உதாரி அபேசிங்கே
அபேயசிங்க எதிர் திலகரத்ன உள்ளிட்டோருக்கு இடையிலான வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து ஏறக்குறைய இரு மாதங்கள் ஆகிவிட்டது . அன்று முதல், அடிக்கடி என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, அக் கேள்வியை நானும் எனக்குள் கேட்டுக்கொண்டேன். உண்மையில் ஏதாவது ஒன்று மாறியிருக்கிறதா? என்பதில் ஆம், இல்லை என்ற இரண்டுமே விடை ஆகும். நீதிமன்றத் தீர்ப்புகளால் சட்டத்தை நிலைநாட்டவும், நிறுவனங்களுக்கு வழிகாட்டவும், கோட்பாடுகளைத் தெளிவுபடுத்தவும் முடியும்; ஆனால், அவற்றால் மட்டுமே கலாசாரங்களை மாற்றிவிட முடியாது.
தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து வந்த காலப்பகுதிகளில், வழக்கின் முடிவை விடவும், நமது நிறுவனங்களைப் பற்றியும் அவை வெளிப்படுத்தும் விடயங்கள் பற்றியுமே நான் அதிகம் சிந்தித்தேன்; எனவே, இந்தக் கட்டுரையை எழுதுவதை ஒரு கடப்பாடாக கருதுகிறேன். ஆனாலும், நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியதால் மட்டும் நிறுவனங்கள் மாறிவிடுவதில்லை. நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் அனுமானங்களைக் கேள்விக்குள்ளாக்கவும், தங்கள் நடைமுறைகள், செயல்பாடுகள் குறித்து நேர்மையான முறையில் சிந்திக்கவும், தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவும், பொறுப்புக்கூறலை மையமாகக் கொண்ட ஒரு கலாசாரத்தை வளர்ப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவை முன்வரும்போது மட்டுமே மாற்றம் நிகழ்கிறது.
ஒரு “உண்மையாக/சரியாக” பாதிக்கப்பட்டவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்ற சமூகத்தால் உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்பு.
அத்தகைய அனுமானங்களில் ஒன்று, பாதிக்கப்பட்டவர் என்ற சமூக எதிர்பார்ப்புகளுக்கு முழுமையாகப் பொருந்தும் நபரின் நடத்தை பற்றியது. “ideal victim ” என்ற கருத்தாக்கம், முதன்முதலில் 1986-ஆம் ஆண்டில் நோர்வேயைச் சேர்ந்த குற்றவியல் நிபுணர் நில்ஸ் கிறிஸ்டியால் முன்வைக்கப்பட்டது. குற்றத்தால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளவர்களை அடையாளம் காண்பதில் கிறிஸ்டி அக்கறை காட்டவில்லை. அதற்கு மாறாக, “உண்மையாக” பாதிக்கப்பட்டவராக சமூகத்தால் மிகவும் எளிதில் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுபவர் யார் என்பதே அவரது கேள்வியாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட பக்கச்சார்பான அளவுகோலுக்கு பொருந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபத்தையும் நம்பகத்தன்மையையும் வழங்க சமூகம் பெரும்பாலும் அதிக விருப்பம் காட்டுகிறது. கிறிஸ்டியின் கூற்றுப்படி, ஒரு பாதிக்கப்பட்டவர் என்ற சமூக எதிர்பார்ப்புகளுக்கு முழுமையாகப் பொருந்தும் நபர் (ideal victim) என்பவர், பலவீனமானவராகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவராகவும் கருதப்படும் ஒருவர்; அவர் ஒரு மரியாதைக்குரிய செயலில் ஈடுபட்டு, தன்னை முழுமையாக— முழு உரிமை உள்ள ஓர் இடத்தில் இருக்கும்போது, தெளிவாக “பெரியவர்/அதிகாரம் உடையவர்” அல்லது “கெட்டவர்” என்று கருதப்படும் ஒருவரால் பாதிக்கப்படுகிறார்; முக்கியமாக, அவருக்குத் தெரிந்த ஒருவருக்கு அப்பால் ஒரு அந்நியரால் பாதிக்கப்படுகிறார். இந்தப் பண்புகள், பாதிக்கப்பட்டவர்கள் இன்றும் எவ்வாறு பார்க்கப்படுகிறார்கள் என்பதில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்துகின்றன. நாம் அத்தகைய அளவுகோல்களை உணர்வுபூர்வமாகப் பயன்படுத்தாவிட்டாலும், யாரை நம்ப வேண்டும் என்பது குறித்த நமது உள்ளுணர்வு சார்ந்த முடிவுகளை அவை பெரும்பாலும் வடிவமைக்கின்றன.
பல்கலைக்கழகங்களுக்குள் நிகழும் பாலியல் வன்முறைச் சூழலில், ஒரு பாதிக்கப்பட்டவர் என்ற சமூக எதிர்பார்ப்புகளுக்கு முழுமையாகப் பொருந்தும் நபர் (ideal victim) குறித்த அனுமானங்கள் விரைவாகச் சிதையத் தொடங்குகின்றன. பல்கலைக்கழகங்களுக்குள் அதிகார உறவுகள் பெரும்பாலும் சிக்கலானவை, அத்துடன் ஒரு முறைகேடு நடப்பதற்கு முன்னரே நபர் ஒருவர் தொழில்முறை உறவுநிலையில் இருந்திருக்கலாம். குற்றம் சாட்டப்பட்டவர் அறிமுகமில்லாதவராக இல்லாமல், விரிவுரையாளர், மேற்பார்வையாளர், சக ஊழியர் அல்லது சக மாணவராகவும் இருக்கலாம். கல்வி வாய்ப்பு அல்லது வேலைவாய்ப்பு போன்றவற்றினால் வேறு வழியில்லாமல் புகாரளிப்பவர் குற்றம் சாட்டப்பட்டவருடன் தொடர்ந்தும் பழகக்கூடும். பாதிக்கப்பட்டவர் என்ற சமூக எதிர்பார்ப்புகளுக்கு முழுமையாகப் பொருந்தும் நபர் (ideal victim) என்ற வரையறைக்குள் பொருந்தாதபோது, குற்றம் சாட்டப்பட்டவரின் நடத்தையிலிருந்து விலகி, புகாரளிப்பவரின் நடத்தையின் பக்கம் கவனம் திரும்புகிறது.
நினைவில் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வலியை வெவ்வேறு விதமாக எதிர்வினையாற்றுகிறார்கள். சிலர் உடனடியாகப் புகார் அளிக்கிறார்கள்; பலர் அவ்வாறு செய்வதில்லை. சிலர் உணர்ச்சிவசப்படுகிறார்கள்; மற்றவர்களோ அமைதியாக இருந்துவிடுகிறார்கள். சிலர் தங்கள் பணியிடத்தில் இருந்து பதவி விலகலை மேற்கொள்கிறார்கள் , மற்றவர்களோ வேறு உண்மையான மாற்று வழி இல்லாததாலோ அல்லது வன்முறையை நேரடியாக எதிர்கொள்ள விரும்புவதாலோ தொடர்ந்து வேலை செய்கிறார்கள். சிலர் ஒவ்வொரு ஆதாரத்தையும் பாதுகாத்து வைக்கிறார்கள்; வேறுசிலரோ , செய்திகளை மீண்டும் பார்க்கவே முடியாத காரணத்தால் அவற்றை அழித்துவிடுகிறார்கள். இருப்பினும், முற்றிலும் மனித இயல்பான இந்த எதிர்வினைகள், நம்பகத்தன்மையைச் சந்தேகிப்பதற்கான காரணங்களாகவே பெரும்பாலும் விளக்கப்படுகின்றன.
பல்கலைக்கழகங்கள் குறிப்பாக இந்த நிகழ்வுக்கு ஒரு சிக்கலான களத்தை வழங்குகின்றன. பெரும்பாலான புகாரளிப்பவர்கள் ஆரம்பத்தில் நீதியை நாடுவதில்லை. பெரும்பாலும், அவர்கள் பாதுகாப்பாக உணரும் ஒரு சூழலில் தங்கள் கல்வியையோ அல்லது வேலையையோ தொடர வேண்டும் என்பதற்காக, அந்தத் தொல்லை நிறுத்தப்பட வேண்டும் என்று மட்டுமே விரும்புகிறார்கள். சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள், பொறுப்புக்கூறலைத் தவிர்க்க விரும்புவதால் அல்ல, மாறாக பெயர் தெரியாத நிலையில் இருப்பது மட்டுமே அவர்களுக்கு ஓர் பாதுகாப்பு உணர்வை அளிப்பதால், பெயர் தெரியாத — அடையாளம் இல்லாத புகார்களை அளிக்கின்றனர். ஆரம்பகட்ட விசாரணைகள்/உண்மையை கண்டறியும் செயல்முறைகளின் போது, இரகசியத்தன்மை பெரும்பாலும் பேணப்படுகிறது. இருப்பினும், இந்த விவகாரம் ஒரு முறையான ஒழுங்கு நடவடிக்கைக்குச் சென்றால், புகாரளிப்பவர்கள் பொதுவாகத் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். இந்தக் கட்டத்தில்தான் பலர் மேலும் மேற்கொண்டு செல்ல வேண்டாம் என்று முடிவு செய்கிறார்கள்; தொல்லை நிகழவில்லை என்பதற்காக அல்ல, மாறாக நீதியைப் பின்தொடர்வதற்கான தனிப்பட்ட விலையை தாங்க முடியாதவராகி விடுகின்றனர்.
ஒருவேளை, இது நம்மை ஒரு மாறுபட்ட கேள்வியைக் கேட்கத் தூண்ட வேண்டும். அடையாளம் வெளிப்படுத்தப்படாத புகார்கள் ஏன் உள்ளன என்றோ அல்லது புகாரளிப்பவர்கள் ஏன் முன்கூட்டியே முன்வருவதில்லை என்றோ கேட்பதற்குப் பதிலாக, நிறுவன ரீதியான நடைமுறைகளில் ஈடுபடுவதில் ஏன் இவ்வளவு அதிகமான புகாரளிப்பவர்கள் பாதுகாப்பற்ற உணர்வை அடைகிறார்கள் என்று நாம் கேட்கக்கூடாதா?
ஆராய்வுக்குரிய விடயம்
பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து பேசும்போது, அவர்கள் பெரும்பாலும் நன்கு அறியப்பட்ட மற்றொரு சூழலை எதிர்கொள்கிறார்கள்: அதுவே ‘பாதிக்கப்பட்டவரையே குறை கூறுதல்’ ஆகும்.
“ஏன் முன்பே புகார் அளிக்கவில்லை?”
“ஏன் காவல்துறையை அணுகவில்லை?”
“உங்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் இழைக்கப்பட்டிருந்தால், ஏன் இன்னும் அங்கேயே வேலை செய்கிறீர்கள்?”
“ஏன் அவருடன் தொடர்ந்து பழகினீர்கள்?”
“நீங்கள் அவரிடம் சாதகமான அணுகுமுறையைக் காட்டியதால்தான் இது நடந்தது.”
“நெருப்பு இல்லாமல் புகையாது.”
இக்கேள்விகள் பார்ப்பதற்கு வெவ்வேறானவையாகத் தோன்றினாலும், அவற்றுக்கிடையே ஒரு பொதுவான அம்சம் உள்ளது. அவை அனைத்தும் புகாரளித்தவரின் நடத்தையையே ஆராய்கின்றன. குற்றம் சாட்டப்பட்டவர் ஏன் அவ்வாறு நடந்துகொண்டார் என்று கேட்டுத் தொடங்கும் கேள்விகள் மிகக் குறைவு. “நெருப்பு இல்லாமல் புகையாது” என்ற பழமொழி, புகாரளித்தவர் அத்துமீறலைத் தூண்டும் வகையில் ஏதோ ஒன்றைச் செய்திருக்க வேண்டும் என்று உணர்த்தவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், உண்மையில் ‘நெருப்பு’ எங்கே இருக்கிறது என்பதை நாம் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம். புகாரளித்தவரின் நடத்தை ‘நெருப்பு’ அல்ல; குற்றம் சாட்டப்பட்டவரின் நடத்தையே அந்த ‘நெருப்பு’. புகாரானது இறுதியில் கண்ணுக்குத் தெரியும் ‘புகை’ மட்டுமே.
