பல்கலைக்கழக மாணவர்

ஷாமலா குமார்

அண்மையில், கல்வியியல் சுதந்திரம் பற்றியதும் உயர் கல்விக் கொள்கை பற்றியதுமென இரண்டு ஆய்வு நடவைகளில் ஈடுபட்டிருந்தவேளையில், நாட்டிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் கூறியதை நான் செவி மடுத்தலிருந்து உருவானதே இந்தக் கட்டுரை. மாணவர்களோடு பேசும்போது, அவர்களின் பயத்தை அசட்டை செய்ய முடியாது. தமது எதிர்காலத்தை பற்றிய மனப்பதற்றங்களுடனும் தமது பல்கலைக்கழக கல்வி போதாது எனும் பயத்துடனும் மாணவர்கள் பல்கலைக்கழக கல்விவயில் ஈடுபடவேண்டியுள்ளது. இதெல்லாவற்றயும் அவர்களின் குடும்பங்கள் முகங்கொள்ளும் இன்னல்களை சமாளித்தபடி அவர்கள் செய்யவேண்டியுள்ளது. மாணவர்களின் மனப்பதற்றங்கள் பற்றியும் அது தொடர்பாக பொது மக்களாகிய நாமும் உயர் கல்வி கொள்கைகளும் எந்தளவுக்கு பொறுப்பெடுக்க வேண்டும் என்பது பற்றியும் இந்தக் கட்டுரையில் ஆராய்கின்றேன்.

நவதாராளவாத பல்கலைக்கழகம்

பல தசாப்தங்களாக பல்கலைக்கழகங்கள் மாற்றம் அடைந்தவண்ணமாகவுள்ளன. உலக வங்கியால் முன்வைக்கப்படும் நவதாராளவாத கொள்கைகள் பொதுக் கல்விசார் செலவுகளை குறைத்துள்ளதோடு, பொது நிறுவனங்கள்சார் அரசின் அர்ப்பணிப்பையும் பலவீனப்படுத்தியுள்ளன. கட்டமைப்புசார் யதார்த்தங்களான வறுமை மற்றும் இடர்செறிந்த தன்மை போன்ற விடயங்களின் தாக்கத்தை பெரிதுபடுத்தாமல், ஒரு தனிநபரின் வெற்றி தோல்விகளுக்கு அவரே தான் பொறுப்பு என இக்கொள்கைகள் சித்தரிக்கின்றன. அவை கல்வியை கருவியாக்குவதோடு மாணவர்களை ஒரு “போட்டிநிறைந்த” தொழில் சந்தைக்கான “முடிவுப்பொருட்களாக” நடத்துகின்றன. அதேவேளையில், மாணவர்களின் சுய போதாமை குறித்த பயங்களை கல்விக் சந்தைகள் பயன்படுத்திக்கொள்கின்றன. “மென் திறன்கள்” அல்லது வர்க்க வேறுபாட்டாலான பெருநிறுவன (கார்பொரேட்) அமைப்புகளில் நகர தேவையாக தென்படும் திறன்கள் அற்றவர்களாக, மற்றும் தொழில்நுட்பம்சார் திறன்கள் அல்லது தனியார் துறையினுள் பயன்படும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த தேவையான திறன்கள் அற்றவர்களாய் உணரவைக்கப்படுகிறார்கள்.

இப்படியான உளப்பார்வையை எதிர்த்து, அரசு இலவசக்கல்வியை வழங்குவதற்கு அர்பணிக்கவேண்டுமெனக் கோரி மாணவ செயற்பாட்டாளர்களும் (activists) சில வேளைகளில் ஆசிரியர்களும் செயற்பட்டுள்ளார். சில இடங்களில் அரசாங்கங்கள் இளகிப்போனாலும், அவர்கள் மாணவர் அரசியலின் விளைவுகளை நினைத்து பயப்படும் நிலை உள்ளது. நீண்டகாலமாகவே மாணவர் செயற்பாட்டு நடவடிக்கைகளை மதிப்பிழக்கச் செய்ய அரசாங்கங்கள் பிரச்சாரங்கள் செய்துள்ளன. இவ்வாறான சூழலிலேயே மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

மாணவர்கள் சித்தரிக்கப்படும் விதம்.

