அகிலன் கதிர்காமர்
தேசியக் கற்பனையாக்கத்தில் கிராமப்புறங்களும் நாட்டின் விளிம்புநிலைப் பிராந்தியங்களும் பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இதே நிலை பிராந்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்துகின்றது. அவை உயர்கல்வி அமைப்பின் ஒரு ஓரங்கமாக மட்டுமே கருதப்பட்டதுடன், சில சந்தர்ப்பங்களில் பிராந்திய அரசியல் தேவைகளை சமாளிப்பதற்கான நிறுவனங்களாகவே உருவாக்கப்பட்டன. கிராமப்புற உலகமும் அந்தப் பிராந்தியங்களில் இயங்கும் நிறுவனங்களும் தேசிய அபிவிருத்தி நோக்கிலிருந்து விலக்கப்பட்டமை தற்செயலானதோ தவிர்க்க முடியாததோ அல்ல. மாறாக, வளங்களை உறிஞ்சிக்கொள்ளும் மற்றும் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய ஒழுங்கின் கீழ் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட கொள்கைகளின் விளைவாகவே அது நிகழ்ந்தது.
1970களின் பிற்பகுதியில் சுதந்திர வர்த்தகத்தையும் மூலதனத்தின் தடையற்ற ஓட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு உருவான தாராளவாத பூகோளமயமாக்கல் – இலங்கையின் சூழலில் நாம் “திறந்த பொருளாதாரம்” என அழைக்கும் பொருளாதார மாதிரி – இன்று தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 1970களில் ஏற்பட்ட நீண்டகால பொருளாதார மந்தநிலையால் வீழ்ச்சியடைந்த இலாப விகிதங்களை மீளுயிர்ப்பிப்பதற்காக நிதி மூலதனத்தின் வர்க்கத் திட்டமாக தாராளவாதத்தை முன்னிறுத்திய அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இன்று தமது கொள்கைகளையே மீளாய்வு செய்வதோடு ஒன்றுக்கொன்று முரண்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், அக்காலகட்டத்தில் உருவான பொருளாதாரச் செயல்முறைகள் எதிர்காலத்திலும் தேசிய மட்டத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்.
இத்தகைய கொள்கைகளின் மையத்தில் தாராளவாத நகரம் காணப்படுகின்றது. நிதிசார் சேவைகளின் விரிவாக்கமும் காணி மற்றும் சொத்துச் சந்தையின் பெருக்கமும் காரணமாக நகரம் பொருளாதாரத்தின் பிரதான மையமாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறான நிதிமயமாக்கப்பட்ட நகரங்களின் தாக்கம் குறைந்த வருமான நாடுகளின் பல்கலைக்கழகங்களிலும் பிரதிபலித்துள்ளது. அதிக கட்டணங்களை அறவிடும் வர்த்தகமயமான உயர்கல்வி, மாணவர் கடன்களின் அதிகரிப்பு, தனியார் நிறுவனங்களை மையமாகக் கொண்ட ஆய்வுகள், மேற்கத்திய பல்கலைக்கழகங்களின் கிளை வளாகங்கள் ஊடான நாடுகடந்த கல்வி இணைப்புகள் என்பன இன்று பல நாடுகளின் உயர்கல்வித் துறையின் யதார்த்தங்களாக மாறியுள்ளன.
இலங்கையைப் பொறுத்தவரையில், சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் கட்டமைப்பு சீர்திருத்தத் திட்டங்களின் ஊடாக 1970களின் இறுதியில் தாராளவாதக் கொள்கைகள் அறிமுகமான போதிலும், நீண்டகால உள்நாட்டுப் போர் தாராளவாத நகர வளர்ச்சியின் வேகத்தை குறிப்பிடத்தக்க வகையில் தாமதப்படுத்தியது. கடந்த ஒன்றரை தசாப்த காலமாக நான் முன்வைத்துவரும் வாதம் என்னவென்றால், 2009ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவடைந்த காலகட்டமும் அதே நேரத்தில் ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடியும் இலங்கையில் தாராளவாதத்தின் இரண்டாம் அலையை உருவாக்கின. அதன் விளைவாக உலகளாவிய நிதி மூலதனம் கொழும்பில் உட்கட்டமைப்பு மற்றும் காணி அபிவிருத்தித் திட்டங்களுக்குள் செலுத்தப்பட்டது.
