அரச பல்கலைக்கழகங்களுக்கு கல்வியியலாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல் – காலாவதியான தெரிவுசெயல் நடைமுறைகளால் சிக்கலுறும் நிலை?

கௌசல்யா பெரேரா

அரச பல்கலைக்கழகங்களுக்கு கல்விசார் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் செயன்முறைகளில் காலம் பெருமளவில் நின்றுபோயிருப்பது போலத் தோன்றுகின்றது. கல்வித் தகைமைகள் காலப்போக்கில் பெருகியதோடு, பல்துறை மற்றும் இடைநிலைத் துறைகளை உள்ளடக்கிய வடிவங்களாகவும் பரிணமித்துள்ளன. எனினும், அவற்றை மதிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் தெரிவுசெயல் நடைமுறைகளும் மதிப்பீட்டு அளவுகோல்களும் குறைந்தபட்சம் 1990களின் இறுதிக்காலத்திலிருந்து மாற்றமின்றி தொடர்கின்றன. இவ்விடயத்தின் சிக்கல்களை ஆராய்வதற்கு முன்னர், தற்போதைய ஆட்சேர்ப்பு முறைகள் மற்றும் திட்டங்களை சுருக்கமாக விளக்க விரும்புகின்றேன். இக்கலந்துரையாடல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) கட்டுப்பாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களுக்குள் மட்டுப்படுத்தப்படுகின்றது (மருத்துவ மற்றும் பொறியியல் துறைகளுக்கான ஆட்சேர்ப்புகள் இதில் உள்ளடக்கப்படவில்லை). இருப்பினும், இங்கு சுட்டிக்காட்டப்படும் பல பிரச்சினைகள் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தக்கூடியவையாக இருக்கலாம்.

இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் தற்போது ஆட்சேர்ப்பு எவ்வாறு நடைபெறுகின்றது?

இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் கல்விசார் பதவிநிலைகளை மூன்று அடுக்குகளாக வகைப்படுத்தலாம் (உட்பிரிவுகள் இங்கு விவாதிக்கப்படவில்லை).

  • பயில்நிலை விரிவுரையாளர் (Lecturer (Probationary)) – நான்கு வருட இளநிலைப் பட்டத்துடன் ஆட்சேர்ப்பு செய்யப்படுபவர்.
  • அதற்கு சற்று மேல் நிலையாக உறுதிப்படுத்தப்படாத விரிவுரையாளர் (Lecturer (Unconfirmed)) – முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பார்; ஆனால் கற்பித்தல் அனுபவம் இருக்காது.
  • சிரேஷ்ட விரிவுரையாளர் (Senior Lecturer) – குறிப்பிட்ட முதுநிலைத் தகைமைகளும் சில ஆண்டுகள் கற்பித்தல் மற்றும் ஆய்வு அனுபவமும் கொண்டிருப்பார்.

இதற்கு மேல் பேராசிரியர் நிலைகள் (நான்கு வகைகள்) காணப்படுகின்றன. அவற்றில் விண்ணப்பத்தின் அடிப்படையில் நிரப்பப்படுவது தலைமைப் பேராசிரியர் (Chair Professor) பதவி மட்டுமே என்பதால் இக்கலந்துரையாடலில் அவை தவிர்க்கப்படுகின்றன.

அரச பல்கலைக்கழகங்களுக்கு விருப்பமான நேரத்தில் நிரந்தர கல்விசார் பணியாளர்களை நியமிக்கும் சுதந்திரம் கிடையாது. ஒரு வெற்றிடத்தை விளம்பரப்படுத்துவதற்கு முன்னர், பல மாதங்கள் நீளும் சலிப்பூட்டும் மற்றும் நேரத்தை விரயமாக்கும் அனுமதி பெறும் செயன்முறையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. இச்செயன்முறை இறுதியில் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தில் முடிவடைகின்றது. வெளியிடப்படும் விண்ணப்ப அழைப்பில் பயில்நிலை விரிவுரையாளரிலிருந்து சிரேஷ்ட விரிவுரையாளர் வரையான அனைத்து நிலைகளும் குறிப்பிடப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு துறை முனைவர் பட்டம் பெற்ற ஒருவரைத் தேடினாலும், முனைவர் பட்டதாரிகளை மட்டும் அல்லாது அனைத்து நிலைகளுக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களை நேர்முகப் பரீட்சைக்கு அழைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும், மதிப்பீட்டு அளவுகோல்களில் முனைவர் பட்டத்தை விட முதலாம் பட்டத்திற்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது (இவ்விசித்திரமான நிலை குறித்து பின்னர் விரிவாகப் பார்க்கலாம்). இவை அனைத்தும் அரசாங்கங்கள் அடிக்கடி அமுல்படுத்தும் “ஆட்சேர்ப்பு முடக்கம்” (hiring freeze) இல்லாத காலங்களில் மட்டுமே சாத்தியமாகின்றன. இத்தகைய முடக்கநிலைகள் பொதுவாக பல ஆண்டுகள் நீடிப்பதும் வழமையாகும்.

