கௌசல்யா பெரேரா
இலங்கையில் தனியார் பல்கலைக்கழகம் என்று ஒன்றுமில்லை என கல்விக் கொள்கை வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள கல்வியலாளர்கள் கூற விரும்புவார்கள். நாட்டிலுள்ள “பல்கலைக்கழகங்கள்” அனைத்துமே அரச பல்கலைக்கழகங்கள்; பட்டங்களை வழங்கும் ஏனையவை அனைத்துமே தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் (Higher Education Institutions – HEI க்கள்). சட்ட வரைவிலக்கணங்களின்படி இந்த கருத்து துல்லியமானது. இருப்பினும் மக்களின் சொல்லாடலிலும் மன விம்பத்திலும் தனியார் பல்கலைக்கழகங்கள் ஒரு வலுவான யதார்த்தம் — மக்கள் அவற்றில் கற்பிக்கிறார்கள்; மாணவர்கள் அதில் தம்மை இணைத்துக்கொள்கிறார்கள்; குடும்பங்கள் அவற்றின் கட்டணத்தை செலுத்துகிறார்கள்; அங்கிருந்து பட்டப்படிப்பை முடிப்பவர்கள் உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி தொழில் சந்தைகளில் நுழைகிறார்கள்.
அரச உயர் கல்வி மட்டுமல்லாது தனியார் உயர் கல்வியும் உயர் கல்வி சீர்திருத்தத்தில் உட்படுத்தப்படும் எனும் நோக்கை மனதில் வைத்தவாறு எம்மை சுற்றியுள்ள தனியார் உயர் கல்வி நிறுவனங்களின் பல வகைகளை கருத்தில் கொள்ளவும் அவற்றினுள் காணப்படும் சில பிரச்சனைகளை அவதானிக்கவும் இது சிறந்த நேரமாக காணப்படுகிறது. தனியார் HEI க்களின் நிலையை ஆராய்வதை பொதுக்கல்விசார்பாக கரிசனையுடைய செயற்பாட்டாளர்கள் பல தசாப்தங்களாக கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர் அல்லது எதிர்த்துவந்துள்ளனர். தனியார் HEI க்களை ஆராய்வது தம்மை எதோ களங்கப்படுத்திவிடும் போன்று அவர்களின் இத்தவிர்ப்பு தென்படுகிறது. ஏனையோர் இரண்டு வகை நிறுவனங்கங்களிலுமே வேலை செய்துள்ளனர். ஒன்றிலுள்ள செயல் வழக்கங்களை மற்றயத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அரச பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் தலைமை அமைப்பான பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு (UGC) முரண் (conflict of interest) என்ற கருத்தியலை கண்டுகொள்ளாமல், செயல்குழுக்களிலும் தலைமை பொறுப்புக்களிலும் தனியார் உயர் கல்வியில் ஈடுபடும் நபர்களை அமர்த்தியும் உள்ளது. எனவே, தனியார் உயர் கல்வியை கொண்டு நடத்தும் சில கருத்தியல்கள் அரச பல்கலைக்கழகங்களின் சீர்திருத்த செயல்நிரல்களில் காணப்படுவது ஆச்சரியமளிப்பதாக இல்லை.
“தனியார் பல்கலைக்கழகம்” என்றால் என்ன?.
முதலில் சில விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். மக்களின் மன விம்பத்தில் பொதுவாக “தனியார் பல்கலைக்கழகம்” என்பது மாணவர்கள் பணம் செலுத்த வேண்டிய வெளிநாட்டு அல்லது உள்நாட்டு பட்டப்படிப்பை வழங்கும் ஒரு நிறுவனமாகும். ஆனால் இந்த அகண்ட வகைப்படுத்தல் பல்வேறு நிறுவனங்களையும் பட்ட வகைகளையும் உள்ளடக்கியதாகவுள்ளது. அவற்றை நான் கீழே விளக்கமாக கூறுகிறேன்.
