துவ கல்லூரி (NCMC)
மற்றும் SAITM ஆகியன வைத்தியர்களின் பிள்ளைகளின் சேர்ப்பிடங்களாக
இருந்தமை பரவலாக அறியப்பட்டதாகும்.

கேள்விக்குறிய நியாயப்படுத்தல்

பல தனியார் மருத்துவ கல்லூரிகள் இலங்கை மருத்துவ சங்கத்தின்
விசாரணைகளுக்கு உட்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் மருத்துவக் கல்வியை
தனியார்மயப்படுத்துவது பல அரசியல்வாதிகள், மருத்துவ
தொழில்வல்லுநர்கள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்டவர்களின் வழக்கமாக
இருப்பதோடு மருத்துவர்களின் வெளியேற்றத்திற்கான தீர்வாகவும் இது
முன்வைக்கப்படுகின்றது. கட்டணம் அறவிடப்படும்/
தனியார்மயப்படுத்தப்படும் மருத்துவக் கல்வி மருத்துவ மூளைசாலிகளின்
வெளியேற்றத்துக்கு தீர்வாகுமா என்பது கேள்விக்குறியே. கட்டணம்
மேற்கொண்டு கற்று வெளியேறும் மருத்துவ பட்டதாரிகள் மேற்கில்
காணப்படும் பணம் கொழிக்கும் மருத்துவ தொழில்வாய்ப்புகளை விட்டுவிட்டு
நாட்டில் சேவை செய்வார்கள் என எதிர்பார்ப்பது யதார்த்தமற்ற விடயமாகும்.
அப்படியே அவர்கள் நாட்டில் தங்கிவிட்டாலும் கூட மேற்கொண்ட
கட்டணங்கள் மற்றும் அதற்காக எடுத்த கடன்களை பார்க்கும் போது அவர்கள்
அரச மருத்துவ அமைப்பில் அதுவும் பதவிய, புதுக்குடியிருப்பு போன்ற
தனியார் மருத்துவ வசதிகள் குறைந்த பின் தங்கிய பிரதேசங்களில்
மருத்துவ சேவைகளை வழங்க முன்வருவார்களா என்பது சந்தேகமே.

மருத்துவர்களை கிராமிய பிரதேசங்களில் தங்கவைப்பதற்காக தற்காலத்தில்
இரண்டு உத்திகள் பின்பற்றப்படுகின்றன: மாவட்ட ஒதுக்கீட்டு முறை மற்றும்
உள்ளிருப்புப்பயிற்சிக்குப் பின்னரான கட்டாய நியமனம். முதலாவதாக,
மாவட்ட ஒதுக்கீட்டு முறையானது பல்கலைக்கழக மானியங்கள்
ஆணைக்குழுவால் அறிமுகப்படுத்தப்பட்ட நலிந்தோர் நலநோக்குப் பணியாக
இருப்பதோடு, மருத்துவ பட்டதாரிகளை பின் தங்கிய மாவட்டங்களிலிருந்து
மாவட்ட ஒதுக்கீடு அடிப்படையில் உள்ளீர்க்கும் போது அவர்கள் தமது சொந்த மாவட்ட/ மாகாணங்களில் மருத்துவ சேவைகளை செய்வர் என்ற
கூற்றின் அடிப்படையில் பொதுக்கல்வி அமைப்பினை மூர்ச்சிக்கச்செய்யும்
கிராம‍- நகர சமமின்மைகளை கட்டுப்படுத்தும் நோக்கில்
அறிமுகப்படுத்தப்பட்ட உத்தியாகும். இரண்டாவதாக, உள்ளிருப்பயிற்சியை
முடித்து புதிதாக நியமனம் பெறும் மருத்துவர்களுக்கு ஏலவே
ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையங்களுக்கு கட்டாய நியமன அடிப்படையில்
சேவை வழங்கும் நிலையில், பரவலாக சிதறச்செய்யப்படும் மருத்துவ
தொழிலாளர்களை உருவாக்கலாம். தற்போது பொது மருத்துவ அமைப்பே
நாட்டின் மருத்துவ தொழில்களுக்கான ஆரம்ப தொழில்வழங்குநராக
இருக்கும் நிலையில் இவ்வகையான கட்டாய சேவை தேவைப்பாடுகளை
அறிமுகப்படுத்த முயலலாம். அரசு ஊக்கமளிக்கும் மருத்துவ கல்விக்கு
நிகராக தனியார் மயப்படுத்தப்படும் மருத்துவ கல்வியை கொண்டுவரும்
போது பொது மருத்துவ சேவையிலிருந்து தனியார் மருத்துவ சேவைக்கு
மூளைசாலிகள் வெளியேற்றம் நிகழ்வதோடு இந்தியா, தாய்லாந்து மற்றும்
மலேஷியா போன்ற நாடுகளில் நடைபெறுவதைப் போல அரச
வைத்தியசாலைகளில் குறிப்பாக கிராமிய பிரதேச அரச
வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பற்றாக்குறை ஏற்படும்.

மேலும் உள்நாட்டு மாணவர்களை தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு
அனுமதிப்பதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை பாதுகாக்கலாம்
என்றொரு நியாயப்பாடும் முன்வைக்கப்படுகின்றது. அரச மருத்துவ
பீடங்களில் மாணவ அணுகலை அதிகரிப்பதன் ஊடாக இதனை ஓரளவு
எய்தலாம் என்றாலும் கூட அரசாங்கம் உயர்லக்வித்துறையில் வெளிநாட்டு
முதலீட்டாளர்களை உள்ளீர்ப்பதை நோக்காகக் கொண்டிருக்கின்றது. NEPF
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று, “உயர்கல்வி மற்றும் திறன்
அபிவிருத்தி துறைகளில் வெளநாட்டு முதலீட்டாளர்களின் உடைமைகள்
மீதான கட்டுப்பாடுகள் முதலீட்டு எல்லைகளை உயர்தர கல்வி
நிலையங்களுக்கு அதிகரிப்பதன் நோக்கில் இல்லாமலாக்கப்படும்”.
நடைமுறையில், பன்நாட்டு பல்கலைக்கழகங்கள் உள்நாட்டில் இலாபமீட்டி
அவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றன.

மூலோபாய திட்டமிடல்

அரகலய போராட்டத்துக்கு பின்னர் தனியார் மருத்துவ நிலையங்களை
விரிவுபடுத்துவதில் அரசாங்கம் மிக நுணுக்கமாக செயற்பட்டது. தற்போதைய
சூழ்நிலையில் அரச பல்கலைக்கழகங்களுக்கு அரசின் நிதியீட்டம் வெகு
குறைவாக வழங்கப்படும் நிலையில் அரச பல்கலைக்கழக நிர்வாகங்கள்
கட்டணம் செலுத்தப்படும் கற்கைநெறிகளை அறிமுகப்படுத்தி தமக்கான
நிதிகளை திரட்டுமாறு கோரப்பட்டிருக்கின்றார்கள். இதன் பின்னர் உருவாகிய
மாணவர் ஒன்றிய ஆர்ப்பாட்டங்கள் சில மருத்துவத்துறை மாணவர்களின்
கைது மற்றும் பெரும்பாலானோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட
அச்சுறுத்தல் மூலம் அடக்கப்பட்டது. அரசின் பரப்புரைகள் தொடர்ச்சியாகவே
போராடி வரும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என்ற
பிம்பத்தை பல்கலைக்கழக சமுதாயத்தின் மீது உருவாக்கி
வைத்திருக்கின்றது. மத்தியதர வர்க்க மக்களின் அரச பல்கலைக்கழகளின்
மீதான உணர்ச்சி மேலீடுகள் கொழும்பு உயர்வர்க்க மக்களின் அரச
பல்கலைக்கழகங்கள் மீதான மட்டம் தட்டும் செயற்பாடு மற்றும் தனியார்
கல்வி நிறுவன‌ங்களை நோக்கிய சாய்வும் அதிகரித்து வ‌ருகின்றன.

தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களின் வருகை அரச
பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் MBBS கற்கைநெறிகளுக்கு பாதகமாக
அமையக்கூடாதென்ற கருத்து பரவலாக காணப்பட்டாலும் அதனை
எட்டுவதற்கான எந்தவொரு இயங்கமைவும் மேற்கொள்ளப்படவில்லை.
SLMCயின் தரச்சான்றுக்கான தரங்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளையும்
அரச மருத்துவ பீடங்களையும் ஒரே தரத்தில் வைத்து நோக்கினாலும் பின்
தங்கிய மாவட்டங்களில் இயங்கும் மருத்துவ பீடங்களை
உறுதிப்படுத்துவதற்கான செயன்முறைகளை எடுப்பதில் அரசாங்கம் கவனம்
எடுப்பதில்லை. இன்றும் கூட சில மருத்துவ பீடங்கள் அவற்றில் காணப்படும்
மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக SLMC தரச்சான்றை
பெறுவதில் சிக்கல்களை முகங்கொடுக்கின்றன. அதிக கட்டணங்களை பெற்று
நடத்தப்படும் மருத்துவ கற்கைகள் அரச மருத்துவ பீடங்களில் காணப்படும் அருமையான வளங்களின் மீது தமது கொடுங்கரங்களை விரிப்பதானது
நிலைமையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியிருக்கின்றது.

இலவசக்கல்வியால் பயன்பெற்ற எமது சமுதாயம் எதிர்கால சந்ததிகளுக்கு
அதனை கடத்துவதில் ஏன் பிரக்ஞையற்று இருக்கின்றது? அரச
பல்கலைக்கழக அமைப்பு முகங்கொடுக்கும் பல சிக்கல்களுக்கு
தனியார்மயப்படுத்துவது தீர்வாகாது. சீர்திருத்தங்கள் தேவை என்பதில் நாம்
ஒருமித்த வகையில் உடன்பட்டாலும் அவை எட்டப்படுவதற்கு ஆலோசனை
செயல்முறை காணப்பட வேண்டும். சில வகுப்புவாத நலன்களையும்
பொருளாதார நலன்களையும் கருதி மேற்கொள்ளப்படும் குறுகிய
நோக்குடைய உடனடி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதைக்
காட்டிலும் நாம் ஏன் ஏற்கனவே நம்மிடம் காணப்படும் அமைப்பை
சீர்திருத்தங்களுடன் உறுதிப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடக்கூடாது?

KDU எனும் இலகுவாக இராணுவத்தை ஈடுபடுத்தக்கூடிய ஒரு அமைப்பை
முதலாவது பரிசோதனையாக தெரிவுசெய்வதென்பது தற்செயலான
நிகழ்வல்ல. நாட்டில் இலவசக்கல்விக்கு எதிராக உருவாகும் பாரிய மக்கள்
போராட்டங்களை விடுத்து ஏனைய எதிர்ப்புகள் அடக்குவதென்பது இலகுவான
காரியமாகும். இவ்வாறான தீர்மானங்கள் மக்கள் ஆணையை இழந்த
ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையொன்று மேற்கொள்ளும் நிலையில்
இதனை மாற்றவேண்டுமென்று கருதுபவர்கள் தமது கருத்துகளை
வெளிப்படுத்துவது தற்போதைய சூழலில் உடனடித்தேவையாக
மாறியிருக்கின்றது.