வகுப்பறையில் மௌனம் காத்தல்: ‘குறைபாட்டின்’ இயங்கியலை எதிர்த்து
நிற்றல்
வகுப்பறையில் நிலவும் மௌனத்தை நான் முதன்முதலில் கண்டுகொண்ட
நிகழ்வை நான் வழமைக்கு மாறாக மிகத்தெளிவாக நினைவில்
நிறுத்துகின்றேன். எமது இளங்கலை வகுப்பில் கற்பிக்கும்
விரிவுரையாளார்களில் ஒருவர், ஒரு பாடத்தை முன்னதாகவே வாசிக்க
வைத்தார். அதன் சில பகுதிகளை விளங்கிக் கொள்ள நாம் இரண்டு மூன்று
முறை மீண்டும் வாசிக்க வேண்டியிருந்தது. இளங்கலை வகுப்புப் பருவத்தில்
நாங்கள் துள்ளும் மனநிலையில் இருந்த போது, அந்தப் பாடத்தை
மேலோட்டமாக வாசித்து, வகுப்பில் கலந்துரையாடலுக்கு வரும் போது
யாரோ ஒருவர் கேள்விகளை கேட்டு ஆரம்பிக்கட்டும் என்ற எதிர்பார்ப்பில்
இருந்தோம். நீங்கள் நினைப்பதைப் போல அந்த எதிர்பார்ப்பு சுக்குநூறானது.
எமது விரிவுரையாளர் கடினமான சிந்தனையை தூண்டும்படியான
கேள்வியொன்றைக் கேட்ட மாத்திரத்தில் அதற்கு பொருத்தமான ஏதாவதொரு
விடையை வழங்கும் நோக்கில் நான் உட்பட வகுப்பில் அனைவரும்
பீதியாகிப் போனோம்.