பல்கலைக்கழக மாணவர்கள் பற்றி பொதுமக்கள் கொண்டுள்ள எதிர்மறையான புலனுணர்வுகள் காரணாமாக, மாணவர்கள் ஒழுங்குபடுத்தி நடாத்தும் நிகழ்வுகள் “உயர் தரக் குணங்களை” கொண்டவையாக இருக்க வேண்டும் என ஒரு பேராதெனியா பல்கலைக்கழக மாணவி என்னிடம் கூறினார். அவர் கூறிய விடயம் எனக்கு விளங்கியது. எமது “நன்றி உணர்வற்ற” “ஊதாரித்தனமாக” “வேலைக்கமர்த்தமுடியாத” “தகுதியற்றும் தமக்கானதென நினைக்கும்” மாணவர்கள் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். இவ்வாறான சித்தரிப்புக்களை, ஊடகமும் பல தசாப்தங்களாக தொடரும் அரசாங்க  பிரச்சாரங்களும் மீள்வலியுறுத்தியுள்ளன.

கிட்டத்தட்ட பத்து வருடங்கள் முன்னர், அராசாங்கம் உயர் கல்வியை தனியார் மயப்படுத்த எடுத்த நகர்வுகள் பலமாக இருந்தபோது, ஒரு பெருநிறுவன செயல் அலுவலர் “இன்னுமொரு பிரயோசனமற்ற போராட்டம்” என வீதி நெரிசல் பற்றி குறைகூறியபோதும் ஏன் அவர்கள் போராட்டம் செய்தார்கள் என விளங்கப்படுத்த அவரால் முடியவில்லை. பொதுமக்களுக்கு இடஞ்சலாக உள்ளதாகவே செய்திகளில் போராட்டங்களை காட்டியிருந்தார்கள் எனவும் அரிதாகவெ அவை மாணவர் பிரச்சினைகள் சார்ந்தவையாக காட்டப்படுவதாகவும் புரிந்துகொண்டேன். “அவர்களின் சகபாடிகளிலே அரச பல்கலைக்கழக மாணவர்கள் வெறுமனே பத்து சதவீதம்தான்” என இவ் எடுத்துரைப்பை மீள்வலுப்படுத்தும் முறையிலே இன்னொரு முதன்மையான நவதாராளவாத ஆதரவாளர் குறிப்பிட்டார். அவர்களின் பிரச்சினைகள் முக்கியமற்றது என கூறுவது போல் இது சைகை காட்டியது. அவ்வாறான மொழிநடை மாணவ செயற்பாட்டாளர்களையும் இளைஞர்களையும் சிறுமைப்படுத்துகிறது; அவர்களை குரலற்றவர்களாக்குகிறது; அவர்களின் பிரச்சினைகளான வர்க்க வேறுபாடுகளாலான உலக்கப்பார்வைகள், வசதிகளை பெற்றுக்கொள்வதிலுள்ள தடைகள், கல்வியை தனியார்மயப்படுத்தல், என்பவற்றை இலகுவாக கவனிக்காதுபோக விட்டுவிடுகின்றது.

பிரயோசனமில்லாத பல்கலைக்கழக மாணவர் ஒரு காணமுமின்றி சும்மா போராடிக்கொண்டிருக்கிறார் எனும் கருத்துருவாக்கம் இந்த சூழலிலேயே உருவாகியுள்ளது. அவர்கள் செயல்முனைவில் (activism) ஈடுபடுகிறார்களோ இல்லையோ, இந்த தவறான பிரதிநிதித்துவப்படுத்தல் அவர்கள்மேல் சுமத்தப்படுகிறது.

போதுமான அளவு தேர்ந்தவராக இல்லாதிருத்தல்

இலவசக் கல்வியை தாக்கும் செயற்பாடுகளும் மாணவர்களின் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய சீர்திருத்தங்கள் இல்லாத நிலையும் மாணவர்களின் மனதில் பாரமாகவுள்ளன. காலம்சென்ற உபகரணங்கள், மென்பொருட்கள் மற்றும் பாடத்திட்டத்தை சுட்டிக்காட்டி, தாம் பெறும் கல்வி தேவையானதா, சமகாலத்துக்குரியதா என மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த இடர்பாடுகள் உள்ளதென பல்கலைக்கழக நிர்வாகத்தினரும் ஒத்துக்கொள்கின்றனர். கல்வி மற்றும் உயர் கல்வி தொடர்பில் அரச நிதி வழங்கல் ஆகக்குறைவாகவுள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை தரவரிசை பண்ணப்பட்டிருப்பது இதை பிரதிபலிக்கிறது.

கல்விக் கொள்கையை தீர்மானிப்பதில் பெரிதும் தாக்கம் செலுத்தக்கூடிய உலக வங்கியானது பொது நிதிவழங்கல் குறைபாடு பற்றி அரிதாகவே எடுத்துப் பேசியுள்ளது. மாறாக, தொழில்நுட்ப போதாமைகள், அரசு உயர்க்கல்வியை “தனியுரிமையாக” வைத்திருத்தல், மற்றும் தனியார் துறை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே ஈடுபடுதல் போனறவற்றையே காரணகளாக முக்கியப்படுத்தி காட்டுகிறது. அவ்வாறான தனியார் நிதியை அரிதான குடும்பங்களே பெறும் வாய்ப்புள்ளது எனும் நிலையை அது குறைத்து மதிப்பிடுகிறது.

மாணவர்கள் திறன்களை வளர்ப்பதாகவும் வேலைகளை பெற்றுக்கொள்ள வழிவகுப்பதாகவும் எனக் கூறி, பணம் செலுத்திய கற்கைகள் பெரியளவுக்கு அவர்களுக்கு அறிமுகக்கப்படுத்தப்படுகின்றன. அவர்களின் எதிர்காலத்தை பற்றி அவர்கள் பாதுகாப்பற்ற பயவுணர்வுடன் இருப்பதை வாய்ப்பாக பயன்படுத்தியே இவ்வேலை இடம்பெறுகிறது. இதனால் தமது அன்றாட தேவைகளை நிறைவு செய்ய போராடியுபடி, பல மாணவர்கள் கணக்கியல், சந்தைப்படுத்தல் அல்லது ஆங்கிலம் போன்ற அதிக பணம் அறவிடும் தொழில் படிப்புக்களில் தம்மை இணைத்துக்கொள்கிறார்கள்.

கலைத்துறை மாணவர்

தாம் பெறும் கல்வி அதிக கோட்பாட்டுரீதியானதெனவும் “கலைகள் சம்மந்தமானது” எனவும் சில மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தான் கலைத்துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ள எடுத்த முடிவை நியாயப்படுத்த நேரிடத்தை ஒரு கொழும்பு பல்கலைக்கழக மாணவி எனக்கு விபரித்தார். அத்தெரிவு அவரின் சொந்த நேரத்தையும் நாட்டின் வளங்களையும் வீண்விரயமாக்குவதாக மக்கள் பார்ப்பதாக அவர் கூறினார். அவர் அந்த அடையாளத்தை துணிவாக வெளிக்காட்டியிருந்தார். இருப்பினும், தான் நம்ப வைக்கப்படுவதைப்போல தனக்கு வேலை கிடைக்காதா என கேள்வி எழுப்பினார்.

ஆனால், உயர் கல்வியை விஸ்தரிக்க அரசங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டபோது, கலைத் துறை கல்வியே அவை வழங்கிய “மலிவான” வாய்ப்பு எனும் யதார்த்திருந்து அவர் எடுத்துரைத்து இதை கூறவில்லை. கலைத்துறைக்கு ஒப்பீட்டு ரீதியில் குறைந்தளவான ஆய்வுகூடங்களும் உபகரணங்களும் தேவைப்படும். ஆனால் ஒவ்வொரு மாணவரோடும் பெரியளவில் ஈடுபட்டு செயற்பட தேவையான ஆசிரியர்கள், வலுவான பாட உள்ளடக்கம், மற்றும் கற்பித்தலியல் போன்றவற்றிற்கு போதியளவு முதலீடு செய்ய வேண்டும். இங்கு குறிப்பிட்ட இத்தேவைகள், முறைமை அடிப்படையிலேயே கலைத்துறை கல்வியிலே கருத்தில் கொள்ளப்படாத விடயங்களாகவுள்ளன.

கல்வியை பெற்றுக்கொள்ளும் நிலை அதிகரிக்கையிலே, முக்கியமாக கலைத்துறையில், விளிம்பு நிலை பின்னணிகளிலிருந்து வரும் அதிக மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் நுழைந்துள்ளனர். இவ்வாறான மாணவர்கள் பெருநிறுவன நலன்களோடு சேர்ந்துள்ள அமைப்பு முறைகளுக்கு பழக்கப்படாதவர்களாக இருக்கலாம். அந்தவகையில் “வேலைக்கமர்த்தக்கூடிய பட்டதாரி” எனும் வர்க்க ரீதியிலான கருத்திலிருந்து வேறுபட்ட தமது கல்விக்கு, அமைப்பு முறை ரீதியிலேயே போதிய நிதிகளை பெறாத மாணவர்கள் விரக்தியடைந்த, தன்னம்பிக்கையற்ற மற்றும் தாம் ஆசைப்பட எதிர்பார்க்கப்படும் வேலைகளுக்கு பொருத்தமற்றவர்களாக கலை பட்டப்படிப்புகளில் பட்டம் பெற்று செல்கின்றனர்.

முறையாக செயற்படாத பல்கலைக்கழகம்

தமது ஆசிரியர்கள் தூரநோக்கற்றவர்களாகவும், வெளியுலகம் தெரியாதவர்களாகவும், நேர்மையற்றவர்காளவும் இருப்பதாக மாணவர்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஒரு புறம் பல்கலைக்கழக கலாச்சாரத்தின் அதிகார படிநிலைகள் கொண்ட நிலையையும் இன்னொரு புறம் அதன் பலவீனமான நிறுவன ரீதியான அமைப்பியலையும் அவர்களின் இக்கருத்து காட்டுகிறது. பொதுத் துறைக்கு எதிர் சொல்வன்மையை (rhetoric) பயன்படுத்தி, உயர் கல்விக்கு நிதி வழங்கும் பாரத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள பல ஆண்டுகளாக கவனிக்காமல் விடப்பட்டமை மற்றும் பல்கலைக்கழகங்களின் நம்பகத்தன்மை இழக்கச் செய்ய அரசாங்கங்கள் எடுத்த முயற்சிகளினதும் நோய் அறிகுறிகள் அவை ஆகும்.

பகிடிவத்தைக்கு எதிரானவர்கள், பெண்கள், அல்லது இன சிறுபான்மையினர் போன்ற விளிம்புநிலைக்கு தள்ளப்பட்டுள்ள சில மாணவர்களின் சுமை இன்னும் அதிகமாகவுள்ளது. பகிடிவத்தைக்கு எதிரான மாணவர்கள், அல்லது பொதுவாக பணியாளர்களாலோ மாணவர்களாலோ அமுல்படுத்தப்படும் பல்கலைக்கழக அதிகார படிநிலைகளுக்கு அடிபணிந்து போகாத மாணவர்கள் விலத்திவைக்க படுகிறார்கள், தாழ்வாக நடத்தப்படுகிறார்கள், சில வேளைகளில் வன்முறைக் உட்படுத்தப்படுகிறார்கள். நிறுவனத்தின் அதிகார மொழியை பேச முடியாத மாணவர்களுக்கு போதுமான அளவு நிறுவன ஆதரவு கிடைப்பதில்லை. மாணவர் ஒன்றிய செயற்பாடுகளிலிருந்து புறக்கணிக்கப்பட்டு, பேச அனுமதிக்கப்படாமலும் மாணவர் தலைமை பதவிகளில் சேர்க்கப்படமாலும் இருப்பதாக பெண்மானவர்கள் கூறுகின்றனர்.

மேலும், தொழில் சந்தை விரும்பத்தகும் ஒரு பட்டதாரியை உருவாக்கும் செயன்முறையை மேம்படுத்துவதற்காகவன்றி, வேறு சந்தர்ப்பங்களில், கல்வியல் சுதந்திரம் மற்றும் மாணவர்களின் இருத்தலுக்கான உரிமை போன்றவற்றை தர உறுதிப்படுத்தல் செயன்முறைகள் அரிதாகவே முக்கியத்துவப்படுத்துகின்றன. களிமண்ணிலிருந்து‌‌‌‌/ கிளெயிலிருந்து (clay) உருவங்கள் செய்வதைப்போல, மாணவர்கள் தம்மிலிருந்து தாம் இச்செயற்பாடுகளால் அந்நியப்படுத்தப்படுவதை கருத்தில் கொள்ளாது இச்செயல் முறைகள் தொழில் நிபுணர்களையும் தொழில்நுட்ப நிபுணர்களையும் வடித்தெடுப்பதில் கரிசனையாகியுள்ளன.

வீடுகளிலுள்ள பிரச்சினைகள்

பல்கலைக்கழகத்துக்கு அப்பால், பெற்றோர் கடன், நோய்கள், மற்றும் இடர்செறிந்த வேலை போன்ற இடர்களை சந்திக்கின்றனர். இந்த இடர்கள் பற்றி மாணவர்களுக்கு நன்றாக தெரியும். மிகு சிரமத்தால் பெற்றோர் நிலைசரிவதையும், குடும்பத்தின் துன்பங்களை அவர்களையே சுமக்க விட்டு பல்கலைக்கழகத்துக்கு வருவதையும் மாணவர்கள் சிலர் கூறினர். தனது குடும்பம் வாழ சிரமப்படும் பட்சத்தில் தான் பல்கலைக்கழகத்தில் இருப்பது பற்றி குற்றவுணர்ச்சியாக இருப்பதை ஒரு மாணவன் விவரித்தார். வகுப்புக்கள் எடுத்தல், உணவு டெலிவரி வழங்கல் மற்றும் சிறிய வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து தமது குடும்ப பாரங்களை மாணவர்கள் இலகுபடுத்த்துகிறார்கள்.

தமது குடும்பத்தில் தங்கியிருக்கும் நிலை பற்றிய கவலையோடு பின்னிப் பிணைத்திருப்பது தாம் “வேலைக்கு அமர்த்தப்பட முடியாதவர்காளாக” இருக்கும் பயமாகும். இந்த சொல் பயன்பாடே வேலைக்கமர்த்தப்பட முடியாமலிருப்பதை மாணவர்களின் திறன் குறைபாடுகளில் சாட்டுவதாகவுள்ளது. அவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நல்ல வேலையில்லாத நிலையை அடுத்தடுத்த பட்டதாரி வகுப்புக்கள் போக வேண்டிய பலவீனமான பொருளாதாரம் மற்றும் தொழில் சந்தைகளோடு இணைத்து பார்ப்பது இந்த சொல்லாடலில் காணப்படாது. நாட்டிலுள்ள பெரியளவான வேலைகளுக்கு கல்வித் தகைமை என்று தேவைப்படுவதில்லை. அதேவேளை, அவை வாழ்வதற்கு போதுமான ஊதியத்தை தருபவையாகவுமில்லை. எனவே, ஒரு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையும் பரப்பையும் கொண்ட, உண்மையில் பெரியளவில் விரும்பத்தகாத, வேலைக்காக மாணவர்கள் போட்டியிடும் நிலையுள்ளது. இருப்பினும், வேலைக்கமர்த்த முடியாத நிலையின் பாரத்தை சுமப்பவர்களாகவும் அவர்களே இருக்க வேண்டிய நிலையுள்ளது.

மாணவர்களுக்காக அர்ப்பணித்தல்

மாணவர்களின் கவலைகளை அங்கீகரிக்க பல்கலைக்கழகங்கள் அடிக்கடி தவறுகின்றன. அதற்கு பதிலாக, மேலும் சந்தைப்படுத்தக்கூடியவர்காளகவும், போட்டிபோடக்கூடியவர்களாகவும் தம்மை மாற்றும்படியும் அதிகம் கடினமாக உழைக்கவும், படிக்கவும், தன்னம்பிக்கையுடன் இருக்கவும், ஆங்கிலம் கற்கவும், வர்க்க பாகுபாடுகளுள்ள வெளிகளை இலகுவாக பயன்படுத்தவும் நாம் மாணவர்களுக்கு சொல்லி, நவதாராளவாத சொல்லாடல்களை உட்சேர்த்துக்கொள்கிறோம். இவ்செய்திகளை நாம் அவர்களுக்கு சொல்லும்போது, அதனுடன் கூடிய எந்த வித ஆதரவையும் வழக்கமாக நாம் வழங்குவதில்லை.

ஆர்வத்தையும், உயர் வரிசை பகுப்பாய்வையும் காட்டுமாறும், விமர்சன ரீதியாக சிந்திக்குமாறும் இவ்வாறான தன்னிலை குறித்து நம்பிக்கையற்ற, மனப்பதற்றமான மாணவர்களை நாம் எதிர்பார்க்கிறோம். அவர்கள் அழுத்தத்தின் காரணமாக நிலைசரியும்போது, அவர்களுக்கு மனரீதியான மருத்துவ சேவைகளை வழங்கி பல்கலைக்கழகங்கள் பதிலளிக்கின்றன. அவ்வாறான சேவைகள் தேவையாக உள்ளபோதும், அமைப்பியல் ரீதியான பிரச்சனைகளை வெறுமனே, தனிநபர் சார்ந்ததாகவும், நோய் நிலமையாகவும் ஆக்கும் ஒரு ஆபத்துள்ளது. அனைத்து வெற்றியினதும் தோல்வியினதும் காரணமாக தனி நபர்களை பாவிக்கும் நவதாராளவாத நிலைகளிருந்துவரும் தீர்வுகளின் உள்ளார்ந்த குறைபாடுகளை அவை மீண்டும் காட்டுகின்றன. மாணவர்களின் மனப்பதற்றங்களை தீர்க்காமல், அவற்றை மீள் வலுப்படுத்துவதையே அவை செய்யும்.

இலங்கை கல்விக் கொள்கை சீர்திருத்தங்களை பற்றி சிந்திக்கும் இவ்வேளையில், எமது கல்வி பற்றிய சட்டகப்படுத்தல்களை மாற்றவும் மாணவர்களின் இக்கரிசனைகளை கொள்கையினது முக்கிய விடயமாக அங்கீகரிக்கவும் ஒரு வாய்ப்பு உள்ளது. இலவசக் கல்விக்கான தனது அர்ப்பணிப்பை அரசு புத்துயிர் செய்ய வேண்டியுள்ளதோடு, அடுத்தடுத்த சீர்திருத்த முயல்வுகளை வழிகாட்டிய நவதாராளவாத தர்க்கத்திலிருந்து அரசு அப்பால் செல்ல வேண்டும். இலவசக் கல்வி பற்றிய எமது நம்பிக்கையையும் எதிர்பார்ப்புக்களையும் பொது மக்களாக நாம் மீண்டும் கொண்டுவர வேண்டும். கல்வித்துறையில், கலைத்துறை மற்றும் STEM துறைகள் (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) பலப்படுத்தப்படவேண்டும். மாணவர்கள் தாம் விரும்பும் வகையில் பல்கலைக்கழக வெளிகளை பயன்படுத்துவதற்கான சுதந்திரம் நிறுவனங்களால் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்படவேண்டும். குடும்பங்கள் பாதுகாப்பாக வாழப்போதுமான ஊதியத்தை சம்பாதித்தல் மற்றும் பல வகையான நல்ல அர்த்தமுள்ள வேலைகளை பட்டதாரிகள் பெறுதல் என்பவற்றை உறுதிப்படுத்தும் பரந்துபட்ட பொருளாதார மற்றும் தொழில் சீர்திருத்தங்களோடு இணைந்ததாக கல்விக் கொள்கைகள் இணைக்கப்படவேண்டும்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன