‘அரகலயவும்’ (போராட்டமும்) ஒருமைப்பாடும் ஒரு கல்வியியலாளரிடமிருந்து சில சிந்தனைகள்
தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் சில விடயங்களே எதிர்பார்ப்பை
ஊட்டுவனவாக இருக்கின்றன. கடந்துபோன ஆறு மாதங்களில் நாம்
நினைத்தும் பார்த்திராத ஒரு இருத்தலியல் நெருக்கடியை இப்போது நாம்
சந்திக்கின்றோம். முரண்நகையாக இலங்கை தனது 75ஆவது சுதந்திர
தினத்தில் காலடியெடுத்து வைக்க இன்னும் ஒரு வருடமே இருக்கின்றது.
ஏழு தசாப்தங்களை அண்டும் எமது பின்காலனிய தேச உருவாக்கத்திலும்
நாம் எதிர்கொள்ளும் நிச்சயமற்ற எதிர்காலம் ஒரு நாடாக நாம்
பெருமைகொள்ளத்தக்க விடயமாக காணப்படவில்லை.