அனுஸ்கா கஹந்தகமே
கல்வி ஒவ்வொரு பிள்ளையினதும் உரிமை. இருப்பினும், சிறுபராயத்தில் இருந்து பௌத்த மதத்தலைவரின் அங்கியை அணியும் பொழுதுக் கிடையிலான எதோ ஒரு புள்ளியில், இலங்கையிலுள்ள பல பௌத்த பெண்களின் அந்த உரிமை ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுகிறது. அவர்களுடைய சமூக நிலையை அது பயமுறுத்துவது மட்டுமன்றி கற்பதற்கான அடிப்படை உரிமை மறுக்கப்படுவதோடு நிறுவனம்சார் பாகுபாட்டையும் அவர்கள் சந்திக்கிறார்கள். இக்கட்டுரை பௌத்த ஒழுக்க விதிகள் பற்றியது அல்ல. அவை பெண்களுக்கு பாரபட்சம் காட்டுபவை என்பது உண்மைதான். இக்கட்டுரையின் நோக்கமானது பிக்குனிகளை பிக்குனிகளாக அரசு அங்கீகரிக்காமல் இருப்பது, அவர்கள் எதை படிக்க அனுமதியுண்டு அனுமதியில்லை என்பதை எவ்வாறு மறைவா தீர்மானிக்கிறது என்பதை கலந்தாலோசிப்பது பற்றியே.
பௌத்த துறவறத்துக்குள் ஒரு தனித்த உத்தியோகபூர்வமற்ற வகைப்படுத்தலில் காணப்படும் தசாசில் மாதாக்கள் போன்றல்லாமல், பௌத்த துறவற பாரம்பரியத்தினுள்ளேயே முறையாக நியமிக்கப்பட்ட (ordained) ஒரு முறைமையிலேயே பிக்குனிகள் உள்ளனர். தசாசில் மாதா என்பதன் அர்த்தம் ‘பத்து நெறிகளை பின்பற்று தாய்” (ten precepts). “விநயாவை” (Vinaya) முழுமையாக அல்லாமல், பத்து நெறிகளை கடைப்பிடிப்பதோடு, துறவுபூண்ட பிரம்மாச்சாரிய வாழ்வை பௌத்த துறவிகளின் ஆடையில் இவர்கள் கழிப்பார்கள். இருப்பினும் அவர்களின் உத்தியோக பூர்வ நியமனமானது அரசால் உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை பெறவில்லை. தமது தேசிய அடையாள அட்டையில் பிக்குனிகளாக தம்மை அடையாளப்படுத்துவதற்கான உரிமையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளபோதும் அவ்வாறான அடையாள அட்டைகள் இன்னமும் பலரிடம் இல்லை. இப்பெண்களை தேரவாத பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பதற்கு, ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் பௌத்த அதிகார படிநிலை தயங்குவதாலேயே, முக்கியமாக அவர்களின் உயர் நியமனத்தை உறுதிசெய்ய மறுப்பதாலேயே, இந்நிலை உருவாகின்றது. அவ்வாறான பிக்குனியுடைய அடையாள அட்டை அவரை “தசாசில் மாதா” என கூறுகிறது. விதி கொண்டுவரப்பட்டாலும் இன்னமும் அவர்கள் தங்கள் அடையாள அட்டைக்காக காத்திருக்கிறார்கள். இது வெறுமனே ஒரு சிறிய அதிகாரப்படிமுறையின் கவனயீனம் இல்லை. இது ஒரு நீண்ட சங்கிலியின் முதல் பிணைப்பாகும். இச்சங்கிலி ஒருகட்டத்தில் வகுப்பறைக்குள் வருவதாகவும் உள்ளது.
