உயர்கல்வியிலும் ஆய்வுகளிலும் அரச நிதி வழங்கல்

அகிலன் கதிர்காமர்

இலங்கை பொதுக்கல்வி முறைமையின் தனித்தன்மையான பலம் அது பல்கலைக்கழக மட்டம் வரை இலவசமாக காணப்படுவது ஆகும். மேற்குலகம் உட்பட வேறு நாடுகளில் மாணவர் கடன்களின் கனத்த அளவை பார்க்கும்போது எமது இளைஞருக்கு இலவசக் கல்வி எவ்வளவு பெரிய ஆசீர்வாதமாக இருந்துள்ளது என்பது தெரிகிறது. வருத்தமளிக்கும் இன்றைய போக்கை பார்க்கும்போது தனியார் பல்கலைக்கழகங்கள் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்படும்போது தனியார் மயமாக்கலின் வான்கதவுகள் திறந்து விடப்படும்போது பலருக்கு உயர் கல்வி பெற முடியாத நிலை ஏற்படும்; விரிவுரையாளர்கள் தனியார் பல்கலைக்கழகங்களால் போச்சி திருடப்படுவதால் அரச பல்கலைக்கழகங்கள் துரிதமாக பின்னடைவை சந்திக்க நேரிடும். இருப்பினும், பணியாளர் பற்றாக்குறை, உட்கட்டுமான குறைபாடுகள், பொது மக்களுடன் ஈடாடும் ஆய்வுகள் தொடர்பான ஆதரவின்மை என அரச பல்கலைக்கழக முறைமை முகங்கொடுக்கும் சவால்கள் பலவாக இலங்கையில் உள்ளன. இதன் வேரிலுள்ள பிரச்சினை நீண்டகாலமாக கல்வித் தொகுதிக்கு போதுமான நிதி வழங்கப்படாமையே ஆகும்.

கடந்த ஒன்றரை தசாப்தங்களாக இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் (GDP), கல்விக்கான ஒதுக்கீடு 1.5 சதவீதத்துக்கும் 2 சதவீதத்துக்கும் இடையிலேயே இருந்துள்ளது. தெற்காசியாவிலேயே கல்விக்கு குறைந்த வீத நிதி ஒதுக்கீடு செய்யும் நாடாக இலங்கை உள்ளது. தனது கட்சி அறிக்கையிலே அரசாங்கம் இவ் நிதி மட்டத்தை உயர்த்துவதாக கூறியுள்ளது:

“அபிவிருத்தியடைந்த மனித நேய பொறுப்புள்ள ஒரு சமூகத்தை வளர்க்கும் தரமான கல்வியை வழங்க NPP இன் கல்விக் கொள்கை முயல்கின்றது. இவ் இலக்குகளை அடைய கல்வித்துறையில் அரச முதலீட்டை நாம் அதிகரிப்பதோடு, படிப்படியாக மொத்த தேசிய உற்பத்தியில் அதன் பங்கை 6 சதவீதத்துக்கு கொண்டு செல்வோம்.

இவ்வாறு மோசமாக குறைவாகவுள்ள 2 சதவீத நிதியை ஒருகட்டத்தில் 6 சதவீதத்துக்கு கொண்டு செல்வது ஒரு பெரிய சவாலான விடயம். உயர் கல்விக்காக 2026 பாதீட்டிலே ஒதுக்கப்பட்டது GDP இன் வெறும் 0.44 சதவீதம். இருப்பினும், வர்த்தக சமுகம் அரச பல்கலைக்கழகங்களின் நிதிப் பிரச்சினையை தனியார் பல்கலைகழகங்களை பெருக்குவதர்க்கான வாய்ப்பாகவே பார்க்கின்றது. இந்த கட்டுரையிலே, உயர் கல்விக்கான நிதியை அதிகரிப்பது பற்றிய சாத்தியப்பாடுகள் பற்றி கவனம் செலுத்துகிறேன். இதை வேறு வகையில் சொல்லப்போனால், உயர்கல்விக்கானதும் பல்கலைக்கழக ஆய்வுக்குமான நிதியை அதிகரிக்க – GDP இன் 1 சதவீதம் என வைப்போமேன் — அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை நான் இங்கே கூறுகிறேன்.  