கல்வி அமைச்சின் அரசு அல்லாத உயர் கல்வி பிரிவு (Non-State Higher Education Division – NSHE) 32 கல்வி நிறுவனங்கள் வழங்கும் 295 பட்டங்களை அங்கீகரித்துள்ளது. இதில் பெரும்பாலானவை தனியார் நிறுவனங்கள். இதில். சிறிதளவு எண்ணிக்கையை கொண்ட “பல்கலைக்கழகம் போன்று” நிறுவப்பட்ட நன்கு அறியப்பட்ட தனியார் HEI களும் இதில் உள்ளடக்கம். அவற்றின் பட்டங்கள் NSHE பிரிவால் சான்றளிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்படும் உள்நாட்டு பட்டங்கள். உள்நாட்டு பட்டங்களை வழங்கும் தனியார் HEI க்கள் NSHE பிரிவால் அங்கீகரிக்கப்பட்டதாக இருப்பது கட்டாயமாக இருப்பினும் அதனை செய்வதை தவறுவதால் எந்த ஒரு விளைவுகளும் இருப்பதாக தெரியவில்லை. இதற்க்கு மேல், NSHE இன் இந்த வலையிலுருந்தும் அதற்கு உறுதுணையாகவுள்ள அங்கீகரித்தல் மற்றும் தர உறுதியளித்து சார் நிலைக்குழுவிலுருந்தும் (Standing Committe on Accredition and Quality Assurance) வெளியே உள்ளவாறு தனியார் பட்டங்களின் பல மாறுநிலைகளும் உள்ளன.
முதலாவதாக, இதே தனியார் HEI க்கள் வழியாக வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் NSHE பிரிவால் கூர்தாராயப்படுவதில்லை. பௌதீக வடிவம் இல்லாத அல்லது வெறுமனே ஒரு முழுமையற்ற/ நிலையற்ற இருப்பை (dubious presence) கொண்ட தனியார் HEI க்கள் அளவுக்கு அதிகமா அதிகரித்தவண்ணமுள்ளன. பொதுநலவாய பல்கலைக்கழகங்களின் ஆண்டு நூலிலே (Commonwealth Universities Yearbook) பட்டியலிடப்பட்டுள்ள வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அங்கீகரிக்கப்பட்டவை என UGC தனது இணையத்தளம் மூலம் மக்களுக்கு அறிவித்துள்ளது. ஆனால் அது பற்றி மேலும் எந்த தகவலையும் அது வழங்கவில்லை. எந்தப் பட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டவை? எந்த மூலம் வழியாக (mode) வழங்கப்படும் பட்டப்படிப்புகள் அவை? இந்த விளக்கங்கள் அறியப்படாதவையாகவே உள்ளன. இப்படி குறிப்பிடப்பட்ட சில பல்கலைக்கழகங்கள் தமது சொந்த நாட்டில் முறைப்படியானதாக இருந்தாலும் உள்நாட்டில் அவர்கள் பெயரால் வழங்கப்படும் பட்டங்கள் NSHE பிரிவு அல்லது UCG இன் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் தர வரைவுகளை கடைப்பிடிக்காமல் போகலாம்.
முன்செலுத்திய தொலைபேசி சேவை வேலை செய்வதை போலவே இயங்கும் “மேல் நிரப்பும் பட்டம்” (“top up degree”) எனும் முறைமை இன்னொரு பிரச்சினைக்குரிய விடயமாகவுள்ளது. இந்த முறைமையில் ஒருவருக்கு ஏதாவதொரு ஒரு டிப்ளோமா அல்லது உயர் தேசிய டிப்ளோமா (Higher National Diploma/ HND) இருக்கும் பட்சத்தில் ஒரு பட்டத்தை வழங்கும் ஒரு கற்கை நெறியை அவரால் பூர்த்தி செய்ய முடியும். இது பொதுவாக வெளிநாட்டு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படுபவையாக இருக்கும். ஆரம்பத்தில் ஒரு பட்டபடிப்பிற்கு தகுதி பெறாத ஒருவர் அவ்வாறான தகுதியை பெறும் நோக்கில் வேலை செய்ய முடிவது கட்டாயம் எனும் எண்ணம் முற்போக்கானதே. இதுவே ஆரம்பத்தில் திறந்த மற்றும் தூர கற்றல் முறையின் (open and distnance learning – ODL) நோக்காக இருந்தது. இருப்பினும் தற்போது அவ்நோக்கு தந்திரமாக பயன்படுத்தப்படுகிறது. ODL முறைமைகளின் நோக்கம் பாரம்பரிய கல்வி நிறுவனங்களில் உள்வாங்கப் படாமலிருக்கக்கூடியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதாகும். ஆனால் சிறந்த கற்பித்தல் கற்றலை வழங்க அர்பணிப்பற்ற நிறுவனங்கள், இலகுவில் பெறக்கூடிய, பணம் செலுத்த வேண்டிய தகைமைகளை வழங்கும் ஒரு சந்தையாக ODL வந்திருப்பதை நாம் பார்த்துள்ளோம்.