ஒரு வழங்கப்படாத பெயர்
பிரிவெனாக்கள் என்பது பல நூற்றாண்டுகளாக பௌத்த கல்வியை வழங்கும் பிரதான கல்விநிலையங்களாக தொழில்பட்ட பாரம்பரிய துறவற கல்லூரிகளை குறிக்கும். இலங்கையில் 827 பிரிவெனாக்கள் உள்ளன. இவற்றுள் வெறுமனே 27 மாத்திரமே பெண் துறவிகளை அனுமதிப்பவை. அவற்றிலும் வெறும் 5 மாத்திரமே முழுமையாக நியமிக்கப்பட்ட (fully ordained) பெண் துறவிகளுக்கு பிரத்தியேகமா பணியாற்றுபவை. இந்த அசமத்துவம் முகத்தில் அடிப்பது போல் தெளிவாகவுள்ளது: 827 துறவிகளுக்கான நிறுவனங்கள்; அதில், முழுமையாக நியமிக்கப்பட்ட பெண் துறவிகளுக்கு வெறுமனே 5. ஆனால், பாகுபாடு இங்கே வெறும் இலக்கத்தில் மாத்திரமில்லை. இன்நிறுவங்களை பெயரிட பயன்படும் மொழியிலும் பாரபட்சம் எழுதியிருப்பதை காணலாம். ஆண் துறவிகளின் பாடசாலைகள் பிரிவெனாக்கள் என அழைக்கப்படுகின்றன. இப்பதமானது பல நூற்றாண்டுகளின் நிறுவன ரீதியான பலத்தையும் வரலாற்று ரீதியான தொடற்சியையும் இலங்கையின் கல்வி சட்டங்களின் கீழான அரச அங்கீகாரத்தையும் ஏற்று நிற்கின்றது. ஆனால், பிக்குனிகளின் பாடசாலைகள் பிரிவெனாக்கள் என்று கூறப்படுவதே இல்லை. அவை “புத்த சரவிக்க மோஹினி அத்யாபன அயதனய” (பௌத்த பெண் சீடர்களின் கல்விக்கான நிறுவனம்) என்றே பெயரிடப்பட்டுள்ளன. பிக்குனிகளின் கல்வி நிறுவனங்கள் எவ்வளவுதான் பிரிவெனாக்களின் வேலையையே செய்தாலும், இந்த வேறுபட்ட சமாந்தரமான பதம், பிரிவெனா எனும் பதம் வழங்கும் சட்டரீதியான மற்றும் நிறுவனரீதியான அந்தஸ்தை தருவதில்லை. பத்து நெறிகளை பின்பற்றும் தாய்மார் அங்கே இருப்பதால், அந்நிறுவனங்களுக்கு பிரிவெனா எனும் பெயர் வழங்கப்படாததோடு அவைக்கு தகுதியான உத்தியோகபூர்வ மற்றும் சமூக அங்கீகாரமும் வழங்கப்படுவதில்லை.
ஒரு நூற்றாண்டு காலமாக உருவாக்கத்தில் இருந்த ஒரு வடிவமைப்பு
பொலனறுவை காலத்தின் பின்னர், பௌத்த பெண் துறவிகளின் (பிக்குனியினர்) முறைமையில் ஏற்றப்பட்ட வீட்சியை தொடர்ந்து, முதலாவதாக துறவற ஆடையை ஏற்ற முதல் பெண் 1905 இலேயே தசாசில் மாதாவாக நியமிக்கப்பட்டார். தசாசில் மாதாக்கள் பல காலமாக முக்கியமான சமய மற்றும் சமூக விடயங்களில் பங்குகொண்டிருந்தாலும் அவர்கள் முறைமையான கல்வியை பெறும் நிலையை கொண்டிருக்கவில்லை. துரதிஷ்டவசமாக, இன்றும்கூட இந்நிலை தொடர்கிறது. இந்த விடயத்தில் கல்வி என்பது வெறுமனே எழுத்தறிவு அல்லது தம்மை பற்றிய கற்றல் மட்டுமல்ல. சமய அதிகாரத்தின் பெறுமதி வடிவமே அதுதான். அவ்வாறான சமனான கல்வி மறுக்கப்படும் அல்லது பிரிவெனா என அரசு பெயரிட மறுக்கும் நிறுவனத்தில் கற்பிக்கப்படும் ஒரு பிக்குனிக்கு, அந்த சமய அதிகாரம் மறுக்கப்படுகிறது. ஒரு ஆண் துறவியைப்போல் அவருக்கும் திரிபீடக அறிவு இருக்கலாம். அனால் அவரின் திரிபீடக வாசிப்பை மக்கள் நம்புவதற்கு தேவையான அவ்வறிவை அங்கீகரிக்கும் நிறுவனம்சார் முத்திரை அவருக்கு இல்லை. இது மக்களின் கரிசனை இல்லாமையால் வரும் விடயமல்ல. ஒரு ஆணின் துறவற ஆடைக்குள்ள முக்கியத்துவம்ஒரு பெண்ணின் துறவற உடைக்கு இல்லை என பல நூற்றாண்டுகளாக மறைமுகமாக பக்தர்களுக்கு கற்பித்துள்ள ஒரு முறைமையின் கூட்டுச்சசேர்ந்த விளைவே இது.