வணிகங்களிருந்தான தாக்குதல்

கடந்த ஒரு தசாப்தகாலமாக பல்கலைக்கழகங்களுக்கான நிதி குறைப்புக்கள் வணிக சமூகம் அதனை தாக்குவதோடு வந்துள்ளது. அவர்கள் பல்கலைக்கழகமே வேலையின்மையின் காரணம் என கூறுகிறார்கள். முன்னைய குப்பி கட்டுரைகள் “வேலைக்கமர்த்த முடியாத பட்டதாரிகள்” எனும் கட்டுக்கதையை, முக்கியமாக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் முன்னிறுத்தியபோது, உடைத்திருந்தது. உண்மையான பிரச்சினை பொருளாதாரத்தில் வேலைகள் காணப்படாமையே என நாம் வாதிட்டோம். இது பொருளாதார பிரச்சினையின் காரணத்தில் இன்னும் தீவிரமடைந்த நிலையில் இன்றுள்ளது. வேலைகளை உருவாக்குவது பொருளாதார கொள்கை உருவாக்கத்தின் வேலை, உயர்கல்வித் துறையின் வேலை இல்லை. ஆனால் அரசாங்கங்கள் பொருளாதார வளர்ச்சியையோ வேலைவாய்ப்பு அதிகரிப்பையோ அடைய முடியாத பட்சத்தில் “வேலைக்கமர்த்த முடியாத பட்டதாரிகள்” எனும் சொல்லாடலுக்கு பின் மறைந்து நிற்கின்றன.

இந்தச் சூழலில் எதற்காக வர்த்தகர்களும் அரச பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள் பற்றி அதே கதையை கூற வேண்டும்? இது மூன்று காரணுங்களுக்காக இடம்பெறுகின்றது என நான் வாதிடுவேன்.

முதலாவதாக, வியாபார உந்து சக்திகள் கல்வியை தனியார் மயப்படுத்த விரும்புகிறது. இது அதன் சொந்த வர்க்க நலனுக்காக செய்யும் விடயம். ஏனெனில் இதன் காரணமாக செல்வம் படைத்தோரின் சிறப்புறிமையாக கல்வி மாறிவிடும். சமூக ஏற்றத்தாழ்வுகளை குறைக்க முக்கியமான இலவசக் கல்வியின் பெறுமதியை அவர்கள் மறுக்கிறார்கள்.

இரண்டாவதாக வர்த்தக சமூகத்தின் ஒரு பகுதி கல்வியை வணிக மயப்படுத்தி அதனை ஓர் இலாபமூட்டும் வியாபாரமாக மாற்ற முயல்கிறார்கள். வசதி வாய்ப்பற்ற மாணவர்களின் கல்வியை உறுதிப்படுத்துவதற்குப் பதிலாக பணம் படைத்த வெளிநாட்டு மாணவர்களை கற்பிக்கும் கட்டணம் வாங்கும் பல்கலைக்கழகங்களை இலங்கையில் உருவாக்குவதில் இவர்களுக்கு நாட்டம்.

மூன்றாவதாக வேறு சில நாடுகளை போல் அல்லாது இலங்கையிலுள்ள வர்த்தக சமூகம் தனது தொழிலாளர்களில் முதலீடு செய்வதில்லை. எதோ மாணவர்கள் அதன் உற்பத்திக்கு பயன்படும் கழிவு விலையிலான உள்ளீடுகள் போல் பல்கலைக்கழகங்களை தனது கார்பொரேட் விருப்பங்களுக்கு ஏற்றால் போல் பட்டதாரிகளை வழங்கவேண்டும் என எதிர்பார்க்கிறது. உதாரணமாக ஜப்பானில் வரலாரற்றுரீதியாக கம்பெனிகள் தாம் வேலைக்கமர்த்திய பட்டதாரிகளை பயிற்றுவிப்பதில் முதலீடு செய்து அவர்களுக்கு நிரந்தர வேலை வழங்கியதுண்டு. இதற்க்கு மாறாக இலங்கை வணிகங்கள் பல்கலைக்கழகங்களை அவர்களின் எதிர்கால வேலையாட்களை பயிற்றுவிக்க எதிர்பார்ப்பதோடு பின்னர் எந்த வித முதலீடு, அல்லது அர்ப்பணிப்போ இன்றி அவர்களை வேலைக்கு சேர்ப்பதும் வேலையைவிட்டு தூக்குவதுமாகவுள்ளன.

நிதிகளை பெற்றுக்கொள்ள

இன்னும் கூட ஒருவரால் கேட்க முடியும் எவ்வாறு இலங்கை இலவச உயர் கல்விக்கான நிதியை பெற்றுக்கொள்ளும் என்று. வேறு வலயங்களில் பயன்பாட்டிலுள்ள மூன்று நிதி வளங்கள் மாதிரிகளை நான் இங்கு முன்மொழிகின்றேன். இதற்க்கு அர்த்தம் நான் அவற்றின் கல்வி முறைகளை ஆதரிக்கின்றேன் என ஆகிவிடாது.

உயர்கல்விக்காக மாற்றப்படும் வரி வருமானங்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு விசேட வணிக வரி கொண்டுவரப்பட்ட வேண்டும். உதாரணமாக நைஜீரியா ஒரு நிதி வழங்கல் மாதிரியை கொண்டுள்ளது. கல்வியின் நீண்ட கால பின்னடைவை தீர்க்க 1998 ஆம் ஆண்டு மூன்றாம் நிலை கல்வி அறக்கட்டளை நிதியம் பாராளுமன்றில் ஒரு சட்டமாக அமைக்கப்பட்டது. நைஜீரியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து கம்பெனிகளின் இலாபங்கள் மீதும் இது 2 சதவீத வரியை விதிக்கிறது. இந்த நிதியத்தின் வேலை கற்பித்தலுக்கும் கற்றலுக்குமான பௌதீக உட் கட்டமைப்புமானத்தை, ஆய்வு மற்றும் வெளியீடுகளை, கல்வித் பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் அவர்களின் அபிவிருத்தியை மற்றும் உயர்கல்வியில் தரத்தினை உயர்த்த மற்றும் பேணுவதற்கு கட்டாயமான ஏனைய தேவைகளை வழங்குவதை ஆதரிப்பதாக உள்ளது. 2:1:1 எனும் வீதத்தில் பல்கலைக்கழகங்களுக்கும், பல தொழில் நுண்கலை நிறுவனங்களுக்கும், கல்வியியல் கல்லூரிக்கும் நிதிகள் வழங்கப்படும்.

இரண்டாவதாக, வட ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துச்  செல்லும் வரிமுறைமை மூலம் உயர் கல்விக்கான நிதியை திரட்டுவதை பார்க்கலாம். செல்வங்களின் மேல் வரி விதிப்பது பற்றி நாம் இலங்கையிலே விவாதித்து வருகின்றோம். சொத்துக்கள் வீதியில் திரியும் சொகுசு வாகனங்கள் என அவர்களின் செல்வங்கள் மீது அன்றாட வரி ஒன்றை கொண்டுவர வேண்டிய காலமாக இதுவுள்ளது. அவ்வாறு கிடைக்கப்பெறும் வரியின் ஒரு பகுதியை இலவச உயர்கல்வி முறைமைக்கு ஒதுக்க வேண்டும்.

மூன்றாவதாக, தொடரும் பொருளாதார பிரச்சினைக்கு மத்தியில் எவ்வாறு அவ் வரிகளை விதிப்பது என அரசு சிந்திக்கும் இவ் வேளையில் இலவச உயர் கல்வி பற்றிய தனது அர்ப்பணிப்பை காட்டும் வண்ணம் அரசாங்கத்துக்கு ஒரு உடனடி தெரிவு உண்டு. அதனால் நில மற்றும் பயன்பாட்டில் இல்லாத அரச சொத்துக்களை பொது உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்க முடியும். அமெரிக்காவிலே மோரில் சட்டத்தின் மூலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடு மற்றும் இறுதி பகுதிகளிலே அரசுக்கு சொந்தமான நிலங்களை அரச பல்கலைக்கழகங்களுக்கு நிதியூட்ட ஒதுக்கியது. அவ் நிலங்களை விற்பதன் மூலமும் அவற்றிலுந்து கிடைக்கும் வருமானங்கள் மூலமும் நிதியை பெற முடிந்தது. 1890 ஆம் ஆண்டு வந்த பிந்தைய மோரில் சட்டத்தின் மூலம் ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கு பல்கலைக்கழகங்களையும் கல்லூரிகளையும் அமைக்க முடிந்தது. சுதந்திரத்திற்கு பல தசாப்தங்கள் பின்னரும் இலவசக் கல்வியிலிருந்து விலத்தி வைக்கப்பட்டிருந்த மலையக சமூகத்தினரின் உயர் கல்வி தேவைகளை சந்திப்பதில் இந்த மரபை நாம் முன்னேடியாக பயன்படுத்தலாம்.

ஆய்வும் அபிவிருத்தியும்

ஆய்வுகளில் ஈடுபடுவதில் மூதலீடு இடுவதன் மூலம் அரச பல்கலைக்கழக முறைமையை மீள் கட்டியெழுப்புவது தேசிய அபிவிருத்தியையும் ஆதரிக்கலாம். NPP இன் கட்சி அறிக்கை, ஆய்வு மற்றும் அபிவிருத்தியில் முதலீடு செய்வதற்கு முக்கியத்துவம் வழங்குகிறது:

“இலங்கை அதன் வருடாந்த GDP இன் 0.12 சதவீதம் எனும் மிக மட்டுப்படுத்தப்பட்ட நிதியையே ஆய்வுகளிற்கும் அபிவிருத்திக்கும் ஒதுக்குகிறது. ஆனால் இலங்கையை ஒத்த பூகோள அரசியல் தன்மைகளை கொண்ட நாடுகளான மலேசியா 1 சதவீதத்தையும் தாய் லாந்து 1.2 சதவீதத்தையும் வியட்நாம் 0.42 சதவீதத்தையும் ஒதுக்குகின்றன. இதே வேலை அபிவிருத்தி அடைந்த நாடுகளான தென் கொரியா 4.6 வீதத்தையும் ஜப்பான் 3.6 வீதத்தையும் ஐக்கிய அமெரிக்கா 3.5 வீதத்தையும் சீனா 3 வீதத்தையும் ஒதுக்குகின்றன. இலங்கையில் மேற்கொள்ளப்படும் சிறியளவான ஆய்வுகள் கூட பொருளாதார சமூக அபிவிருத்திக்காக சரியாக பயன்படும் வகையில் பயன்படுத்தப்படவில்லை”.

தேசிய ரீதியில் முக்கியமானவையான பொருளாதார மற்றும் சமுக அபிவிருத்திக்கு ஆய்வுகளை மெற்கொள்வது பங்குபற்றுவதாகவிருந்தால், இந்த ஒப்புக்கொள்ளல் உயர் கல்வியில் அதிகரித்த முதலீட்டோடு வர வேண்டும்.

ஏற்கனவே கற்பித்தல் வேலையின் சுமையோடுள்ள ஆசிரியர்களுக்கு நேரத்தை ஒதுக்கி, சரியான பாதையில், அரச பல்கலைக்கழகங்களின் ஆய்வுகள் மூலமே தேசிய அபிவிருத்திக்கு ஆதரவு செய்யலாம். இன்று ஆய்வு மற்றும் அபிவிருத்தியை பொறுத்தவரையில் அவை கூடுதலாக நவ தாராளவாத நோக்கங்கள் கொண்ட வெளிவாரி நிதி வழங்குணராலும் இலாபமீட்டுவதையே இலக்காகக் கொண்ட தனியாராலுமே அவற்றிக்கு ஆதரவு வழங்கப்படுகிறது.

 பொருளாதாரம் சார் கொள்கை வடிவமைத்தலில் பொது மக்கள் பங்கும் விழிப்புணர்வும் இல்லாததன் விளைவுகள் பாரதூரமாகவுள்ளன. அடுத்தடுத்த அரசங்களின் நவதாராளவாத கொள்கைகளை ஆய்வுகள் கேள்விக்குட்படுத்தவில்லை. மத்திய வாங்கி மோசமான முறையில் வெளிநாட்டு இருப்புக்களை முகாமை செய்ததன் காரணமாக வெளிநாட்டு கடன்களை மீள் செலுத்தலை இடைநிறுத்த வேண்டி வந்துள்ளது. சொல்லப்போனால், இது கடன்களை குறைத்தல் மற்றும் பத்திரதாரர்கள் மையமான கடன் மீள் வடிவமைத்தல் ஒப்பந்தங்களுடன், உழைக்கும் மக்களின் ஓய்வுநிதிகளை குறைத்தல் போன்றவற்றிக்கு இட்டுச்சென்றுள்ளது. இதன் தரகர் வெளித்தோற்றம் பற்றி அமைதியே நிலவுகிறது. இவ் சூழலிலே, எமது அரச பல்கலைக்கழகங்களை வலுப்படுத்துவதும் அவற்றின் ஆய்வுகளில் முதலிடுவதும் முன்னெப்போதையும் விட முக்கியமாகிறது. உயர்கல்விக்கு அரச நிதி வழங்குவதுபற்றிய பரந்து பட்ட அர்ப்பணிப்பும் ஆய்வுகள் மூலம் நாட்டின் பிரயைகளின் பிரச்சினைகள் பற்றி செயல்படுதலும் வெறுமனே தற்போதைய பிரச்சினையிலிருந்து வெளியேறுவதற்கு மாத்திரமல்ல எதிர்கால பிரச்சனைகளை தவிர்க்கவும் முக்கியமாகும்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன