உயர் கல்வியில் “தரம்”

கெளஷல்யா பெரேரா

எமது பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள் மீதான பிரதான முறைப்பாடு அவர்களது “வேலைக்கமர்த்த முடியாத தன்மை” ஆகவுள்ளது. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களும் உலக வங்கியும் வேலையின்மையைக் குறைந்த ஆங்கில மற்றும் தகவல் தொழில்நுட்பப் புலமைக்குச் சமானப்படுத்தியுள்ளன. இவ்வாறான பலவீனங்களுக்கான காரணம் கல்வி மீதான அரச முதலீட்டின் பற்றாக்குறை எனப் பலர் சுட்டிக்காட்டுகின்றனர். எமது அரசாங்கமோ “வேலைக்கமர்த்தக் கூடிய” ஒரு பட்டதாரி அரச நிதியாலன்றி 2003 இலிருந்து உலக வங்கி மூலம் பெறப்படும் சுமார் 180 மில்லியன் USD பெறுமதியான கடன் மூலமே உருவாக்கப்பட வேண்டும் எனக் கருதுகிறது.

படித்த ஒரு இளம் நபரை வேலைக்கமர்த்த முடியாதிருப்பது ஏன்? வேலை ஒன்றைப் பெறுவதற்கான போதிய அறிவோ திறன்களோ அவரிடம் இல்லாதிருக்கலாம். எனினும் ஒருவரை வேலைக்கமர்த்த முன் அதற்கான வேலைவாய்ப்புக்கள் இருக்க வேண்டுமல்லவா? இவ் வேலை வாய்ப்புக்களோ எமது நாட்டில் பற்றாக்குறையாகவுள்ளன. அரசாங்கங்கள் இதற்குத் தீர்வாகப் பெருவாரியான இளைஞர்களை அரச துறைக்குள் உள்வாங்கிக் கொண்டு, பல்கலைக்கழகங்களை மாறுமாறு உத்தரவிடுகின்றன. வேலைவாய்ப்பைப் பொறுத்தவரையில் ஒரு தரிசு நிலமாகவே எமது நாடு காணப்படுவதன் விளைவாக வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள மக்கள் தகுதியையன்றி உறவினர்கள், நண்பர்கள் போன்ற தொடர்புகளால் கிடைக்கும் சலுகைகளை நாடுகிறார்கள்.

தரத்தை அளவிடுதல்

1978 இன் பல்கலைக்கழகங்கள் சட்ட இல.16 இற்கேற்ப பல்கலைக்கழகங்களை ஆராய்வதற்கும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு (UGC) சகல அதிகாரமும் உண்டு (பகுதி 3). இருப்பினும் 2003 இல் ” இளங்கலைப் பட்டப் படிப்பின் தரத்தையும் பொருந்துமையையும் மேம்படுத்தல்” என்ற தலைப்பில் உலக வங்கியின் பல்கலைக்கழகங்களுக்கான முதலாவது கடன் தொடர் வரிசையானது புதிய தர உறுதிப்படுத்தல் நடைமுறையொன்றை முன்வைத்தது. இந்த நடைமுறையானது எமது பட்டதாரிகளின் முதலாளிமாருக்கான கவர்ச்சித்தன்மையை அதிகரிப்பதன் மூலம் அவர்களது தரத்தை மேம்படுத்த உறுதியளித்தது.

இப் புதிய நடைமுறை “இலங்கை தகுதிகள் கட்டமைப்பின்” ஊடாக உயர் கல்வியைத் தரப்படுத்த முனைகின்றது. பட்டப்படிப்புகள் மற்றும் டிப்ளோமாக்கள் போன்ற கற்கை நெறிகளுக்கான அதிகுறைந்த தகைமைகள் மற்றும் ஏனைய தேவைகளை இக்கட்டமைப்பு முன்வைக்கின்றது. இந்தக் கட்டமைப்பு பிரித்தானிய முறையை ஒத்ததாகும். இங்கு குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் ஐக்கிய இராச்சியத்திலும் பட்டதாரிகளின் வேலைக்கமர்த்தக் கூடிய தன்மை தொடர்பாக எமது நாட்டை ஒத்த வாதங்கள் இடம்பெறுவதுடன் அவர்களது தர உறுதிப்படுத்தல் கட்டமைப்பானது அதற்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கல்வி நிறுவனங்களையும் கற்கை நெறிகளையும் “சிறந்த நடைமுறைகள்” மற்றும் “தர நிலைகளோடு” அவ்வப்போது மதிப்பாய்விடுவதன் மூலம் தரமானது பேணப்படும்.