துறவிகளின் உடை அணிந்த போதிலும் பெண்களாக இருப்பதன் காரணத்தால் “தம்மாவை” (Dhamma) விளங்கிக்கொள்ள அல்லது கற்பிக்க ஆற்றல் உடையவர்களாக தசாசில் மாதாக்களோ பிக்குனிகளோ கருதப்படுவதில்லை. இது கல்வியில் தெட்டத்தெளிவாக தெரிகிறது. வரலாற்று ரீதியாக பார்த்தால், பிக்குகளை பயிற்றுவிக்க உருவாக்கப்பட்ட பிரிவெனா முறைமை ஆண் துறவிகளுக்கு வழங்கும் நிறுவன ரீதியான வழியையோ ஈடான பாடத்திட்டத்தையோ தரச்சான்றித்தலையோ அல்லது அரச அங்கீகாரத்தையோ தசாசில் மாதாக்களுக்கும் பிக்குனிகளுக்கும் வழங்குவதில்லை. இது ஒரு கவனிக்கக்கூடிய உள்வாங்கப்படாமையின் நிலையாகும். ஏனெனில் இது இலங்கையில் பெண்கள் நிலையின் பரந்துபட்ட போக்குகளுக்கு எதிரானது. பொது பல்கலைக்கழக ஆட்சேர்ப்பிலே, பெண்கள் வரலாற்றுரீதியாக ஆண்களை விட அதிகமாக சேர்க்கப்படுவர். எனவே இங்கே காணப்படும் இந்த இடைவெளி வெறுமனே துறவற/ மத கல்விக்கு உரித்தானதே. இது பரந்துபட்ட அளவில் பெண்களுக்கு காணப்படும் சமூக தடைகளை காட்டுவதாக இல்லை. பிரிவெனா கல்வி பற்றிய ஒரு பகுதியை நாட்டின் தேசிய கல்வி ஆணைக்குழு கொள்கை கொண்டுள்ளது. இருப்பினும் இது பெண் துறவிகளின் கல்வியை பற்றி பேசவோ அல்லது அவர்களை கொள்கையினுள் குறிப்பிடவோ இல்லை. இந்த கொள்கையை செப்டம்பர் 1 ஆம் திகதி மீள் பரிசீலனை செய்யும்படி கல்வி அமைச்சினால் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது என அண்மையில் கேள்விப்பட்டேன். பெண் துறவிகளின் கல்வி பற்றிய பிரச்சினையை பற்றி எடுத்துரைக்கவும் அவர்கள் கல்வியை மீள் சீரமைத்த கொள்கைக்குள் உள்ளடக்கவும் இது ஒரு முக்கிய வாய்ப்பை தருகிறது.
ஆண் மற்றும் பெண் துறவிகளின் கல்வி நிறுவங்கள் அரசாங்கத்தினாலேயே நிதியளிக்கப்படுகின்றன. ஒரு மாணவருக்கு முழு வருடத்துக்குமாக ஒதுக்கப்படும் தொகை இதில் வெறும் 5000 தொடக்கம் 6000 ரூபா மட்டுமே. அடிப்படை தேவைகள், தங்குமிட வசதிகள், உணவு, கற்றல் பொருட்கள், தங்குமிடத்தை பராமரித்தல் போன்றவற்றிக்கே இந்த பணம் போதவே போதாதுள்ளது. பாடத்திட்டை அர்த்தமுள்ள ரீதியில் விரிவுபடுத்த பணமில்லை என்பதை இங்கே சொல்லவே தேவையில்லை. இவ்வளவு குறைவான பண ஒதுக்கீடு காரணாமாக, தம் இருப்பை தக்கவைக்கவே இவை போராடிக்கொண்டுள்ளன. தொடர்ந்து இயங்குநிலை இருப்பதற்கே, கிட்டத்தட்ட முழுமையாகவே வெளியார் ஆதரவில் நம்பியிருக்க இவற்றில் பல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. இங்கேதான் அசமத்துவம் மிகத்தெளிவாக வெளிப்படுகிறது. பல காலமாக பெண் துறவிகள் பொருட்டாக எண்ணப்படாமல், தம்மா கற்பிக்கும் ஆற்றல் அதிகாரம் உடையவர்களாவோ ஆண் துறவிகளுக்கு வழங்கும் அதே மதிப்புக்கு தகுயானவர்காளக கருத்தப்படாமலோ இருப்பதனால், ஆண் துறவிகளின் கல்வி நிலையங்கள் பெறும் மக்களின் காணிக்கைகளை விட பெரியளவில் குறைவான அளவிலேயே பெண் துறவிகளின் கல்வி நிறுவங்கள் காணிக்கைகளை பெறுகின்றன. இதன் பலன், அதற்கு காரணமாக இருந்த பாரபட்சத்தை பிரதிபலிக்கவும் அதை மீள்வலுப்படுத்தவும் செய்யும் வள அளவின் வித்தியாசம் அதிகரித்தல் ஆகும். குறைந்தளவு நிதி வழங்கப்படும் நிறுவனங்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே நன்றாக பயிற்சி வழங்கப்பட்ட பெண் புலமையாளர்களை உருவாக்கும். இதனால் பெண் துறவிகள் குறைந்தளவு ஆற்றல் உள்ளவர்கள் எனும் பார்வை மீள்வலுப்படுத்தப்படுகிறது. இப்பார்வை தொடர்ந்து அந்நிருவனங்களுக்கு குறைவான நிதி வழங்குவதை நியாயப்படுத்தும். சமநிலை நியாயத்தை (equity) பேணக்கூடிய வகையில், அரசாங்கத்தால் நிதி வழங்கப்படுதல் அல்லது தேவையிலுள்ள இப்பெண் துறவிகளின் பாடசாலைகளுக்கு பிரத்தியேகமான பொதுமக்களின் ஆதரவை வழங்கல் மூலமாகவோ, முன்வந்து மேற்கொள்ளும் இடையீடு இன்றிய பட்சத்தில், இந்த வட்டச்சுழற்சி முறை தானாகவே இல்லாமல் போகாது. அது தொடரவே வாய்ப்புள்ளது.
அரசமரத்தடியில் தனியாக அமர்ந்திருத்தல்
நான் அநுராதபுரத்திலுள்ள ஜெயா மகா போதியில் அமர்ந்திருந்தேன். ஆண் துறவிகள் கற்பித்தபடியும், அவர்களில் ஒவ்வொருவரை சுற்றியும் சிறு சிறு பக்தர் குழுக்குக்கள் அமர்த்திருப்பதையும் அவதானித்தேன். அருகில் ஒரு சில பெண் துறவிகளை பார்த்தேன். இருப்பினும் உடனடியாக அவர்கள் பிக்குனிகளா அல்லது தசாசில் மாதாக்களா என தெரியவில்லை. காரணம் அவர்களுடைய ஆடையையோ அல்லது நடத்தையையோ வைத்து ஒரு வெளியாளுக்கு அவர்களை பிரித்தறிய முடியாது. ஆண் துறவிகள் பக்தர்களோடு இருப்பதைப்போல் அல்லாமல், அவர்களில் அதிகமானோர் தனியாகவே இருந்தனர். இதுவும் எதேர்ச்சியாக நடந்த விடயம் அல்ல. ஏனெனில், ஆண்களுக்கு காணப்படும் நியமனப்பாதையில் பெண்கள் “சாசன” ஐ அடைய முடியாது. ஆகவே, பல பெண் துறவிகள் தசாசில் மாதாக்களாகவே இருக்கின்றனர். இது துறவற வாழ்க்கையின் விம்பத்தை கொடுத்தாலும், அதனுடைய முறையான ஆன்மீக நிலையை கொண்டிருப்பதில்லை. அவர்கள் பத்து நெறிகளை பின்பற்றுகிறார்கள்; துறவற ஆடையை அணிகிறார்கள்; துறவற வாழ்க்கையை வாழுகிறார்கள். இருப்பினும் தமக்கு நியமனம் கிடைக்காமல் மற்றும் ஆண் துறவிகளுக்கு வழங்கப்படும் நிறுவன சார் அங்கீகாரம் இல்லாமல், சமய அதிகார படியமைப்பிலே உத்தியோகபூர்வமற்ற ஒரு கீழான நிலையில் உள்ளனர். இருப்பினும் கடந்த வருடம் ஜூன் மாதம் இலங்கையின் உச்ச நீதி மன்றத்தின் SC/FR/218/2013 இல் விசேடமாக ஒரு பெரும்பான்மை தீர்ப்பு முடிவை கொடுத்தது. இதில் முழுமையாக நியமிக்கப்பட்ட பெண் துறவிகளுக்கு “பிக்குனி” எனும் பதத்தை தேசிய அடையாள அட்டையில் வைத்திருக்கும் அடிப்படை உரிமை உள்ளது என கூறியது. இதனால் இதுவரை காலம் நிழல் வடிவில் (de facto) இருந்த பிக்குனி சங்கத்தின் இருப்பு சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு மூடப்பட்ட வட்டம்
ஒரு மூடப்பட்ட வட்டத்தில் சமூக பாரபட்சமும் கல்விசார் பாரபட்சமும் ஒன்றை ஒன்று மீள்வலுப்படுத்தும். பிக்குனிகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலான அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களே இருப்பதன் காரணாமாக பொதுமக்கள் அங்கீகரிக்கும் தரத்தை அடையுமளவுக்கு குறைந்தளவானவரே பயிற்றுவிக்கப்படுகிறார்கள். குறைந்தளவானோரே அறிவதிகாரமுடைய ஆசிரியர்களாக அங்கீகரிக்கப்படுவதால், குறைந்தளவான பக்தர்களே அவர்களை தேடுகிறார்கள், அவர்களுக்கு உதவுகிறார்கள். அவர்கள் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களை கவர்வதால் வளப்பற்றாக்குறை உடையாதாகே பெண் துறவிகளின் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து இருப்பதோடு அரச வரவு செலவுத்திட்டத்திலும் மக்களின் மன விம்பத்திலும் அவர்களை முக்கியத்துவப்படுத்தாமல் இருப்பது இலகுவாகிறது. தன்னை தொடர்ச்சியாக பின்பற்றுவோரை கொண்டிருக்காத ஒரு தசாசில் மாதா அல்லது ஒரு பிக்குனி பொருளாதார ஆதரவும் இல்லாமல் இருக்கும் நிலை உள்ளது. ஏனெனில் இலங்கையின் துறவற நிலைமைகளை பொறுத்த வரையில், பின்பற்றுவோர் வெறும் மாணவர்களாக இருப்பது மட்டுமின்றி நிதி ஆதவாளர்களாகவும் உள்ளனர். இந்த ஐயமான நிலை வெறுமனே ஆன்மிகம் சார்ந்தது மட்டுமின்றி அதிகாரமுறை சார்ந்ததுமாக உள்ளது. அது சடப்பொருள் உலகம் சார்ந்தது. அத்தோடு, துறவற ஆடையில் கழிக்கும் வாழ்வு முழுவதும் கலக்கிறது.
பிக்குனிமாரின் கல்விக்கு பெயர் வழங்கப்பட்டு, நிதிவழங்கப்பட்டு, பிக்குகளை அங்கீகரிக்கும் அதே பதங்களால் அவர்கள் அங்கீகரிக்கப்படும்வரை, இது வெறுமனே அடையாள அட்டைகள் இன்மை பற்றியதோ அல்லது வளப்பற்றாக்குறையான பாடசாலைகள் பற்றியதாகவோ மாத்திரம் இருக்காது. அது எந்த மாணவர்களில் முதலீடு செய்வது பெறுமதியானது என்பதை அமைதியாகவும் தொடர்ச்சியாகவும்
தொடர்ந்து முடிவெடுக்கும் ஒரு கல்வி முறைமை பற்றியதாகவும் இருக்கும். பெண்கள் தமக்காக தாமே பேசக்கூடிய இடமாக கல்வி அமையவேண்டும். அதற்கு மாறாக இப்பெண்களுக்கு தாம் கூறுவது செவிசாய்க்கப்பட வேண்டுமானால் அதற்கு அனுமதி கேட்கவேண்டிய இன்னொரு இடமாகவே இது உள்ளது.



