இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பெண்ணியக் கல்வி
அண்மையில் இங்கிலாந்தின் ஹல் பல்கலைக்கழக்த்தின் (University of Hull) முதுகலை ஆய்வுச்
சமூகத்தைச் சார்ந்தோரோடு பெண்ணியம் பற்றிய கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தேன்.
இதில் மத்திய கிழக்கு, ஆசியா, ஐரோப்பா ஆகிய பிராந்தியங்களிலிருந்து இயற்கை மற்றும்
சமூகவியல் விஞ்ஞானத் துறைகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவோர் கலந்துகொண்டிருந்தனர்.
எனினும் இவர்கள் பெண்ணியம் தொடர்பான முன்கூட்டிய அறிவைக் கொண்டிருக்கவில்லை
போலும். நான் இவ்வாறு குறிப்பிடுவதற்கான காரணம், இயற்கை விஞ்ஞானத்தைச் சேர்ந்த பலர்
பெண்ணியத்தை ஆண்களுக்கெதிரான ஒரு அரசியல் தத்துவமாகக் கருதியமையாகும். அச் சமயம்
அவர்களது முதுகலைப் பட்டத்திற்கான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த இவ்வறிஞர்கள் இவ்வாறு ஏன்
கருதியிருந்தார்கள் என்பதை மீட்டிப் பார்க்கத் தூண்டியது அக்கலந்துரையாடல்.