உயர்கல்வியின் தரத்தை மதிப்பிடுவது இன்றியமையாததாக இருப்பினும் அதனை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதான விடயமல்ல. உதாரணமாக வாழ்க்கைக்கான தொலைநோக்கு, தர்க்கரீதியான சிந்தனை, சிக்கல்களைத் தீர்க்கும் தன்மை போன்றவற்றின் அடிப்படையில் ஒரு நான்கு வருடப் பட்டப் படிப்பை எவ்வாறு மதிப்பிடுவது? மதிப்பிடலுக்காக அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் ஒரே விதமான அளவுகோல்கள் பொருந்துமா? என்ற கேள்விகள் எழுகின்றன. உயர்கல்வியின் தரத்தை அளவைக்குட்படுத்த முனைகின்றமை அதனை ஒருங்கே பெருநிறுவனமயமாக்குவதோடு இவ்வாறான நெருக்கடி இலங்கைக்கு மட்டும் தனித்துவமாக இருந்துவிடவில்லை. பல்கலைக்கழகங்கள் வியாபாரக் கம்பனிகள் போல் பெருநிறுவனத் திட்டங்கள், வருடாந்த முன்னேற்ற அறிக்கைகள், நிறுவன மதிப்பாய்வுகள், தணிக்கைக்கான இடம் மற்றும் நிதி போன்றவற்றைப் பேணுமாறு எதிர்பார்க்கப்படுகின்றன. இவ்வாறான பொதுவான அளவுகோல்களைக் கொண்டு அறிவுசார் மேம்பாட்டை அளவிட முனைவது இலகுவானதல்ல.

அளவைகளை அடிப்படையாகக் கொண்ட, தணிக்கை முறைசார் அளவுகோல்களைக் கல்வியின் மீது பயன்படுத்துவதன் சிக்கல்கள் பற்றி உலகம் பூராகவும் பல நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். சமூகத்தில் பொறுப்பான தனி நபர்களையும் அக்கறையுடைய, அரசியல் ரீதியில் ஈடுபாடுடைய மக்களையும் உருவாக்குவதில் உயர் கல்வியின் பங்களிப்பைப் புறக்கணிப்பதன் பாரதூரமான பின்விளைவுகளை அவர்கள் வலியுறுத்துகிறார்கள். இதற்கெதிரான முக்கிய சாட்சி 2020 இன் “ஐக்கிய இராச்சியத்தின் உயர் கல்விக்கான சிரேஷ்ட மேலாண்மை மதிப்பாய்வு: மேலாளர் நிர்வாகத்துக்கெதிரான புள்ளிவிபரவியல் மறுமொழி” என்ற வெளியீட்டில் முன்வைக்கப்பட்டது (எரிக்ஸன், ஹனா, வாக்கர்). சுமார் 6000 கல்விசார் ஊழியர்களை மதிப்பிட்டதில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தகாலமாகப் பல்கலைக்கழகங்களில் பெருநிறுவனமயமாக்கப்பட்ட நடவடிக்கைகள் கொடூரமான ஒரு அளவிடை முறையை உருவாக்கியுள்ளன என அங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது. மேலும் உயர்தரமான கற்பித்தல் மற்றும் ஆய்வுகளுக்குத் தடங்கலான அளவுக்கதிகமான வேலைப்பழு, கல்வி நடவடிக்கைகளில் கேள்விகள் எழுப்ப முடியாத அமைதிக் கலாசாரம், நிறுவன நிதிகளைத் தேவையற்ற திட்டங்களில் செலவிடும் உயர் நிர்வாகம், மற்றும் குறிப்பிடத்தக்க அளவு உளரீதியான பிரச்சினைகள் எனப் பல்வேறு சிக்கல்கள் இத்துறையில் காணப்படுகின்றன. இவ்வாறான ஒரு கட்டமைப்பைப் பின்பற்றும் எமது நாடும் இவ்வாய்வின் பெறுபேறுகளைக் கருத்தில் கொள்வது நல்லது.