பலவாக காணப்படும் தனியார் HEI க்கள் மற்றும் அவற்றின் பல்வேறுபட்ட பட்டங்களை கூர்ந்தாராய்தல் இன்னொரு கேள்வியை எழுப்புகிறது – கல்வி நிறுவனங்கள் அல்லாத அரச நிறுவனங்களால் வழங்கும் தனியார் பட்டங்களை எவ்வாறு சீரமைப்பது? அதனை யார் செய்வது?
நம்பிக்கை எதிர்பார்ப்புடைய மாணவர்கள், பெற்றோர், நம்பியிருக்கும் பணியாளர்கள் என பொதுமக்களுக்கு பல்வேறுபட்ட பிரச்சனைகளை இவையெல்லாம் உருவாக்குகின்றன. “கல்விசார் ஆட்சேர்ப்பிலுள்ள குறைபாடுகளும் விலக்கல்களும்” (“Recruiting Academics to State Universities”) எனும் முன்னைய குப்பி கட்டுரையிலேயே பேசப்பட்டுள்ளதை போல, உயர் கல்வி தகைமைகள் பற்றிய தெளிவில்லாத நிலை காரணமாக உயர் கல்வி துறையிலே கல்வியல் பணியாளர்களை ஆட்சேர்ப்பதும் கடினமான ஒரு விடயமாக வந்துள்ளது.
தனியார் உயர் கல்வி நிறுவங்களிலுள்ள சில பிரச்சினைகள் – அரச பல்கலைக்கழகங்களில் மாற்றுத்துக்கான ஒரு அறிகுறி
இந்த கட்டுரையின் இரண்டாம் பகுதியிலே தனியார் HEI க்களிலே நன்றாக நிறுவப்பட்ட நிறுவனங்கள் இருக்கும் பட்சத்திலும் இவ்வாறான பிரச்சினைகள் எதிர்கால சீர்திருத்த செயல்நிறல்களிலே வரலாம் என்பதால், தனியார் HEI க்களிலே உள்ள வேலையின் சில அம்சங்களை கலந்தாலோசிக்கிறேன்.
அரச பல்கலைக்கழகங்களில், ஒரே வகையை சார்ந்த அனைத்து நிரந்திர பணியாளர்களினதும் சம்பளம் ஒரே அளவை அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. தனியார் HEI க்களை பொறுத்தவரையிலே இது அவ்வளவு திட்டவட்டமாக தெரியவில்லை. ஏனெனில் அவை சட்டரீதியாக பார்க்கையில் வேறு ஒரு வகையான நிறுவனங்கள். பொதுவாக அவை கம்பனிகள். ஒன்றிலுந்து இன்னொன்று வேறுபடும் வகையிலான சம்பள அளவுகளையும் நிதி ஊக்கத்தொகைகளையும் கொண்டவை தனியார் HEI க்கள். நன்கு நிறுவப்பட்ட தனியார் HEI க்கள் கவரக்கூடிய சன்மானங்களை வழங்குவதாக கூறப்படுகிறது. இடை ஓய்வுகால (sabbaticals) வருடங்களில் மற்றும் தமது ஓய்வுக்கு பிறகு, அரச பல்கலைக்கழக கல்வியலாளர்கள் அவ்வாறான நிறுவனங்களுக்கு செல்வதற்கான காரணங்களில் இது ஒன்றாக இருக்கலாம். அவ்வளவு நன்றாக நிறுவப்படாத அல்லது முறையாக பதிவுசெய்யப்படாத HEI க்களிலே நிலைமை வேறுமாதிரியாக இருக்கலாம். இவை பற்றிய அறிவும் எமக்கு அவ்வளவாக இல்லை. (அரச பல்கலைக்கழகங்களிருந்து பெறுவதைவிட,) நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட தனியார் HEI க்களில் இருந்து தாம் பெறும் இச்சன்மானங்களை தமது கடின உழைப்புக்கு பரிசாக இருக்கும் ஒரு விடயமாக கல்வியியல் பணியாளர்கள் அதனை மத்திப்பிடுகின்றனர்.