கொழும்பை தாராளவாத நகரமாக மாற்றியமைக்கும் இந்தச் செயல்முறைக்கு பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ தலைமை தாங்கினார். நகர அபிவிருத்தி அதிகாரசபை கூட பாதுகாப்பு அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. பாரிய வெளிநாட்டுக் கடன்களை அடிப்படையாகக் கொண்டு புதிய உயர்மாடிக் கட்டடங்களும் ஆடம்பர வாகனங்களும் நிரம்பிய நகரமாக கொழும்பு மாற்றமடைந்து கொண்டிருந்த அதேவேளையில், தனியார் உயர்கல்வி நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. முதலீட்டுச் சபை (BOI) நூற்றுக்கணக்கான அளவில் பல்கலைக்கழகங்கள் என அழைக்கப்படும் உயர்கல்வி நிறுவனங்களைப் பதிவு செய்தது. அவை போதுமான ஒழுங்குபடுத்தலுக்கு உட்படுத்தப்படாததால், பல நிறுவனங்கள் பல்பொருள் அங்காடிகளைப் போன்று விரைவாக உருவாகி, நட்டம் ஏற்பட்டவுடன் அதே வேகத்தில் மறைந்துபோயின.
கொழும்பையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் மையமாகக் கொண்டு பெருகிய இத்தகைய தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மாறாக, இலங்கை தனது இலவசக் கல்வி மரபின் அடிப்படையில் கடந்த பல தசாப்தங்களாக நாட்டின் விளிம்புநிலைப் பிராந்தியங்களில் பல அரசுப் பல்கலைக்கழகங்களை நிறுவியுள்ளது. இருப்பினும், இப்பிராந்தியப் பல்கலைக்கழகங்கள் போதுமான நிதியையும் தெளிவான நோக்கையும் செயற்பாட்டுத் திசையையும் கொண்டிருக்கவில்லை. தற்போது தாராளவாத உலக ஒழுங்கு சிதைவடைந்து கொண்டிருக்கும் நிலையிலும், ஆற்றல் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் உலகளாவிய நெருக்கடிகள் தீவிரமடைந்து வரும் சூழலிலும், உள்ளூர் பொருளாதாரங்களினதும் தற்சார்பினதும் முக்கியத்துவம் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது. இந்நிலையில், பிராந்தியப் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பையும் அவை இயங்கும் சமூகங்களுடனான அவற்றின் உறவையும் இக்கட்டுரையில் ஆராய விரும்புகின்றேன்.
பிராந்தியச் சூழல்
விளிம்புநிலைப் பிராந்தியங்களையும் ஒதுக்கப்பட்ட சமூகங்களையும் சென்றடைவதே வலுவான பொதுச் சேவைகளின் அவசியமும் பலமும் ஆகும். பொதுப் போக்குவரத்திற்கும் அரச மருத்துவமனைகளுக்கும் இது பொருந்துவது போலவே ஏனைய பொதுத் துறைகளுக்கும் இது பொருந்துகின்றது. தனியார் பேருந்துகள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமப்புறப் பாதைகளில் சேவையாற்றுவதில்லை. நகரங்களையும் பேரூர்களையும் இணைக்கும் நெரிசலான பாதைகளிலேயே அவற்றின் இலாபம் அதிகரிக்கின்றது. அதைப் போலவே, தனியார் மருத்துவமனைகளும் மருத்துவ நிலையங்களும் நகரங்களை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன. அரச மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளை தாங்கள் தனியார் மருத்துவ நிலையங்களில் சிகிச்சை பெறுமாறு வழிநடத்தும் ஒழுக்கமற்ற மருத்துவர்களின் செயற்பாடுகள் கூட இதன் ஓர் அங்கமாகக் காணப்படுகின்றன. இதேபோல், தனியார் கல்வி நிறுவனங்களும் வசதியுள்ள நகர்ப்புறங்களையே தமது செயற்பாட்டுத் தளமாகத் தேர்ந்தெடுக்கின்றன.
பல்கலைக்கழகங்கள் உட்பட பொதுத் துறை நிறுவனங்கள் தங்களது பொது நோக்கை நிறைவேற்ற வேண்டுமாயின், அவற்றிற்கு போதுமான நிதி ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட வேண்டும். கடந்த ஒன்றரை தசாப்த காலமாக கல்விக்கான அரச செலவினங்கள் குறைவடைந்துவருவதன் காரணமாக, அரசுப் பல்கலைக்கழகங்கள் முதுநிலைப் பட்டப்படிப்புகளிலும் வெளிநாட்டு இளநிலை மாணவர்களுக்கான கற்கைநெறிகளிலும் கட்டணங்களை அறவிடும் நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இத்தகைய நிகழ்ச்சித்திட்டங்கள் பல்கலைக்கழகங்கள் அரச நிதி ஒதுக்கீட்டின் மீதான சார்பினைக் குறைப்பதற்கான வழிமுறைகளாகக் கருதப்படுகின்றன. ஆனால், நடைமுறையில் இவ்வாறான அதிக கட்டணங்களைச் செலுத்தக்கூடிய மாணவர்களை ஈர்க்கும் ஆற்றல் கொழும்பை மையமாகக் கொண்ட பல்கலைக்கழகங்களுக்கே அதிகமாக உள்ளது. மேலும், இவ்வகையான கட்டண அடிப்படையிலான கற்கைநெறிகள் மேலதிக வருமானத்தைப் பெற்றுத்தந்தாலும், கல்விசார் பணியாளர்களின் பணிச்சுமையை கணிசமாக அதிகரிக்கின்றன.
எனவே, நிதிப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள பிராந்தியப் பல்கலைக்கழகங்களுக்கான அரச நிதி ஒதுக்கீடுகள் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட வேண்டும். கிராமப்புற மாவட்டங்களில் பணியாற்றும் கல்விசார் பணியாளர்களுக்கான குடியிருப்பு வசதிகள் மற்றும் ஏனைய ஆதரவு சேவைகள் உறுதிப்படுத்தப்படுமானால், அவர்கள் அப்பிரதேசங்களில் நீடித்துச் செயற்படுவதற்கும் உள்ளூர் சமூகங்களுடன் நெருங்கிய தொடர்பை வளர்த்துக்கொள்வதற்கும் வழிவகுக்கும். கற்பித்தல் பொறுப்புகளிலிருந்து ஒதுக்கப்படும் காலத்தையும், சமூகப் பங்களிப்பை நோக்கமாகக் கொண்ட ஆய்வுகளுக்கான நிதியையும் அதிகரிப்பதன் மூலம் கல்விசார் பணியாளர்களின் செயற்பாட்டிற்கு தெளிவான திசை வழங்க முடியும். உண்மையில், தெளிவான நோக்கும் பொறுப்பும் கொண்ட இத்தகைய நிதி ஆதரவு, பிராந்தியப் பல்கலைக்கழகங்கள் ஊடாக சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பயன்களை உருவாக்கும். மீண்டும் மீண்டும் உருவாகும் நெருக்கடிகள் சமூகத்தை பாதித்துவரும் இக்காலகட்டத்தில், உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் விவசாய உற்பத்தி, கிராமப்புற வருமான வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துதல் போன்றவை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சவால்களாக உள்ளன. இவ்வாறான மாற்று சமூக மற்றும் பொருளாதாரப் பாதைகளை உருவாக்குவதில் இன்று பிராந்தியப் பல்கலைக்கழகங்கள் மிகவும் முக்கியமான பங்காற்ற முடியும்.
அபிவிருத்தியை மீள்சிந்தித்தல்
கடந்த சில மாதங்களாக வடக்கு மாகாணத்தில் குறிப்பிடத்தக்க சில முன்முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் வவுனியா பல்கலைக்கழகமும் அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்களில் அரச நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றன. பல்வேறு தரப்பினரையும் ஒரே தளத்தில் இணைக்கும் நோக்கில், விவசாயப் பீடத்தின் கல்விசார் பணியாளர்களும் மாகாண விவசாய அமைச்சின் அதிகாரிகளும் நீண்டகாலமாக தீர்வு காணப்படாமல் உள்ள விவசாயப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று, கிளிநொச்சியில் அமைந்துள்ள தொழில்நுட்பப் பீடம் மற்றும் பொறியியல் பீடத்தின் கல்விசார் பணியாளர்களுக்கும் மாகாண நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையிலும் பல சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.
இத்தகைய முன்முயற்சிகளின் விளைவாக, கல்விசார் பணியாளர்கள் சமூகங்களுடனும் கூட்டுறவு அமைப்புகளுடனும் நேரடியாக இணைந்து அவற்றின் அபிவிருத்தித் தேவைகளை அடையாளங்காணும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, புதிய அபிவிருத்தி முன்முயற்சிகளை வடிவமைத்தல், நீண்டகாலமாக பயன்பாடின்றி கிடக்கும் திட்டங்களையும் சொத்துக்களையும் மீளச் செயற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் இவ்விணைப்புகள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. இத்தகைய சமூகப் பங்களிப்பு, கல்விசார் பணியாளர்கள் தமது அறிவையும் திறன்களையும் சமூகங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதோடு, சமூகங்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சவால்களை நேரடியாகப் புரிந்துகொண்டு, புதிய ஆய்வுக் கேள்விகளை உருவாக்கும் வாய்ப்பையும் வழங்குகின்றது.
நான் நேரடியாகப் பங்கேற்ற மிகவும் பயனுள்ள முன்முயற்சிகளில் ஒன்றாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பப் பீட மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பயிற்சிநிலை (Internship) திட்டத்தைக் குறிப்பிடலாம். உணவுத் தொழில்நுட்பம், பசுமை விவசாயம் மற்றும் வாகனத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கல்வி கற்கும் இறுதியாண்டு மாணவர்களின் நான்கு குழுக்கள் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் ஒருங்கிணைப்பில் ஆறு மாத காலத்திற்கு கூட்டுறவு இயக்கத்துடன் இணைக்கப்பட்டனர். இந்த முயற்சி தொழில்நுட்பப் பீடத்திற்கும் கூட்டுறவு இயக்கத்திற்கும் இடையில் வலுவான உறவை உருவாக்கியுள்ளது. அதன் விளைவாக, முன்னாள் மாணவர்களில் பலர் தற்போது கூட்டுறவு முயற்சிகளில் முழுநேர பணியாளர்களாகச் செயற்பட்டு வருகின்றனர். கிராமப்புற கூட்டுறவு அமைப்புகளுக்கான தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்குதல், செயலற்ற நிலையில் உள்ள தொழிற்சாலைகளை மீளச் செயற்படுத்துதல் மற்றும் அவற்றின் உற்பத்திகளுக்கான தரநிலைகளையும் தரக் கட்டுப்பாடுகளையும் உறுதிப்படுத்துதல் போன்ற பணிகளின் மையத்தில் அவர்கள் இன்று உள்ளனர்.
இத்தகைய உறுதியான முன்முயற்சிகளை நான் குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு. இலங்கையிலும் ஏனைய பல நாடுகளிலும் பல்கலைக்கழகங்களின் ஆய்வு மற்றும் அபிவிருத்திப் பங்களிப்பு என்பது பெரும்பாலும் தனியார் வணிக நிறுவனங்களுடனான தொடர்பாக மட்டுமே குறுகிய வரம்பில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால், கிராமப்புறப் பிராந்தியங்களின் யதார்த்தத்தை கருத்திற்கொள்ளும்போது, தொழில்நுட்ப அபிவிருத்தியின் உண்மையான சவால் என்பது சமூகங்களின் தேவைகளுக்கு பொருத்தமான தொழில்நுட்பங்களை உருவாக்குவதாகும். இலங்கையில் நீண்டகாலமாக மேற்கத்திய முன்னணிப் பல்கலைக்கழகங்களை முன்மாதிரியாகக் கொண்டு எமது உயர்கல்வி அமைப்பை வடிவமைக்க முயற்சித்து வந்துள்ளோம். அந்தச் செயல்முறையில் எமது இளைஞர்களினதும் சமூகங்களினதும் உண்மையான தேவைகள் எம்முடைய கவனத்திலிருந்து விலகிச் சென்றுள்ளன. எனவே, எமது பல்கலைக்கழகங்களின் எதிர்கால அபிவிருத்தியை மீள்சிந்திப்பது என்பது முதலில் எமது மக்களின் வாழ்வியல் யதார்த்தங்களையும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் ஆழமாகப் புரிந்துகொள்வதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். முற்போக்கான நோக்குநிலையும், போதுமான வளங்களும், சமூகங்களுடன் அர்த்தமுள்ள வகையில் இணைந்து செயற்படுவதற்குத் தேவையான காலமும் பல்கலைக்கழகங்களுக்கும் கல்விசார் பணியாளர்களுக்கும் வழங்கப்படுமானால், அடுத்த தசாப்தத்தில் உலகளாவிய நிலையற்ற தன்மை உருவாக்கவிருக்கும் பல பொருளாதார மற்றும் சமூகச் சவால்களுக்கு மாற்றுவழிகளை உருவாக்கும் ஆற்றல் எமது பல்கலைக்கழகங்களிடம் நிச்சயமாக உள்ளது.