இந்த எதிர்வினைகள் மற்றொரு முரண்பாட்டையும் வெளிப்படுத்துகின்றன. பாதிக்கப்பட்டவர் உடனடியாகப் புகார் அளித்தால், சிலர் அவர்களின் நோக்கங்களைக் கேள்விக்குள்ளாக்கக்கூடும். அவர்கள் தாமதித்தால், அந்தத் தாமதமே பிரச்சினையாகிவிடுகிறது. அவர்கள் வேலையை விடுப்பு செய்தால், அவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள் அல்லது சமாளிக்கத் தெரியாதவர்கள் என்றும் வர்ணிக்கப்படலாம். அவர்கள் வேலையில் தொடர்ந்தால், அவர்களின் தொடர்ச்சியான இருப்பு, அந்த முறைகேடு தீவிரமானதாக இருந்திருக்க முடியாது அல்லது அது ஒருபோதும் நடந்திருக்கவில்லை என்பதற்குச் சான்றாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அவர்கள் உணர்ச்சிவசப்பட்டால், பகுத்தறிவற்றவர்கள் என்று புறக்கணிக்கப்படும் அபாயகரமும் உள்ளது. அவர்கள் அமைதியாக இருந்தால், மிகைப்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்படலாம். உண்மையில், ஒரு புகாரளிப்பவர் மீது வைக்கப்படும் ஒவ்வொரு எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யக்கூடிய நிகழ்வுகளின் பதிப்பு பெரும்பாலும் இருப்பதில்லை. நமது அமைப்புகள் “பாதிக்கப்பட்டவர் என்ற சமூக எதிர்பார்ப்புகளுக்கு முழுமையாகப் பொருந்தும் நபர்களுக்கு” மட்டுமே வேலை செய்தால், உண்மையில் அவை பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒருபோதும் வடிவமைக்கப்படவில்லை என்பதே பொருளாகும். .
பேசும் மௌனம்
அண்மையில் வெளிவந்த தீர்ப்பு, நிறுவனக் கலாச்சாரத்தின் மற்றொரு அம்சமான மௌனம் குறித்து சிந்திக்கவும் என்னைத் தூண்டியது. கல்வித்துறையில், ஒருவர் தனது சொந்த நிறுவனம் தொடர்பான தீர்ப்புகளைப் பற்றி விவாதிப்பது கூட, அந்த நிறுவனத்திற்கு அவப்பெயரைக் கொண்டுவருவதாகக் கருதப்படலாம். இத்தகைய சித்தரிப்பு கல்வியாளர்களை ஒரு இக்கட்டான நிலையில் வைக்கிறது. பேசுபவர்கள் சில சமயங்களில் விசுவாசமற்றவர்களாகவோ அல்லது தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தை மதிக்கத் தவறியவர்களாகவோ சித்தரிக்கப்படுகிறார்கள். இருப்பினும், ஒரு நிறுவனத்தின் மீதான உண்மையான மரியாதை, அநீதிக்கு முன்னால் மௌனம் காப்பதைக் கோரக்கூடாது. பல்கலைக்கழகங்கள் என்பவை கல்விச் சுதந்திரம், திறனாய்வு, ஆய்வு, சான்றுகள் அடிப்படையிலான பகுத்தறிவு, அறிவுசார் விவாதம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் இடங்களாகும். எனவே, அவை சங்கடமான உரையாடல்களை தவிர்க்காமல், ஏற்றுக்கொள்ளப்படும் இடங்களாக இருக்க வேண்டும்.
கல்வித்துறையில் இந்தத் தீர்ப்பைச் சுற்றியுள்ள ஒப்பீட்டு மௌனம் முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. இந்த மௌனம், நீதி வழங்கப்பட்டுவிட்டது என்ற திருப்தியைப் பிரதிபலிக்கிறதா? ஒருவரின் பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலையைப் பிரதிபலிக்கிறதா? கடுமையான நிறுவன உரையாடல்கள் வரவேற்கப்படுமா என்பது குறித்த நிச்சயமற்ற தன்மையைப் பிரதிபலிக்கிறதா? அல்லது, வெளிப்படையாகப் பேசுவதால் ஏற்படும் தொழில்ரீதியான விளைவுகள் குறித்த உண்மையான அல்லது உணரப்பட்ட அச்சத்தைப் பிரதிபலிக்கிறதா? இவை ஆழ்ந்த சிந்தனைக்குத் தகுதியான கேள்விகள்.
தீர்ப்புக்குப் பிந்தைய சிந்தனைகள்
அதே நேரத்தில், தீர்ப்பைத் தொடர்ந்து வந்த காலங்களில் எனது அனுபவம் நம்பிக்கையளிப்பதாகவும் இருந்தது. பல்வேறு வகையான துன்புறுத்தல்களை அனுபவித்த தனிநபர்கள், தங்கள் சொந்தக் கதைகளை என்னுடன் பகிர்ந்துகொள்ள அமைதியாக முன்வந்தனர். சிலர் சட்ட ஆலோசனையை நாடினார்கள். மற்றவர்களோ, வெறுமனே தங்கள் பேச்சைக் கேட்க ஒருவரை விரும்பினர். தீர்ப்புகள், தரப்பினர்களுக்கு இடையேயான தகராறுகளைத் தீர்ப்பதை விட மேலான பலன்களைத் தருகின்றன என்பதை அவர்களின் அனுபவங்கள் எனக்கு நினைவூட்டுகின்றன. மௌனம் காப்பவர்களுக்கு, நீதி தேடுவது இன்னும் சாத்தியமே என்ற செய்தியை அவர்கள் அனுப்புகிறார்கள். ஒருவேளை, இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு இது ஒரு பதிலாக இருக்கலாம். உண்மையில் ஏதாவது மாறியிருக்கிறதா? சில பாதிக்கப்பட்டவர்களுக்கு, பதில் ஆம் என்று நான் நம்புகிறேன். ஒரு தீர்ப்பு, முன்பு தங்கள் குரல் ஒருபோதும் கேட்கப்படாது என்று உணர்ந்தவர்களுக்கு நம்பிக்கையை மீட்டெடுத்து அவர்களை ஊக்குவிக்கும்.
இருப்பினும், தீர்ப்புகளால் மட்டுமே மனக்காயத்தை அழிக்கவோ, இழந்த ஆண்டுகளை மீட்டெடுக்கவோ, அல்லது பல பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் தனிப்பட்ட, தொழில்ரீதியான விளைவுகளை மாற்றவோ முடியாது. நீதிமன்றங்கள் சட்டத்தை விளக்கலாம், ஆனால் அவற்றால் மட்டுமே நிறுவனக் கலாசாரத்தை மாற்ற முடியாது. நிறுவனங்களும் பல்கலைக்கழக சமூகங்களும் தீர்ப்புகளுக்கு வெறுமனே இணங்குவதை விட, அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும்போதுதான் கலாசாரம் மாறுகிறது. அதிகார ஏற்றத்தாழ்வுகளின் உண்மைகள் அங்கீகரிக்கப்படும்போதும், ஒரே மாதிரியான கருத்துக்களுக்குப் பதிலாக ஆதாரங்களின் மூலம் நம்பகத்தன்மை மதிப்பிடப்படும்போதும், “பாதிக்கப்பட்டவர் ஏன் முன்னதாகவே முன்வரவில்லை?” என்ற கேள்விக்கு பதிலாக “பாதிக்கப்பட்டவர் முன்வருவதை எந்தச் சூழ்நிலைகள் மிகவும் கடினமாக்கின?” என்ற கேள்வி கேட்கப்படும்போதும் அது மாறுகிறது. இறுதியில், ஒரு தீர்ப்பின் உண்மையான மதிப்பு அது பிறப்பிக்கும் உத்தரவுகளில் மட்டுமல்ல, அது தூண்டும் உரையாடல்களிலும், அது கோரும் நிறுவன சுயபரிசோதனையிலும்தான் உள்ளது. உண்மையில் ஏதாவது மாறுமா என்பது தீர்ப்பைச் சார்ந்திருக்காது, மாறாக நிறுவனங்கள் அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளும் தைரியத்தைக் கொண்டிருக்கிறதா என்பதைப் பொறுத்தே அமையும்.