தரம் தொடர்பான கலந்துரையாடலில் உள்ளடங்காதோர்

UGC இன் கீழுள்ள அரச பல்கலைக்கழகங்கள் மீதான அதீத கவனத்தால் நாட்டின் ஏனைய உயர் கல்வி நிலையங்கள் தர நிர்ணயத்திலிருந்து இலகுவாக விடுபடுகின்றன. இவ்வாறு வேறாக இயங்குவது பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் மட்டும் அல்ல. பெளத்த மற்றும் பாளி பல்கலைக்கழகம், இலங்கைப் பிக்குப் பல்கலைக்கழகம் ஆகிய இரு பெளத்த பல்கலைகழகங்கள் கல்வி அமைச்சின் கீழ் இயங்குவதோடு, தொழில் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகள் அமைச்சின் கீழ் தொழிற்பயிற்சித் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் இயங்கி வருகின்றது. கம்பனிகளாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் “தனியார் பல்கலைக்கழகங்கள்” வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கான வெளிப் பட்டங்களை வழங்குகின்றன. வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றினால் தீர்மானிக்கப்பட்ட பாடத்திட்டத்தை இவை இலங்கை மாணவர்களுக்குக் கற்பித்த போதும், உள்நாட்டில் இயங்கும் நிறுவனத்திற்கு இலங்கையில் இவ்வாறான பட்டங்களை வழங்குவதை நியாயப்படுத்துவதற்கான தேவை இல்லாதுள்ளது. இவ்வாறான பல்கலைக்கழகங்கள் எவையும் வெளியகக் கல்வி மதிப்பாய்வுகளுக்கோ, விரிவுரையாளர்கள், பாடத்திட்டம், கல்விமுறையின் தரம் மற்றும் குறைந்தளவு ஆய்வுகளில் ஈடுபடுவது தொடர்பான கேள்விகளுக்கோ உட்படுத்தப்படுவதில்லை.

மாற்றத்துக்கான தேவை

எமக்கு இங்கு தேவையாக இருப்பது உயர் கல்விக்கான ஒரு ஒருங்கிணைந்த தூரநோக்குடைய திட்டமாகும். இவ்வாறான திட்டமொன்று நாட்டின் நிதி ரீதியான மேம்பாட்டை மட்டுமல்லாது மக்களின் உணர்வு மற்றும் அறிவுசார் மேம்பாட்டையும் உள்ளடக்கியிருக்கும். இதில் முதன்மையான விடயமாக இருப்பது உயர் கல்விக்காக மேலும் நிதி ஒதுக்குதல் என்பதில் ஐயமில்லை. பட்டம் வழங்கும் அனைத்து நிறுவனங்களும் UGC இன் மைய அதிகாரத்தின் கீழ் இயங்கவோ அல்லது குறைந்த பட்சம் அதனால் இடையிடையே மதிப்பாய்வுக்குட்படுத்தப்படவோ வேண்டும். தரத்துக்கான மதிப்பீடுகளை அளவைகளைக் கொண்டு செய்ய முடியாது. ஏற்கனவே உள்ள தர உறுதிப்படுத்தல் நடைமுறைகள் அவற்றின் வெறும் படிவம் நிரப்பும், ஆவணம் பேணும் முறையிலிருந்து வெளிவந்து முழுமையான ஒரு தரத்தால் தரத்தை மதிப்பிடும் கட்டமைப்பிற்கு மாறவேண்டும். பொதுமக்கள் மத்தியிலான கலந்துரையாடல்களும் அவற்றின் எளிமையான வேலைக்காகக் கல்வி என்ற கருத்தை விடுத்து “கற்றறிந்தவர்” என்றால் யார் என்பது பற்றியும் அவ்வாறான ஒரு நபரை உருவாக்கப் பல்கலைக்கழகங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது நோக்கியும் திரும்ப வேண்டும். பொதுவாகக் கல்வியின், குறிப்பாகப் பல்கலைக்கழகக் கல்வியின் முக்கிய குறிக்கோளானது வெறும் வேலைகளையும் அதற்கான ஆற்றல்களையும் இணைப்பதாக இருக்கும் தன்மை மாற வேண்டும்.

(கலாநிதி கெளஷல்யா பெரேரா கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பிரிவில் விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார்)

குப்பி“, ஏற்றுக் கொள்ளப்பட்ட அதிகாரங்களைக் கேள்வி கேட்கும் அதே சமயம், அவ்வதிகாரப் படி நிலைகளை மீள உறுதிப்படுத்தும், விரிவுரை மண்டபங்களின் ஓரங்களில் இடம்பெறும் ஒரு அரசியலும் ஒரு புதிய கல்விக் கலாசாரமுமாகும். மொழிபெயர்ப்பு: கோபிகா சிவகுமார்

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன