மகேந்திரன் திருவரங்கன்
ஒரு அரசுப் பல்கலைக்கழகம், சமூகத்திற்கான தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அதன் கல்வியாளர்களையே பெரிதும் சார்ந்துள்ளது. கற்பித்தல், கல்விசார் பணியாளர்களின் முதன்மைப் பொறுப்பாக இருந்தாலும், அவர்கள் ஆய்வுப்பணிகளையும் முன்னெடுப்பதோடு, வகுப்பறைக் கற்றலைத் தாண்டி சமூகத்தின் பரந்த பிரச்சினைகள் குறித்த உரையாடல்களில் தாமும் மாணவர்களும் சுதந்திரமாகப் பங்கேற்கக்கூடிய உயிரோட்டமிக்க அறிவியல் வெளியாக பல்கலைக்கழகத்தை நிலைநிறுத்துவதிலும் மையப்பங்கு வகிக்கின்றனர். எனவே, ஒரு பல்கலைக்கழகத்தின் அறிவுசார் பண்பாடும் கல்விசார் நேர்மையும் அதன் கல்வியாளர்கள் தங்கள் பொறுப்புகளை எவ்வாறு நிறைவேற்றுகின்றனர் என்பதிலேயே பெருமளவில் தங்கியிருக்கின்றன. இதனால், கல்விசார் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது பல்கலைக்கழகங்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் அணுக வேண்டிய செயல்முறையாகும். இச்செயல்முறை பொறுப்புணர்வுடனும், வெளிப்படைத்தன்மையுடனும், நம்பகத்தன்மையுடனும், பல கட்டங்களைக் கொண்ட நியாயமான மற்றும் விரிவான மதிப்பீட்டு முறையினூடாக முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.
ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பதாரராகவும், தெரிவுக்குழுக்களில் உறுப்பினராகவும் இருந்த அனுபவத்தின் அடிப்படையில், தற்போதைய பல்கலைக்கழக அமைப்பில் நடைமுறையில் உள்ள கல்விசார் ஆட்சேர்ப்பு முறைமைகள் ஆழமான சீர்திருத்தங்களை வேண்டி நிற்கின்றன என்பது என் நிலைப்பாடாகும். 2026 மார்ச் மாதத்தில் கௌசல்யா பெரேரா தனது குப்பி கட்டுரையில் முன்வைத்த சில கருத்துகளைத் தொடர்ந்தே, குறிப்பாக விரிவுரையாளர் (பயிற்சிக்காலம்) மற்றும் மூத்த விரிவுரையாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புகளில் நான் நேரடியாகக் கண்டும் அனுபவித்தும் உள்ள குறைபாடுகளை இக்கட்டுரை ஆராய்கிறது. அதேவேளை, இக்குறைபாடுகளை எவ்வாறு சரிசெய்யலாம் என்பதற்கான சில வழிகளையும் இது முன்வைக்கிறது.
வேலைவாய்ப்பு அறிவித்தல்
விரிவுரையாளர் (பயிற்சிக்காலம்) மற்றும் மூத்த விரிவுரையாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு, திறந்த வேலைவாய்ப்பு அறிவித்தலின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. குறுந்தேர்வில் இடம்பெறும் விண்ணப்பதாரர்கள் பின்னர் நேர்முகத் தேர்விற்கும் அழைக்கப்படுகின்றனர். இவ்வறிவித்தல்கள் பதிவாளர் அலுவலகம் வழங்கும் மாதிரிப்படிவத்தின் (template) அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன. பொதுவாக, பதிவாளர் அலுவலகம் தயாரிக்கும் ஆரம்ப வரைவு, சம்பந்தப்பட்ட கல்வித்துறைகளுக்கு திருத்தங்களுக்காக அனுப்பப்படுகிறது. எனினும், வழங்கப்பட்ட மாதிரிப்படிவத்தில் நிபுணத்துவத் தேவைகளை மட்டும் குறிப்பிடக்கூடிய வரம்பே இருப்பதால், துறைகள் செய்யக்கூடிய திருத்தங்களும் அதற்குள் மட்டுப்படுத்தப்படுகின்றன.
துறைத் தலைவர் பரிந்துரைக்கும் அனைத்து திருத்தங்களும் இறுதி அறிவித்தலில் இடம்பெறுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பல சந்தர்ப்பங்களில், அந்தப் பதவி சார்ந்த கல்வித்துறையைப் பற்றிய போதிய புரிதல் இல்லாத பீடாதிபதிகள், துணைவேந்தர்கள் அல்லது பதிவாளர்கள் துறையினால் முன்வைக்கப்படும் மாற்றங்களை நிராகரிக்கின்றனர். தொழில்நுட்ப நிர்வாகக் கண்ணோட்டத்தால் வழிநடத்தப்படும் அவர்கள், ஒரு கல்விநிரல் அதனுடன் தொடர்புடைய வேறொரு துறையில் நிபுணத்துவம் பெற்றவராலும் கற்பிக்கப்பட முடியும் என்பதைக் கருத்தில் கொள்வதில்லை.
உதாரணமாக, இலங்கையில் ஆங்கிலப் பாடத்துறைக்கான ஒரு பதவிக்கு இலக்கியக் கற்கையில் முதுநிலைத் தகுதி பெற்றவர்களே மட்டுமல்லாது, பயன்பாட்டு மொழியியல் (Applied Linguistics), பண்பாட்டுக் கற்கைகள் (Cultural Studies) அல்லது மொழிபெயர்ப்புக் கற்கைகள் (Translation Studies) போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களும் மிகவும் பொருத்தமானவர்களாக இருக்கலாம். ஏனெனில், இத்துறைகள் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஆங்கிலக் கற்கையின் உட்பிரிவுகளாகவே கற்பிக்கப்படுகின்றன. இருப்பினும், இவ்வாறான துறைமாறிய ஒற்றுமைகள் துறைத் தலைவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன.
கல்வி நிர்வாகிகளும் பதிவாளர்களும் ஆதிக்கம் செலுத்தும் தற்போதைய நடைமுறைக்குப் பதிலாக, வேலைவாய்ப்பு அறிவித்தல் சம்பந்தப்பட்ட கல்வித்துறையினாலேயே விரிவான பணிவருணனை (Job Description) வடிவில் உருவாக்கப்பட வேண்டும். அதில் அறிவிக்கப்பட்டுள்ள பதவியின் தன்மை, எதிர்பார்க்கப்படும் கற்பித்தல் மற்றும் ஆய்வுப் பொறுப்புகள், துறையில் ஏற்கனவே உள்ள பதவிகளுடனான அதன் தொடர்பு—குறிப்பாக நிபுணத்துவத் தேவைகள் மற்றும் பணிச்சுமை அடிப்படையில்—மேலும் நியமிக்கப்படவுள்ள கல்வியாளர் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது, என்பன தெளிவாக இடம்பெற வேண்டும்.
கல்விசார் ஆட்சேர்ப்பிற்கு எல்லா துறைகளுக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறையைப் பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு கல்வித்துறையும் அதன் அளவு, மனிதவளம் மற்றும் நிபுணத்துவத் தேவைகளில் வேறுபடுகின்றது. போதுமான அளவு கல்வியாளர்களைக் கொண்ட துறைகள் குறிப்பிட்ட நிபுணத்துவத்துக்கு முன்னுரிமை அளிக்க விரும்பலாம். மாறாக, சிறிய துறைகள் பல்வேறு பாடங்களை கற்பிக்கக்கூடிய பரந்த அறிவும் திறனும் கொண்ட கல்வியாளர்களையே விரும்பக்கூடும். எனவே, பணிவருணனையில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு தகுதி மற்றும் தேவைக்கும் பின்னுள்ள காரணங்களைத் தெளிவாக விளக்குவது, விண்ணப்பதாரர்கள் அந்தப் பதவியின் உண்மையான தேவைகளைப் புரிந்துகொள்ளவும், தெரிவுக்குழுக்கள் நியாயமான மற்றும் வெளிப்படையான மதிப்பீட்டு முறையைப் பின்பற்றவும் உதவியாக அமையும்.
விண்ணப்பங்களின் மதிப்பாய்வு
விண்ணப்பங்கள் கிடைத்த பிறகு, சில நேரங்களில் மிகவும் நம்பிக்கையூட்டும் விண்ணப்பதாரர்களை நாம் காண்கிறோம். ஆனால், அவர்கள் பெற்றுள்ள கல்வித் தகுதிகளின் பெயர்களில், வேலைவாய்ப்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள துறை அல்லது பாடப்பிரிவின் பெயர் இடம்பெறாமல் இருக்கலாம். மேலும், வேலைவாய்ப்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபுணத்துவத் துறையும் விண்ணப்பதாரரின் கல்வித் தகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள துறையும் பெயரளவில் ஒன்றுக்கொன்று பொருந்தாமல் இருக்கலாம். இருப்பினும், அவர்கள் பட்டமேற்படிப்புக் காலத்தில் மேற்கொண்ட ஆய்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள பதவியுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையதாக இருக்கக்கூடும்.
இவ்வாறான விண்ணப்பங்களுடன் உயர்தரமான, பொருத்தமான ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் வெளியீடுகள் இணைக்கப்பட்டிருந்தாலும், எமது பல்கலைக்கழக அமைப்பு அவற்றை நேர்மறையாக அணுகுவதில்லை. மாறாக, துறைப் பெயர்களிலுள்ள வேறுபாடுகள் மட்டுமே திறமையான விண்ணப்பதாரர்களை நிராகரிப்பதற்கான காரணமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில், ஒரு விண்ணப்பதாரரை அவரது பண்பாட்டு பின்னணி, அரசியல் நிலைப்பாடு அல்லது வேறு காரணங்களால் விலக்க விரும்பும் பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு இத்தகைய பெயரியல் வேறுபாடுகள் ஒரு வசதியான சாக்குப்போக்காகவும் அமைகின்றன.
சம்பந்தப்பட்ட கல்வித்துறைகள் இத்தகைய விண்ணப்பங்களின் பெறுமதியை உணர்ந்து அவற்றை ஏற்றுக்கொண்டாலும், அடுத்த கட்டத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் அவற்றை நிராகரிக்க முயல்கிறது. இதன் விளைவாக, பல துறைகளின் அறிவையும் ஒருங்கிணைத்து ஆய்வு செய்யும் உயர்தர இடைத் துறைக் கல்வியாளர்களை, நிர்வாகத்தின் தன்னிச்சையான தலையீடுகளால் நாம் இழந்து வருகிறோம்.
தெரிவுக்குழுக்கள்
கல்விசார் பதவிகளுக்கான தெரிவுக்குழுக்கள் பொதுவாக துணைவேந்தர், பீடாதிபதி, துறைத் தலைவர், பல்கலைக்கழகப் பேரவையால் (Senate) நியமிக்கப்படும் இரு கல்வியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மன்றத்தின் (Council) இரு உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்டிருக்கும்.
ஒரே கல்வித்துறையின் கீழ் பல பாடப்பிரிவுகள் அல்லது கற்கைநெறிகள் இயங்கும் சந்தர்ப்பங்களில், துறைத் தலைவர் அறிவிக்கப்பட்டுள்ள பதவியுடன் தொடர்பற்ற வேறு பாடப்பிரிவைச் சேர்ந்தவராக இருந்தால், ஆட்சேர்ப்புச் செயல்முறையில் அறிவார்ந்த பங்களிப்பை வழங்க முடியாமல் போகலாம். இருப்பினும், சில துறைத் தலைவர்கள், தெரிவுக்குழுவில் அமர்வது தமக்கே உரித்தான அதிகாரம் என்ற எண்ணத்தால், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவைச் சேர்ந்த வேறு கல்வியாளரை தமக்குப் பதிலாக நியமிக்க மறுக்கின்றனர்.
சில நேரங்களில், பல்கலைக்கழகப் பேரவைகளும் தங்களது பிரதிநிதிகளை நியமிக்கும் பொறுப்பை போதிய தீவிரத்துடன் அணுகுவதில்லை. பல்வேறு நிகழ்ச்சி நிரல்களால் நிரம்பிய பேரவைக் கூட்டங்களில், இந்நியமனங்கள் போதுமான விவாதமின்றி அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றன. சம்பந்தப்பட்ட கல்வித்துறையிலேயே தகுதியான கல்வியாளர்கள் இருந்தபோதிலும், அந்தப் பதவியின் தேவைகளையும் அதனுடைய பாடத்துறைச் சிறப்பியல்புகளையும் ஆழமாகப் புரிந்துகொள்ளாத வேறு துறைகள் அல்லது வேறு பாடப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களையே பேரவை சில சமயங்களில் தெரிவுசெய்கிறது.
சில பல்கலைக்கழகங்களில், தொடர்புடைய பாடப்பிரிவில் நிபுணர்கள் இல்லாத சூழ்நிலைகளும் இருக்கலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில், பிற பல்கலைக்கழகங்களிலிருந்து வெளிப்புற நிபுணர்களை அழைப்பதற்குப் பதிலாக, வேறு பாடப்பிரிவுகளைச் சேர்ந்த கல்வியாளர்களைக் கொண்டு தெரிவுக்குழுவை நிரப்புவதையே பேரவைகள் வழக்கமாகக் கொண்டுள்ளன.
இலங்கையிலுள்ள ஒரு அரசுப் பல்கலைக்கழகத்தில், தொடர்புடைய பாடத்துறையைச் சேர்ந்த ஒரே ஒரு நிபுணர்கூட இல்லாத தெரிவுக்குழுக்களின் முன்னிலையில், கல்விசார் பதவிகளுக்காக நான் மூன்று முறை நேர்முகத் தேர்வில் பங்கேற்ற அனுபவம் எனக்குள்ளது.
மதிப்பெண் வழங்கும் முறை
கல்விசார் ஆட்சேர்ப்பில் பயன்படுத்தப்படும் மதிப்பெண் வழங்கும் முறைகளும் பல குறைபாடுகளைக் கொண்டுள்ளன. ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் வெளியீடுகள் பல சந்தர்ப்பங்களில் அவற்றின் தரத்தின் அடிப்படையில் அல்லாது, எண்ணிக்கையின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன. ஒரு விண்ணப்பதாரரின் ஆய்வுப் பணிகளை மதிப்பீடு செய்யும் போது, சம்பந்தப்பட்ட பாடத்துறையின் நிபுணரின் கருத்து போதிய அளவில் கோரப்படுவதுமில்லை; கோரப்பட்டாலும் அதற்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுவதுமில்லை.
இதன் விளைவாகவே, கருத்துத் திருட்டிலும் (Plagiarism) தரமற்ற அல்லது சுரண்டல் நோக்குடைய ஆய்விதழ்களில் (Predatory Journals) வெளியீடுகளை மேற்கொள்கின்ற கல்வியாளர்களைக் கொண்ட அமைப்பாக எமது பல்கலைக்கழகங்கள் மாறிவருகின்றன. எனவே, கல்விசார் நேர்மையற்றவர்களின் நுழைவைத் தடுக்கும் வகையில் மதிப்பீட்டு முறை மேலும் கடுமையாக்கப்பட வேண்டும்.
இளங்கலைப் பட்டப்படிப்பில் முதலாம் வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்பு மேல்பிரிவு பெறாத காரணத்தால் மட்டுமே, பின்னர் பட்டமேற்படிப்புகளில் சிறந்து விளங்கி, அண்மைக் காலங்களில் உயர்தரமான ஆய்வுகளையும் குறிப்பிடத்தக்க வெளியீடுகளையும் வழங்கியுள்ள விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் வழங்கும் முறைகளாலும் ஆட்சேர்ப்பு விதிமுறைகளாலும் தண்டிக்கப்படுவது கவலைக்குரியதாகும்.
ஒரு விண்ணப்பதாரரின் முதல் பட்டத்தின் மீதான எமது மிகையான கவனம், காலப்போக்கில் அவர் வளர்த்துக்கொண்ட அறிவுச் செழுமை, ஆய்வுத் திறன் மற்றும் கல்விசார் முதிர்ச்சிக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதைத் தடுக்கிறது.
மேலும், நேர்முகத் தேர்வின் போது கண் தொடர்பைப் பேணுதல், உடல்நிலை அல்லது தோற்றப்பாங்கு போன்ற அம்சங்களுக்கு மதிப்பெண்களை ஒதுக்கும் சில மதிப்பீட்டு அளவுகோல்கள், கல்விசார் பதவிகளுக்குரிய கண்ணியத்தையும் அறிவுசார் முக்கியத்துவத்தையும் மங்கச்செய்கின்றன. அவை கல்வியறிவையும் ஆய்வுத் திறனையும் பின்தள்ளி, நேர்முகத் தேர்வை அறிவார்ந்த மதிப்பீட்டிற்குப் பதிலாக மேடை நிகழ்ச்சியை ஒத்த செயல்முறையாக மாற்றுகின்றன.
கலாசார நம்பகத்தன்மை
கல்வியாளர் ஆட்சேர்ப்பில், பல பல்கலைக்கழகங்கள் “கலாசார நம்பகத்தன்மை” (cultural credibility) என்பதைக்—இச்சொல்லை சுலக்ஸனா ஹிப்பிஸ்லியின் (Sulaxana Hippisley) ஆய்விலிருந்து நான் கடனாகப் பெறுகிறேன்—எழுதப்படாத தகுதி நிபந்தனையாகக் கருதுகின்றன. சில துறைகள், தமது பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் அல்லாத விண்ணப்பதாரர்களை நியமிக்கத் தயங்குகின்றன. சில தெரிவுக்குழுக்கள் குறிப்பிட்ட இன அல்லது சமயப் பின்னணியைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுகின்றன.
சில துறைகளில், பெண்கள் மகப்பேறு விடுப்பு பெற வேண்டியிருக்கும் அல்லது ஆண்களை விட அதிக குடும்பப் பொறுப்புகளை ஏற்க நேரிடும் என்ற முன்னறிவுகூறுகளின் அடிப்படையில் நிராகரிக்கப்படுகின்றனர். அதேபோன்று, பாலின மற்றும் பாலியல் சிறுபான்மையினரைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், நேர்முகத் தேர்வுகளில் தங்களது அடையாளத்தை வெளிப்படையாகக் கூறுவதற்கு அஞ்சுகின்றனர். ஏனெனில், அவர்கள் தங்களது பாலியல் நோக்குநிலை அல்லது பாலின அடையாளத்தை வெளிப்படுத்தினால் நிராகரிக்கப்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. பல்வகைமையை ஒரு வலிமையாகக் கருதி, அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சேர்ப்பு நடைமுறைகளை உறுதிப்படுத்தும் கொள்கைகளோ நடைமுறைகளோ தற்போது எம்மிடம் இல்லை.
முன்னோக்கிய பாதை
கல்வியாளர் ஆட்சேர்ப்பில் ஏற்படும் தோல்வி, அந்தப் பல்கலைக்கழகத்தின் முழுமையான அறிவுசார் பண்பாட்டையே பாதிக்கிறது; அதன் விளைவுகளை மாணவர்களின் பல தலைமுறைகள் அனுபவிக்க நேரிடுகிறது. இன்று உயர்கல்வி அமைப்பில் காணப்படும் தரச்சிக்கல்களில் பல, குறைபாடுள்ள ஆட்சேர்ப்பு கொள்கைகளும் நடைமுறைகளும் காரணமாக உருவாகியுள்ளன.
இந்தப் பிரச்சினைகளை கடுமையான, நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சேர்ப்பு முறைகளின் மூலம் தீர்க்க முயல்வதற்குப் பதிலாக, தரஉறுதிப்படுத்தல் (Quality Assurance), பாடத்திட்ட வடிவமைப்பு மற்றும் கற்பித்தல் தொடர்பான பயிற்சிப் பட்டறைகள் போன்ற தற்காலிகத் தீர்வுகளை நாடுகின்றோம்.
மாற்று ஆட்சேர்ப்பு கொள்கைகளையும் நடைமுறைகளையும் உருவாக்கும் போது, ஒவ்வொரு கல்வித் துறையின் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் உரிய முறையில் கேட்கப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்த வேண்டும். தெரிவுக்குழுக்களில் நிர்வாகிகளையும் பல்கலைக்கழக மன்றப் பிரதிநிதிகளையும் விட, சம்பந்தப்பட்ட பாடத்துறையின் நிபுணர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் மதிப்பீட்டின் பெரும்பகுதி நேர்முகத் தேர்வுக்கு முன்னரே நிறைவுசெய்யப்பட வேண்டும். நேர்முகத் தேர்வு என்பது முழுமையான மதிப்பீட்டிற்கான மேடையாக அல்ல; மாறாக, விண்ணப்பதாரரை நேரில் அறிந்து கொள்ளவும், தேவையான விளக்கக் கேள்விகளை எழுப்பவும் பயன்படும் வாய்ப்பாகக் கருதப்பட வேண்டும்.
புதிய துறைகளிடையேயான (interdisciplinary) ஆய்வுகளுக்கும், கலாசார, இன மற்றும் பாலினப் பல்வகைமைகளுக்கும் நாம் திறந்த மனப்பான்மையுடன் அணுக வேண்டும். எமது ஆட்சேர்ப்பு நடைமுறைகளையும் மதிப்பீட்டு அளவுகோல்களையும் விமர்சன ரீதியாக மறுபரிசீலனை செய்து தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள நாம் தயங்கினால், தகுதியற்றவர்களையே தொடர்ந்து ஆட்சேர்ப்பு செய்வோம்; அதன் மூலம் எமது மாணவர்களையும், இறுதியில் சமூகத்தையும் நாம் தோல்வியுறச் செய்வோம்.