முதலாம் வகைப் பிரச்சினை – காலாவதியான நடைமுறைகளும் மதிப்பீட்டு அளவுகோல்களும்

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், முதலாம் பட்டம் மட்டுமே கொண்ட பயில்நிலை விரிவுரையாளராக நான் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டபோது, அது மிகவும் சாதாரணமான நிலையாக இருந்தது. அந்நேரத்தில் நாங்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பின்னர் சில ஆண்டுகள் பணியாற்றி, அதன் பின் முதுநிலைப் பட்டங்களைப் பெற்றுக்கொள்வோம். குறிப்பாக சம்பளத்துடன் கூடிய கற்கை விடுப்பின் சலுகையைப் பயன்படுத்தி மேற்கு நாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பது விரும்பத்தக்கதாகக் கருதப்பட்டது. அரச பல்கலைக்கழகங்கள் முதன்மையாக இளநிலை மாணவர்களுக்கான கற்பித்தல் நிலையங்களாக இருந்ததோடு, முனைவர் பட்டங்கள் அரிதாகக் காணப்பட்ட காலத்தில் பயில்நிலை விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல் நடைமுறை ரீதியாக பொருத்தமான தீர்வாக இருந்திருக்கலாம். அக்காலத்தில் உயர்கல்வித் தகைமைகளை அடைவதற்கான பாதை கல்விசார் தொழில் மூலமாகவே அமைந்திருந்தது.

இன்றோ நிலைமை மாறியுள்ளது. முதுநிலைத் தகைமைகள் கொண்ட விண்ணப்பதாரர்கள் அதிகரித்துள்ளதோடு, வெளிநாட்டு உயர் கல்வி வாய்ப்புகளை நாடிச் செல்லும் கல்வியியலாளர்களை தக்கவைத்துக்கொள்வதில் பல்கலைக்கழகங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் காரணமாக, முதுநிலைத் தகைமைகளுடன் விண்ணப்பிப்போருக்கான முன்னுரிமை அதிகரித்து வருகின்றது. இருப்பினும், தற்போதைய மதிப்பீட்டு முறைமை விண்ணப்பதாரரின் முதுநிலை அல்லது முனைவர் பட்டங்களை விட அவரின் முதலாம் பட்டத்திற்கே முன்னுரிமை வழங்குகின்றது. உதாரணமாக, மொழிக் கற்பித்தல் மற்றும் கல்வி ஆய்வுத் துறைகளில் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும், எனது முதலாம் பட்டம் கல்வியியல் துறையில் இல்லை என்பதற்காக கல்விப் பீடமொன்றின் நேர்முகப் பரீட்சைக்கே நான் அழைக்கப்படாமல் போகலாம்.

“முதலாம் பட்டமே முதன்மை” என்ற இந்நிலை, ஒருவரின் இருபதுகளின் ஆரம்பக்காலத்திற்குப் பிந்தைய அறிவார்ந்த வளர்ச்சியை பல்கலைக்கழகங்கள் பெரும்பாலும் புறக்கணிக்கின்றன என்பதைக் காட்டுகின்றது. மேலும், கல்வித்துறைகளின் பரந்த பரிமாணங்களையும் அவற்றுக்கிடையேயான இடைநிலைத் தொடர்புகளையும் இது கவனத்தில் கொள்ளவில்லை.