கவர்ச்சிகரமான சன்மானம் தரமான வாழ்க்கையை கொண்டு நடத்த அவசியம். அத்தோடு தரமான வேலையை நிறுவனம் ஊக்குவிக்கும் ஒரு வழியாகவும் சில வேளைகளில் அது பார்க்கப்படுகிறது. ஆனாலும் இது நிறுவனத்தின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடியது: தொடர்ச்சியாக சம்மதித்த நிதி தொகைகளை வழங்குவதற்கு தொடர்ச்சியாக அந்த நிறுவனம் பெரியளவான இலாபத்தை பெற வேண்டும். இதற்கான ஒரு யுக்தியாக ஒரே வருடத்திற்குள் பல தடவைகள் புதிய அணி ஆட்சேர்ப்பை செய்வது காணப்பட்டுள்ளது — மூன்று நான்கு தடவைகளுக்கு கூட. அனைத்து அணிகளுகளையுமே ஒரே வருடத்தில் கவனிக்கவேண்டிய இன்நிலையால் பணியாளர்கள் சுரண்டப்படும் ஒரு வேலைச் சூழல் உருவாகலாம். போதுமான அளவு பணியாளர்கள் இல்லாத பட்சத்தில் வேலைக்கமர்த்தப்படுவோர் மீது மேலும் சுமை விழலாம். மறுபுறம் பார்க்கையிலே, மாணவர் இணைப்பில் சடுதியான ஒரு வீழ்ச்சி ஏற்பட்டால் (வழங்கப்படும் பட்டம் வழக்கத்தை விட்டு போகலாம்) எதிர்பார்க்காத வேலை துண்டிப்புக்கள் ஏற்படும். அரச பல்கலைக்கழகங்கள் உள்ளடங்கலாக, ஏனைய துறைகளில் குறைந்த கால ஒப்பந்த அடிப்படையிலே வேலை செய்யும் பணியாளர்களை போலவே, அடிக்கடி புதுப்பிக்கப்படவேண்டிய குறைந்த கால ஒப்பந்தத்தில் தனியார் HEI களில் வேலை செய்யும் ஆசிரியர்கள் கடினமான அல்லது சுரண்டப்படும் சூழ்நிலைகளிக்கே வேலை செய்ய அழுத்தப்படுவதாக உணரலாம்.
அதே வேளையில் நன்றாக நிறுவப்பட்ட தனியார் HEI க்களில், அரச பல்கலைக்கழகங்களில் இருந்து வேறுபட்ட வகையில் பொதுமக்களின் பார்வையில் நிறுவனத்தின் பெயரை பேணும் வகையிலான விளம்பரம் செய்யும் பணியை உள்ளடக்கியதாக அவர்களின் வேலை நியமங்கள் காணப்படுகின்றன. சந்தைப்படுத்தும் (அல்லது அதற்க்கு ஒத்த கருத்தில் பெயரிடப்பட்டுள்ள) அலகு ஒரு முக்கிய துறையாக கலந்துரையாடல்களில் வருகின்றது. பணியாளர் எண்ணிக்கை, மீள் பரீட்சை தடவைகள் எண்ணிக்கை மற்றும் ஏனய கற்பித்தலியல் சார்ந்த முக்கிய விடயங்களில் தீர்மானம் எடுத்தலில் இது தாக்கம் செலுத்துவதாக தெரிகிறது. கற்பித்தலியல் ரீதியாக அல்லது கல்வியல் ரீதியாக முக்கிய செய்முறைகளில் எவ்வாறு நிதிசார் காரணங்கள் இடையூறு செய்கிறது என்பதற்குரிய கவலை தரும் ஓர் உதாரணம் இதுவாகும். இதனால் பிரச்சினைக்குரிய விளைவுகள் வகுப்பறையில் ஏற்படுகின்றன. நன்மையான பக்கத்தை பார்ப்போமானால், தனியார் HEI க்களிலே குறைந்தளவான துன்புறுத்தல்களை (harassment) தாம் முகங்கொடுப்பதாக அரச மற்றும் தனியார் HEI க்கள் என இரண்டிலுமே அனுபவம் உள்ள இளம் சகபணியாளர்கள் உணர்கிறார்கள். இதற்கு பிரதான காரணம் துன்புறுத்தல் பற்றி முறையீடு செய்யும்போது, தனியார் HEI க்களின் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய ஆற்றலாகும். இந்நிலைமை அரச நிறுவனங்கள் மீதும், நீண்ட காலமாக நிலவும் தொந்தரவு தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க தயங்கும் அவற்றின் நிலை பற்றியதுமான ஓர் உண்மையான குற்றச்சாட்டும் ஆகும்.
இருப்பினும், நாம் அரச பல்கலைக்கழகங்களிலுள்ள பிரச்சினைகளை பற்றி அதிகம் அறிந்தாலும் தனியார் HEI க்களிலே பணியாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் பற்றி கேள்விப்படுவது அரிது. சமூக மதிப்பு தனியார் HEI களுக்கு முக்கியமாக காணப்படுவதால், அதிருப்ப்தியை தெரிவிப்பது அவர்களுக்கு பிரச்சினை கொடுக்கும் எனும் நிலை பணியாளர்கள் பொதுவெளிகளிலே தம் பிரச்சனைகளை வெளிப்படுத்தாமல் இருக்கும் நிலைக்கு ஒரு காரணமாகும். சமூக வலைத்தள கொள்கைகள் மற்றும் எதிர்மறை விளம்பரத்தால் ஏற்படும் மதிப்பு களங்கம் பற்றிய உள்ளக கலந்துரையாடல்கள் காட்டுவது போல, மதிப்புக்கு களங்கம் ஏற்படுதல் பற்றிய கரிசனை அரச பல்கலைக்கழகங்களிலும் வளர்ந்து வரும் ஒரு கரிசனையாகவே உள்ளது. மதிப்பிற்கு களங்கம் ஏற்படுதல் பற்றிய நிறுவனங்களின் கவலை நீண்ட கால நோக்கில் பார்க்கையில் ஒரு பாதகமான விடயம். ஏனெனில் இவை வெறுமனே மாணவர்கள் பணியாளர்களின் வெளிப்பாட்டு சுதந்திரத்தை பாதிப்பது மட்டுமன்றி கல்வித்துறையில் மற்றும் அது பற்றிய ஆய்வுகளையும் பாதிக்கிறது.
இறுதியில் சில சிந்தனைகள் …
தனியார் உயர் கல்வி இலங்கையில் பலத்தளவில் காணப்படுவதால் அவை பற்றிய கூடிய உன்னிப்பான பார்வை அவசியம். தனியார் துறையிலே வழங்கப்படும் உயர்கல்வியில், பல்வகையான நிரலையும் தனியார் நிதி அடிப்படையிலே அரச நிறுவனங்களால் வளப்படும் உயர் கல்வியையும் வரவிருக்கும் சீர்திருத்தம் சீர்மையாக்க வேண்டும் (இந்த விடயமே ஒரு தனி குப்பி கட்டுரையில் பேசப்பட்ட வேண்டிய விடயம்). இந்த உடைந்துபோயுள்ள குழப்பத்திலிருந்து எப்பிடி ஒரு முழு உயர் கல்வி முறைமையை கட்டுவது என அவதானமாக சிந்திக்க வேண்டிய நேரம் இது.