இப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக அல்லாவிட்டாலும் ஓரளவு நிவாரணமாக அமையக்கூடிய எளிய மாற்றமொன்று உண்டு. அதேவேளை இது மூளைசாலிகள் வெளியேற்றத்தை (brain drain) குறைக்க உதவக்கூடும். அதாவது, விண்ணப்பதாரரின் முதலாம் பட்டம் எதுவாக இருந்தாலும், தொடர்புடைய துறையில் பெற்ற முனைவர் பட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இது UGC சுற்றறிக்கையொன்றின் மூலம் அமுல்படுத்தப்படலாம். இப்பரிந்துரை அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வாக அமையாது. எந்த தெரிவுசெயல் முறைமையும், அதன் மதிப்பீட்டு அளவுகோல்கள் எவ்வளவு தெளிவாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், பக்கச்சார்பு உட்பட பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம் என்பதை உணர்ந்த நிலையிலேயே இப்பரிந்துரை முன்வைக்கப்படுகின்றது.

இலங்கையின் ஏனைய நிறுவனங்களைப் போல பல்கலைக்கழகங்களிலும் குழுசார்பு மனப்பான்மைகள் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் தமது சொந்த பழைய மாணவர்களுக்கான விருப்பமாக வெளிப்படுகின்றன. இருப்பினும், இதைவிட அவசரமாக கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் உள்ளன.

மதிப்பீட்டு அளவுகோல்களைப் பொறுத்தவரை, விதிமுறைகள் மிகவும் குறுகிய விளக்கங்களின் அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, ஒரு பட்டத்தின் பொருத்தம் அதன் உள்ளடக்கப்பட்ட பாடங்களின் அடிப்படையில் அல்லாது அதன் தலைப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது. சர்வதேசமயமாக்கல் மற்றும் இடைநிலைத் துறையியல் குறித்து பெரிதும் பேசப்பட்டாலும், தீர்மானங்களை மேற்கொள்ளும் நிர்வாக மற்றும் கல்விசார் அமைப்புகள் விண்ணப்பதாரர்களின் தகைமைகளை மிகவும் சொற்பொருள் ரீதியாகவே அணுகுகின்றன. எடுத்துக்காட்டாக, டிஜிட்டல் அறிவாற்றல் குறித்த அறிவு ஒருவரிடம் இருந்தால் அது அவர் பெற்ற பட்டத்தின் தலைப்பிலேயே பிரதிபலிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

இரண்டாம் வகைப் பிரச்சினை – போதிய ஒழுங்குபடுத்தலற்ற உயர்கல்வியின் சிக்கல்நிலை

இன்றைய உயர்கல்வி விரிவாக்கத்தின் நேரடி விளைவாக பல்வேறு வகையான தகைமைகளைக் கொண்ட விண்ணப்பதாரர்கள் பெருமளவில் உருவாகியுள்ளனர். இவ்வாறு பல்வகைப்பட்ட பட்டப்படிப்புகளைக் கொண்ட விண்ணப்பதாரர்களில் பொருத்தமானவரைத் தெரிவுசெய்வது மிகவும் சவாலானதோடு மிக முக்கியமான பொறுப்பாகவும் உள்ளது. ஏனெனில், அரச துறையில் நிரந்தர பணியாளரை பதவியிலிருந்து நீக்குவது மிகவும் கடினமான ஒன்று; அதாவது இத்தொழில் வாழ்நாள் முழுவதற்குமானதாக அமைகின்றது.

மாறுபட்ட இளநிலைப் பட்டப்படிப்புகள்

தற்போது இலங்கையின் இளநிலைப் பட்டதாரிகள் பல்வேறு வகையான உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து (சில நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட) தகைமைகளை கொண்டு வருகின்றனர். UGC-யுடன் இணைக்கப்பட்ட அரச பல்கலைக்கழகங்கள், UGC-க்கு வெளிப்பட்ட அரச பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகமல்லாத அரச நிறுவனங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அல்லது தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து அவர்கள் பட்டங்களைப் பெற்றிருக்கலாம்.

அவர்கள் இலங்கையிலோ வெளிநாட்டிலோ நேரடியாக வகுப்புகளில் பங்கேற்று பட்டம் பெற்றிருக்கலாம். தனியார் உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலிருந்தோ, அரச பல்கலைக்கழகங்களின் வெளிப்பட்டப் பட்டங்களிலிருந்தோ அல்லது “UGC அங்கீகாரம்” அல்லது “கல்வி அமைச்சின் அங்கீகாரம்” பெற்ற நிகழ்நிலை பட்டங்களிலிருந்தோ தகைமைகளைப் பெற்றிருக்கலாம். இத்தகைய சந்தர்ப்பங்களில் பல்கலைக்கழகச் சூழலில் ஒருபோதும் கற்றிருக்காமலும் இருக்கலாம்.

இத்தகைய பல்வகைமையும் அவற்றுக்கிடையேயான தர வேறுபாடுகளும் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. துரதிருஷ்டவசமாக, தற்போதைய மதிப்பீட்டு திட்டத்தின் கீழ் UGC-யால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பட்டங்களுக்கும் ஒரே அளவிலான புள்ளிகள் வழங்கப்படுகின்றன. அதேபோல், முதலாம் வகுப்பு, சிறப்புத் தேர்ச்சி மற்றும் ஏனைய கல்விசார் அடைவுகளுக்கும், பட்டப்படிப்பின் சிரம நிலை அல்லது அதில் பெறப்பட்ட பயிற்சி, அனுபவம், அறிவாற்றல் வளர்ச்சி போன்றவற்றில் காணப்படும் வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் ஒரே மதிப்பீடே வழங்கப்படுகின்றது.

முதுநிலைத் தகைமைகளைப் பரிசீலிக்கும் போதும் இதேபோன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன; இருப்பினும் அவை ஓரளவு குறைவாக உள்ளன. குறைந்தபட்சம் நான் இயங்கும் கல்வித்துறைகளைப் பொறுத்தவரையில், மேற்கு நாடொன்றின் பல்கலைக்கழகத்தில் நேரடியாக கற்று பெற்ற முதுநிலைப் பட்டம், உள்ளூர் பல்கலைக்கழகங்களில் (பெரும்பாலும் பகுதி நேரக் கற்கையை ஒத்த வார இறுதி அல்லது மாலை வகுப்புகளைக் கொண்டவை) பெற்ற பட்டத்தை விடவும் அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் நிகழ்நிலை பட்டங்களை விடவும் முன்னுரிமைக்குரியதாகும்.

இது உயர்குடி மனப்பான்மையாகத் தோன்றலாம். இருப்பினும், உலகின் சிறந்த உள்ளூர் முதுநிலைப் பட்டப்படிப்புகள் கூட ஆறு மில்லியன் நூல்களுக்கான அணுகல், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அறிஞர்களின் கற்பித்தல் மற்றும் மேற்பார்வை போன்ற அனுபவங்களால் உருவாகும் அறிவார்ந்த வளர்ச்சியை வழங்க முடியாது. ஆனால் ஆட்சேர்ப்புக்கான தற்போதைய மதிப்பீட்டு திட்டங்களில், மிகக் குறைந்த தரமுடைய முதுநிலைப் பட்டத்திற்கும் தேசியப் பல்கலைக்கழகம் சிங்கப்பூர் (NUS), ஹார்வர்ட் அல்லது லெய்டன் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களில் பெற்ற பட்டங்களுக்கும் ஒரே மதிப்பீடே வழங்கப்படுகின்றது.

பிரச்சினை தெளிவாக இருக்கின்றது; ஆனால் தீர்வு என்ன?

அரச பல்கலைக்கழகங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகள் இன்றைய தேவைகளுக்கு ஏற்ப மாற்றமடைய வேண்டியுள்ளது. தரமற்ற விண்ணப்பங்களை நீக்குவதற்கும், மதிப்பீட்டு அளவுகோல்களை நுணுக்கமாகப் பயன்படுத்தக்கூடிய நிறுவன ரீதியான புரிதலை உருவாக்குவதற்கும் ஏற்ற புதிய மதிப்பீட்டு முறைமைகள் எமக்குத் தேவைப்படுகின்றன.

எமது நிறுவனங்களும் நாடும் முன்னேற்றமடைய வேண்டுமாயின் ஆட்சேர்ப்பே அதன் அடிப்படையான கூறாகும். இதனை முன்னிறுத்தி, முன்னர் குப்பி குழுவினரால் வெளியிடப்பட்ட “உயர்கல்வி மறுசீரமைப்பிற்கான பரிசீலனைகள்” என்ற ஆவணத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

  • சிறந்த தகைமைகள் கொண்ட கல்வியியலாளர்களை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் பிணை விதிமுறைகள் (bond regulations) நியாயமான முறையில் திருத்தப்பட வேண்டும்.
  • இடைநிலைத் துறையியல் மற்றும் பல்துறைப் பயிற்சிகளின் தற்கால யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் ஆட்சேர்ப்பு திட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.
  • பல்கலைக்கழக நிர்வாகங்கள் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன